தன்வினை .... - 6
By N Krishnamurthy
அடுத்த நாள் காலை பஸ் ஸ்டாப்பில் வினயா போய் சேரும் முன்பே சௌஜன்யா காத்துக் கொண்டிருந்தாள்.
" என்னடி ,சௌ அம்மாவுக்கு எப்படி இருக்கு" என்றாள் வினயா. " நேத்து ராத்திரியிலிருந்து ஜுரம் இல்லை. இன்னைக்கு அம்மாவே பாத்துக்குறேன் சொல்லிட்டாங்க. அதனால நான் ஆபீசுக்கு கிளம்பி வந்துட்டேன்" என்றாள்.
பஸ் வந்ததும் இருவரும் ஏறி உட்கார்ந்தார்கள். பஸ் கிளம்பிய உடன் சௌஜன்யா வினயாவை பார்த்து "என்னம்மா, நேத்து நான் ஆபீஸ் இல்லையே. நீ தனியா இருப்பது ஜெகனுக்கு இடம் கொடுத்திருக்குமே. உன்னிடம் வந்து ஏதாவது பேசினாரா" என்று கேட்டாள். முதலில் இதற்கு பதில் சொல்லாமல் இருந்தாள் வினயா. பிறகு மீண்டும் இதே கேள்வியை சௌஜன்யா கேட்டபோது " அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை" என்று கூறினாள் வினயா.
அதற்கு சௌஜன்யா " அப்படியெல்லாம் ஒன்றும் இல்லாமல் இருந்தால் சந்தோஷம். நீ எதுக்கும் ஜகனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உன்னிடம் அவர் சிறிது பல் இளிக்கிறார் என்று நினைக்கிறேன். இதுபோன்ற பெண்களை கவரும் ஆண்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று என் அம்மா அடிக்கடி கூறுவாள்" என்றாள்.
இதற்கு வினயா பதில் சொல்லவில்லை. இப்படி இவர்கள் பேசிக் கொண்டே இருந்தபோது பஸ் ஃபேக்டரிக்குள் நுழைந்தது. இருவரும் இறங்கி சீட்டை அடைந்தார்கள்.
இவர்கள் நடந்து வரும்போது இவர்களை பார்த்த ஜெகன் வினியாவை பார்த்து தனியாக புன்முறுவல் காட்டியது போல சௌஜன்யாவுக்கு இருந்தது. இது வினயாவுக்கும் தெரிந்தது. ஆனால் தெரியாத மாதிரி காட்டிக் கொண்டாள்.
எத்தனை நாளைக்கு தன் உயிர் தோழியிடம் ஜகன் சொன்னதை சொல்லாமல் இருக்க முடியும் என்று அவளுக்கு தெரியவில்லை. அத்துடன் ஜெகனுக்கு என்ன பதில் சொல்வது என்றும் தெரியவில்லை. தன் வீட்டில் இப்பொழுது தான் தனக்கு திருமணத்திற்கு பார்க்க ஆரம்பிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவளுக்கு தெரியும். தானாக போய் இந்த டாபிக்கை அப்பா அம்மாவிடம் சொன்னால் நன்றாக இருக்குமா என்று அவள் யோசித்தாள். ஒருவேளை இது சௌஜன்யாவுக்கு தெரிய வந்தால் அவள் மூலமாக தன்னுடைய பெற்றோர்களுக்கு இந்த விஷயத்தை காதில் போடலாம் என்று நினைத்தாள். சௌஜன்யா பேசுவதை பார்த்தால் சௌஜன்யாவுக்கு ஜகன்மேல் அவ்வளவு நல்ல அவிப்ராயம் இருப்பதாக தெரியவில்லை . ஆகவே ஒருவேளை அவளே இந்த விஷயத்தில் முட்டுக்கட்டை போடக் கூடும் என்று வினயா நினைத்தாள். சௌஜன்யாவுக்கு ஜெகன் மேல் விருப்பம் இருப்பதும், அதனால்தான் அவள் வினயா ஜகனை விரும்பாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவனைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்கிறாள் என்ற விஷயம் பேதை வினயாவிற்கு தெரிய நியாயமில்லை.
ஒருநாள் ஜெகன் ஆபீசுக்கு ஸ்வீட் பாக்கெட்டுடன் வந்திருந்தான் . அதை ஓபன் செய்து எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தான். இவர்கள் இருவரிடமும் வந்து ஸ்வீட் எடுத்துக்கொள்ள சொன்னான். " என்ன ஸ்வீட் கொடுக்கிறீர்கள். உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கிறதா" என்று கேட்டால் சௌஜன்யா. "எனக்கு இல்லம்மா. என்னுடைய தங்கைக்கு கல்யாணம் நிச்சியமாகி இருக்கிறது. இன்னும் இரண்டே மாதத்தில் அவளுக்கு கல்யாணம் முடிந்து விடும் . அதற்கு தான் இந்த ஸ்வீட். எடுத்து கொள்ளுங்கள்" என்று கூறினான். சௌஜன்யா உடனே துடுக்குத்தனமாக அவனிடம் " அப்படின்னா உங்களுக்கு லைன் க்ளியர்னு சொல்லுங்க. அப்ளிகேஷன் போடறவங்க போடலாம்னு நினைக்கிறேன்" என்று சொன்னாள். இதற்கு ஜெகன் ஒன்றும் பதில் சொல்லவில்லை. பின்பு சௌஜன்யா விடாப்படியாக " சார் உங்களுக்கு எப்ப கல்யாணம்" என்றாள். " என்னுடைய தங்கை திருமணம் முடிந்ததும் நல்ல பெண்ணாக கிடைத்தால் பண்ணிக்கொள்ள வேண்டியதுதான்" என்றான் . அதற்கு சௌஜன்யா" சார் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்ல பெண்கள்" என்றாள் சிரித்துக் கொண்டே. ஜகன் " அதுக்கோசரம் நான் உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிண்டா என்னை ஜெயில்ல போட்டூடுவாங்க" என்று சொல்லி சிரித்தான். மொக்க ஜோக்காக இருந்தாலும்,அதை ஜகன் சொன்னதால் இருவரும் சிரித்தார்கள். "சார். சும்மா சிரித்து பேசுகிறீர்களே தவிர விஷயத்தை எங்ககிட்ட சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்" என்றாள் சௌஜன்யா விடாப்பிடியாக.
அதற்கு ஜெகன் " நான் திருமணத்துக்கு ரெடியாக இருக்கிறேன். நான் விரும்பும் பெண் அவளுடைய சம்மதத்தை இன்னும் சொல்லவில்லையே" என்று லேசாக வினயாவை பார்த்தான். அவன் வினயாவை பார்த்ததை சௌஜன்யாவும் பார்த்துவிட்டாள். அவள் மனக்கோட்டை சிதைந்து சின்னாபின்னமானது.எது நடக்கூடாது என்று அவள் நினைத்தாளோ அது நடந்துவிடும் போவிருக்கிறதே என மனதினுள் அழுதாள். இருந்தாலும் பேசவேண்டுமே என்பதற்காக ஜகனிடம் " உங்களுக்கு பிடித்த பெண்ணிடம் உங்கள் மனதை திறந்து காட்டுவது தானே" என்று கேட்டாள். இதைக் கேட்ட ஜெகன் விரக்தியாக " அவளுக்கு எனது மனதை காட்டி பல மாதமாகிறது. காயா, பழமா என்ற பதில் எனக்கு கிடைக்கவில்லை" என்று கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். இதைக் கேட்டதும் வினயாவின் வின் முகம் சிவந்தது.
அன்று முழுவதும் சௌஜன்யா வினயாவிடம் பேசவே இல்லை. மாலை பஸ்ஸில் இருவரும் சேர்ந்து வரும்போது கூட சௌஜன்யா கண்ணை மூடிக்கொண்டு தூங்குவது மாதிரி பாசாங்கு செய்தாள்.
No comments:
Post a Comment