தன்வினை....-26
By N Krishnamurthy
எட்டு மணிக்கு பூஜை தொடங்கியது. அங்குள்ள மணையில் வினயாவை அமர்த்தி இருபுறமும் அந்த பெண்கள் பிடித்துக்கொண்டனர்.
முதலில் "கஜானம் பூத கணாதி சேவிதம் "என்று தொடங்கிய கேசவதாஸ் பின்னர் உரத்த குரலில் பகவதியை பிரார்தித்து ஏதேதோ மந்திரங்களை உச்சாடனம் செய்ய ஆரம்பித்தார். சாம்பிராணி புகை அந்த கூடம் முழுக்க பரவியது. அவர் மந்திரங்களை சொல்லச்சொல்ல வினயா முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள். எழுந்து ஓட முயற்சித்தாள். ஏதேதோ கத்தினாள். கேசவதாஸை வெறித்துப்பார்த்தாள்.
எட்டு மணிக்கு ஆரம்பித்த பூஜை முடிய பதினொன்றறை மணி ஆனது. பூஜை முடிய பத்து நிமிடம் முன்னர் வினயா மூர்ச்சையானாள். பூஜை முடிந்ததும் அவளை தூக்கிக்கொண்டு போய் அவர்களது ரூம் கட்டிலில் கிடத்தினர்.
ஒரு மணிக்கு முழித்து எழுந்தவள் விமலாவைப் பார்த்து "அம்மா. ரொம்ப பசிக்கறது அம்மா"என்றாள். பத்து நிமிடம் போனதும் கேசவதாசின் அஸிஸ்டண்ட் அர்ஜுன் "ஊனு கழிக்க வரலாம் "என்று கூப்பிட்டான். எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர்.
வீட்டு சாப்பாடு மாதிரி சமையல் ருசியாயிருந்தது. சமையலுக்கு தேங்காய் எண்ணை பயன்படுத்தியிருந்ததால் சுவை வித்யாசமாக இருந்தது. சாப்பிட்டவுடன் வினயாவிற்கு தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டதால் அவள் தூங்க ஆரம்பித்தாள்.
மூன்றறை மணிக்கு அர்ஜுன் வந்து கேசவ தாஸ் விளிப்பதாக கூறினான். கணேசன்,சிதம்பரம்,ஜகன் மூவரும் சென்று கேசவதாஸை சந்தித்தனர்.
கேசவதாஸ் அவர்களைப் பார்த்து "இந்தப் பெண்ணுக்கு செய்வினை செய்திருக்கிறார்கள் என்று உறுதியாக விட்டது. நிச்சயம் இன்னும் கொஞ்ச நாட்களிலேயே உங்களுக்கு குணம் தெரிய ஆரம்பிக்கும். பொண்ணோட அப்பா, அம்மா, அந்தப் பெண் குட்டி ஆகிய மூவர்தான் வருவார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது இரண்டு பேர் அதிகமா வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த இடம் கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை" என்றார். அதற்கு சிதம்பரம் அவரிடம் ஜகனை சுட்டிக்காட்டி "நானும், இவரும் இன்று இரவு இங்கே தங்கி விட்டு நாளை காலையிலே திரும்பி சென்று விடுவோம்" என்று கூறவும் அதைக் கேட்ட கேசவதாஸ் "அப்ப செரி" என்றார். பின்பு அவர்களிடம் " நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க. இந்த பொண்ண நாங்க பாத்துக்கறோம். இந்தப் பெண் இந்த மந்திர உச்சாடனம் தாங்க முடியாம அடிக்கடி தப்பிக்கிறதுக்கு முயற்சி பண்ணுவோ. ராத்திரில வீட்டு கேட் பூட்டப்பட்டு இருக்கும். அத்தோடு இல்லாம கேட்டுக்கு பக்கத்ல இருக்க ஹால்லதான் ரெண்டு பொண்ணுங்களும் தங்கி இருப்பாங்க. அவங்கள மீறி இந்த பொண்ணு எங்கேயும் வெளில போக முடியாது. காலையில பக்கத்துல இருக்குற புழாவுக்கு இந்த ரெண்டு பெண்களும் உங்க பொண்ண குளிக்க அழிச்சிட்டு போவாங்க" என்று கூறினார் இதன்பின் ஜெகன் அவரிடம் "நாங்க நாளைக்கு போயிட்டு, முடிஞ்சா ஒரு பத்து நாளைக்கு அப்புறம் மறுபடியும் வந்து ரெண்டு நாள் வந்து தங்கி பார்த்துவிட்டு போவோம் "என்றான். "அதுக்கு என்ன நீங்க தாராளமாக செய்யலாம்" என்றார் கேசவதாஸ். சிதம்பரம் அவரிடம் "இப்ப எவ்வளவு பணம் தரணும், எப்ப தரணும்" என்று கேட்டார்.அதற்கு கேசவதாஸ் ஒரு 25 ஆயிரம் கொடுத்தூடுங்கோ. மீதியை நான் கொஞ்சம் கொஞ்சமா கேட்டு வாங்கிகறேன்" என்று கூறினார்.
No comments:
Post a Comment