தன்வினை....-11
By N Krishnamurthy
நிச்சயதார்த்தத்துக்கு ஒரு வாரம் முன்பு சுமதி தன்னுடைய ஒரே தம்பியான மனோகரனுக்கு போன் பண்ணி இருந்தாள்.
மனோகரன் கோயம்பத்தூரில் வசித்து வந்தான். "என்னக்கா சொல்லு" என்றான் மனோகரன்.
அவனுடைய மகள் மைதிலியைத்தான் தன் அக்கா மாட்டுப் பண்ணாக ஆக்கிக் கொள்வாள் என்று மனோகரனுக்கு நெடுநாளாக ஒரு கனவு உண்டு. அதை ஒன்றிரண்டு முறை அவன் தன் அக்காவிடம் கூட சொல்லி இருந்தான். "பாக்கலாம்டா. மனுஷ யத்தனத்தல ஒண்ணும் நடக்கறதில்ல. யார் யாருக்கு என்ன கொடுப்பினையோ"
என்று பதிலளிப்பாள் சுமதி. அவளுக்கும் உள்ளூர தன் தம்பி மகளே தனக்கு மாட்டுப்பெண்ணாக வர வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும், இந்த பேச்சை எடுக்கும் போதெல்லாம், ஏதோ ஒரு காரணத்திற்காக ஜகன் பிடி கொடுக்காமல் இருந்ததால்,தன் தம்பிக்கு எந்தவிதமான உறுதியையும் அவள் கொடுத்ததில்லை. அவள் ஜெகனுக்கு மைதிலியை திருமணம் செய்து கொண்டு விடுவாள் என்று நம்பிக்கை மனோகரனுக்கு இருந்தது.
திருமணவிஷயமாக அக்கா பேசப் போகிறாள் என்ற நினைத்துக் கொண்டு "சொல் அக்கா" என்றான் மிகவும் உற்சாகத்துடன்.
"என்ன அக்கா ஜகன் கல்யாண விஷயமா? " என்றான் ."ஆமாண்டா. நோக்கு எப்படி தெரியும் "என்ற சுமதி " டேய்,மனோகரா. ஜெகனுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயி இருக்குடா. வற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம் வெச்சிண்டு இருக்கு" என்றாள். "என்னக்கா சொல்ற நீ " என்றான்
மனோகரன் ஆத்திரத்துடன்." ஆமாண்டா நீ அவசியம் சுகன்யாவையும், மைதிலியையும் அழச்சிண்டு வந்துடு " என்றாள்.
"என்னக்கா இப்படி பண்ணிட்ட. ஜெகனுக்கு மைதிலியை பண்ணிப்பேன்னு நான் நெனச்சிண்டு இருக்கேன். அதை பத்தி ரெண்டு மூணு தடவை கூட உன் கிட்ட பேசி இருக்கேன். அந்த விஷயமா நீ ஒண்ணும் பண்ணாம, திடீர்னு இப்படி பண்ணி வச்சிருக்கீங்க. விளையாடறயா.இதோ நியாயம் இல்ல அக்கா" என்று கத்தினான். "தோ பார்டா மனோ. நேக்கும் அந்த மாதிரி ஒரு ஐடியா எப்பவோ இருந்தது என்னவோ வாஸ்தவந்தான்.
ஆனா ஜகன் ஆபீஸ்ல வேலை செய்யற ஒரு பொண்ண பண்ணிக்கணும்னு ஆசைப்படறான். அவன் அவ்வளவு தூரம் ஆசைப்படும்போது அவனோட விருப்பத்துக்கு மாறா இருக்க நாங்க ஆசைபடல. புரிஞ்சுக்கோ.மைதிலிக்கு வேற நல்லா எடமா பாக்கலாம். இந்த காலத்ல பசங்களுக்கா கொறச்சல்" என்று கூறி " அவசியம் முதல் நாளே ஆத்துக்கு வந்துடுங்கோ." என்றாள். " இது ரொம்ப அநியாயம் அக்கா. நம்ப வச்சு கழுத்தை அறுத்தூட்டயே" என்றான் மனோகரன்.
அதற்கு சுமதி" நீயே ஏதோ கற்பனை பண்ணிண்டிருந்தா அதுக்கு நாங்க எப்படி பொறுப்பு" என்று கூறி " இதெல்லாம் மனசுல வச்சுகாத.விட்டுகொடுக்காமா வந்தூடு" என்றாள்." பாக்கலாம்" என்று போனை துண்டித்தான் மனோகரன்.
அவனுக்கு ரத்தம் கொதித்தது. அவன் மனைவி சுகன்யா அவனிடம் "யார் கிட்ட கோபமா பேசிண்டிருந்தேங்க"என்று கேட்டாள். விவரத்தை அவன் சொன்னதும் " எனக்கு, உங்க அக்கா இப்படி நம்ப வெச்சு கழுத்த அறுத்துடுவாங்கன்னு சந்தேகம் இருந்தது. நீங்கதான் அக்கா, அக்கான்னு உருகினீங்க. மைதிலி ஜகனை கல்யாணம்பண்ணிக்க போறோம்னு மனக்கோட்டை கட்டிண்டிருக்கா. இந்த ஏமாத்தத்த அவ எப்படி தாங்கிக்க போறாளோ. கடவுளே"என்று பெருமூச்செறிந்தாள்.
இது எரிகிற விளக்கில் எண்ணையை விடுவது போல இருந்தது. "இதை நான் சும்மா விடமாட்டேன்"என்றான் மனோகரன். "விஷயம் கையை விட்டுபோனதுக்கு அப்புறம் என்ன பண்ணி கிழிப்பீங்க" என்றாள் சுகன்யா.கோபத்தில் அவளை அடிக்க கையை ஒங்கிய அவன் கையை தடுத்துப்பிடித்த அவள் "உங்க சூரத்தனத்த எங்கிட்ட கிட்ட வேணாம். முடிஞ்சா உங்க அக்கா கிட்ட காட்டுங்க" என்றாள்.
நிச்சயதார்த்தத்துக்கு கூப்பிட்டு இருந்த அனைவரும் வந்திருந்தார்கள்,மனோகரன் குடும்பத்தை தவிர.சௌஜன்யா அவள் அப்பா, அம்மாவுடன் வந்திருந்தாள்.
No comments:
Post a Comment