Friday, April 12, 2024

தன்வினை....-10

 தன்வினை....-10

By N Krishnamurthy 

மறுநாள் ஆபீசுக்கு போன வினயா ஜெகனைப் பார்ப்பதற்கு மிகவும் வெட்கப்பட்டாள். சௌஜன்யாவிடம் விஷயத்தை சொல்லலாம் என்றால்

சௌஜன்யா இவளிடம் முகம் கொடுத்து பேசுவதேயில்லை . இதற்கு ஏற்ற மாதிரி சௌஜன்யா, வினயா இருவருடைய சீட்களும் தள்ளி தள்ளி இருந்தன. 

11 மணிக்கு காபி சாப்பிடும் பொழுது அவளருகில்  வந்த ஜகன் " என்ன வினயா. ஜாதக பொருத்தம்  பாத்தாச்சா" என்று கேட்டான். சௌஜன்யா அவர்களை பார்ப்பதாக தெரியவில்லை என்று உறுதி செய்து கொண்ட  வினயா  அவனுக்கே கேட்கும்படியான மெலிதான குரலில் "ஆமாம் பார்த்தாகிவிட்டது. பொருந்தியிருக்கிறது என்று சொன்னார்கள்" என்றாள் வெட்கத்துடன். "அப்ப நான் வீட்ல சொல்லிடறேன்" என்றான் ஜெகன்." நீங்க சொல்லாதீங்க. அப்பா சாயங்காலம் போன் பண்ணி சொல்லுவா" என்றாள். " சரி.ஓகே" என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன அந்த இடத்தை விட்டு  நகர்ந்தான் ஜகன். வினயா, சௌஜன்யா தங்களை பார்க்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தாளே தவிர, இவர்களை எப்போதோ  ஓரக்கண்ணால் பார்த்து விட்டிருந்தாள் சௌஜன்யா.

"காதல் பைத்தியம் முற்றிக் கொண்டிருக்கிறது" என்ற அவள்  நினைத்தாளே தவிர ஜகன் பெற்றோர்கள் வினயாவின் வீட்டிற்கு சென்றிருப்பார்கள் என்று அவளுக்கு தெரியாது. அன்று மாலை ஆபீஸ் விட்டு அனைவரும் கிளம்பும்போது சௌஜன்யா பஸ் உள்ள ஏறி தன்னுடைய இருக்கையில் அமர்ந்தாள். இப்போதெல்லாம்  இருவரும் சேர்ந்து உட்காருவதில்லை. பஸ் கிளம்பும் வரை வினயா வரவில்லை .அவள் வருகிறாளா  என்று ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்த  சௌஜன்யா அவள் ஏன் வரவில்லை என்று தெரியாமல் திகைத்தாள். அவள் அன்று ஜெகனுடன் அவனுடைய டூவீலரில் சென்று விட்டதை அவள் எப்படி அறிவாள்.

கணேசன் ராஜாராமனுக்கு போன் செய்து ஜாதகம் பொருந்தி  இருப்பதாக  கூறினார்.  ராஜா ராமன் " சரி நம்ப அப்போ  நிச்சயதார்த்தத்தை வெச்சுண்டுடலாம். அதன் பிறகு உங்களது சௌகர்யத்திற்கு  ஏற்ப கல்யாணம் தேதியை பார்த்துக் கொள்ளுங்கள் " என்று கூறினார். ஜகன் குடும்பம்  அப்பொழுது வேளச்சேரியில் வசித்து வந்ததது.  வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு மினி மண்டபத்தில் நிச்சயதார்த்தம் ஏற்பாடு ஆனது. நிச்சயதார்தத்திற்காக பத்திரிக்கை அடிக்கவில்லை. கூப்பிட வேண்டியவர்களை போனிலோ, நேரிலோ கூப்பிடலாம் என்று முடிவானது. ஆபீஸில் ஜெகனும், வினயாவும் எல்லோரையும் நிச்சயதார்த்தத்திற்கு வரும்படி அழைத்தார்கள். சௌஜன்யாவிடம் வினயா "சௌ. எனக்கும் ஜகனுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க  இருக்கிறது . அவசியம்நீ அப்பா,அம்மோவோடு  வர வேண்டும் .இந்த சந்தோஷமான நிகழ்ச்சியில் இருந்து நாம் இருவரும் பழையபடி நம் நட்பை தொடர்ந்து கொள்வோமா"  என்று கூறினாள். இதைக் கேட்ட சௌஜன்யா "உங்க நிச்சயதார்த்தம் நடக்கும் அன்று அனேகமாக நான் வேறு ஒரு பங்க்ஷன் அட்டென்ட் செய்ய வேண்டிய இருக்கலாம். அப்படி இல்லையென்றால்  வருவேன்" என்று கூறி அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

கணேசனுக்கும், விமலாவுக்கும் வினயாவுக்கும், சௌஜன்யாவுக்கும் நடுவில் இடைவெளி ஏற்பட்டிருந்தது தெரியாது. அவர்கள் இருவரும் சௌஜன்யா  வீட்டிற்கு போய் சுந்தரத்தையும், கஸ்தூரியையும் நிச்சயதார்த்தத்துக்கு அழைத்தார்கள். இந்த செய்தியை கேட்டு சிறிது ஆச்சரியப்பட்ட கஸ்தூரி,"இதை சௌஜன்யா என்னிடம் சொல்லவே இல்லை" என்று கூறினாள். சுந்தரம் குறுக்கிட்டு "அவங்க ரெண்டு பேரும் ஏதோ விளையாட்டுத்தனமா  சிறு சண்டை போட்டிருக்காங்க. அதனால ரெண்டு பேரும் கொஞ்ச நாளா விலகி இருக்காங்கன்னு நினைக்கிறேன் .ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்னாலே இப்படித்தான் . அடிக்கடி சண்டை போட்டுகிட்டு  இருப்பாங்க, அப்புறமா சேர்ந்துப்பாங்க" என்றார்.

No comments:

Post a Comment