Tuesday, April 23, 2024

தன்வினை ....-24

 தன்வினை ....-24

By N Krishnamurthy 

அன்று மாலை மூணு மணிக்கு சிதம்பரம் கேசவதாசுக்கு போன் செய்தார். போனை எடுத்த கேசவதாஸ் "ஆரானா சம்சாரிக்கன்னது "என்றார்.  "சார் நான் தமிழ்நாட்டிலிருந்து பேசறேன்" என்றார் சிதம்பரம். இதை கேட்ட கேசவதாஸ் " என்ன சொல்லுங்கோ" என்றார். சிதம்பரம் அவரிடம் விவரத்தை கூறினார் . அதைக் கேட்ட கேசவதாஸ் "எவ்வளவு நாளா இந்த பொண்ணுக்கு இப்படி இருக்கு" என்று கேட்டார். அதற்கு சிதம்பரம் கிட்டத்தட்ட மூணு  மாசமா இருக்கலாம்ன்னு நெனைக்கிறேன்" என்று கூறினார். அப்போது கேசவதாஸ்"  நீங்க ஒண்ணு  பண்ணுங்கோ. அந்த பெண்ணுடைய ஜாதகத்தை என் அட்ரஸ்க்கு அனுப்பி வையுங்கோ.நாலு நாள் கழிச்சு எனக்கு போன் பண்ணுங்க. நான் ஜாதகத்தை பாத்துட்டு,சோழி ப்ரசன்னமும் போட்டு பாத்தூட்டு, இந்த பொண்ணுக்கு பரிகாரம் பண்ணா  பலன் இருக்குமா, இருக்காதா என்று சொல்றேன்" என்றார். "சரி, அப்படியே செய்யறேன்" என்றார் சிதம்பரம். " அட்ரஸை  குறிச்சுக்கோங்க" என்று கேசவதாஸ்  சொல்ல சிதம்பரம் " உங்க அட்ரஸ்  எங்கிட்ட இருக்கு. நானே சொல்றேன் . அது சரியா இருக்கான்னு  பாருங்க" என்றார்.சிதம்பரம் அட்ரசை படித்து முடித்கும்," சரியா இருக்கு. நீங்க இந்த அட்ரஸுக்கு ஜாதகத்தை அனுப்பிச்சு வையுங்கோ" என்றார். 

இதன் பிறகு சிதம்பரம் கணேசனுக்கு போன் செய்தார். கணேசன் வீட்டு நம்பர் அடித்துக் கொண்டே இருந்தது . " "சரி இன்னும் கணேசன் மெட்ராஸ் போய் சேரவில்லை" என்று புரிந்து கொண்டார் சிதம்பரம்.

இரவு எட்டு மணி வாக்கில் மீண்டும் கணேசனை தொடர்பு கொண்டார் சிதம்பரம். "கணேசா. நான் தாண்டா சிதம்பரம் பேசறேன்" என்று கூறி அவரிடம் விவரத்தை கூறினார். நீ நாளைக்கு காலைல முதல் வேலையா ஏதாவது கூரியர் வழியா உன் பொண்ணு ஜாதகத்தை அந்த அட்ரஸுக்கு அனுப்பி வை. அப்புறம் ரெண்டு மூணு நாள் வெயிட் பண்ணு. நானே உன்ன கூப்படறேன் " என்றார். கணேசன் அது மாதிரியே அடுத்த நாள் காலை அவர் கொடுத்த கேரளா அட்ரசுக்கு தன்னுடைய பெண்ணின் ஜாதகத்தின் ஒரு நகலை அனுப்பி வைத்தார்.

அந்த வாரம் வியாழக்கிழமை அன்று சிதம்பரம் மீண்டும் கேசவதாசுக்கு போன் செய்தார். சிதம்பரம் தனக்குத் தெரிந்த மலையாளத்தில்" சாரே. எந்த ஜாதகம் கிட்டியோ" என்று கேட்டார் ." ஆமாம் கெடைச்சது. அத  நல்லா படிச்சுட்டேன். சோழி போட்டும் பாத்தூட்டேன். பகவதி உத்தரவு கொடுத்திருக்கா.இந்த பொண்ண நம்ப சரிப்படுத்தலாம். ஆனா ஒரு மண்டலம் அவ  பூஜைல இருக்கணும். அவ  அப்பா, அம்மா ரெண்டு பேரும் பொண்ணு கூட வரணும்" என்று கூறினார்.

 " எப்போலந்து  ஆரம்பிக்கலாம்" சிதம்பரம்   கேட்க கேசவதாஸ் "நேக்கு நாளக்கின்னா கூட செரி" என்றார். அதற்கு  சிதம்பரம்  " நாளைக்கு முடியாது. கூடிய சீக்கிரம் ஆரம்பித்து விடலாம்" என்று கூறி " எவ்வளவு செலவாகும்" என்று கேட்டார்.அதற்கு கேசவ தாஸ்"  என்ன பத்தி யார் மூலமோ கேட்டு தான் நீங்க என்ன கூப்பிட்டிருக்கேங்க. நான் எனக்ககாக  அதிகம் பணம் வாங்குவதில்லை. கிட்டத்தட்ட இது ஒரு பொது ஜன சேவையா செஞ்சிண்டு இருக்கேன். ஏழு பரம்பரையா எங்க குடும்பம் இந்த மாதிரி செஞ்சுண்டு இருக்கு. 48 நாள் அந்த பொண்ணு, அப்பா அம்மா வந்து தங்கும் போது,அவா  தங்கறதுக்கு எங்க ஆத்துலே ஒரு ரூம் கொடுத்துடுவோம். காலையும் ,ராத்திரியும் டிபன். மத்தியானம் சாப்பாடு கிடைக்கும். சுத்த வெஜிடேரியன் சாப்பாடு தான். காலைல 7.30 மணிக்கு பக்கத்தில் இருக்கும் புழாவுக்கு(புழா-ஆறு) போய் குளிச்சிட்டு வரணும். எட்டிலிருந்து   பதினனொண்ணு  மணி வரைக்கும் பூஜை நடக்கும் . அதுக்கப்புறம் அவளுக்கு ஃப்ரீ டைம் தான். இதுபோல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே ரகளை பண்ணுவா. அவளை சமாளிக்கிறதுக்கு ரெண்டு பொண்ணுங்க உதவியா இருப்பா. இதையெல்லாம் சேர்த்து நாள்பத்தி எட்டு  நாளைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபா செலவழிக்க வேண்டி வரும்" என்று கூறினார். இதைக் கேட்டு சிதம்பரம் " நிச்சயமா குணம் ஆயிடுவாளா "என்று கேட்டார். அதற்கு கேசவதாஸ் " மனுஷ யத்தனம்ணு ஒண்ணு இருக்கு. தெய்வ சங்கல்பம்னு ஒண்ணு இருக்கு. தெய்வத்தை முழுசா நம்பணம். நான் அந்த பொண்ணுக்கு சொஸ்தம் ஆகாதூன்னு தெரிஞ்சா முதல்லே முடியாதூன்னுடுவேன். நான் இது வரை நூறு கேசுக்கு மேல குணப்படுத்தியிருக்கேன் "என்றார். சிதம்பரம் "அது போறும் நேக்கு " என்றவர் "சரி பொண்ண பெத்தவா, பொண் எல்லாம் மெட்ராஸ்ல இருக்கா. அவ கிட்ட கேட்டுட்டு நானே உங்களுக்கு போன் பண்றேன்"  என்று கூறி போனை வைத்தார். இதன் பின்பு அவர் கணேசனுக்கு போன் பண்ணி விஷயத்தை கூறினார். கணேசன் மிக உற்சாகமாக " ரொம்ப நல்லது சிதம்பரம் சார் என்னைக்கு போலாம்னு நீங்க சொல்லுங்க" என்று கேட்டார். சிதம்பரம்"  ஏற்கனவே நான் இதை குறித்து யோசித்து வெச்செட்டேன் . வர  திங்கக்கெழம நல்ல நாளா இருக்கு. நீங்க ஞாயிற்றுக்கிழமை ராத்திரி கெளம்பி  திங்கட்கிழமை காலைல அங்க போற மாதிரி இருக்கும். திருச்சூர் வரைக்கும் டிரெயின்ல போலாம் .அதுக்கப்புறம் பஸ் எடுத்துக்கணும். அங்கிருந்து பஸ் சரிபடாதூன்னு  நெனச்சா ஒரு டாக்ஸி வெச்சுகோங்கோ " என்றார். சிதம்பரம் அவர்களுக்கு போன் செய்து முடித்தவுடன் சிதம்பரத்தின் போன் ஒலிக்க ஆரம்பித்தது. அதை சிதம்பரம் எடுத்தவுடன் மறு முனையில் இருந்து ஜகன் " குட் ஈவினிங் சிதம்பரம் சார் . நான் தான் ஜகன் பேசுறேன். என்ன ஆச்சு" என்று கேட்டான். அவனிடமும் விவரத்தை கூறினார். பின்பு ஜகன்"  நான் மாமா கூட பேசிட்டு நானே டிக்கெட்டை புக் பண்ணிடறேன். நானும் போறதா இருக்கேன். நான் அங்க போயிட்டு ஒண்ணு, ரெண்டு நாள் தங்கீட்டு  திரும்பிடுவேன்" என்று கூறினார். "சரிப்பா அப்படியே செய்" என்று கூறினார்  சிதம்பரம். 

ஒரு மணி கழித்து மீண்டும் போன் செய்த ஜகன்"  டிக்கெட் புக் பண்ணிட்டேன் சார். திருச்சூருக்கு டிரெயின் திங்கள் காலையில் ஆறு  மணிக்கு போய் சேரர்து. அங்கேர்ந்து ஒரு டாக்ஸ் பிடிச்சு பெருவனத்துக்கு  ஏழே காலுக்குள்ள போய் சேந்துடுவோம்" என்றான்.

" ஓகே ஜகன். ஆல் த பெஸ்ட்" என்று கூறினார். 

பின்னர் சிதம்பரம் கேசவதாசுக்கு போன் செய்து திங்கட்கிழமை காலை யார் யார் வருகிறார்கள் என்ற விவரத்தை கூறினார்.

சுப்பிரமணிய சத்ரு சம்ஹார மாலா மந்திரத்தை தினமும்  கணேசன் சொல்வதின் விளைவோ, என்னவோ, இப்போதெல்லாம் வினயாவிடம் அந்த அளவுக்கு மூர்க்கம் இல்லை . ஓரளவுக்கு அவளை சமாளிக்க முடிந்தது. கொஞ்சம் அதிகமாக போனால் அந்த மந்திரத்தை மீண்டும் ஒருமுறை சொல்லி ,அவள் நெற்றியில் விபதியிட, அவள் அடங்கினாள். இரவில் கண்டிப்பாக தூக்க மாத்திரை கொடுக்கப்பட்டது. அதனால் அவள் இரவு  நன்றாக தூங்கினாள்.  இதனால்  கணேசனும் விமலாவும்  கூட நன்றாக தூங்க முடிந்தது.

திட்டமிட்டபடி ஜகன், கணேசன், வினயா, விமலா ஞாயிற்றுக்கிழமை இரவு கிளம்பி  திங்கள் கிழமை காலை திருச்சூருக்கு   போய் சேர்ந்தார்கள். வண்டியை விட்டு  இறங்கி சிறிது தூரம் பிளாட்பாரத்தில்  நடந்த போது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.

No comments:

Post a Comment