Wednesday, April 10, 2024

தன்வினை .... - 5

 தன்வினை .... - 5

By N Krishnamurthy 

இருவருக்கும் ஆபிஸ் வேலை ரொடீனாக போய்க்கொண்டிருந்தது.

சௌஜன்யா மட்டும் மாலை திரும்பி வருகையில் தினமும் ஜகனைப்பற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே வருவாள்.மூன்று மாத முடிவில் சௌஜன்யாவிற்கு பேங்க் பாலோ அப், சேல்ஸ் இன்வாய்சிங்,

பேமண்ட் பாலோ அப் ஆகிய பொறுப்புகள் தரப்பட்டன. வினயாவிற்கு சேல்ஸ் டாக்ஸ்,பர்சேஸ் பில்ஸை சரி பார்ப்பது, இன்கம் டாக்ஸ் சம்பந்தப்பட்டவைகள் ஆகியன தரப்பட்டன.

ஒரு நாள் சௌஜன்யா வினயாவிடம் ""அந்த ஜகன் உங்கிட்ட தனியா இண்டரஸ்ட் காட்றமாறி தெரியுதே "என்றாள். வினயா அவளிடம், தோ பார். ஏதாவது கெளப்பி வுடாதே"என்றாள். 

"இல்லடி வினி,நானும் கொஞ்ச நாளா பாத்துட்டு வரேன். எங்கிட்ட பேசும் போது மூஞ்சி உர்ருன்னு வச்சிக்கிறார். உன்கிட்ட பேசும்போது கொஞ்சம் சிரிச்சு பேசுற மாதிரி இருக்கு" என்றாள். இதற்கு வினையா "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீ வீணாக எதுவும் கற்பனை செய்து கொள்ளாதே "என்று கூறினாள். ஆனால் மனதுக்குள் சௌஜன்யா சொன்னதை   வினயா மிகவும் ரசித்தாள் என்று சொல்லத்தேவையில்லை.


இதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. 

அன்று சௌஜன்யாவின் அம்மாவிற்கு கடும் ஜூரம். அவள் அன்று பஸ் ஸ்டாப்பில் வினயாவைப்பார்த்து ஆபிஸில் லீவு சொல்லிவிடும்படி கேட்டுக்கொண்டாள்.

அன்று மதியம் கேன்டீனில் தனியாக உணவருந்த வினயா உட்கார்ந்த போது, அவள் எதிர்பாரமல் ஜகன் அவள் எதிரில் நின்று,"நான் இங்கே உட்காரலாமா" என்று கேட்டுவிட்டு அமர்ந்தான். "இன்னிக்கு உன் தோழி வரலை போல இருக்கு"என்றான். "ஆமாம் சார். அவ அம்மாவுக்கு ஜூரம். இவதான் வீட்டிலிருந்து அவங்கள கவனிச்சிக்கறா" என்றாள். "அதுவும் நல்லதுக்குதான் "என்றான் அவன். "என்ன சார் சொல்றீங்க நீங்க" என்றாள். "இல்ல வினயா. சௌஜன்யா இல்லாததால் தான் இன்று உன்னுடன் நான் தனியாக பேச முடிகிறது "என்றான். இதைக்கேட்டு  கன்னம் சிவந்தாள் அவள். 

அவன் பின்னர் அவளிடம் "என் தங்கைக்கு அல்மோஸ்ட் நிச்சயம் ஆகிவிடும் போலுள்ளது. அவள் கல்யாணம் முடிந்ததும் வீட்டில் என்னை கல்யாணத்துக்கு நெருக்குவார்கள் "என்றான். "அதனாலென்ன சார். உங்களுக்கு கிடைக்காத பெண்ணா"என்றாள் அவள்.

 "ஹும். கிடைக்கும். .ஆனால் மனசுக்கு பிடிக்கிற மாதிரி அமையணமே" என்ளான். வினயா அவனிடம் "உங்க எக்ஸ்பட்டேஷன் என்னான்னு சொல்லுங்க. எனக்குத் தெரிஞ்ச சர்கிள்ல யாரேனும் கிடைப்பார்களா பார்க்கிறேன் "என்றாள். அவன் கொஞ்சம் தைர்யத்துடன் "உன்னை மாதிரி  ஒரு பெண் கிடைத்தால் கண்ணை மூடீக்கொண்டு ஓ.கே. சொல்லிவிடுவேன் "என்றான். இவ்வளவு ஓபனாக அவன் அவனது மனதை திறந்து காட்டுவான் என்று வினயா  கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவளது கன்னம் குங்குமமாய் சிவந்தது. 

சிறிது நேரம் அவனை பார்ப்பதை தவிர்த்து மௌனமாக இருந்தாள். சாப்பாட்டை முடித்த ஜகன் அவளிடம் "என்ன பதிலே காணோம்.யோசித்து முடிவு சொல். ஆனால் இந்த விஷயத்தை உன் உயிர்த்தோழியிடம்  சொல்ல வேண்டாம் "என்று கூறி சென்றான். 

அவன் கூறியது நெஞ்செல்லாம் இனித்தாலும்,திடுமென அவன் இன்டேரக்டாக பிரபோஸ் செய்ததை அவள் எதிர்பார்க்கவில்லை.

No comments:

Post a Comment