Tuesday, April 16, 2024

தன்வினை....-14

 தன்வினை....-14

By N Krishnamurthy 

வினயாவுக்கும், ஜகனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த வாரம் ஒரு நாள் கணேசன் வெளியே சென்று விட்டு உள்ளே வரும் பொழுது நிலை வாசற்படியில் நீட்டிக் கொண்டிருந்த சிறிய கம்பி அவரது வலது கை விரலில் குத்தி பெரிய காயத்தை ஏற்படுத்தியது. 

" என்னங்க பாத்து வர கூடாதா" என்று கூறிய விமலா அவரை அருகில் இருந்த நர்சிங் ஹோம் அழைத்துச் சென்று டி.டி இன்ஜெக்ஷன் போட்டு, பேண்டேஜ் கட்டிக் கொண்டு வந்தாள்.

இரண்டு நாள் கழித்து கொல்லையிலிருந்த துளசி செடிக்கு தண்ணீர் விடப்போன கணேசன் அதை பார்த்து " விமலா, கொஞ்சம் இங்க வரயா" என்று கேட்டார் . கொல்லைப்புறம் சென்று பார்த்த போது துளசி செடி காய்ந்து போய் வாடிய நிலையில் இருந்தது." ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியலயே" என்று குறைபட்டுக் கொண்டாள் விமலா.அன்று முழுவதும் அவள் மனம் ஆறவே இல்லை.

இது நடந்து முடிந்த மூன்று நாட்கள் கழித்து இன்னொரு அதிசயத்தையும் விமலா பார்த்தாள். எப்போதும் சமையல் ரூம் முழுவதும் நிறைய பல்லிகள் ஓடிக் கொண்டிருக்கும். ஏதாவது பல்லி தப்பித்தவறி சாம்பாரிலோ, தோசை மாவிலோ விழுந்து விடப் போகிறது என்று கூட பயந்து,பயந்து அப்போதைக்கு அப்போது எல்லா பாத்திரத்தையும் மூடி வைப்பாள். இரண்டு, மூன்று நாட்களாக துடைத்து விட்டது போல ஒரு பல்லியை கூட காண முடியவில்லை. ஏன் என்று அவளால் ஊகிக்கவே முடியவில்லை.

 அன்று வினயா ஆபீஸிலிருந்து வந்தவுடன் வந்தவளுக்கு " காபி கலக்கறேன்டி" என்றாள் விமலா." காபி வேணாம்மா. ஏற்கனவே தலை சுத்தலா இருக்கும்மா" என்றாள் வினயா. " இல்லடி. எதற்கும் காப்பி ஒரு முழங்கு குடிச்சூட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ சரியா போயிடும்" என்றாள்.

வினயா திடீரென்று  பெருங்குரல் எடுத்து.    " நீ என்ன நினைச்சுட்டு இருக்க. என்கிட்ட இந்த வேலையெல்லாம் வேண்டாம்.ரொம்ப பேசினா கொன்னு போட்டுடுவேன்" என்று கத்த ஆரம்பித்தாள். 

இதைக் கண்டு அரண்டு போன விமலா ஓடிச்சென்று கணேசனிடம்  இதை  தெரிவித்தாள்.இதைக் கேட்டு என்ன சொல்வது என்று புரியாத குழம்பிய  கணேசன், வினயா ரூமுக்கு வந்த அவளை பார்க்க, வினயாவின் கண்கள் கோவைப்பழம் போல  சிவந்து போயிருந்தன. கூந்தலை விரித்துப்போட்டிருந்தாள். வினயாவின்  கையைப் பிடித்து கணேசன் "என்னம்மா செய்கிறது" என்று கேட்டார். பிடித்தவர் கையை பலமாக பிடித்து விசிறிய   வினயா "  உன்னை தொலைச்சு கட்டிடுவேன். நான் யாருன்னு நெனச்சிட்டு இருக்கீங்க. என்கிட்ட வெச்சுண்டா ரெண்டு  பேருக்கும் சமாதி கட்டுடுவேன்"என்று கத்தினாள். கணேசன் நிலை குலைந்து போனார்.

இருவருக்கும் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. வினயா  ரூமை  விட்டு இருவரும் வெளியே வந்தார்கள். விமலா " இது என்ன ஒரு புது சோதனை. இந்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தத்தை வேற முடிச்சு இருக்கோமே. எங்கேயாவது, எதையாவது பார்த்து பயந்து போய் இருக்கிறாளோ" என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்தாள். ஸ்வாமி படத்தின்முன் கற்பூரத்தை கொளுத்தி காட்டி எல்லா தெய்வங்களையும் வேண்டினாள்.

அரை மணிக்கு கழித்து வினயா ரூமிலிருந்து வந்து, ஒன்றுமே நடக்காத மாதிரி, "அம்மா பசிக்கிறதம்மா, என்ன பண்ணி இருக்க" என்றாள். இதை எதிர்பார்க்காத விமலா "ஏண்டி என்னமோ கத்தி எங்கள நிமிஷத்ல பயமுறுத்தீட்டயே" என்றாள்.அதை கேட்ட வினயா "என்னம்மா சொல்ற.நான் கத்தினேனா" என்றாள் ஆச்சர்யத்துடன் பார்த்த பின்னர் விமலா  அவளிடம்"  இருடி டிபன் பண்ணிண்டு இருக்கேன். ரெண்டு நிமிஷத்ல முடிஞ்சூடும்" என்று சொன்னாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்ட கணேசனுக்கு ஏதோ நடக்கிறது என்று புரிந்தது, ஆனால் என்ன என்று மட்டும் புரியவில்லை.

No comments:

Post a Comment