Monday, May 9, 2022

ரகோபதேஸம்_4

 #ரகோபதேஸம்

ரகோபதேஸம்_4

'மாமா இன்னிக்கி ஃப்ரீயா இருப்பாராம் சாயந்திரம்.  உன்ன அஞ்சு மணிக்கு மடத்துக்கு வரச்சொன்னார்.'

பள்ளியிலிருந்து ஆத்துக்கு வந்த என்னிடம் அம்மா இதைச் சொல்லும்போது கொஞ்சம் ஏற்றுக்கொள்வது சிரமமாகத்தான் இருந்தது.  காரணம் வரும் வழியிலேயே நண்பர்களிடம் விளையாட வருவதாக சொல்லி இருந்தேன்.  

'அம்மா, நான் விளையாட போகணுமேம்மா.  இன்னொரு நாளைக்கு கத்துக்க போறேன்.  இன்னிக்கு முடியாதும்மா.'

'ஏண்டா.  உன் மேல எவ்வளவு பிரியம் இருந்தா மெனக்கெட்டு ஆத்துக்கு வந்து சொல்லிட்டு போவார்?  விளையாட்ட இன்னொரு நாளைக்கி வச்சுக்கோ.  அவர் நாலு எடத்துக்கு போறவர்.  அவருக்கு நேரம் கிடைக்கும்போது தானே உனக்கு சொல்லிக் கொடுக்க முடியும்?  சமத்தோண்ணோ.  உன்னோட ஃப்ரெண்ட்ஸ் எங்க ஓடிப் போப்போறா?'

அரை மனது எனக்கு.

'இப்படி செஞ்சா என்ன?  மாமாவை பார்த்து விளையாட போகணும்.  இன்னொரு நாள் வரட்டுமா கத்துக்க அப்படின்னு கேப்போம்.  நம்ம மாமா தானே!  சரின்னு சொல்லாம போயிடுவாரா என்ன?'

கை கால்களை அலம்பிக்கொண்டு அவசரம் அவசரமாக காஃபியை உள்ளே இறக்கி விட்டு ஓட்டமும் நடையுமாக மடத்திற்கு வருகிறேன்.

அங்கு அவர் மடத்தில் உள்ள ஸ்வாமி படங்களை ஒவ்வொன்றாக துடைத்துவிட்டு துடைத்துவிட்டு ஒவ்வொரு ஆணியிலும் மாட்டிக் கொண்டிருந்தார்.  படங்களை துடைப்பதற்காகவும் மாற்றுவதற்காகவும் ஸ்டூலில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்.  பார்க்க சிறிது கஷ்டமாக இருந்தது.

'மாமா நான் வேணா படங்களை தொடச்சு தொடச்சு தரட்டுமா?  இல்லாட்டி ஸ்டூல்ல நான் ஏறி படங்களை மாட்டட்டுமா?'

'படங்களை வேணா தொடச்சி  தொடச்சு வேணா கொடு.  நான் மாட்டறேன். ஸ்டூல்ல நீ  ஏற வேண்டாம். கால் தவறி கீழ விழுந்தா அடிபடுமோண்ணோ.'

ஒவ்வொரு படமாக ஈரத் துணியால் துடைத்து துடைத்து அவரிடம் கொடுக்க்கிறேன்.

அப்போது ஒரு படம்.  அது தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமி படம்.  என்னவோ அதை உற்றுப் பார்க்கிறேன்.

'என்ன பாஸு அதையே பாத்துண்டு இருக்க.  என்ன படம் அது?'

'தக்ஷிணாமூர்த்தி சுவாமி படம் மாமா. அவரோட ஒரு கையில எதையோ வெச்சுண்டிருக்காரே வித்தியாசமா இருக்கே அப்படின்னு பார்த்தேன்.'

ஸ்டூலில் இருந்து இறங்கி அந்தப் படத்தை வாங்கிக் கொள்கிறார்.

'இடது பக்கம் கீழ் கைய தான சொல்றே?  அதுவா?  ஓலைச்சுவடியையும் தர்பைப் புல்லையும் வெச்சிண்டிருக்கார்.  இவர்  தெக்கு திசைய பார்த்து உட்கார்ந்திருப்பார்.  அவரோட வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில இருக்கும்.  இந்த அரக்கன் என்ற வார்த்தைல இருக்கிற மறைபொருள் அறியாமை.  அதாவது அறியாமையை நாம த்வம்சிக்கணும் அப்படிங்கற உள் அர்த்தத்த புரிஞ்சுக்கணும். அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் பாம்பையும் பிடிச்சிண்டிருக்கார் பார். இன்னோரு மேல் கையில  நெருப்பு.   கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார்.'

'இந்தப்படத்துல பார்க்கிற தக்ஷிணாமூர்த்தியோட உருவம் நமக்கு நிறைய தத்துவங்களை உணர்த்தற சித்தாத்தங்கள கொடுக்கறது.  ஏதோ ஒரு ஸ்வாமி படம் தானே அப்படிங்கற விதத்துல இந்த உருவத்தை பார்க்கறதை விட இந்த படத்துல இருக்குற தத்துவார்த்தங்களையும் மனசுல வாங்கிக்கணும்.'

'மாமா ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே.  இப்பவே தெரிஞ்சுக்கணும் எனக்கு.  நம்ம ரெகுலர் கிளாஸ் வேணா இன்னொரு நாள் வெச்சுக்கலாம் மாமா.  தட்சிணாமூர்த்திய பத்தி சொல்லுங்கோ.'

நான் மடத்திற்கு வந்த காரணமே இவரிடம் எப்படியாவது சொல்லிவிட்டு விளையாட சென்று விடவேண்டும் என்பதற்காகத்தான்.  அது இப்போது என் மனதை விட்டு எங்கோ வெகு தூரம் சென்று விட்டது.

'நீயே ஆசையா கேக்கற.  இன்னும் நாலு படங்கள் தான இருக்கு.  அவைகளயும் தொடச்சி ஆணில மாட்டிட்டு சொல்லிக் கொடுக்கறேன்.'

இப்போது வேகவேகமாக மீதமுள்ள படங்களை துடைத்து அவரிடம் கொடுக்கிறேன்.  அவரும் அவைகளை ஆணிகளில் மாட்டிவிட்டு ஸ்டூலிலிருந்து கீழே இறங்கி விட்டு தக்ஷிணாமூர்த்தி பற்றிய விளக்கத்தை தொடர்கிறார்.

'சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனிகள்ல அதாவது உருவங்கள்ல காட்சி கொடுக்கிறதா சைவர்களோட நம்பிக்கை.  அதுல ஒண்ணு தான் தட்சிணா மூர்த்தி.  நடராஜர், சரபேஸ்வரர்... இப்படி கூட சிவாம்ஸம் கொண்ட உருவங்கள நீ கோவில்ல பார்த்திருக்கியோன்னோ? 

'தக்ஷிணம் என்றால் தெற்கு அப்படின்னும் ஞானம் அப்படின்னும் பொருள் கொள்ளலாம்.   தென் திசையைப் பார்த்திருக்கிற இந்த மூர்த்திய தக்ஷிணாமூர்த்தி அப்படின்னு சொல்றத நம்மளால புரிஞ்சிக்க முடியறது.  இந்த மூர்த்திக்கு இன்னொரு அர்த்தம் இவர் ஞானத்துக்கான பரம்பொருள்.  பீஜ மந்திரங்கள்ல த, க்ஷ, ண இந்த மூணும் அறிவு, தெளிவு, ஞானம் அப்படிங்கிற மூணு பொருள்கள உணர்த்தக் கூடியதாக இருக்கு.  அதை வெச்சு பார்க்கறச்சே ... அதாவது த, க்ஷ, ண ... சேர்த்துப் பார்த்தா அறிவுக்கும் தெளிவுக்கும்  ஞானத்துக்கும் இவர்தானே பரமகுருவாக இருக்க முடியும்?'

'தக்ஷிணம் அப்படிங்கறதுக்கு இன்னொரு பொருள் கூட இருக்கு.  அதாவது பெறுதல் அல்லது பெற்று கொள்ளுதல் அப்படிங்கற பொருள் தான் அது.  'வாத்தியாருக்கு தக்ஷணை கொடுத்தியோ?' அப்படிங்கற பேச்செல்லாம் கூட கேட்டிருக்கிறியோன்னோ?' 

'ஞானகடவுளாக அருள் பாலிக்கும் பரமகுரு தன்னை வணங்கும் பக்தர்களுக்கு ஞானத்தை தட்சிணமாக வழங்கறதால தட்சிணாமூர்த்தி அப்படிங்கற பெயர் ஏற்பட்டிருக்கு அப்படிங்கறத புரிஞ்சுக்க முடியறதோன்னோ?'

'பொதுவா இப்ப பார்க்கறேயே இந்த உருவத்துலதான் தட்சிணாமூர்த்தியை பெரும்பாலும் பார்க்கலாம்.  ஆனாலும் தட்சிணாமூர்த்தி வடிவத்துல பலவகை உருவங்கள் இருக்கறதா ஆகமங்களே சொல்றது'

உதாரணத்துக்கு ஞான தக்ஷிணாமூர்த்தி, வியாக்யான தக்ஷிணாமூர்த்தி, சக்தி தக்ஷிணாமூர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி, வீர தக்ஷிணாமூர்த்தி, லட்சுமி தக்ஷிணாமூர்த்தி, ராஜ தக்ஷிணாமூர்த்தி, பிரம்ம தக்ஷிணாமூர்த்தி, சுத்த தக்ஷிணாமூர்த்தி ... இப்படி பல ரூபங்கள சொல்லலாம்.'

'சிவமூர்த்திகளிலேயே தக்ஷிணா மூர்த்தி சாந்த ஸ்வரூபியாக இருக்கார்.'

இவரோட அவதாரம்னு பார்த்தோமான்னா ஒருமுறை பிரம்மாவோட குமார்கள் என்று சொல்லப்படற சனகாதி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவை தேடி  சென்றார்கள். பிரம்மாவும் விஷ்ணுவும் கொஞ்சம் பிஸியாக இருந்ததால அவர்களை விட்டுட்டு வேறு குருவினை தேடிப் போகும்படி ஆகிறது.   இதனை உணர்ந்த சிவபெருமான் தானும் சக்தி தேவியோட‌ இருக்கறத பார்த்தாக்க பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடஞ்சுடுவா அப்படின்னு பதினாறு வயசு சிறுவனாக ஒரு விருட்சத்தின் கீழ் அமர்ந்து ஆவாள வரவேற்றார். பிரம்ம குமாரர்களோட ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு தக்ஷிணாமூர்த்தியாக இருந்து சிவபெருமான் பதில் தந்தார். எனினும் ஞானத்தை நோக்கிய அவாளோட கேள்விகள் ஜாஸ்தியாயிண்டே போச்சு. ஒரு கட்டத்துல தக்ஷிணாமூர்த்தி தன்னோட சின்முத்திரையை அவாளுக்குகாமிக்க பிரம்ம குமாரர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் உண்டாயிற்று.  அந்த க்ஷணமே அவாளுக்கு பரிபூரண ஞானம் கெடச்சதாக புராணம் சொல்றது.'

'தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகங்கள் நிறைய இருக்கு.  இருந்தாலும் நீ தினமும் சொல்லிண்டு வரயே ஒரு ஸ்லோகம்.... அது பிரார்த்தனை ஸ்லோகமாகவும் இருக்கு அதோட தக்ஷிணாமூர்த்தியோட தத்வார்த்தத்த குறிப்பா சொல்ற மாதிரியும் இந்த ஸ்லோகம் இருக்கு. இந்த ஸ்லோகத்த மறக்காம எல்லாரும் தெனமும் சொல்லிண்டு வரணும்.  அது என்ன ஸ்லோகம்?  நீதான் தெனமும் சொல்லிண்டு வரீயே ... எங்க ஞாபகப்படுத்தி சொல்லு பார்ப்போம்?'

'குரவே சர்வ லோகானாம்
 பிஷஜே பவ ரோகினாம். 
நிதயே சர்வ வித்தியானாம். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியே நம:


குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

எனக்கு பரிச்சயமான ஸ்லோகம் என்பதால் கணீரென்று அவர் முன் சொல்கிறேன்.

'ஆஹா ...  பேஷ் பேஷ்.  நோக்கு அத்துப்டியான ஸ்லோகங்கறதால வார்த்தைகள் அருமையா கொட்டறது உன்கிட்டேந்து.  சிவன் கோயிலுக்கு போகும் போதேல்லாம் தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு முன்னாடி கண்ண சித்த மூடிண்டு அவர் உருவத்தை மனசுல ஏத்திண்டு இந்த ஸ்லோகத்தை மறக்காம சொல்லு.  யார் உனக்கு எதைச் சொல்லிக் கொடுத்தாலும் அதை சட்டுனு கிரகிக்கக்கூடிய சக்தி இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டு வந்தா கிடைக்கும்.  நம்முடைய வாழ்க்கை அப்படிங்கறதே ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்.  உடலோடு சேர்ந்து அறிவும் வளரணும்.  எம்ஜிஆர் பாட்டு கூட நோக்கு தெரிஞ்சுருக்குமே?  'ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி...'

அவர் இந்த வரியை பாட்டாகவே பாடியதால் எனக்கு சிரிப்பு வருகிறது.

'மாமாஆஆஆஆ.... பிரமாதம் மாமா.'

'நோக்கு சந்தோஷமா இருக்குமேன்னு தான் சினிமா பாட்டை பாடி காமிச்சேன்.  அத விடு.  நாம தக்ஷிணாமூர்த்தி பத்தின பேச்ச தொடருவோம்.'

'நம்மளோட அன்றாட வாழ்க்கையே பல அனுபவ பாடங்களை கத்து கொடுத்துடும்.  ஒவ்வொரு காலகட்டத்திலேயும் யாராவது தேவைப்படற சமயத்துல குருநாதரா வந்து நல்லத சொல்லி உனக்கு புரிய வச்சு உன்ன சிக்கல்கள்லேந்து வெளியே கொண்டு வந்துடுவா.  அப்படி நோக்கு பாடம் சொல்லித் தர்றவா அத்தன பேருமே தக்ஷிணாமூர்த்தியோட அம்சங்கள் தான்.'

'இப்ப எனக்கு ஒண்ணு ஒண்ணா சொல்லித் தரேளே அது மாதிரியா மாமா?'

பெரிதாக அவர் சிரித்துக்கொண்டே, 'இருக்கலாம். யார் கண்டா?'

'ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு மாமா.  எனக்கு இந்த ஸ்லோகத்தோட அர்த்தத்தையும் சொல்லி தரேளா?'

'பேஷா சொல்லித்தரேனே.  எங்க பாஸு எனக்கு ஸ்பெஷல் இல்லையா?  அவனுக்கு சொல்லித் தராம இருப்பேனா?'

பெருமித சிரிப்பின் உச்சத்தில் அப்போது நான் இருக்கும் உணர்வு.

குரவே சர்வ லோகானாம் = அனைத்துலகங்களுக்கும் குருவே

பீஷஜே பவ ரோகினாம் = பவ ரோகங்களான அஞ்ஞான நோய்களுக்கு விஞ்ஞான-மெய்ஞான மருந்தே

நிதயே சர்வ வித்யானாம் = சகல வித்தைகளுக்கும் நிதிப் புதையலாக இருக்கிறவரே

தக்ஷிணா மூர்த்தயே நமஹ! = தென்னமர் மூர்த்தியே! தக்ஷிணாமூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்!

'இப்ப இந்த ஸ்லோகத்தோட தொடர்ச்சி என்ன சொல்றதுன்னு பார்ப்போம்.'

'குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ'

 'பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரர் இவர்கள் குரு தேவர்கள் ஆவர்கள். குருவின் அன்றாட நடவடிக்கைகள்,எண்ணங்கள்,சொற்கள் ஆகியவைகள் உண்மையை எப்போதும்‌ பிரதிபலிக்கும். அதாவது இம்மூன்று குணங்களையும் கடந்தவர் என்று பொருள்.  அதனால குருவானவர் பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரர் முதலானோர்களுக்கு சமமாக கருதபடுகிறார் அப்படின்னு பொருள்.'

'இன்னும் கொஞ்சம் விளக்கமா போகலாம் இதுக்குள்ள.

ஒழுக்கத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கறதால குருவாகப் பட்டவர் பிரம்மாவாக கருதபடுகிறார். மாணவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதபடுகிறார்.  மாணவர்களிடம் உள்ள தீய குணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதபடுகிறார்.  இந்த மூன்று பணிகளையும் செய்வதால் குருவான அவர் மூம்மூர்த்திகளுக்கு சமமாக போற்றப்படுகிறார்.'

'குருவின் மேல வைக்கற‌ பக்தி அவ்வளவு ஒசத்தி. மும்மூர்த்திகளோட அடிப்படையான குணங்களும் மாணக்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது குருவினுடைய வாக்கிலேயும் ஹ்ருதயத்திலேயும் ஆட்டமேட்டிக்கா ஸ்வாமி தக்ஷிணாமூர்த்தி ஆசனம் போட்டு உட்கார்ந்துடறார்.  இதை மாணக்கர்களும் புரிஞ்சுக்கணும் பாடம் சொல்லித் தர வாத்தியர்களும் புரிஞ்சுக்கணும்.  ஆத்மார்த்த உணர்வுல ரெண்டுபேருமே லயிச்சு அப்யாசம் நடக்கணும்.'

'இந்த தட்சிணாமூர்த்தி ஸ்வாமிய ஸ்லாகிச்சு திருவிளையாடல் புராணத்துல ஒரு செய்யுள் வர்றது.

'கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.'

'இந்த செய்யுளோட விளக்கம் அதி அத்புதமாக இருக்கும்.

'கல்லால மரத்தின் .... அதாவது ஆலமரத்தின் கீழ் இருந்து, நான்மறை, ஆறு அங்கம் முதலானவற்றை கற்றுணர்ந்த கேட்டலில் வல்லுநர்கள் ஆகிய சநகர் முதலிய நான்கு முனிவர்களுக்கும், வாக்கியலைக் கடந்த நிறைவாயும், வேதங்கட்கு அப்பாற்பட்டதாயும், எல்லாமாயும் அவற்றுள் ஒன்றும் அல்லதுமாயும் உள்ளதன் உண்மையை உள்ளபடி இருந்து காண்பித்து குறிப்பாலுணர்த்திய தட்சிணாமூர்த்தியை இடையறாமல் நினைந்து பிறவிக் கட்டாகிய பகையை வெல்வாம்.'

'இந்த செய்யுள்ல ஒரு முக்கியமான வரி 'சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நிறைந்து...' ஒரு வார்த்தை கூட பேசாம தன்னோட சின்முத்திரையாலேயே உள்ளதை உள்ளபடி சிஷ்யர்களுக்கு போதித்தவர் தக்ஷிணாமூர்த்தி சுவாமி ஆவார்.  குரு போதனை வார்த்தைகளைத் தாண்டி நடக்கணும்.  ட்ரான்ஸ்மிஷன்னு இங்கிலீஷ்ல கூட சொல்வாளே அப்படி.'

போதிக்கும் போது நடைபெறும் குரு-சிஷ்ய உணர்வுகளை அவர் சொன்னவிதம் என்னுடைய மெய் சிலிர்ப்புகளை அதிகமாகிக் கொண்டிருந்தது.  ஒரு கட்டத்தில் அவை என் கண்களை குளமாக்கியது என்று கூட சொல்லலாம்.

தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபியாக என் குருநாதர் ரகுபதி சாஸ்திரிகள் அப்போது தோற்றமளித்துக் கொண்டிருந்தார் என்றாலும் அது மிகையல்ல.

'மாமா இன்னிக்கு எனக்கு ரொம்ப பாக்கியம் கெடைச்சிருக்கு.  நீங்க ஆத்துக்கு வந்து அம்மாகிட்ட என்ன இங்க வர சொல்லிட்டு போனதா சொன்னா.  ஆனா இன்னைக்கு விளையாட போகத்தான் எனக்கு ஆசை இருந்தது.  உங்ககிட்ட சொல்லிட்டு கேட்டுண்டு போகலாம்னுதான் இங்க வந்தேன்.  என்னை தக்ஷிணாமூர்த்தி கட்டிப் போட்டுட்டார்னு தான் நெனைக்கிறேன்.'

'நீ சொல்றதுதான் சரி.  இன்னிக்கு இது போதும்.  நீ நமஸ்காரத்தை பண்ணிட்டு கிளம்பு.  பாவம் உன் விளையாட்டை கெடுத்துட்டேன் போல இருக்கு.'

'இல்ல மாமா.  நாலு விஷயம் உங்ககிட்டேந்து தெரிஞ்சிண்டேனே.  இதுதான் ஒசத்தி.'

சொல்லிவிட்டு நமஸ்கரிக்கிறேன் அபிவாதனம் சொல்லி.

'சமத்துடா நீ.  ஜாக்ரதையா போயிட்டு வா.'

தொடரும்...

No comments:

Post a Comment