ரகோபதேஸம்
எழுதியது பாஸ்கர் சத்யா
ரகோபதேஸம்_3
நான் தோட்டத்தில் இருந்து திரும்பி வருவதற்கும் ரகுபதி சாஸ்திரிகள் த்யானத்தை முடிப்பதற்கும் சரியாக இருந்தது.
அவர் ஏற்கனவே மணையில் உட்கார்ந்திருந்ததால் நானும் அவருக்கு எதிரே உள்ள மணையில் இரு கரங்களையும் கட்டிக்கொண்டு அமர்கிறேன்.
'பூச்செடி எல்லாம் என்ன பேசித்து ஒன்னோட?'
'அதுங்கள் கிட்டல்லாம் நீங்க தர்ப்பண கிளாஸ் ஆரம்பிச்சுக்கறதா சொல்லிட்டு வந்தேன்.'
'போச்சுடா. அதுங்க கிட்ட சொல்லிட்டியாக்கும். நாளைக்கு நான் போகும்போது என்கிட்ட அழப்போறது எல்லாம் சேர்ந்து. எங்களுக்கும் கத்துக்கொடுங்கோன்னு அடம் பிடிக்கப்போறது.'
இருவரும் சிரிக்கிறோம். அவரிடம் உள்ள ஸ்பெஷாலிட்டியே தன்னுடைய பாசத்தில் என்னை இணைப்பது மட்டும் அல்லாது இயற்கையையும் சேர்த்துண்டுடுவார்.
'அமாவாசை வர்ரதை எப்படி கணக்கு பண்றதுன்னு சொல்லிக் கொடுத்தேன். இப்ப நான் இன்னொரு கேள்வி கேட்கப் போறேன்?'
'அமாவாசை தர்ப்பணம் பண்றதுக்கு மடத்துக்கு நீ வரச்சே என்னென்ன கொண்டு வருவ சொல்லு?'
'தாம்பாளம் எள்ளு வச்சுக்குறதுக்கு ஒரு சின்ன தட்டு பஞ்சபாத்திரம் உத்தரணி. ஒரு சொம்பு. அப்புறம் விபூதி பொட்டலம் சரியா மாமா?'
அவர் சரி என்று சொல்வதற்குள்... அப்புறம் மாமா மறந்துட்டேனே உங்களுக்கு தட்சணை.'
சிரிக்கிறார். 'அதானே எனக்கு தக்ஷணை முக்கியம் இல்லையோ அதை எப்படி மறந்த?'
இப்போது நான் சிரிக்கிறேன்.
'நீ சொல்றதெல்லாம் சரிதான் பாஸூ. ஆனால் கொண்டுவர பாத்திரங்கள் எல்லாம் பித்தளைகளா இருக்கணும். அப்புறம் பள பளன்னு நன்னா தேய்ச்சு சுத்தமா எடுத்துண்டு வரணும். பாத்திரங்களோட சுத்தம் நம்முடைய ஸ்ரத்தையை வெளிப்படுத்தும். நமக்கும் அந்த ஸ்ரத்தை உணர்வை கொடுக்கும்.'
'வாத்தியார்கள் நாங்கள் பவித்திரம் கூர்ச்சம் கட்டைப்புல் இவைகளெல்லாம் தர்ப்பணம் செய்வதற்கு உண்டான வஸ்துக்களாக தற்பணம் பண்றவாளுக்கு கொடுப்போம் இல்லையா?'
'நம்மளோட ஹிந்து தர்மத்துல துளசி, தர்ப்பை, வில்வம் மிகவும் பவித்திமாக சக்தி வாய்ந்ததாக சொல்லப்பட்டிருக்கு. அவைகள் மாத்திரம் இல்ல அவைகள் வளர்ந்து இருக்கிற இடங்கள் கூட பவித்திரம் வாய்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கு.'
'தர்ப்பை புல்லுக்கு உஷ்ண வீரியம் ஜாஸ்தி. அது எந்த ஜலத்தையும் உடனே தூய்மைப் படுத்தக் கூடிய ஆற்றல் அதுக்கு உண்டு. விஷத்த கூட முறிக்கற சக்தி அதுக்கு இருக்கு. இதனால் தான் கிரகண காலங்களில் பரவும் நச்சுத்தன்மையை போக்க, உப்பு கலந்த சாப்டற பொருள்கள்ல தர்ப்பையை போட்டு வைப்பா.'
'இன்னும் சொல்லப் போனா கும்பாபிஷேகத்தின் போது யாக சாலையில் உள்ள கும்பத்தின் ஆற்றலை பிம்பத்தில் ஒடுக்கும் கிரியையில் தங்கம், வெள்ளி கம்பிகளுடன் முக்கியமாக தர்ப்பைக் கயிற்றையும் சேர்த்துப்போம்.'
'இப்ப நான் சொல்லப் போற விஷயம் நோக்கு ஆச்சரியமா இருக்கும். தர்ப்பையில் ஆண் தர்ப்பை, பெண் தர்ப்பை, அலி தர்ப்பை என மூன்று வகைகள் உண்டு.'
நிஜமாகவே வாயைப் பிளக்கும் ஆச்சரியம் இதைக் கேட்டவுடன் எனக்கு இருந்தது.
'அப்படியாஆஆஆஆ மாமாஆ?'
'ஆமாண்டா கொழந்த. ஆண் தர்ப்பை அடி முதல் முடி வரை சமமாக இருக்கும். மேல் பகுதி தடித்துக் காணப்படுவது பெண் தர்ப்பை. அடியில் தடித்துக் காணப்படுவது அலி தர்ப்பை.'
'நம்மளோட ஹிந்து தர்ம சாஸ்திரத்திரங்கள் மற்றும் இதிகாச புராணங்கள்ல என்ன சொல்லிருக்கு அப்படின்னா தர்ப்பையின் அடியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், நுனியில் சிவனும் வாசம் செய்யறதா சொல்லப்பட்டிருக்கு.'
'இந்த தர்பைகள சரியாக கையாள விதிகள் கூட இருக்கு. குறிப்பா சொல்லனும்னா
தேவர்களை நினைத்துச் செய்யும் தர்ப்பணத்தில், தர்ப்பையின் நுனியாலயும், மனிதர்களை நினைத்துச் செய்யும் தர்ப்பணத்தில் தர்ப்பையின் நடுவாலயும், பித்ருக்களை நினைத்துச் செய்யும் பொழுது தர்ப்பையை மடித்து அடிப்பகுதியாலயும் தர்ப்பணம் செய்யணும்.'
'இன்னொரு விஷயத்தையும் சொல்றேன். எந்தவொரு வைதீக காரியத்தின் போது பவித்திரம் என்ற தர்ப்பையிலான மோதிரத்தை வலது கை மோதிர விரலில் மட்டும் தான் அணிந்து கொண்டு கர்மத்தைத் தொடங்கணும். ஏன் குறிப்பிட்ட இந்த விரல்னு தெரியுமோ? இந்த விரலில் மனுஷாளோட சுபநாடி ஓடறது. அதில் தர்ப்பையை அணியும்போது சுபசுத்தி ஏற்படறது. புரிஞ்சதா?'
'ஜபம், ஹோமம், தானம், தர்ப்பணம் அனைத்திலும் பவித்திரத்த அணியறது அவசியம். மாவிலை, தர்ப்பை இரண்டுமே நல்ல சுப அதிர்வுகளை கொடுக்கக்கூடிய வஸ்துக்கள்.'
'யாகத்தைக் காப்பதற்கு வைக்கப்படும் யாகேஸ்வர தேவரின் கும்பத்திலுள்ள ஞானகட்கம், தர்ப்பையால செஞ்சுது தான் அமைக்கப்பா.'
'சில கோவில்கள்ல சிவபெருமானுக்கு தர்பாரண்யேஸ்வரர் அப்படின்னு கூட பெயர் இருக்கு. சனீஸ்வரர் ஸ்தலமான திருநள்ளாறு கோவில்ல தலவிருட்சமே தர்ப்பைதான்.'
'தர்ப்பைகளோட மகத்துவத்தை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிண்டேயிருக்கலாம்.'
'தர்ப்பணம் செய்யதற்கு வாத்தியார்கள தேடி வருகிறவா மனசு பரிசுத்தமான வெச்சிண்டு வரணும். அவா கொண்டுவர பாத்திரங்கள் மிகச் சுத்தத்தோட இருக்கணும். வாத்தியாருக்கு நாங்க கொடுக்கிற பவித்ரம் கூச்சம் இதையெல்லாம் தற்பணம் பண்றவாளுடைய நாடிகளை சீராக்கி பலப்படுத்தி பித்ருக்களோட நினைவுகளை தூண்டி அவளோட சித்த நாழி அதாவது தற்பணம் பண்ற அந்த நேரத்துல பித்ருக்களோட ஒரு கனெக்டிவிட்டியோட வெச்சிருக்கும். அதாவது பித்ருக்களுக்கும் பண்றவாளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தி வெச்சிருக்கும்.'
'ஏதோவும் கடமைக்காக பண்றதா இல்லாம பித்ருக்குளோட உருவங்கள் உன் ஞாபகத்துல இருந்தால் அவைகளையும் சித்த bபாவமா மனசுல கொண்டுவரணும்.'
'ஒரு கோவிலுக்கு போய் ஸ்வாமி தரிஸனம் பண்ணும்போது நாம கொண்டு வருகிற bபாவங்களும் உணர்வுகளும் தர்ப்பணம் செய்யும் போது தெய்வாம்சம் பொருந்திய பித்ருக்களை திருப்திபடுத்தும் போதும் துளிக்கூட குறையில்லாம நமக்கு இருக்கணும். ஏனோ தானோன்னு செய்யக்கூடாது.'
'பாஸு இன்னிக்கி இந்த அளவு போறும். என்னடா மாமா தர்ப்பண மந்திரங்களுக்கான அர்த்தங்களை சொல்லிக் கொடுப்பார் அப்படின்னு பார்த்தா வேற எதல்லாமோ கத்துக் கொடுக்குறாரே அப்படின்னு நினைக்காத. இந்த மாதிரி அடிப்படை விஷயங்கள் சிலதையும் நீ சேர்த்து கத்துண்டா கர்மாவை விடாம நீ பண்றதுக்கு தூண்டுகோலா இருக்கும். அதனாலதான் இதை எல்லாத்தையும் சேர்த்து உனக்கு சொல்லி கொடுக்கணும்னு ஆசப்படறேன்.'
'மாமா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. நான் ரொம்ப கொடுத்து வெச்சிருக்கேன்.'
'அட இங்க பார்றா.... எங்க பாஸு பெரிய மனுஷன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டான். உங்க அப்பா எனக்கு கூடப் பொறக்காத சகோதரன். என்கிட்ட ரொம்ப பாசமா இருப்பான். உனக்கு அவன் உருவம் ஞாபகத்துல இல்லாம இருக்கலாம். ஆனா இந்த தெருவாசிகள் எல்லோருமே இன்னும் அவன் எங்களோடயே சுத்திண்டு இருக்கறாப்போலயே தான் உணறரோம்.'
அவர் கண்கள் சற்று கலங்குவதை பார்க்க என்னால் உணர முடிகிறது.
அவருடைய வருத்தம் தீர சிறிது நேரம் ஆகலாம். நான் அவரை நமஸ்கரித்து விட்டு விடைபெறுகிறேன்.
தொடரும்.
No comments:
Post a Comment