Sunday, May 15, 2022

வெடிச் சத்தமும் வேத கோஷமும்

 OM SRI GURUPYONAMAHA.RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA

இந்துமத அற்புதங்கள் - 45: வெடிச் சத்தமும் வேத கோஷமும்

By டாக்டர் சுதா சேஷய்யன்

படித்தது - கேட்டது - யாரோ சொன்னது என்பதன்று. இது நேரில் கண்டது; நெகிழ்ந்தது.

1985-ஆம் ஆண்டு. தீபாவளிக்கு முந்தைய நாள் காஞ்சிபுரத்தில் கம்பன் கழக நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு தீபாவளியன்று ஸ்ரீமடம் சென்று தரிசித்தபோது ஏற்பட்ட அனுபவம் - ஆனந்தம் - அற்புதம்.

அன்று தீபாவளி என்பதால் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்கள்; தீபாவளி மலர்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பத்திரிகைக்காரர்கள், எல்லோருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஸ்ரீ மஹா பெரியவர்கள்.

தட்டுத்தட்டாகப் பட்டாசுகள், தாம்பாளம் தாம்பாளமாகப் பழங்கள் - காணிக்கையாய் வந்தவையெல்லாம் ஸ்ரீ மஹா பெரியவர்கள் அருகில்.

தாயாரோடும் தந்தையோடும் நின்று தரிசித்துக் கொண்டிருந்த அடியேனுடைய அனுபவம் இது!

வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நிறைய சிறுவர்கள் வந்திருந்தார்கள் (அவர்கள் எந்த ஊர் எந்த பாடசாலை என்றெல்லாம் விசாரிக்கத் தோன்றாத வயசு).

ஸ்ரீ மஹா ஸ்வாமிகள், அவர்களை வேதம்ஹ ஓதச் சொன்னார்கள். அவர்களும் செய்தார்கள். நிறைவடைந்தவுடன், அதில் ஒரு சிறுவன் சொன்னது - ""ஸ்வாமி, நான் வேதம் படிக்கிறேன். உச்சரிப்புக்கும் ஸ்பஷ்டத்துக்கும் குரல் ரொம்ப முக்கியம். ஆனால் என் குரல், சித்த நாழி கழிச்சு கட்டிக்கறது. சத்தமே வருவதில்லை'' - உடைந்து போய் கண்ணீரோடு கூறிய சிறுவன்.

ஸ்வாமி காதில் வாங்கிக் கொண்ட மாதிரியே தெரியவில்லை. அவர்கள் பட்டாசுக் கட்டுகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சிறுவன் திரும்பத் திரும்பச் சொல்லி வருந்தி... ""இதப் பாருங்கோ ஸ்வாமி. குரல் என்னாறது பாருங்கோ...'' அடுத்து அந்தச் சிறுவன் என்ன பேசினான் என்று யாருக்கும் தெரியாது. காரணம் அவன் வாய் அசைந்தது; ஆனால் சத்தம் கேட்கவில்லை. தொடர்ந்து என்னமோ சொல்லிக்கொண்டே போகிறான்; ஆனால் ஒன்றும் வெளிவரவில்லை.

ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வேறேதோ யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

பல நிமிடங்கள் ஓடி விட்டன. கூட்டம் வரவர, வேத பாடசாலை மாணாக்கர்கள் நகரத் தொடங்கினார்கள். ""பிரசாதம்'' - இழுத்தார்கள்.

ஸ்வாமி கையில் சில பழங்கள். அவற்றை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

பக்கத்திலிருந்த ஸ்ரீ மடத்துக்காரர் ஒருவர் (கூட்டத்தைக் குறைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன்) ""இவர்களுக்கு பிரசாதம் - பழம் கொடுத்துடலாமா?'' என்றார். நிமிர்ந்து பார்த்து ""எனக்கு வேண்டும்'' என்றார்கள் பெரியவர்கள். அந்த மடத்துக்காரர் பட்டாசுத் தட்டில் கை வைக்கப் போக, விருட்டென்று அதையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்கள். ""எனக்குடா!'' என்று குழந்தைபோல் சொன்னார்கள்.

இப்படியே ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் இழுப்பதும், குழந்தைபோல் விளையாடுவதும் தொடர்ந்தது.

15 நிமிடங்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டும். மெல்ல நகரத் தொடங்கிவிட்டார்கள் மாணாக்கர்கள். இரண்டடி தாண்டிவிட்டுத் திரும்பிப் பார்த்த அந்தக் குறிப்பிட்ட சிறுவனின் கையில் திடீரென்று ஒரு சரவெடியைக் கொடுத்தார்கள் ஸ்வாமிகள். அவன் லேசாகத் தலையைச் சாய்த்துக் கொண்டு நகர்ந்தான்.

அவன் தள்ளி போய்விட்டான். பக்கத்தில் இருந்தவனிடம் சொல்லி அவனைக் கூப்பிட்டார்கள் ஸ்வாமிகள்.

""இப்ப வேதம் சொல்லு'' ஏதோவொரு குறிப்பிட்ட

பகுதியைச் சொல்லி அதைச் சொல்லச் சொன்னார்கள்!

அப்பா...!

இடி முழக்கமாய் ஒலித்தது குரல்.

அதற்கு முன்னாலிருந்த அந்தச் சிறுவனின் குரல் போலின்றி... புதியதாய்... பெரியதாய்... தெளிவாய்... முழங்கியது வேத கோஷம்.

""இப்ப எல்லாம் சரியாய்ப் போச்சு போ!'' - ஸ்வாமிகள் அப்பவும் கையில் பழங்களை வைத்துக்கொண்டு குழந்தை மாதிரி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

Jaya Jaya shankara hare hare shankara

No comments:

Post a Comment