Saturday, May 28, 2022

திருப்புலியூர்

 கேரளாவில் உள்ள 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும், பீமன் வழிபட்ட தலமான 

#திருப்புலியூர் என்ற #குட்டநாடு #மாயப்பிரான்

திருக்கோயில் வரலாறு:

திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது. இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இத்தலம் பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமன் திருமாலைக் குறித்து தவம் புரிந்த்தால் இத்தலம் பீமச் சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கருவறை வட்டவடிவமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. 

மூலவர்:மாயப்பிரான்
தாயார்:பொற்கொடி நாச்சியார்
தீர்த்தம்:பிரக்ஞாசரஸ் தீர்த்தம்
புராண பெயர்:குட்டநாடு
ஊர்:திருப்புலியூர்
மாவட்டம்:ஆலப்புழா
மாநிலம்:கேரளா

பாடியவர்கள்:

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம்

"அன்றி மற்றோர் உபாயமென் இவளந் தண்துழாய் கமழ்தல் குன்ற மாமணி மாட மாளிகைக் கோலக் குழாங்கல் மல்கி தென்திசைத் திலதம் புரை குட்டநாட்டுத் திருப்புலியூர் நின்ற மாயப்பிரான் திருவருளாம் இவள் நேர்பட்டதே"

-நம்மாழ்வார்

திருவிழா:

மார்கழி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொடியேற்றி, பத்தாம் நாள் ஆறாட்டு நடைபெறுகிறது. தை மாதம் முதல் தேதியில் காவடியாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. கேரள மாநிலத்தில் பாண்டவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ததாக கூறப்படும் பெருமாள் கோயில்களில் இத்தலம் பீமன் பிரதிஷ்டை செய்தது. இங்குள்ள மிகப்பெரிய “கதாயுதம்’ பீமன் உபயோகித்ததாக கூறுவர். பீமனைப்போன்றே கோயிலும் அகன்று விரிந்து பரந்த கட்டுமான அமைப்பை கொண்டுள்ளது.

பொது தகவல்:

இங்குள்ள கொடிமரம் மற்ற கோயிலை விட மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தலபெருமை:

நம்மாழ்வார் காலத்தில் இப்பகுதியில் ஒரு பெரிய நகரம் இருந்ததாக அவரது பாடலில் அறிய முடிகிறது. பண்டைத்தமிழகத்தில் 12 உட்பிரிவுகள் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. அதில் ஒரு பிரிவு குட்டநாடு. இத்தலத்தை இப்பகுதி மக்கள் “குட்டநாடு திருப்புலியூர்’ என்று அழைக்கின்றனர். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதிக்கு மேல் உள்ள விமானம் புருஷஸுக்த விமானம் எனப்படுகிறது. இத்தல பெருமாளை சப்த ரிஷிகள் வழிபாடு செய்துள்ளனர்.

தல வரலாறு:

ஒரு முறை சிபிச்சக்கரவர்த்தியின் மகனான விருஷாதர்பி என்பவன் இப்பகுதியை அரசாண்டு வந்தான். அப்போது அவனுக்கு ஏதோ ஒரு சாபத்தினால் கடுமையான நோய் உண்டானது. அத்துடன் அவனது நாட்டில் கொடிய வறுமையும் ஏற்பட்டது. அச்சமயம் இந்த நாட்டிற்கு சப்தரிஷிகள் வருகை புரிந்தனர். அவர்களிடம் மன்னன், தனக்கும் தன் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பெரிய ஆபத்தை போக்கினால் தான், தன்னால் தானம் ஏதும் கொடுக்க முடியும் என கூறினான். தானம் என்ற சொல்லைக்கேட்ட ரிஷிகள் கோபத்துடன்,””மன்னா! உன் போன்ற மன்னர்களிடம் தானம் பெறுவது மிகப்பெரிய பாவமாகும்,”என மறுத்துவிட்டனர். ஆனாலும் மன்னன் ரிஷிகளுக்கு கொடுப்பதற்காக மந்திரிகள் மூலம் தங்கத்தையும், பழங்களையும் அனுப்பி வைத்தான். இதையும் முனிவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரிஷிகளின் இந்த செயலால் மன்னன் கோபமடைந்தான். மாபெரும் யாகம் ஒன்றை நடத்தி அதில் தோன்றிய தேவதையை, சப்தரிஷிகளை கொல்வதற்காக அனுப்பி வைத்தான். இதனையறிந்த ரிஷிகள் தங்களை காக்க மகாவிஷ்ணுவை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, இந்திரனை புலியாக மாறும்படி செய்தார். புலி தேவதையை கொன்றது. இதனால் இத்தலம் “திருப்புலியூர்’ ஆனது என்பர். ரிஷிகள் அனைவரும் பெருமாள் ஒருவரே பரம்பொருள். மற்ற அனைத்தும் மாயை என நினைத்து வழிபாடு செய்தனர். இதனால் பெருமாள் இவர்களுக்கு மாயப்பிரானாக காட்சிதந்தார்.

கோயில் அமைப்பு:

இருபத்தோரு படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைய வேண்டும். இடது பக்கத்தில் பெரியதொரு கதை சிற்பத்தைக் காணலாம். பீமனால் புனருத்தாரணம் செய்யப்பட்டதன் நினைவாகவே அவனது கதை அங்கே சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது என்றார்கள்.

பீமனைப் போலவே, அழகாக பருத்து உயர்ந்த தூண்கள் கொண்ட மண்டபம் நம்மை வரவேற்கிறது. பிராகாரச் சுற்றில் ஐயப்பன் தனிச் சந்நதி கொண்டிருக்கிறார். அவருக்கு அருகில் இன்னொரு சந்நதியில் சிவபெருமான், லிங்க ரூபமாக. அருகே ஒரு பலா மரம். அதனடியில் ஆதிசேஷ மஹாவிஷ்ணுவையும், வித்தியாசமாக ஆதிசேஷன் குடைபிடிக்க சிவனையும் தரிசிக்கலாம். சற்றுத் தொலைவில் பெரிய அரசமரம் ஒன்றின் அடியில் மேடை கட்டியிருக்கிறார்கள். பக்கத்தில் மிகப் பெரிய அன்னதானக் கூடம். 

இன்னும் கொஞ்சம் நடை பயின்றால், சற்றே பெரியதொரு சந்நதியில் நெற்றிக்கண், கண்கள், மூக்கு பதிக்கப்பட்ட முகத் தோற்றத்துடன் ஒரு லிங்கம் அருள்பாலிக்கிறது. இந்த சந்நதியை இடமாகச் சுற்றிச் சென்று கோமுகியை அடைந்து பிறகு திரும்பி வந்து சந்நதி முன் நின்று ஈசனை வணங்குகிறார்கள். வலம் வருவதில்லை. மூலக்கருவறை மண்டபத்திற்குள் நுழைய மிகச் சிறிய வழி கொண்டு ஒரு தடுப்பு இருக்கிறது. ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே முதலில் ஒரு காலும், அடுத்து இன்னொரு காலுமாக நுழைத்து உள்ளே செல்ல வேண்டும்.

ஆடு, மாடுகள் கோயிலுக்குள் நுழைந்துவிடாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு’ என்றார்கள். கருவறைச் சுற்றில் மிகச் சிறிய சந்நதியில் பகவதியை தரிசிக்கலாம். அடுத்து சிறு அளவில் யாகசாலை. கருவறை, வட்டவடிவமாக, கேரள பாரம்பரியத்தை விளக்குகிறது. இதன் நான்கு ஆரங்களில் நான்கு சாளரங்கள். ஆனால், அவை எப்போதும் சாத்தியே இருக்கும் என்கிறார்கள். நான்கு திக்குகளிலிருந்தும் வெளியேயிருந்து வரும் பக்தர்கள் கருவறைப் பகுதியை அடைய முடிகிறது.

அபிஷேக பொருட்கள் வெளியேறும் கோமுகி வித்தியாசமான அமைப்பாக இருக்கிறது. தென்னாட்டில் இருப்பது போன்ற ஒரு பசுவின் முகமாக இது இல்லாமல், உள்ளிருந்து வரும் சிறு கால்வாய் அமைப்பு, சிற்ப வடிவான ஒரு தேவியின் தலைமீது வந்து முடிகிறது. இதிலிருந்து வரும் அபிஷேக தீர்த்தத்தை பக்தர்கள் கையில் ஏந்தி தலையில் தெளித்துக் கொள்கிறார்கள். சிலர் அந்த தேவியின் காதருகே போய் தம் வேண்டுகோளை ரகசியமாகச் சொல்லிவிட்டு வந்ததையும் பார்க்க முடிந்தது - தமிழ்நாட்டில் சிலர் நந்தி காதில் வேண்டுகோள் விடுப்பதுபோல!

மூலவர் மாயப்பிரான் சிறு உருவினரானாலும் ஒளிமிகுந்து காணப்படுகிறார். எண்ணெய் தீபத்திலும் அழகுறப் பிரகாசிக்கும் அவர் பக்தர்களின் வாழ்க்கை மாயங்களை விலக்கி, மங்களங்களை அருளும் மாயப்பிரான். அந்தச் சிறு கருவறையிலிருந்து அவர் தீட்சண்யமாக நோக்கி நம் மனவிகாரங்களைப் போக்குவதும் புரிகிறது.

3200 வருடங்கள் புராதனமானது இக்கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு ஜனவரி மாதமும் மகரசங்கராந்தி தினத்தன்று பக்தர்கள் காவடி எடுக்கிறார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து கொடியேற்றி விழா கொண்டாடுகிறார்கள். 

நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்யதேசம் இது. இவர்களில் நம்மாழ்வாரின் பங்கு - 11 பாசுரங்கள்! இந்தத் திருத்தலத்தைதான் நம்மாழ்வார் எப்படி பிரமித்துப் பாராட்டுகிறார்! ‘திடவுசும்பிலமரர் நாட்டை மறைக்கும் தன் திருப்புலியூர், குன்ற மாமணி மாட மாளிகை, சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்.... ’ அமரர் நாடான தேவலோகத்தையே மறைக்கும் அளவு பிரமாண்டமான மாடமாளிகைகள் கொண்டிருந்தது திருப்புலியூர். இப்பதி எத்தகைய வளங்களைக் கொண்டிருந்ததாம்? ஊர்வளம் கிளர் சோலையும், கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து ஏர்வளம் கிளர் தண் பணைக் குட்ட நாட்டுத் திருப்புலியூர் சீர்வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ் தேவபிரான் பேர்வளம் கிளர்ந்து அன்றிப் பேச்சு இலள் இன்றிப் புனை இழையே - சோலைகள் பெருகி, கரும்பு, செந்நெல் பயிர் அபிரிமிதத்தால் வளம் கொழிக்கும் ஊர் இந்தக் குட்டநாடு (எனும் திருப்புலியூர்). 

ஓம் நமோ நாராயணாய 🙏27.5.22.

No comments:

Post a Comment