தினம் ஒரு திருத்தலம்... 🛕
கிருஷ்ணரின் தசாவதார சிலை... கலியுக கண்ணன்...!!
அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்...!!
இந்த கோயில் எங்கு உள்ளது?
ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பஞ்சேரி என்னும் ஊரில் அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
சித்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் வேப்பஞ்சேரி என்னும் ஊர் அமைந்துள்ளது. வேப்பஞ்சேரியில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இத்தலத்தில் குளத்தின் அருகிலேயே, 21 அடி உயரத்தில், ஒரே கல்லில் பத்து அவதாரங்களுடன் கூடிய கிருஷ்ணரின் தசாவதார சிலை அமைந்திருப்பது மிகச்சிறாப்பாகும்.
கருவறை விமானத்தில் கலியுக கண்ணன் அமர்ந்துள்ளார்.
இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீனிவாசபெருமாள் கண்ணைக்கவரும் விதத்தில் காட்சியளிக்கிறார்.
கோயிலின் கொடி மரத்தை தாண்டி உள்ளே சென்றால் அமைதி தவழும் முகத்துடன் கருடனையும், துவாரகபாலகரையும் வழிபடலாம்.
வேறென்ன சிறப்பு?
சகல பாவங்களையும் போக்கும் சுதர்சன சக்கரம் இக்கோயிலில் அமைந்துள்ளது. ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் தசாவதார தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. பாவங்களை போக்க இக்குளத்தில் பரிகாரம் செய்கின்றனர்.
இக்குளத்தை சுற்றி அழகிய வேலைபாடுகளுடன் கூடிய, தசாவதார சிலைகள் தனித்தனியே அமைந்துள்ளன.
குளத்தின் நடுவே காளிங்க நர்த்தனம் புரிபவராக கிருஷ்ணர் அழகாக காட்சியளிக்கிறார்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி ஆகியவை இக்கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கடன் பிரச்சனை, வேலை வாய்ப்பு பெற, உடல்நலம் குன்றியோர் மற்றும் தொழிலில் பாதிப்படைந்தோர் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
No comments:
Post a Comment