#ரகோபதேஸம்
எழுதியது பாஸ்கர் சத்யா
#ரகோபதேஸம்_16.
என்னுடைய ஆசான் அன்று என்னை மடத்திற்கு வர சொல்லியிருந்தார் வழக்கம்போல. அன்று அவருக்கு வைதீக கமிட்மெண்ட் எதுவும் இல்லை என்பதால் என்னை காலை பத்து மணிக்கு வரச் சொல்லியிருந்தார்.
சரியாக பத்து மணிக்கு நான் மடத்திற்குள் நுழைந்தேன்.
'வாடா பாஸு. சொன்னா சொன்ன டைம். எப்படித்தான் உன்னால முடியறதோ? இந்த விஷயத்துல உன்கிட்டேந்து நான் தான் நிறைய கத்துக்கணும்.'
'போதுமே மாமா. நீங்கதான் மெச்சுக்கணும் என்னை. 'மாமா சொன்ன நேரத்துக்கு கரெக்டா போயிடணும்' அப்படின்னு அடிக்கடி என்ன ஞாபகப்படுத்தறது எங்க அம்மாதான். இல்லாட்டி நானாவது டயத்துக்கு வர்றதாவது? அது இருக்கட்டும் மாமா. எனக்கு இன்னிக்கு என்ன சொல்லித்தர போறேள்.'
'பூஜைகள பத்தி பேசுவோமா இன்னைக்கு?'
'எந்த பூஜை மாமா? பிள்ளையார் பூஜையா சரஸ்வதி பூஜையா லக்ஷ்மி பூஜையா.. எதப்பத்தி மாமா?'
'அடிப்படைகள்ல எல்லா பூஜையும் ஒண்ணு தான். எந்த ஸ்வாமிக்கு பூஜை பண்ணப் போறோம் அப்படிங்கறதுக்கு ஏத்தா மாதிரி சித்த சித்த அங்கேயும் இங்கேயும் மந்திரங்கள் வித்தியாசப்படும். அதனால பூஜைகள்ல இருக்கிற அடிப்படை விஷயங்கள நன்னா தெரிஞ்சுப்போம்.'
'நான் இப்போ ஒரு சின்ன கேள்வி ஒன்கிட்ட கேக்க போறேன். சரியா பதில் சொல்றியான்னு பாக்கறேன்.'
'கிளாஸ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே டெஸ்டா எனக்கு? அப்ப எனக்கு ஸீரோ மார்க்கு தான்.'
சிரித்துக்கொண்டே நான் சொன்னதற்கு அவரும் சிரிக்கிறார்.
'சின்ன கேள்விதான். பூஜை அப்படிங்கறதுக்கு என்ன அர்த்தம்?'
'பூஜைன்னா பூஜை தான். ஸ்வாமி முன்னாடி நின்னுண்டு மந்திரம் சொல்லி நமக்கு வேணுங்கறத கேட்கணும். அதான மாமா?'
'அதே தான் டா. நான் விவரமா சொல்லப்போறேன் அவ்வளவுதான். உன்னோட இந்த பதிலுக்கு நூத்துக்கு நூறு மார்க்கு கொடுத்துட்டு க்ளாஸுக்கு போகலாம்.'
'மாமா... இது ரொம்ப ஓவரா உங்களுக்கே தோணலையா?'
'குழந்தை கிட்ட இதுக்கு மேல என்ன பதில் எதிர்பார்க்க முடியும்? நீ கரெக்டா சொன்ன. அதனால நூறு மார்க் கொடுத்தேன். நான் சரியாத்தான் கொடுத்துருக்கேன். சரி இப்ப இன்னும் கொஞ்சம் ஆழமா போலாமா பூஜைக்குள்ள.'
'பூஜை அப்படிங்கற சொல்லுக்கு மலர்தல் அப்டின்னு பொருள். இந்த மலர்தல் சுவாமிக்கு முன்னாடி நடக்கறது. அதாவது உன்னோட ஹ்ருதயத்துக்கு உள்ள இறையன்பை மலர வைக்கிறது. ஸ்வாமி கிட்ட நான் பூவைப்போல மென்மையா வாசத்தோட வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் உன்னைப் பற்றியே நினைச்சுண்டு இருக்கேன் அப்படிங்கிற உணர்வை ஸ்வாமிக்கு முன்னால காண்பிக்கிறது தான் இந்த இடத்தில் மலர்வது அப்படிங்கற பொருள கொடுக்கறது.'
'உனக்கு முன்னால இருக்கக்கறது ஸவாமி படமா இருக்கலாம் அதாவது ஸ்வாமி சித்திரமா இருக்கலாம் அல்லது உலோகத்தாலான விக்ரஹமா இருக்கலாம் ஏன் கல்லாலான சிற்பமா கூட இருக்கலாம். இது எல்லாத்தையும் தாண்டி ஏன் அரூபமாக கூட இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட படத்துக்கோ விக்கிரஹத்துக்கோ உயிர் சக்தி இருக்கு அப்படிங்கற அசைக்கமுடியாத நம்பிக்கைலேந்து தான் பூஜை ஆரம்பமாகறது.'
'தயாரா இருக்கிற உன்னோட இறை உணர்வும் நீ வழிபடும் தெய்வத்திற்கு உயிர் சக்தி இருக்கு அப்படிங்கற நம்பிக்கையும் பூஜைக்கான அஸ்திவாரங்கள்.'
'இன்னும் சொல்லப்போனா நீ வணங்கப்போகற தெய்வத்தை மனசார கூப்ட்டு அதோடு சித்த நேரம் தனித்து அளவளாவி சந்தோஷத்தையும் அமைதியையும் உனக்கு நீயே பெறுவதற்கான முயற்சி தான் இந்த பூஜை முறைகள். இந்த முறைகளத்தான் பூஜை விதிகள் பூஜை ஆகம விதிகள் கோட்பாடுகள் .. இப்படி அப்படின்னு லிஸ்ட் போட்டு வெச்சுருக்கா.'
'மாமா இந்த இடத்தில் ஒரு சின்ன சந்தேகம். ஆகமம் ஆகமம் அப்படின்னு சொல்றாளே மாமா.... அதுக்கு என்ன அர்த்தம்?'
'தமிழ்ல 'ஆ' அப்படின்னா பசு. 'கமம்' னா கட்டுப்படுதல். பசு கட்டுப்படுத்தணும்னா என்ன பண்றோம் ஒரு கயத்துல அத கட்டி வைக்கிறோம் இல்லையா? அதே மாதிரி உயிரையும் மனசையும் இறையன்புக்குள் கட்டுப்படுத்தி வைப்பதுதான் ஆகமம். இங்க 'ஆ' அப்படிங்கறது ஆன்மாவைக் குறிக்கிற சொல். ஆன்மாவை கட்டுப்படுத்தற அத்தாரிடி நம்மகிட்ட இல்லாததால உடம்பு உயிர் மனசு இப்படி இதுக்கு அர்த்தம் எடுத்துக்கணும். கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பை அன்பால கட்டிப் போடுதல் அப்படிங்கற மாதிரியும் புரிஞ்சுக்கலாம்.'
'இந்த ஆகமும் அப்படிங்கறத சிவபுராணம் இன்னொரு கோணத்துல வித்தியாசமா சொல்லிக் கொடுக்கறது. சிவபுராணத்தோட தொடக்கத்துலேயே இறைவனைப் போற்றும்போது, தானே ஆகமம் ஆகி நின்று உயிர்களுக்கு அருகில் வருபவன் என்ற பொருள்பட ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் அப்படின்னு சொல்லி இருக்கு. ஆகமங்கள் மூலம் இறைவனே உயிர்களுக்கு அருகில் வருகிறான். முறைப்படி பூஜையை செஞ்சா இறைவன் பக்கத்திலேயே வந்துடறான் பார். இதன் மூலம், உயிர்களின் விடுதலைக்கு ஆகமங்களின் முக்கியத்துவத்தை வற்புறுத்தி சிவபுராணத்தில் கோடிட்டு சொல்லி இருக்கா பாரு.'
'அதுக்கப்புறம் இதப் பண்ணனும், இதுக்கப்புறம் வேற ஒண்ணு இப்படி வரிசைப்படுத்திண்டு நமக்கு நாமே சில கோட்பாடுகள வெச்சுண்டு முறைப்படி உன்னுடைய இறை அன்பை மென்மேலும் அதிகப்படுத்திண்டு செய்யறதுதான் பூஜை.'
'இந்த பூஜை கிரியைகள் பொதுவாக பஞ்சோபசாரம், தசோபசாரம், ஷோடசோபசாரம் என மூணு வகைகள்ல ஏதாவது ஒண்ண தேர்ந்தெடுத்துண்டு செய்யலாம். இந்த மூணு வகையான உபசாரமுறைகள் மாத்ரம்னு இல்லாம ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஏழு, பத்து, பன்னண்டு, பதினாறு, முப்பத்து எட்டு, அறுபத்து நான்கு, எழுபத்து இரண்டு என எண்ணிக்கையில் அடிப்படையில் பல வகைகளும் உண்டு நான் சித்த முன்னாடி சொன்ன மூணு வகைகளையும் சேர்த்து.'
'இத்தனை வகைகள்ல ஷோடசோபசாரத்த எடுத்துப்போம். அதாவது பதினாறு ஸ்டெப்புகள்ல ... தமிழ்ல படிகள்ல ... செய்யக்கூடிய பூஜை. சமுஸ்க்ரதுத்துல ஷோடசம் அப்படின்னா பதினாறு. ஷோடசம் ப்ளஸ் உபசாரம் ஷோடசோபசாரம். செயல்கள் என்ற வார்த்தையை விட உபச்சாரங்கள் அப்படிங்கறதுதான் பொருத்தமான வார்த்தை மாதிரி தெரியறது இல்லையா?'
'இறைவனை உபசரிக்கிறாய் ... சில கோட்பாடுகளின் அடிப்படையில். உன்னோட இறை உணர்வு அன்போடு கலந்து கோட்பாடுகளோடு கூடிய ஒரு வட்டத்தில் நீ நன்னா மலர்ந்து நம்பிக்கையையும் மனப்பூர்வமா சேர்த்துண்டு அந்த இறைவனை உபசரிப்பது ... இவைகளெல்லாமே சேர்ந்துதான் பூஜை அப்படின்னு அழைக்கப்படறது.'
'நாம நம்ம ஆத்துக்கு வருகிற விருந்தாளிகளை உபசரித்து செய்யும் விருந்தோம்பலுக்கும் பூஜை முறைகளுக்கும் அடிப்படைல வித்தியாசங்கள் அவ்வளவாக இல்லை.'
'உதாரணமா உங்க மாமா டெல்லியில இருக்கார். அவர் உங்காத்துக்கு இத்தனாந்தேதி வரார்னு கடுதாசி போட்டிருக்கார்னு வச்சுப்போம். அந்த லெட்டரை பார்த்த உடனே உனக்கு சந்தோஷ உணர்வுகள கொடுக்க ஆரம்பிக்கறது. அவர் ஆத்துக்கு வரதுக்கு முன்னாடி நீ என்ன பண்ற? ஆத்தெல்லாம் பார்வையா வைக்கற. அதாவது நீட்டா ... அங்கேயும் இங்கேயும் இருக்கற பொருட்களை அந்தந்த இடத்தில் வைக்கிற. அவர் வரும்போது வாயார கூப்பிடற. ச்சேரை நன்னா தொடச்சி உட்காரச் சொல்ற. பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துதான்னு கேட்கிறே. களைப்பாக வந்திருக்கும் அவருக்கு தூத்தம் காப்பி எல்லாம் குடுக்கற. அப்புறம் அவர் ஸ்நானம் பண்ண ஏதுவாக ஏற்பாடுகளை செய்யற. சோப்பு கொடுக்கற. தலை வார சீப்பு குடுக்கற. நெத்திக்கு இட்டுக்க விபூதி குங்குமம் சந்தனம் எல்லாம் கொடுக்கிற. மாமாவுக்காக புதுசா டிரஸ் வாங்கியிருந்தா அதையும் போட்டுக்க சொல்ற. அப்புறம் மாமாவ முகஸ்துதி பண்ற. நல்ல வாழை இலை போட்டு தயாரான சாப்பாட்ட அதுல பரிமாறி சாப்பிட சொல்ற. சாப்பிட்டு முடிச்சோண்ண தாம்பூலம் கொடுக்கிற. விசிறி விடற. உன்னுடைய திறமைகளை எல்லாம் அவர்கிட்ட செஞ்சு காமிக்கற. அதாவது பாட்டு பாடி காமிக்கற, டான்ஸ் ஆடுற ... இப்படி ஒவ்வொண்ணா செஞ்சு அவருக்கும் சந்தோஷத்த கொடுக்கற.'
'இதே மாதிரிதான் நாம பூஜைல பகவானுக்கு உபச்சாரம் பண்ணும்போது அதற்கான மந்திரங்களை சேர்த்ததுண்டு வரிசைக் கிரமமா ஒண்ணு ஒண்ணா செஞ்சு அவரை திருப்திப்படுத்தி பிரியா விடை கொடுத்து வழி அனுப்பறோம். இப்ப புரிஞ்சுதா?'
'சரி. இப்ப நாம அந்த பதினாறு வகையான உபசாரங்கள் என்னென்ன அப்படின்னு வரிசைக்கிரமமா பார்ப்போம்.'
'முதலில் தியானம் - அன்றைய பூஜைக்கு உரிய இறைவன் அல்லது இறைவியின் உருவத்தை தியானித்தல். நான் சொன்னேனே இறை உணர்வு. அதுதான் இங்க த்யானம் அப்படிங்கிற வடிவுல சொல்லி இருக்கா. இந்த உணர்வுதான் பூஜைக்கான அடித்தளம்.'
'ஆவாகனம் - தியானிக்கப் பட்ட தெய்வத்தை வருமாறு அழைத்தல்.'
'அடுத்து ஆசனம் - தெய்வம் அமர இருக்கை அளித்தல்'
'அர்க்கியம் - கை அலம்ப ஜலம் கொடுத்தல்'
'ஆசமனியம் - அவர் பருக நீர் அளித்தல்'
பாத்யம் - அவர் பாதம் கழுவுதல்
அபிஷேகம் - நீராட்டுதல். விரிவான பூஜைன்னா பால், தயிர், தேன், நெய் முதலிய திரவியங்களால் அபிஷேகம் செய்வித்தல்.'
வஸ்திரம் - ஆடை அணிவித்தல்
ஆபரணம் - அணிகலன்கள் பூட்டுதல்
கந்தம் - சந்தனம், குங்குமம் போன்ற நறுமணப் பொருட்களைப் பூசுதல்
அர்ச்சனை - மலர்மாலைகள் சூட்டுதல், நறுமலர்களால் அர்ச்சனை.
தூபம் - சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றால் நறுமணப் புகை காட்டுதல்
தீபம் - நெய்விளக்கேற்றித் தெய்வத் திருவுருவத்தைச் சுற்றிக் காட்டுதல்.
நைவேத்யம் - பல்வேறு உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைத்தல்.
நீராஜனம் - கற்பூரம் ஏற்றி ஆரத்தியெடுத்தல்
தாம்பூலம் - வெற்றிலை, பாக்கு அளித்தல்
விரிவான பூஜைகளில் இவைகளோடு மட்டும் இல்லாமல் பாட்டு பாடறது, வாத்யங்களை இசைத்து முழக்குதல், டான்ஸ் ஆடுதல் இவைகளைக் கூட உபசாரங்களாக சேர்த்துக்கலாம்.'
'பிள்ளையார் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூஜை இப்படி வரக்கூடிய பிரத்யேக பூஜைகளுக்கு உண்டான இந்த பதினாறு வகையான உபசாரங்களும் நாம தினமும் பண்ற நித்திய பூஜைக்கும் பொருந்தும்.'
'இவ்வளவும் செஞ்சுட்டுப் போனா ஸ்கூலுக்கு போக வேண்டாமா மாமா?'
'நீ கேட்கறது சரிதான். அதுக்காகத்தான் பலவகைகள்ல பூஜை முறைகள் இருக்கு. உன்னோட லௌகீக விஷயங்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் நேரத்துக்கு தகுந்தாற்போல நீ ஏதாவது ஒரு வகைய தேர்ந்தெடுத்து பூஜை பண்ணலாம். இந்த எல்லா வகை களையும் தாண்டி மானசீகமாக கூட பூஜையே பண்ணலாம். இது ரொம்ப ரொம்ப விசேஷம் தெரியுமோ? இதுக்கு ஒரு செலவு கிடையாது. எல்லாத்தையும் மனசுலேயே கொண்டுவந்து பகவானோட ஒரு நெருக்கத்தை கொண்டு வந்து அவனுக்கு உபசாரங்கள் செய்வதை விட வேறு என்ன ஒசத்தியா இருக்க முடியும்?'
'இந்த பதினாறு வகையான உபசாரங்கள் செய்யறது கூட ரொம்ப டைம் எடுத்துக்காது. இரண்டு வரிகள்ல கூட ஒவ்வொரு உபச்சாரத்துக்கும் மந்திரங்கள் இருக்கு.'
'மாமா இந்த பதினாறு உபசாரங்கள் செய்யறதுக்கு டைம் இல்லைன்னா நீங்கதான் சொன்னேளே மானசீக பூஜை இருக்கவே இருக்கு.'
சிரிக்கிறார். 'பாஸுக்கு எப்போதுமே ஷார்ட் ரூட் தான் புடிக்குமாக்கும்?'
'அப்படி இல்ல மாமா. பெரிய பூஜையை செய்ய முடியலைன்னாலும் கொறைச்ச உபச்சாரங்கள்ல செய்யலாம் இல்லையா?'
'நீ சொல்றதும் ஒருவகையில் ஏத்துக்க கூடியதுதான். டைம் கிடைச்சா விஸ்தீரணமா செய். டைம் கிடைக்கலையா அதுக்கேத்த பூஜை முறைய தேர்ந்தெடுத்துண்டு பண்ண வேண்டியதுதான். ஆத்மார்த்தமான ரெண்டு துளசி தளத்தையும் வில்வ இலைகளையும் ஸ்வாமி மேல போட்டுட்டு ஆத்துல இருக்கிற காஞ்ச திராட்சையைப் கூட நெய்வேத்தியமா பகவானுக்கு காட்றது கூட பூஜை தான். எப்படி செஞ்சாலும் முன்னாடி இருக்கிற படத்துக்கோ விக்கிரகத்துக்கோ மனசால உயிரோட்டம் கொடுத்து காட்ற பக்தியில கிஞ்சித்தும் குறையில்லாம செய்யணும்.'
'பூஜைகளை பத்தி பூஜை முறைகளைப் பத்தி பேசிண்டே போகலாம். இன்னிக்கு இத்தோட நிறுத்திக்கலாம்.'
'ரொம்ப தேங்க்ஸ் மாமா. பிரமாதமா சொல்லிக்கொடுத்தேள்.'
'ஒன்னு சொல்ல மறந்துட்டேன். பூஜைகள் போது வைக்கக்கூடிய பிரார்த்தனைகள்ல பொது நலமும் சேர்ந்திருக்கணும். மத்தவாள் நலனுக்காக பிரார்த்திக்கிறது அப்படிங்கற குணத்த மென்மேலும் வளர்த்துக்கணும். பகவத்கீதைல கூட இது பத்தி சொல்லப்பட்டிருக்கு. நாளைக்கு வரும்போது என்னை ஞாபகப்படுத்து. அதப் பத்தி பேசுவோம்.'
சாஷ்டாங்க நமஸ்காரம். அபிவாதனம். அபரிமிதமான ஆசிகள். பரிமாற்றங்கள் முடிந்து மடத்திலிருந்து கிளம்புகிறேன்.
தொடரும்.
No comments:
Post a Comment