அவளும் அப்படிச் சொல்லி விட்டாளா?"
(மூகரும் அதைத்தானே "குருமூர்த்தியே காமாட்சி!" என்று காட்டுகிறார்)
மேல் நாட்டுப் பெண்மணிக்கு ஒரு கனவு வந்தது. அவளுக்கு இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாது.பார்த்ததும் இல்லை.
அவள் கனவில் பச்சைப் புடவையுடன், சர்வாலங்கார பூஷிதையாக அம்பாள் காட்சி தந்தாள். " நீ என்னை வந்து பார்!" என்று சொல்வது அவளுக்குத் தோன்றியது.
ஆனால் வந்தது யார்....அவளை எங்கே,
எப்படிப் பார்ப்பது என்று புரியவில்லை.
அந்தப் பெண்ணின் சகோதரி இந்தியாவுக்கு வந்து ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவரிடம் தனது கனவைப் பற்றிச் சொல்லவே, "நீ இந்தியாவுக்கு வா: இங்கே பல கோயில்கள் இருக்கின்றன.எங்கேயாவது உன் கனவில் வந்த அம்பாள் கிடைப்பார் !" என்று சகோதரி வழி சொன்னார்.
அப்படியே கனவு கண்டவரும் இந்தியா வந்து எல்லாக் கோயிலும் ஏறி இறங்கினார்.எங்கும் கிடைக்கவில்லை. இறுதியாக எல்லாரையும் போல கலவையில் இருந்த பெரியவாளை தரிசிக்க வந்தார். தன் கனவைப் பற்றி அவரிடம் தெரிவிக்க வேண்டும். எப்படி என்று புரியவில்லை. அவரை அழைத்து வந்த காரோட்டி மடத்தில் ஒருவரிடம் அது பற்றிச் சொல்லி,பெரியவா தனியாகப் பார்த்துப் பேச ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
பெரியவா ஒரு கிணற்றுக்கு அந்தப்புறம் நிற்க, இந்தப்புறம் ஆங்கிலப் பெண்மணி வந்தார். ஒரு நிமிடம் அவரைப் பார்த்ததும் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார். கண் திறந்ததும் எல்லோரும் அவரைச் சுற்றி
நின்று காரணம் கேட்டனர்.
"என்னவென்று சொல்வேன்! என் சொப்பனத்தில் பச்சைப் புடவையும் நகைகளுமாகப் பொலிந்த அம்பாளை பெரியவா திருவுருவில் பார்த்தேன் நம்ப முடியவில்லை!" என்று நிலைகொள்ளாமல் தத்தளித்தார்.
கேட்டவர்களுக்குத் திகைப்பு அடங்க வெகு நேரமாயிற்று. தரிசனத்துக்கு ஏற்பாடு செய்த நாராயணன் பெரியவாளைப் பார்க்கப் போனார். அப்போது அவர் ஆஞ்சனேய ஸ்வாமி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.
பெரியவாளிடம் தயங்கியபடி நாராயணன், "வெள்ளைக்கார அம்மா உங்களை அம்மனைப் போல புடவை நகைகளுடன் பார்த்தகாச் சொல்கிறார்! உண்மையா?" என்று கேட்டபோது, அவருக்கு நேரடியாக பதில் சொல்லாமல் ஆஞ்சனேய ஸ்வாமியைப் பார்த்து,
"அவளும் அப்படிச் சொல்லி விட்டாளா? மூகரும் அதைத்தானே "குருமூர்த்தியே காமாட்சி!" என்று காட்டுகிறார்...." என்று பேசிக்கொண்டே போனாராம்.
ஒரு மூகாச்சார்யருக்குத் தோன்றிய காட்சி, எங்கோ ஒரு ஆங்கிலேய மாதுவுக்குக் கிடைத்தது என்பதை எண்ணிப் பார்த்து அதிசயிக்கிறோம்
Jaya Jaya shankara hare hare shankara
No comments:
Post a Comment