#ரகோபதேஸம்
எழுதியது பாஸ்கர் சத்யா
ரகோபதேஸம்_5
அடுத்த வகுப்பு நடத்த அவர் சொன்ன தினத்தன்று மடத்திற்கு வந்துவிடுகிறேன்.
என்னை வரவேற்ற அவர், 'சித்த ஆத்துக்கு வரைக்கும் போயிட்டு வரேன்டா. பஞ்சாமி மாமா வருவா என்ன தேடிண்டு. கொஞ்சம் அவரை வெயிட் பண்ண சொல்லு. நான் இல்லை அப்படின்னு திரும்பி போயிடப் போறான். தோட்டத்துக்கு போகாத அவன் வர்ற வரைக்கும், என்ன? சீக்கிரம் வந்துடறேன். வேணும்னா ஸ்வாமி முன்னாடி நாலு காயத்ரியை சொல்லிண்டிரு.'
'சரி மாமா.'
அவர் கிளம்பிய சில நிமிடங்களிலேயே பஞ்சாமி மாமா வந்துவிட்டார். மாமா சொன்னதை அவரிடம் சொல்லி அவரை காத்திருக்க சொல்லிவிட்டு காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க துவங்குகிறேன்.
'லேட் ஆகிறதே பாஸ்கர். நான் வேணா அப்பறம் வரட்டுமா?'
'இப்ப வந்துடுவார் மாமா. நீங்க கிளம்பிட்டா என்ன அப்பறம் கோச்சுப்பார்.'
அவரும் சிறிது நேரம் காத்துக்கொண்டிருந்த போது என் குருநாதரும் வந்துவிட்டார். அவர் கையில் கொண்டுவந்த ஒரு மஞ்சப்பையை பஞ்சாமி மாமாவிடம் கொடுக்க அவரும் கிளம்பிவிட்டார்.
'ரொம்ப நாழி காத்துண்டிருந்தானா பஞ்சாமி?'
'நீங்க கிளம்பினோண்ணயே வந்துட்டார். அவசரப்பட்டார். நான் தான் நீங்கள் கோச்சிப்பேள் அப்படின்னு அவரை போக விடல.'
'ஒண்ணுமில்லடா. மூணாம் தெருவில ஆயுர்வேத டாக்டர் சோமாசி ஐயர் தர்ப்பைப்புல் கட்டு வேணும்னு கேட்டிருந்தார். ஏதோ மருந்து தயாரிக்கணுமாம்?'
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தர்ப்பைப்புல்கள வெச்சு மருந்தா? பூஜை தர்ப்பணம் இவைகளுக்கு தானே இவைகளை பயன்படுத்துவா? இது என்ன புதுசா .... மருந்து?'
எனக்கு ஆர்வம் சற்று அதிகமாக குருநாதரிடம் கேட்கிறேன்.
'நான் ஆயுர்வேத டாக்டரா என்ன? ஆயுர்வேதத்தில இந்த தர்ப்பை புல்ல சில நோய்கள் தீர்க்கர மருந்துக்காக உபயோகப்படுத்தரா. அது மட்டும்தான் நேக்கு தெரியும்.'
'மாமா ஆஆஆஆ. பொய் சொல்லாதீங்கோ மாமா. உங்களுக்கு தெரியும். சொல்லப் போறேளா இல்லையா?'
'சரி. அந்த நாலாந்தெரு டாக்டர் சொன்னத நோக்கு சொல்றேன். இன்னொரு தடவையும் சொல்றேன் எனக்கு இதைப் பத்தியெல்லாம் தெரியாது. நீ வற்புறுத்தி கேட்கறதால நேக்கு தெரிஞ்சத சொல்றேன், சரியா.'
'பொதுவா மனுஷாளோட உடல் நலக்குறைவு அப்படிங்கிறது மூணு விதமான தோஷங்களால ஏற்படறது. வாதம் பித்தம், கபம் அப்படிங்கறதுதான் அந்த மூணு வகையான தோஷங்கள். இந்த மூன்று விதமான தோஷங்களை சமநிலைல வெச்சுககரதுக்கு இந்த தர்ப்பைப் புல் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்காம்.'
'சர்க்கரை உபாதை இருக்கிற சில நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் வெளியே வரும். இதற்கு ஹாரித்ரமேஹம் அப்படின்னு ஆயுர்வேதம் சொல்றது.'
'இன்னும் சில பேருக்கு துர்நாற்றத்தோட, மஞ்சள் நிறத்துல கலக்கிய நீர் மாதிரி சிறுநீர் வெளியேறும். இந்த உபாதையை மாஞ்சிஷ்டமேஹம் அப்படிங்கறா ஆயுர்வேத மருத்துவத்துல.'
'இதெல்லாத்தையும் விட இன்னொரு வகை துர்நாற்றத்தோட, சூடு எரிச்சலோட, ரத்தம் சேர்ந்து சிறுநீர் வெளியேறது. இதை ரக்தமேஹம் அப்படிங்கிறா.'
'மாமா மாமா சித்த நிறுத்துங்கோ. ஒண்ணும் தெரியாது ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிட்டு எவ்வளவு விஷயம் உங்ககிட்டேந்து வர்றது.'
'நெஜமா தெரியாதுடா. அந்த டாக்டர்கிட்ட ஒரு நாளைக்கு பேசிண்டு இருந்தேன். அப்ப அவர் சொன்ன விஷயங்களை உனக்கு இப்ப சொல்லிண்டு இருக்கேன். அதுவும் நீ ரொம்ப வற்புறுத்தினதால.'
'சரி விஷயத்துக்கு வருவோம். இந்த மூணு வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தோட சீற்றத்தினால ஏற்படறதாம். அந்த மாதிரி சமயங்கள்ல தர்ப்பைக் குடிநீர சாப்ட்டா பித்தத்தினால ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைக்கறதோட கிட்னி மற்றும் அதோட பாதையில ஏற்படற தொத்து உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீரா இந்த தர்ப்பைப் புல் குடிநீர் இருக்காம்.'
'எப்படி மாமா இதை தயாரிக்கிறது?'
'நிறைய செய்முறைகள்ல ஆயுர்வேதத்தில தர்ப்பை புல்ல வெச்சி மருந்து தயாரிக்கிறா. சாதாரண மனுஷாளுக்கும் புரியிற மாதிரி அவர் ஒன்னு சொன்னார். அது என்னன்னா பதினஞ்சு கிராம் அளவுக்கு தர்ப்பைப்புல் எடுத்துக்க வேண்டியது. ஒரு லிட்டர் நல்ல தூத்தத்த அதுல ஊத்த வேண்டியது. நன்னா காய்ச்ச வேண்டியது. ஒரு லிட்டர் தண்ணி அரை லிட்டர் தண்ணியா ஆனவுடனே வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமா ஆறினோண்ண குடிக்க வேண்டியது. அவ்வளவுதான்.'
'தர்ப்பைய நன்னா பொடி பண்ணி முதல்நாள் ராத்திரியே பானை தண்ணியில போட்டு மறு நாளைக்கு வடிகட்டி கூட குடிக்கலாம் அப்படின்னு கூட சொல்றார்.'
'இந்த கஷாயத்துக்கு ஹிமகஷாயம்னு ஆயுர்வேதத்துல் பெயர் வெச்சுருக்காளாம்.'
'மாமா ... டேஸ்ட் எப்படி இருக்கும் மாமா?'
'பொதுவா தர்ப்பைப்புல் இனிப்பும் துவர்ப்பும் சேர்ந்தது. குளிர்ச்சியானது. சீரணத்தின் இறுதில இனிப்புச் சுவையாக நிக்கக்கும். மூவகை தோஷங்களான வாத பித்த கபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்தறதால தர்ப்பை ஒரு அருமருந்தாகவே ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றா.'
'சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம இந்த ஹிமகஷாயம் மூலமா கொறச்சுக்கலாமாம்.'
'இந்த தர்ப்பைப் புல்லுக்கு இன்னும் சில மருத்துவ குணங்கள் இருக்கிறதா மருத்துவாள்லாம் சொல்றா.'
'முதல் குணம் இதோட குளிர்ச்சி தான். இது உடலுக்குக் குளுமையை கொடுக்கறதால தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானம்'
'தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்யுமாம்.'
'சிறுநீரகத்துல ஏற்படற ரத்த அழுத்தத்தையும் சீராக்குமாம்.'
'சிறுநீரகத்துல சில பேருக்கு சின்ன சின்ன கற்கள் மாதிரி பொருட்கள் தங்கிடும். அவைகள் எல்லாம் வெளிய வரத்துக்கு படாத சிரமம் படுவாளாம். அந்த மாதிரி இருக்கிற சிறுநீரக கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது அப்படின்னு கூட சொல்றா.'
'இன்னும் ஒரு விஷயம். இந்த தர்ப்பை புல் ஜலம் தாகத்தைப் போக்கும் அப்படிங்கறார்.
'மஞ்ச காமாலை உபாதையில் ஏற்படக்கூடிய கல்லீரல் கிருமித்தொத்து மற்றும் அதிகமான பித்த ஊறல் போன்றவைகள குறைக்கக் கூடிய சக்தி கூட இந்த தர்ப்பைப் புல்லுக்கு இருக்காம்.'
'ரத்தத்தில ஏற்படற காந்தல் மற்றும் அதன் மூலமாக ஏற்படும் ரத்தமூலம், ரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றைகள கூட குணப்படுத்தற ஆற்றல் தர்ப்பைப் புல்லுக்கு இருக்காம்.'
'பாவப்ரகாசர்ங்கற ஆயுர்வேத முனிவர் எழுதிய புத்தகத்துல தர்ப்பைப் புல்லை பத்தி நிறைய விவரங்கள் இருக்காம். புத்தகத்தைத் தேடி தரேன்னு என்கிட்ட சொல்லி இருக்கார் சோமாசி டாக்டர். என் கைக்கு வந்தோண்ண ரெண்டு பேருமே சேர்ந்து படிப்போம்.'
'ஆச்சரியமா இருக்கு மாமா. நீங்க கொஞ்சமா சொன்னதே இவ்வளவு இருக்கு. நானே ஆயுர்வேத டாக்டர் மாதிரி ஆயிட்டேன்.'
பெரிதாக சிரிக்கிறார் நான் இப்படி சொன்னவுடன்.
'ஆயுர்வேதத்தில் இன்னும் எவ்வளவோ இருக்கே கத்துக்க வேண்டியது. வேணும்னா தர்ப்பைப்புல் டாக்டர்னு இப்ப சப்திக்கு வெச்சுக்கலாம்.'
இருவருமே பெரிதாக சிரிக்கிறோம்.
'நம்மளோட ஹிந்து சனாதன தர்மத்துல தர்ப்பை, துளசி, வில்வம் இந்த மூணுக்குமே தெய்வீத்தன்மை இருக்கிறதா சொல்லி இருக்கா. ஒருவேளை மருத்துவ குணங்கள் அதிகமாக இவைகள்ல இருக்கறதாலோ என்னவோ தெய்வீக காரியங்கள்ல இவைகளை அதிகமாக பயன்படுத்தறோம். பூஜை புனஸ்காரம் யாகம் ஹோமம் இப்படி எல்லா விஷயங்களிலும் இவைகளை ஏதாவது ஒரு வகைல சேர்த்துகறோம்.'
'மாமா வேப்பிலையை விட்டுட்டேளே'
'ஆமாம். அத கூட சேர்த்துக்கலாம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி அப்படின்னே வழக்குச்சொல் இருக்கே. வேப்பிலைய மிகச்சிறந்த கிருமிநாசினியா சொல்றா. அதனாலதான் எல்லை தெய்வங்கள், காக்கும் தெய்வங்கள் அப்படின்னு சொல்லக்கூடிய மாரியம்மன் காளியம்மன் அய்யனார் மதுரை வீரன் போன்ற தெய்வங்களுக்கான பூஜை புனஸ்காரங்கள்ல இந்த வேப்பிலைய மிக முக்கியமா சேர்த்துக்கறா.'
'பல மருத்துவ குணங்கள் இருக்கற இலைகளையும் தழைகளையும் கிளைகளையும் நாம ஹோமத்தில சேர்த்துக்கறோம். அப்படிப்பட்ட ஹோமங்கள்லேந்து கிளம்புற புகையை ஸ்வாசிச்சு நம்ம உடலுக்குள்ளே இருக்கக்கூடிய உறுப்புகள பலப்படுத்திக்கறோம்.'
'சரிடா பாஸு. இதோட போதும் இன்னிக்கி. நானும் அமாவாசை தர்ப்பண மந்திர விளக்கங்களை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கணும்னு ஆரம்பிக்கணும்னு நெனைப்பேன். எப்படியோ டாபிக் திசைமாறி போயிடறது.'
'பரவால்ல மாமா. இதெல்லாமும் தெரிஞ்சுகறது நல்லதுதானே?'
'சமத்து. ஜாக்கிரதையா போ. நம்ம தெருவுல நாய்கள் நடமாட்டம் ஜாஸ்தியா போயிடுத்து. அதுகள் கிட்ட வம்பு தும்பு இழுக்காம ஓரமா போ.'
நமஸ்காரம் அபிவாதனம் என்னிடமிருந்து. ஆசிகள் அவரிடமிருந்து.
தொடரும்
No comments:
Post a Comment