#ரகோபதேஸம்
எழுதியது பாஸ்கர் சத்யா
#ரகோபதேஸம்_20
ஒருநாள் காலை ஏழு மணிக்கே பாடம் சொல்லித் தருவதற்கு அழைத்திருந்தார். ஆறரை மணிக்கே அங்கு சென்று அவருடைய நித்திய பூஜைக்காக பூக்களையும் பறித்துவிட்டு வழக்கமான நமஸ்காரம் மற்றும் ஆசீர்வாத பரிமாற்றங்களையும் முடித்துக் கொண்டு குருநாதருக்கு முன் உட்காருகிறேன்.
'பாஸு, காலங்கார்த்தால இவ்வளவு சீக்கிரம் எழுந்து இங்க வந்து பாடம் சொல்லிக்க இவ்வளவு அக்கறையா வந்திருக்கியே. பேஷ் பேஷ்.'
'மாமா. நீங்க சொன்ன இந்த டைம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சீக்கிரம் கிளாஸை முடிச்சுட்டு விளையாட போலாம் இல்லையா?'
'அதானா விஷயம்?' இப்படி கேட்டு அவர் சிரிக்க நானும் சிரிக்கிறேன்.
'சரி. இன்னிக்கு சின்னதா நோக்கு குருபரம்பரைகள பத்தி சுருக்கமா சொல்லி கொடுக்கலாம்னு இருக்கேன்.'
'அது என்ன மாமா குருபரம்பரை?'
'வழக்கம்போல அவசரப்படறையே. சமஸ்கிருதத்துல குரு பரம்பரா அப்படின்னு சொல்லப்பட்ட விஷயம் தான் இது. தமிழ்ல பரம்பரை. இங்க்லீஷ்ல கூட ஏதோ லீனியேஜ் ஆஃப் டீச்சர்ஸ் அப்படின்னு சொல்லுவா.
இந்து சமய வேத பண்பாட்டின் மரபுப்படி, வேத வேதாந்த சாஸ்த்ரத்திங்கள்ல குறிப்பிட்டுள்ள குருகுலத்துல ஒரு குருவிடமிருந்து சாஸ்த்ர கல்வி பயின்ற மாணவர்கள் பற்றிய பரம்பரையைக் குறிக்கிறது இந்த குரு பரம்பரை. நம்ம மதத்துல மாத்திரம்னு இல்லாம இந்த பரம்பரை சமாச்சாரம் மற்ற மதங்களான பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்களிலேயும் இருக்கு.'
'சமுஸ்க்கிரதப்படி இந்த குரு பரம்பரா தடையில்லாத வாரிசு, தொடர்ச்சி அல்லது மரபு அப்படிங்கிறத நமக்கு உணர்த்தறது. குருகுல மரபுல கல்வி பயின்ற குரு சீட பரம்பரை, குருவை தங்கள் குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொள்ளும் மரபும் இருக்கு.'
'சில தாந்தீரிக குருபரம்பரை மரபுகள்ல குரு-சீடர்கள் பரம்பரையில, ஒரு காலகட்டத்தில் செயல்படும் ஒரு குரு மட்டுமே இருப்பார்.
இந்து குரு பரம்பரை அமைப்பில் வேத வேதாந்த சாத்திரங்களை குருவானவர், தன் சீடர்களுக்கு வாய் மொழியாக கற்றுத்தருவார். அதை சீடர்கள் மனசுல நன்னா பதிச்சுண்டு, எப்போதும் அதப்பத்தியே சிந்திச்சுண்டு, சந்தேகம் இல்லாம கத்துண்டு, தனது குருவிற்குப் பிற்காலம் தனது சீடர்களுக்கு அதே கல்வியை, தன் குரு தனக்கு உபதேசித்தபடி கத்துக் கொடுக்கணும்.'
'இப்படியாக வேத வேதாந்த
சாஸ்த்ரங்கள் எந்த வித மாத்தமும் இல்லாம வாய்மொழியா மட்டுமே குருவிடமிருந்து சீடர்களுக்கு, குரு பரம்பரைல சொல்லிக் கொடுக்கப்படறது. சில குரு பரம்பரைகள்ல ஆன்மிகம், இசை, நாட்டியம், மருத்துவம், போர்க்கலை, போன்ற கலைகள் கூட கத்துக் கொடுக்கறா.'
'இந்து மதமாக இருந்தாலும் சமண மதமாக இருந்தாலும் இல்லாட்டி பௌத்த மதமாக இருந்தாலும் குரு என்ற சொல்லுக்கு "வழிகாட்டி ஆசிரியர், நிபுணர்" என்ற பொருள்தான். தன்னோட குருகுலத்துல உள்ள சீடர்களுக்கு ஆன்மீக மற்றும் பல துறை அறிவை போதிப்பவர் தான் இந்த குரு. .குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் ஸ்ரீகிருஷ்ணர்,அர்ஜுனனுக்கு குருவாக இருந்து பகவத் கீதையை புகட்டியதின் வாயிலாக குருவின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்.'
'அறிவுடன் கூடிய சிஷ்யன் குருவிற்கு பணிவிடைகள் செய்வதன் மூலம், ஆத்ம தத்துவத்தை நன்கு அறிந்த மகாத்மாவும் ஞானியுமான குருவிடமிருந்து பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வான்'. இதுதான் பகவத்கீதையில் அந்தப் பகுதியில வருகிற சாராம்சம்.'
'ஆன்மீக குரு வை சத்குருன்னும், பரமகுருன்னும், ஸ்வாமின்னும், சத்புருஷன்னும் அழைப்பா. குருவை பின்பற்றுபவர்கள் சிஷ்யர்கள். குரு தனது குரு குலத்தில் சிஷ்யர்களுடன் தங்கி ஆன்மீகக் கல்வி அறிவை புகட்டுவார். குருவின் பரம்பரை அவரது சிஷ்யர்களால் நீட்சி அடைகிறது.'
'இந்து சமய மரபுகள்ல குருவானவர், ஸ்ருதி வேதம் எனப்படும் வேத மந்திரங்கள், வேதாந்தம்,
ஸ்ம்ருதி எனப்படும் பிரம்ம சூத்திரம், யோகா, சமயச் சடங்குகள், கர்ம யோகம், தாந்திரீகம், பக்தி,
ஞானயோகம், இலக்கணம்,
நியாயம், தர்மம் இதிகாசம் மற்றும் புராணங்கள் இதுமாதிரியான ஆன்மீக கல்வியுடன் அரசியல் நுட்பம், ராஜ தந்திரம், அரச தர்மம், ஜோஸ்யம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம், சமூகச் சட்டங்கள் போன்ற வாழ்க்கைக்கு தேவையான விடயங்களையும் சீடர்களுக்கு வாய்மொழியாக போதிப்பார். மொத்தத்துல சீடர்களின் மனதில் உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவரே குரு ஆவார்.'
'இந்து சமயத்தில் குரு மிகவும் மதிக்கத் தக்கவர். மனுஸ்மிருதி குருவை, சிஷ்யனின் பெற்றோர்களுக்கு நிகராகவே சொல்லப் பட்டிருக்கு. ஒருபடி மேலேயே குருவை அடையாத ஒருவனை அனாதை அல்லது அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று கூட சொல்லியிருக்கான்னா பாத்துக்கோயேன். குரு சிஷ்யனுக்கு அறிவை வழங்குபவர் மட்டும் அல்ல தீக்ஷையும் வழங்குபவர். சிஷ்யனுக்கு ஆத்ம ஞானத்தை ஊட்டி விதேக முக்திஅடைய வழிகாட்டுபவர் குருவே.'
'ஆன்மீக குருவின் முக்கியத்துவம் உபநிஷதங்கள்ல அதிகமாக காணப்படறது. ஏன் கொட்டிக்கிடக்குன்னே கூட சொல்லலாம். உபநிஷதங்கள்ல குருவானவர் இறைவனுக்கு நிகராகவே போற்றப்படுகிறார். குருவின் நினைவை போற்றும் விதமாக குரு பூர்ணிமா விழா கொண்டாடறத கூட நாம பாக்கறோம்.'
'தனக்கு கல்வி கத்துக் கொடுக்கற குருவை மாத்திரம்னு இல்லாம குருவோட குருக்களையும் சில அடைமொழிகளுடன் போற்றி வணங்கும் மரபு சிஷ்யர்கள் கிட்ட இருக்கு. தகுதிக்கு ஏத்தமாதிரி ஆன்மீக குருவை சில அடைமொழிகளுடன் அழைக்கப்படுவது இந்து சமய மரபு. அவைகள சித்த பாப்போம்.'
'பொதுவாக குரு என்கிற வார்த்தை சிஷ்யாளுக்கு தற்போது கல்வி கற்றுத் தரும் குருவை குறிக்கறது.'
அடுத்து பரம குரு - ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை கொண்ட ”குரு - சீட” மரபை நிலைநாட்டிய குரு. எடுத்துக்காட்டுக்கு ஆதி சங்கரரை சொல்லலாம். அத்வைத மரபை தன் சிஷ்யார்கள் மூலம் நிலை நாட்டிய பரம குரு அவர் இல்லையா?'
'நெக்ஸ்ட் பராபர குரு – பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு – சிஷ்ய மரபுகளை உண்டாகறதுக்கே ஆதாரமாக இருந்த மகாகுரு இவர். எடுத்துக்காட்டு வேத வியாசர். அத்வைதம், த்வைதம் மற்றும் விசிஷ்டா த்வைதம் போன்ற மரபுகள் இந்து சமயத்தில் தோண்றக் காரணமாக இருந்தவர் வேத வியாசர்.'
' அடுத்து பரமேஷ்டி குரு’ – முக்தி வழங்கக்கூடிய மிக மிக உயர்ந்த குரு. எடுத்துக்காட்டு தட்சிணாமூர்த்தி, ஸ்ரீகிருஷ்ணர், மகாவீரர் & புத்தர் இப்படி.'
'குரு பரம்பரைன்னா என்ன? திரும்பவும் சுருக்கமா ஒரு தடவ சொல்றேன். கேட்டுக்கோ.
ஆதி குரு முதல், இன்று வரை,
வாழையடி வாழையாக,
பரம்பரை பரம்பரையாக, வந்துள்ள ஆசார்ய பெருமக்கள் தான் குரு பரம்பரை.'
'ஏற்கனவே சொன்னேனே சாஸ்திரத்துல ஒருத்தனுக்கு குரு கிடைக்கலன்னா அவன் அனாதை என்று சொல்லப்படுகிறான். அவனை வழிகாட்ட அவனுக்கு ஒரு நல்ல குரு கிடைக்கணும் அப்படிங்கறபோதே அந்த அனுக்ரஹத்துக்காக ஒவ்வொருத்தரும் பிரார்த்தனை செய்யணும் அப்படிங்கறது அவசியமாகிறது இல்லையா? யார்கிட்ட பிரார்த்திக்கணும்?'
'இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக நம்ம சாஸ்திரத்திலேயே குரு பரம்பரா ஸ்லோகங்கள் இருக்கு. அந்த ஸ்லோகங்கள உள்வாங்கிண்டு மனசால பிரார்த்தனை பண்ணினாலே போதும்.'
'நிறைய ஸ்லோகங்கள் இருந்தாலும் முக்கியமான ரெண்டை நோக்கு சொல்லித்தரேன்.'
'இது ஒரு ஸ்லோகம். இதோட பொருள்: சதாசிவ பெருமான் முதற்கொண்டு
ஆதி - சங்கராச்சார்யர் இடைக்கொண்டு இன்றளவும்
வழிவழியாக வந்த வந்து கொண்டிருக்கற குருக்களான
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!'
'திருமகள், திருமால் முதற்கொண்டு
நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு
வழிவழியாக வந்த குருக்கள் இன்றளவும்
அத்தனை ஆசார்யர்களுக்கும் வணக்கங்கள்!' இதுதான் நான் சொன்ன இரண்டாவது ஸ்லோகத்தோட பொருள்.'
'சதாசிவத்தை அதாவது சிவபெருமானை வணங்கும் சைவர்கள் முதல் ஸ்லோகத்தை சொல்லலாம். பெருமாளை வணங்கும் வைஷ்ணவர்கள் இரண்டாவது ஸ்லோகத்தை சொல்லலாம். ஹரியும் சிவனும் ஒண்ணுன்னு நினைக்கறவா இரண்டையும் சேர்த்தே சொல்லலாம்.'
'நான் சொல்லிக்கொடுத்த இரண்டாவது ஸ்லோகத்தை இன்னும் கொஞ்சம் ஸ்லாகிச்சு சொல்றேன் கேட்டுக்கோ.'
'வைணவ ஆசாரிய பரம்பரை திருமகளின் நாதனான திருமாலிடம் இருந்து தொடங்குகிறது. ஸ்லோகத்தின் தொடக்கத்தை பார்த்தாலே இது புரியும்.'
'இன்று எல்லா வைஷ்ணவாளும் திருவாராதன (பூசை) காலத்தில் தன்னுடைய ஆசாரிய பரம்பரையை வணங்கிட்டுதான் திருவாராதனமே செய்யறா.'
வைஷ்ணவ ஆசாரிய பரம்பரை அப்படிங்கறது எடுத்துண்டோம்னா முதல்ல ஸ்லோகத்துல சொன்ன மாதிரி 'லக்ஷ்மிநாதன்' அதாவது திருமால். அப்பறம் தாயார்னு சொல்ற லட்சுமி அதாவது திருமகள். இதற்கு பிற்பாடு ஆச்சாரியாள் லிஸ்ட் வர்றது. சேனை முதலியார் என்னும் விஷ்வக்சேனர்; நம்மாழ்வார்; நாதமுனிகள்; உய்யக்கொண்டார்; மணக்கால் நம்பி; ஆளவந்தார்; பெரிய நம்பி; திருக்கச்சி நம்பி. பிற்பாடு ராமானுஜர்; அவருக்கு அப்பறம் கூரத்தாழ்வார்.
'இப்படி திருமாலிடம் இருந்து தொடங்கி வரும் ஒவ்வொரு ஆசாரியனுடைய பெருமையையும் எட்டு வரிகளில் பாடும் 'வாழித் திருநாமம்' என்கிற மரபையும் வைஷ்ணவா ஃபாலோ பண்றா.'
'திரும்பவும் நான் முதல் ஸ்லோகத்துக்கு போறேன்.
இது ஆதியிலிருந்து இன்று வரை வந்திருக்கிற குரு பரம்பரைக்கு நமஸ்காரம் தெரிவிக்கிற ச்லோகம். ஸ்ரீ சங்கரபகவத் பாதாளின் வழியை அநுஸரிக்கிற எல்லோரும் சொல்கிற – இதுவரை சொல்லாவிட்டாலும் இனிமேலாவது ப்ரதி தினமும் இரண்டு வேளையும் சொல்ல வேண்டிய – ஸ்லோகம்.
'இன்றுவரை வந்திருக்கிற குரு’ என்றால் இன்றைக்கான, அதாவது இந்த நூற்றாண்டில் இப்போது இருக்கிற, குரு என்று அர்த்தமில்லை. என்றைன்றைக்கும் இந்த குரு பரம்பரையில் குருமார்கள் தொடர்ந்து வருவார்களாதலால் அன்றன்றைக்கும் அவர்களுக்கு சிஷ்யர்களாக இருக்கப் போகிறவர்கள் அவ்வப்போது நேரிலே ஸாக்ஷாத்தாகப் பார்த்து, பேசப் போகிற அந்த எதிர்கால குருவை ‘இன்று வரை வந்திருக்கிற குரு’ என்று சொல்லி நமஸ்கரிப்பதற்கான ச்லோகம் இது என்று புரிஞ்சுக்கணும்.'
'மூலத்தில் ‘இன்றுவரை’ என்று அர்த்தம் கொடுக்கிற வார்த்தை எதுவுமில்லை. ‘அஸ்மத் ஆசார்ய’ என்றே இருக்கிறது. அப்படியென்றால் ‘நம்முடைய ஆசாரியர்’ என்றுதான் அர்த்தம். சந்தர்பத்தைப் பொறுத்து அதை ’நம் காலத்தில் இப்போது நமக்கு உபதேசம் தந்து கொண்டு ஜீவ்யவந்தராக இருக்கிற ஆசார்யர்’ என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.'
'ஆதி-மத்ய-அந்தம் என்பார்கள். தமிழில் முதல்-நடுவு-முடிவு. ஆனால் குருபரம்பரைக்கு முடிவு கிடையாது. அது அமரமானது. அதனால் இங்கே ‘முதல்-நடுவு-இன்றைய காலமும், இனிமேல் எதிர்காலத்தில் ஒவ்வொரு தலைமுறைக் காலமும்’ அப்படின்னு புரிஞ்சுக்கணும்.'
அந்த முதல்குரு, ஆதிகுரு யார்? ‘ஸதாசிவன்’ என்று ச்லோகம் சொல்கிறது. நடுகுரு? அவர் பெயரில் வந்திருக்கிற ஸம்ப்ரதாயஸ்தர்கள்தான் இந்த ச்லோகத்தைச் சொல்லுகிறவர்கள், சொல்ல வேண்டியவர்கள் என்பதால் அவர்தான் இந்த குரு பரம்பரைக்கே நடு நாயகம் என்ற சிறப்பு ஸ்தானம் பெற்றவர் என்று தெரியறது. ‘ஆசார்யாள்’ என்ற மாத்திரத்தில் நினைக்கப்படுகிற சங்கர பகவத் பாதாசார்யாள்தான் அவர். அவர் யாருன்னா ஆதி குருவான ஸதாசிவனின் அவதாரமேதான். சாதாரணமா சொல்லும்போது ஆசார்ய சிஷ்யர்களான நமக்கெல்லாம் – அதாவது ஸ்மார்த்தார்கள், அத்வைதிகள் என்று சொல்லப்படுகிறவர்களுக்
கெல்லாம் – ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி அப்படின்னுதானே கேள்வி பட்டிருக்கிறோம். பேசாமல், அசையாமல், எந்தக் கார்யமும் பண்ணாமல் உட்கார்ந்து கொண்டிருந்த அவரேதான் லோக ஜனங்களிடம் பரம கருணையினால் பரம தத்வத்தை விளக்கி விளக்கி நிறையப் பேசி உபதேசித்து, ஊர் ஊராகப் போய்ப் பிரசாரம் பண்ணி, மடங்கள் ஸ்தாபிப்பது முதலான அநேக கார்யங்களை ஸாதித்து ஸநாதன தர்மத்தை நன்றாக ஸ்திரப்படுத்தித் தருவதற்காக ஆசார்யாளாக அவதரித்தார்னு கேட்டிருக்கிறோம்.'
'இங்கே, ஸ்லோகத்தில், தக்ஷிணாமூர்த்தி என்ற பேர் குறிப்பிடப்படல பாத்துக்கோ. ஸதாசிவன்னு தான் சொல்லி இருக்கு. ’ஸதாசிவ ஸாமரம்பம்’ – ‘ஸதாசிவனில் அழகாக ஆரம்பித்து’ – என்றே ச்லோகம் ஆரம்பிக்கிறது.
ஏனென்றால், தக்ஷிணாமூர்த்தி என்றால் அவர் மட்டும் யார்? சிவன் தானே?' சிவனுக்கு அநேக ரூபங்கள் இல்லையா? அதுல ஒண்ணுதானே தக்ஷிணாமூர்த்தி.'
'ஒரு ஆச்சரியமான விஷயம் ஒண்ணு சொல்றேன். ஸ்மார்த்தர்களுடைய குருவான ஆதிசங்கரர் பிறந்த நாளும் வைஷ்ணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய ராமானுஜருக்கும் சித்திரை மாசம் திருவாதிரை ஜன்ம நக்ஷத்திரமா இருக்கு. என்ன விசேஷம் பாத்தியா?'
'நான் இப்போ சொன்ன ரெண்டு ஸ்லோகங்களையும் நேரம் கிடைக்கும்போது எழுதி வைக்கிறேன். நோக்கு மனப்பாடம் ஆகும்படியாகவும் சொல்லித்தரேன் பின்னொரு நாள்ல. இந்த ரெண்டு ஸ்லோகத்தையும் முடிஞ்சா ரெண்டு வேளையில அதாவது கார்த்தாலேயும் சாயந்திரமும் மறக்காம சொல்லிண்டு வா.'
'இதை ஏன் நான் சொல்றேன்னா ... குரு பரம்பரைக்கு எப்போதுமே ட்ரான்ஸ்மிஷன் சக்தி அதிகம். ஏற்கனவே சொன்னேனே. ஆச்சார்யாள்களை பார்க்காமலேயே நினைவுகள்லேயே கூட அறிவை உனக்குள்ள பாய்ச்சுகிற சக்தி இந்த குரு பரம்பரைக்கு உண்டு. அப்பேர்பட்டவாள அனுதினமும் த்யானிக்கறது நல்ல அறிவை நோக்கு கொடுக்கும்.'
'இப்ப நம்ம காஞ்சி சங்கர மடத்தில பீடாதிபதியாக இருக்கக்கூடிய குருவையே எடுத்துப்போமே. அவர ஒரு க்ஷணம் நெனைச்சாலே நம்ம மனசு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தறதோன்னோ? இந்த மாதிரியான ஒரு உணர்வுக்குத் தான் டெலிபதி, ட்ரான்ஸ்மிஷன்னு சொல்றா. வாழ்க்கையில நமக்கு முக்கியமான தேவை அறிவு. அந்த அறிவு குருமார்களை மனசார நினைத்து வணங்கும்போதே கிடைக்கிறதுக்கு உண்டான இப்படியான சாத்தியக்கூறு இருக்கும்போது புத்சாலியா நாம பயன் படுத்திக்கணுமோன்னோ?'
'என்ன, இந்த ரெண்டையும் சேர்த்துக்கறையா உன்னோட ஸ்லோக லிஸ்டோட? சின்னதா தானே இருக்கு? ஒரு நிமிஷம் கூட ஆகாதே சொல்றதுக்கு. சொல்வியா?'
'நீங்க எழுதிக் கொடுங்கோ மாமா. சொல்லிண்டு வரேன் கண்டிப்பா.'
'சமத்து டா நீ. சரி ஸ்கூல் வேற லீவு. ஃப்ரெண்ட்ஸுகளோட விளையாட்டெல்லாம் வேற இருக்கு நோக்கு. நமஸ்காரத்தை பண்ணிட்டு கிளம்பு.'
தொடரும்.
No comments:
Post a Comment