Thursday, May 19, 2022

ரகோபதேஸம்_21

 #ரகோபதேஸம்

எழுதியது பாஸ்கர் சத்யா 

#ரகோபதேஸம்_21

அன்று செவ்வாய்க்கிழமை. மடத்திற்கு பாடம் கற்பதற்காக வருகிறேன்.

'மாமா.. நேத்திக்கு காசிவிஸ்வநாதர் கோவில்ல நீங்களும் சில சாஸ்த்ரிகளும் சேர்ந்து ஒரு ஸ்லோகத்த க்கோரஸா சொன்னேளே. அது என்ன ஸ்லோகம் மாமா? பிரமாதமா இருந்தது.'

'எந்த ஸ்லோகத்தை சொல்ற? ஸ்ரீருத்ரமும் சமகமும் சொன்னோம். அதத்தான சொல்றே? நேத்திக்கு ஸோமவார பிரதோஷம்‌ இல்லையா? அதுக்கு போயிருந்தேன். அங்க எனக்கு முன்னாடி இருந்த கோபு மாமா 'என்னடா ரகு, ருத்ரம் சொல்லலாமா?' அப்படின்னு கேட்டா. அங்க இருந்த நாலஞ்சு பேர்களும் ஆசப்பப்பட்டா. சரின்னு ஆரம்பிச்சிட்டோம்.'

'மாமா உண்மையிலேயே சொல்றேன் .. நீங்க சொன்னேளே ருத்ரம் சமகம்னு. அதை எந்த மந்திரங்களும் பீட் பண்ண முடியாது.'

'அப்படி சொல்லக்கூடாது பாஸு. ருத்ரம் சமகம் சொல்றது கேட்கிறவாளுக்கு சுகத்த கொடுக்கும். இல்லைங்கல. ஆனா எந்த மந்திரமும் எந்த மந்திரத்திற்கும் சளச்சது இல்ல. ஸ்ரத்தையோடு சொல்ற எந்த ஸ்லோகமும் பக்தி ரஸத்த கொடுக்கும். ராமா .... கிருஷ்ணா... இப்படி எல்லாம் சொல்ற பகவானுடைய திருநாமங்கள்ல கூட பக்தியும் கிடைக்கும் சக்தியும் கிடைக்கும்.'

'நான் அந்த அர்த்தத்துல சொல்லல மாமா. நீங்க எல்லாரும் சேர்ந்து சொன்னேளா. கேட்கறச்ச உடம்பு என்னமோ பண்ணித்து மாமா.'

'மந்திரங்கள்ல மனசு லயிக்கறதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும் பாஸு. நான் இன்னிக்கு நோக்கு என்ன சொல்லித்தர்றதுன்னு யோசிச்சிண்டிருந்தேன். நல்லவேளை நீயே ருத்ரம் பத்தின பேச்ச‌ ஆரம்பிச்சுட்ட. அதப்பத்தியே சொல்லித்தரட்டுமா இன்னிக்கு?'

எனக்கு இப்படி அவர் சொன்னவுடன் மட்டில்லாத மகிழ்ச்சி. நேற்றைய தினம் நான் லயித்த மந்திரத்தைப் பற்றி இன்று வகுப்பு. என் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து குருநாதர் புன்முறுவல் பூக்கிறார்.

'பாஸு. நமஸ்காரத்த பண்ணிட்டு சித்த நேரம் அமைதியா கண்ண மூடிண்டு ஈஸ்வரன நெனச்சுண்டு உக்காந்துண்டிரு. கடலூர்ல் இருக்கிற என் சகோதரிக்கு ஒரு சின்ன கடுதாசி எழுதி வச்சுட்டு நோக்கு க்ளாஸ ஆரம்பிக்கிறேன், சரியா?'

அவர் சொன்னபடி செய்கிறேன். கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலும் என் நினைவுகள் என்னவோ நேற்று கோவிலில் அவர்கள் சொன்ன மந்திர ஒலிகளிலேயே உலாவிக் கொண்டிருந்தது.


'என்ன ஆரம்பிப்போமா?'

அவரின் இந்த கேள்விக்கு என் தலையசைப்பு பதிலாக்குகிறது.

'ஸ்ரீ ருத்ரம் அப்படிங்கறது யஜுர் வேதத்துல இருக்கற ஒரு சிவஸ்துதி. இந்த ஸ்துதிக்கு ரெண்டு பகுதிகள் இருக்கு. ஒண்ணு நமகம் இன்னொண்ணு சமகம்.'

'ஈஸ்வரன் கிட்ட எதை பிரார்த்தனையா கேட்கறது அப்படின்னு தயங்கிண்டு குழம்பிண்டிருக்கவாளுக்கு ஒரு பெரிய பிரார்த்தனை பட்டியலை கொடுக்கறது இந்த ஸ்ரீ ருத்ரம். இந்த லிஸ்ட்டுல தூக்கத்துக்கான பிரார்த்தனையை கூட விட்டு வைக்கல. தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி பண்ணிக்கறதுக்காக தூக்கத்தையே மறந்துட்டு திக்குத் தெரியாம அங்கேயும் இங்கேயும் யந்திரமா சுத்திண்டு இருக்காளோன்னோ இந்த காலத்து மனுஷா? இதைப் புரிஞ்சுண்டோ என்னவோ ஆயிரக் கணக்கான வருஷங்களுக்கு முன்பே நம்மோட முன்னோர்கள் அழகாக வரிசையா சமகம் பகுதியில பிரார்த்தனைகள பட்டியலா கொடுத்துட்டா பாத்துக்கோ.'

'இப்போ நமகத்துக்கு வருவோம். இந்த நமகம் பகுதியில ஈஸ்வரன நூத்துக் கணக்கான பெயர்கள சொல்லி நமஸ்கரிக்கிறோம். இந்த காரணத்தால இதை சத ருத்ரீயம் என்று கூட சொல்வர்.'

'சமகம் என்னும் பகுதியில் நமக்கு தேவையானவைகள எல்லாம் கேட்கிறோம். தெரிஞ்சவா சொல்லி ஸ்ரீ ருத்ரத்த காது குளிர மெய்மறந்து கேட்டாலேயே போதும். அத்தனையும் கெடச்சுடும் அப்படிங்கிறது நம்பிக்கை. சிவன் கோவில்களில் அபிஷேக நேரத்தில் இதைப் பாராயணம் செய்வா. ஹிந்துக்களோட முக்கிய சடங்குகள் நடக்கும்போது கூட ருத்ர பாராயணம் இருக்கும்.'

'ஆச்சரியமான விஷயம் என்னன்னா நமகம் பகுதியில நூற்று தொண்ணுத்து நாலு (194) நமஹ அப்படிங்கற வார்த்தை வரும் பார்த்துக்கோ. அதோட மாத்திரம் இல்லை. ஈஸ்வரனை முன்னூறு பெயர்கள் சொல்லி இந்த நமகத்துல வணங்கறோம்.

'சமகம் பகுதிலே சமே சமே என்ற வார்த்தை முன்னூத்தி இருபத்தி எட்டு (328) முறை வரும்.'

'சா' மற்றும் 'மே' என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வருகின்றன. 'சா' என்றால் 'மேலும்'. 'மே' என்றால் 'எனக்கு' என்று பொருள். ஒவ்வொரு பிரார்த்தனை கோரிக்கைய வெச்சிட்டு மேலும் மேலும் நேக்க்கு கொடுன்னு அவருடைய தயவுக்காக கெஞ்சுகிற பாவத்துல வார்த்தைகள் பிரயோகம் இருக்கு.'

'சதருத்ரீயம்' மூலம் அதாவது நூற்றுக்கணக்கான நாமாக்கள் சொல்லி ருத்ரனை சாந்தப்படுத்திய பிறகு, பக்தன் அவனிடம் பல சக்திகளை தனக்குள் வெளிப்படுத்துமாறு சமகத்தின் மூலம் தேடுகிறான். இதை ஒரு தந்திரமான வழின்னு கூட சொல்லலாம்.'

'ஸ்ரீருத்ரம் யஜுர் வேத தைத்திரீய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள் நாலாவது காண்டத்தின் நடுநாயகமாக அமைந்துள்ளது. இதுல என்ன ஒரு அற்புதமான விஷயம் அப்படின்னா இதோட ஹ்ருதய ஸ்தானத்தில் இருக்கறது சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம்.'

ஸ்ரீருத்ரத்த உபநிஷ கேடகரியிலேயே சேர்த்து , “ருத்ரோபநிடதம்” அப்படின்னே சொல்லியிருக்கா. "சதருத்ரீயம்” என்றும் சிறப்புப் பெயர் பெற்றது. வாழ்க்கைங்கற‌ கடலிருந்து நம்மை மீட்டெடுத்து முக்திக்கு கருவியா இருக்கறதால இதை உபநிஷதத்துல சேர்த்திருக்கா அப்படின்னு புரிஞ்சுக்கணும்.'

'இந்த ஸ்ரீருத்ரம் மோட்சம் பெறுவதற்கான மந்திரத்த உள்ளடக்கியே இருக்கு பாத்துக்கோ. அதைச் சொல்றேன். கவனமா கேளு.'

'த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்|உர்வாருகமிவ பந்தனான் - ம்ருத்யோர் - முக்ஷீயமாம்ருதாத்|'

'இதோட பொருள் என்ன? அதையும் சொல்றேன் கேட்டுக்கோ.'

(சுகந்திம்) இயற்கையான நறுமணமுடையவரும்

(புஷ்டிவர்த்தனம்) கருணையால் அடியார்களைக் காத்து வளர்ப்பவரும் ஆகிய

(திரியம்பகம்) முக்கண்ணனை

(யஜாமஹே) பூஜித்து வழிபடுகிறோம்.

(உர்வாருகம் இவ) வெள்ளரிப் பழம் காம்பிலிருந்து விடுவது போல

(ம்ருத்யோர்) இறப்பின்

(பந்தனாத்) பிடிப்பிலிருந்து

(முக்ஷீய) உமதருளால் விடுபடுவோமாக. 

(மாஅம்ருதாத்) மோட்ச மார்க்கத்திலிருந்து விலகாமல் இருப்போமாக.'

'மோக்ஷம் வேண்டுவதற்கான அர்த்தம் புரியறதா நோக்கு இப்ப நான் சொன்ன மந்திரத்துல?'

'மாமா எனக்கு ஒரு சந்தேகம். எதுக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து ஸ்ரீருத்ரம் சொல்லும்போது விட்டுவிட்டு சொன்னேளே அது ஏன் மாமா?'

'நீ சொல்றது எனக்கு சரியா புரியல. கொஞ்சம் புரியும்படியா கேள்விய கேளு.'

'நீங்களும் இன்னும் ரெண்டு மாமாவும் ஒரு ஸ்டன்ஸா சொன்னேள். கோபு மாமா இன்னும் இரண்டு பேரை சேர்த்துண்டு இன்னொரு ஸ்டன்ஸா சொன்னாளே. அதக் கேக்கறேன்.'

'பரவாயில்லையே. நாங்க எல்லாரும் மந்திரம் சொல்றத உன்னிப்பா கவனிச்சிருக்கியே. இப்போ உன் கேள்வி நேக்கு நன்னா புரிஞ்சு போச்சு. விளக்கம் சொல்றேன் கேட்டுக்கோ.'

'சாதாரணமா ஸ்ரீருத்திர மந்திரத்தை உச்சரிக்கறதுக்கு ரூபம் அப்படின்னு சொல்லுவா. இந்த ரூபம் பதினோரு அனுவாகங்கள் உள்ள நமகங்களை சொல்லிட்டு சமக அனுவாகங்களை சொல்றது. இதையே பதினோரு அனுவாக நமகங்களை சொல்லிவிட்டு ஒரு நமக அனுவாகத்தை இணைச்சு சொல்லிண்ட்டே வர்ரது ஏகாதச ருத்திரம். அதாவது 11+1, 11+2, 11+3 .... இப்படி பதினோரு தடவை சொல்றதுக்கு ஏகாதச ருத்ரம். இது மாதிரி பதினோரு ஏகாதச ருத்ரம் சொல்றது லகு ருத்திரம். இன்னும் சொல்லிண்டே போனா பதினோரு லகு ருத்ரம் சேர்ந்தது ஒரு மஹா ருத்ரம்.'

'இதுக்கு மேல இருக்கா மாமா?'

சிரித்துக் கொண்டே கேட்கிறேன்.

'ஏன் இல்லாம? இருக்கு. பதினோரு மகா ருத்ரம் ஒரு அதிருத்திரம்.'

'எப்ப்பபா...டி!!!'. என் ஆச்சரியத்தில் அர்த்தம் இல்லாமல் போய்விடுமா‌ என்ன?

''ருத்ரம் ஒரு முறை பாராயணம் செய்ய ஆரம்பம் முதல் இறுதி வரை உச்சரிக்கப்படலாம். அல்லது பல சுத்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட வழியில் கட்டமச்சிண்டும் சொல்லலாம். அந்த மாதிரி வாத்தியார்கள் எங்களுக்குள்ள கட்டமச்சிண்டு நேத்திக்கு சொன்னோம். இப்படி சொல்றதால கேட்கறவாளுக்கு ரம்யம் கூடறது நீ லயிச்சு போன மாதிரி.'

'ஓ. அதானா காரணம். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு மாமா. நீங்க சொல்ல சொல்ல இந்த ஸ்ரீ ருத்ரத்த அர்த்தங்களோடு கத்துக்கணும்னு தோணிண்டே இருக்கு மாமா.'

'ஸ்லோகங்கள் எல்லாமே பொக்கிஷங்கள் தான். தேடத் தேட புதையல்கள் கெடச்சுண்டே இருந்தா கிடைக்கிற சந்தோஷங்கள் மாதிரி.'

'எனக்கு ஸ்ரீருத்ரம் கத்துத்தரேளா மாமா?'

'அதுக்கென்ன பாஸு. கத்துக் கொடுத்தா போச்சு. சரி, ஸ்ரீருத்ரத்துல உள்ள அத்புதமான விஷயங்கள் இன்னும் கொஞ்சம் கூட நீ தெரிஞ்சுக்கலாம்னு தோண்றது. அடுத்த க்ளாஸ்ல சொல்றேன் அவைகள.'

'ரொம்ப தேங்க்ஸ் மாமா. நேத்திக்கு நீங்களெல்லாம் ஸ்ரீருத்ரம் சொல்றத கேட்டோண்ண இன்னைக்கு முதல் வேலையா உங்ககிட்ட அதை பத்தி கேட்டு தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன்.'

'ஈஸ்வரனுடைய க்ருபையாலத்தான் அப்படி நோக்கு தோணிருக்கு பாஸூ.'

என் நமஸ்காரம் அபிவாதனம் முடித்துக்கொண்டு அவருடைய ஆசிகளோடு இல்லம் திரும்புகிறேன்.

தொடரும்...

No comments:

Post a Comment