Friday, May 20, 2022

ரகோபதேஸம்_22

 #ரகோபதேஸம்

எழுதியது பாஸ்கர் சத்யா 

#ரகோபதேஸம்_22

மறுநாள். ஆஸனங்கள் ஏற்பாடு. குரு வந்தனம். அபிவாதனம். குருவின் பரிபூரண ஆசிர்வாதம்.

பிறகு என்ன? பாடத் துவக்கம் தானே.

'ஏண்டா பாஸு. ஸ்ரீ ருத்ரத்த பத்தி நேத்திக்கு பேசிண்டு இருந்தோமே. ஏதாவது மனசுல நின்னுதா நோக்கு.'

'மாமா. என்ன மாமா இப்படி கேட்டுட்டேள். நேத்திக்கு கிளாஸ் முடிஞ்சதுலேந்து நீங்க சொல்லி கொடுத்தது தான் மனசுல ஓடிண்டே இருக்கு.'

'அப்படியா? என்னன்னெல்லாம் மனசுல ஓடிண்டிருக்கு, சொல்லு பார்ப்போம்.'

'நானே மாட்டிண்டுட்டேனா மாமா?'

'அப்படின்னா நீ முகஸ்துதிக்காக சொன்னியாக்கும் என்கிட்ட அப்படி?'

'அப்படின்னும சொல்ல முடியாது மாமா. இருந்தாலும் இந்த ஸ்ரீ ருத்ரம் நீங்க எல்லாரும் சேர்ந்து பிரதோஷம் அன்னிக்கு சொன்னது அப்படியே மனசுல வந்து போயிண்டு இருக்கு. அதுக்கப்புறமா நீங்க விளக்கங்கள் சொன்னேளே அவைகள கூட மறக்க முடியாமத்தான் இருக்கு.'

'சரி சரி. அதெல்லாம் இருக்கட்டும். ஸ்ரீருத்ரம் பத்தி நான் சொன்ன விஷயங்கள ஞாபகப்படுத்தி சொல்லு இப்போ.'

'விடமாட்டேளே. இன்னிக்கு அடியோடு தான் ஆத்துக்கு போகணும் போல இருக்கு.'

'போதும்டா. நைஸா தப்பிக்கப் பாக்காத. நீ இப்போ சொன்னாதான் மேற்கொண்டு எந்த கிளாஸும்.'

அவருக்கும் எனக்கும் நடந்த இந்த சம்பாஷணைகளை நாங்களே ரசித்துக் கொண்டிருந்தோம். அவரிடமிருந்து பதில் சொல்லாமல் தப்ப முடியாது இன்று தோன்றுகிறது.'

'சரி மாமா. இப்போ ஞாபகத்துக்கு வரத மாத்திரம் சொல்றேன். ஏதாவது விட்டுப் போனா என்ன கோச்சுக்க கூடாது, சரியா?'

இப்படி பீடிகை போட்டுவிட்டு சொல்ல ஆரம்பிக்கிறேன்.

'ஸ்ரீ ருத்ரம் அப்படிங்கறது ஈஸ்வர ஸ்துதி. இதுல ரெண்டு பகுதிகள் இருக்கு. ஒண்ணு நமகம். இன்னொன்னு சமகம். நமகம் பகுதி ஈஸ்வரனோட பல பெயர்கள சொல்லி அவரை நமஸ்கரிக்கும் விதமாக இருக்கு. சமகம் பகுதியில நாம நமக்கு தேவையானவைகள பிரார்த்தனைகள் மூலமா சிவன் கிட்ட கேட்கிறோம், சரியா மாமா?'

'ம்ம்ம் ... மேல மேல சொல்லிண்டே போ.'

'ஸ்ரீருத்ரத்தோட சிறப்பே அதுல இருக்கிற பஞ்சாக்ஷர மந்திரமும் மோக்ஷத்துக்கான பிரார்த்தனை மந்திரமும். ஸ்ரீ ருத்ரத்த ருத்ரோபனிஷத் அப்படின்னு கூட சொல்லுவா. சிவன் நாமாக்கள் நூத்துக்கு மேல இந்த மந்திரத்தில் சொல்லப்பட்டறதால சதருத்ரீயம்னு கூட இதுக்கு பெயர்.'

இத்துடன் நான் சற்று அமைதியாகிறேன். என் ஞாபகங்களை மேலும் திரட்டும் விதமாக என் அமைதி என்னை கொண்டு செல்கிறது.

'வேறு ஏதாவது விட்டு போச்சா மாமா?'

'இன்னும் கொஞ்சம் யோஜன பண்ணு. ஞாபகத்துக்கு கண்டிப்பாக வந்துடும்.'

யோசிக்கிறேன். திடீரென்று ஆர்க்கமிடிஸ் புத்துணர்வு. 'எஸ் ஐ gகாட்‌ இட்'. இது எனக்குள் நானே.

'ஸ்ரீருத்ரம் சொல்லப்படுற எண்ணிக்கைகள் அடிப்படையில இருக்கக்கூடிய வகைகள் .. இதானே மாமா? இதுதானே விட்டுப்போச்சு. அந்த வகைகள் கூட லகு ருத்ரம், ஏகாதச ருத்ரம், மகா ருத்ரம், அதிருத்ரம் .... இப்படி.'

'ஏஏஏஏஏஏஏ அப்பா. வெளுத்து கட்டறையே. நான் கூட உனக்கு இவ்வளவு அழகா சொல்லி கொடுத்தேனான்னு தெரியல. குரு சிஷ்ய bபாவம்னா இப்படித்தான் இருக்கணும். நீ இப்படி இருக்கறதுனால தான் நோக்கு நிறைய சொல்லிக் கொடுக்கணும்னு ஒரு ஆர்வம் என்கிட்டேயும் இருந்துண்டே இருக்கு.'

கிலோ கணக்கில் ஐஸ் கட்டிகள் தலையில் இருப்பது போல ஒரு உணர்வு. பாராட்டு மழையில் பாரம் தாங்காமல் தலை பூமியை பார்த்த்துக் கொண்டு சிரிக்கிறது.

'நீ சின்ன கொழந்த தானே. ஸ்ரீருத்தப் பத்தி இந்த அளவுக்கு இப்ப சப்திக்கு தெரிஞ்சிண்டா போதும்னு நெனைக்கிறேன். ஒவ்வொரு அனுவாகத்தையும் ஸ்லாகிச்சு சொல்ல ஆரம்பிச்சா முடிவே இல்லாம போகும்.'

'ஸ்ரீருத்ர மந்திரத்தின் முதல் அனுவாகத்துல ஈஸ்வரனோட கட்டளைகளயை மீறி நடந்தவர்களிடம் முன்கோபம் கொண்ட ஈஸன் ருத்ரன் வடிவுல தோன்றணும்னு பிரார்த்தனையும், இரண்டாவது அனுவாகம் முதல் ஒன்பதாவது அனுவாகம் வரை ருத்ரனின் சர்வேசுவர தத்துவம், சர்வ சரீர தத்துவம், சர்வ அந்தர்யாமி தத்துவம் முதலிய பெருமைகளை குறிக்கும் திருநாமங்களால் நமஸ்காரமும் இடம்பெறுகிற மாதிரி இந்த ஸ்ரீருத்ரம் வடிவமைக்கப்பட்டிருக்கு. ஈஸ்வரனுடைய சாந்த ஸ்ரூபமான வடிவம் தான் ருத்ரன்.'

'மரண பயத்தை போக்கும் வல்லமை பெற்றது இந்த ஸ்ரீ ருத்ரம். ஸ்ரீருத்திரம் முழுக்க உன்னால சொல்ல முடியாட்டாலும் நேத்திக்கு சொன்ன 'த்ரயம்பகம் யஜாமஹே...' அப்படின்னு ஆரம்பிக்கக் கூடிய மோக்ஷத்த கொடுக்கக்கூடிய மந்திரத்தை ஆவது மனப்பாடம் செஞ்சு சொல்லிண்டு வா. முடிஞ்சா நான் சொல்லப்போகற இந்த ஸ்லோகத்தையும் சேர்த்துக்கோ.'

'நமஸ்தே அஸ்து பகவன் விச்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய த்ரிபுராந்தகாய
த்ரிகாக்னி காலாய காலாக்னீ ருத்ராய
நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜாய ஸர்வேஸ்வராய
ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம.'

'இந்த மந்திரத்தோட பொருளையும் நோக்கு சொல்றேன் கேட்டுக்கோ:

எல்லா உலகங்களுக்கும் அதிபதியாக இருக்கும் விஸ்வேஸ்வரனாகிய சிவ பெருமானுக்கு வந்தனம் செய்கிறோம். முக்கண்களை கொண்டவரும் திரிபுரம் எனப்படும் மூன்று லோகங்களுக்கும் தலைவனாக இருக்கும் மகாதேவரே உங்களை வணங்குகிறோம். அனைத்திற்கும் முடிவை வழங்கும் காலமாக இருப்பவரும் உலகை காக்க ஆலகால விஷத்தை பருகிய நீலகண்டர் ஆகியவரும் கொடியதை அழிகின்ற ருத்ர நடமாடி ருத்ரராகவும் சர்வேஸ்வரராகவும் இருக்கும் சிவனை வணங்குகிறேன்.'

'கொடிய நோய்களிலிருந்து நிவாரணம் கொடுக்க கூடியது இந்த ஸ்ரீ ருத்ரம். ஸகல பாவங்களையும் போக்கக்கூடியது இது. இந்த மந்திரத்தை கத்துண்டு தினமும் முன்னால சொல்ல முடியாட்டாலும் ஸ்ரீ ருத்ரம் எங்கெங்கெல்லாம் ஒலிக்கப்பட்டறதோ வாசிக்கப்படறதோ அங்கல்லாம் சித்த கண்ண மூடிண்டு பரமேஸ்வரனை நினைத்து உக்காந்துக்கோ. மந்திரத்தோட ஒலி அதிர்வுகளோட சக்திகளே நோக்கு சகல சௌபாக்யத்த கொடுக்கும்.'

'ஸ்ரீ ருத்ரம் ஸாந்தி மந்திரமாகவும், ஸகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் இருக்கு. வேதபுருஷனுக்கு ஸ்ரீருத்ரம் கண்ணாகவும், அதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியாகவும் இருக்குன்னு பல வேத வித்வான்கள் எல்லாம் சொல்றா.'

'ஸ்ரீ ருத்ரத்த மந்திரத்தோட அர்த்தங்கள பரந்த விஷயங்களோட சொல்றது கஷ்டம். அப்பேற்பட்ட உள் அர்த்தங்கள் இதுல அடங்கியிருக்கு. இது அடிப்படைல பூமிலே உள்ளவாளுக்கும் மேலே உள்ள லோகத்துடனும் நன்கு இணைந்திருக்கும் நல் வாழ்வுக்கான வேண்டுகோள்.'

'பாஸு இப்ப நான் ஒரு சுவாரஸ்யமான ஸ்லோகத்த சொல்ல போறேன். இந்த மந்திரம் அல்லது இந்த ஸ்லோகம் பரதநாட்டியம் கத்துக்கறவாளுக்கு அவாளோட குருநாதர் இந்த ஸ்லோகத்தை பரதநாட்டியத்திற்கு அடிப்படையான விஷயமா சொல்லிக் கொடுப்பார்.'

'யதோ ஹஸ்தஸ் ததோ த்ருஷ்டி, யதோ த்ருஷ்டி ததோ மன:
யதோ மனஸ் ததோ பாவோ, யதோ பாவஸ் ததோ ரஸ:

'இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ? அபிநயம் பிடிக்கற கைகள கண்கள் பார்த்துண்டிருக்கணும். கண் பார்வை எங்க இருக்கோஅதுல மனசு லயிக்கணும். அப்படி மனசு லயிக்கும் போது முகத்தில் bபாவம் அதாவது சரியான உணர்ச்சியை வெளிப்படுத்தற bபாவம் ஏற்படறது. அதன் வழியாத்தான் ரஸம் அதாவது நவரஸ உணர்ச்சிகள் கிடைக்கும்.'

'பரதநாட்டியத்தில் கிடைக்கிற நவரசங்கள் மாதிரிதான் பக்தி ரசமும். ஒரு ஸ்லோகத்தைப் பத்தி ஆர்வமாக கேட்டு தெரிஞ்சுக்கலாம். அதை நெட்ருவும் போடலாம். சொல்லிண்டும் வரலாம். இப்படியெல்லாம் பண்றது பக்திக்கான வழியே தவிர பக்தி ரசம் கிடைக்கணும்னா திரும்பத்திரும்ப நான் சொல்வது இதுதான் ... மனசு லயிக்கணும். மனசு பகவானுக்காக ஏங்கணும்‌.'

'பரமேஸ்வரன் கிட்ட பக்தியில லயிக்கறது லேசு பட்ட சமாச்சாரம் இல்ல. ஸ்ரீருத்ரம் கேட்டது மூலமா நோக்கு அந்த ஆரம்பகட்ட லயிப்பு வந்திருக்கு. அத கெட்டியா புடிச்சுக்கோ. ஈஸ்வரன் கிட்ட சமத்து குழந்தைன்னு பேர் எடுத்துட்டா உன்ன விட பாக்கியசாலி யாருமே இருக்க முடியாது. மனசு சுத்தம் பரோபகாரம் இதெல்லாம் நெறஞ்சு இருக்கிறவனுக்குத் தான் ஈஸ்வர பாக்கியம் உண்டு. ஈஸ்வர அனுக்ரஹம் உண்டு.'

'சரிடா பாஸூ. நிறைய சொல்றதுக்கு இருந்தாலும் இத்தோட ஸ்ரீருத்ரம் பற்றிய க்ளாஸ் போதும் நோக்கு தற்சமயம். மந்திரங்கள கத்துக்க கத்துக்க மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமா அர்த்தங்கள கத்துண்டு வருவோம், சரியா?'

'என்ன கிளம்பலாமா?'

தலையை அசைத்து விட்டு அவர் முன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறேன். அன்று எனக்கு அது பரமேஸ்வர நமஸ்காரமாகவே தோன்றியது.

தொடரும்

(இத்துடன் ரகோபதேஸம் தொடரை சற்று நிறுத்தி கொள்கிறேன். ஓரிரு மாதங்கள் கழித்து வேறு சில தலைப்புகளுடன் மற்றொரு தொடரில் சந்திக்கிறேன்.)

பி.கு. :. என் குருநாதர் ரகுபதி சாஸ்திரிகளும் நானும் நிறைய பேசியிருக்கிறோம். ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி சொல்வது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் என்னை கவர்ந்த சில உபதேசங்கள் என் மனதை விட்டு நீங்காமல் தான் இருக்கின்றன இன்றளவும். அவர் செய்த உபதேசங்கள் மற்றும் என் ஞாபகம் கடந்தவைகளை சில ஆன்மீக புத்தகங்களை மேலோட்டமாக படித்தும் இந்தத் தொடரை எழுதி இருக்கிறேன் இதுவரை. இதில் இருக்கும் எந்த தவறும் என்னை மட்டுமே சார்ந்தது என்பதையும் சொல்லிவிட்டு தற்காலிகமாக நிறைவு செய்கிறேன் இந்த தொடரை.

உங்களில் பலருக்கு இந்த விஷயங்கள் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தாலும் என்னை ஊக்கப்படுத்தும் விதமாக உங்கள் ரசனையை சேர்த்து என்னோடு தொடர் முழுவதும் உரையாடியதற்கு மிக்க நன்றி).

No comments:

Post a Comment