Saturday, May 28, 2022

சமையல் டிப்ஸ் பகுதி 04

 சமையல் டிப்ஸ் பகுதி 04

1) அரிசி உப்புமா செய்யும் போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

2) ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும் போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும் போது தனி மணமும், ருசியும் காணலாம்.

3) பீன்ஸ், பட்டாணி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேக வைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேக வைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்க வேண்டும்.

4) பனீர் மசாலா செய்யும் போது பனீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பனீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.

5) சப்பாத்திக்காக கோதுமை பிசையும் போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும் .

6) ரசம், சாம்பார், கீரை மசியலை இறக்கிய பின், பெருங்காயத் தூள் போட்டால் மணம் ஊரைத் தூக்கும்.

7) கொத்தமல்லி, புதினா துவையல்கள் அரைக்கும் போது, தண்ணீருக்குப் பதில் சிறிது தயிர் சேர்த்தால் சுவை தரும்.

8) கத்திரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள். கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.

9) மைக்ரோவேவ் ஒவனில் உட்புறப் பகுதியைச் சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஒவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து எடுத்துத் துடைக்க பளிச் சென்று இருக்கும்.

10) பீட்ரூட் நறுக்கும் போது கைகளில் கறை ஒட்டுவதைத் தடுக்க, பீட்ரூட்டை முழுதாக குக்கரில் வேக வைத்துக் கொள்ளுங்கள். 

பின்பு தோலை எடுத்துவிட்டு துண்டுகளாக்கினால் கறை ஒட்டாமல் இருப்பதோடு, காய் நறுக்குவதற்கும் எளிதாக இருக்கும்.


No comments:

Post a Comment