Monday, May 9, 2022

ரகோபதேஸம்_2

 #ரகோபதேஸம்

எழுதியது பாஸ்கர் சத்யா 

#ரகோபதேஸம்_2

சந்தியா வந்தன மந்திர விளக்கங்கள் என் குருநாதர் எனக்கு சொல்லிக்கொடுத்த பிறகு நான் அவரை வேறு ஏதாவது ஸ்தோத்திரங்களின் அர்த்தங்களை எனக்கு போதிக்க நச்சரித்துக் கொண்டிருந்த சமயம் அது.  குறிப்பாக அமாவாசை தர்ப்பணம் மற்றும் பித்ருக்கள் சம்பந்தமாக விளக்கம் அளிக்க விடாமல் அவரிடம்  கேட்டுக் கொண்டிருந்தேன்.

என் நச்சரிப்பு தாங்காமல் ஒரு நாள் ஏதாவது சொல்லித் தருகிறேன் என்று உறுதியளித்து என்னை மடத்திற்கு வரச் சொல்லியிருந்தார்.

'மாஆஆஆஆஆஆஆஆமா.  வந்துட்டேன்.  சீக்கிரம் சீக்கிரம்....  உடனே ஆரம்பிங்கோ.'

'மாட்டேன்.  என்ன பண்ணுவ?'

வேண்டுமென்றே இப்படி கூறுகிறார் என்று தெரியும்.  இருந்தாலும் என் ஸ்ருதியை சற்று இறக்கிக் கொண்டு கிட்டத்தட்ட கெஞ்சும் அளவில் கேட்கிறேன்.

'மாஆஆஆஆஆமா ....  மாஆஆஆமா.... ப்ளீஸ் மாமா.  எத்தனை நாளா கேட்டுண்டிருக்கேன்? நீங்கதானே என்ன வரச் சொன்னேள் இன்னைக்கு பாடம் ஆரம்பிக்கிறேன்னு சொல்லி.'

'சொன்னேன். இல்லேங்கல.  ஆனா இப்ப எனக்கு நோக்கு எதுக்கு சொல்லித் தரணும் ‌ அப்படின்னு தோண்றது.'

பொய்யாக இப்படி சொல்கிறார் என்று அவருடைய சிரிப்பு எனக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.  இருந்தாலும் அவரை எப்படியாவது வழிக்கு கொண்டு வந்து பாடத்தை ஆரம்பிக்க வைக்க வேண்டுமே?

'மாட்டேளோன்னோ.  கண்டிப்பா சொல்லித்தர மாட்டேளேன்னோ?  இனிமே மடத்து பக்கம் நான் வரேனேன்னு பாருங்கோ.'

'இன்னும் நாலு நாளுல அமாவாசை வர்றதே.  தர்ப்பணம் பண்ண இங்கதானே வந்தாகணும்.'

எனக்கு இப்போது குழப்பம்.  கோபத்தை தொடரலாமா கெஞ்சலாமா என்று.  முகத்தை வேண்டுமென்றே தொங்கப் போட்டுக்கொண்டு அவர் முகத்தை பார்க்காமல் திரும்பிக்கொண்டு அதே இடத்தில் சில நிமிடங்கள் அப்படியே நிற்கிறேன்.

'கோபத்தப் பாரு.  சரி சரி ஆரம்பிச்சுடலாம்.  திரும்பிப்பார்.  என்னமா கோபம் வர்றது பாசுவுக்கு?  உங்க அப்பா ரங்கனுக்கு கோபமே வராது தெரியுமோன்னோ?'

'எனக்கு ஒண்ணும் உங்க மேல கோபம் இல்ல.  நீங்க நடிச்ச மாதிரி நானும் நடிச்சேனாக்கும்.'

'எனக்குத் தெரியாதா கொழந்த எங்க பாசுவுக்கு என் மேல கோபமாவது வர்றதாவது?  சரி, கை காலெல்லாம் அலம்பிண்டு வழக்கம்போல மணைய போட்டுண்டு உக்காரலாம்.  சரியா?'

இருக்கைகளை தயார் செய்துவிட்டு பாண்டுரங்கன் படத்தை நோக்கி ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு குருநாதரையும் நமஸ்கரித்துவிட்டு மணையில் உட்காருகிறேன்.

'பாஸு மொதல்ல ஒரு கேள்வியோடு ஆரம்பிக்கிறேன்.  அமாவாசை எப்ப வரும்னு தெரியுமா நோக்கு?'

'கேலண்டர்ல என்னிக்கி போட்டிருக்கோ அன்னிக்கு வரும்.  டார்க்கா ஒரு வட்டம் கூட காலண்டர்ல அன்னிக்கு டேட்டுல போட்டிருக்கும் மாமா.'

'ஓ அப்படித்தான் நீ ஞாபகம் வச்சுப்பியா?'

'ஏன் மாமா?  வேற ஏதாவது ஞாபகம் வெச்சுக்க வழி இருக்கா?'

'கேலண்டர் பார்த்து தெரிஞ்சுக்கறதுல தப்பு ஒண்ணும் இல்ல.  ஒரு விதத்துல அது ஈசிதான்.  ஆனா ஒண்ண தெரிஞ்சிக்கணும்.  அதாவது திதிகளோட சுழற்சியில அமாவாசை வர்றது.'

'புரியல மாமா நீங்க சொல்றது எனக்கு?'

'ஒண்ணுமில்லடா.  கேலண்டர் எல்லாம் கண்டுபிடிப்பதற்கு முன்னாடி திதிகள வெச்சுதான் அமாவாசைய கணக்கு பண்ணுவா.  உதாரணமா இன்னைக்கு அமாவாசைனு நெனச்சுக்கோ.  நாளைக்கு பிரதமை அடுத்த நாள் த்விதியை ... இப்படி பவுர்ணமி வரைக்கும் போயிட்டு திரும்பவும் பிரதமை த்விதியை இப்படிப் போய் அமாவாசைக்கு வந்துடும்.'

'இப்ப பாரு.  இன்னிக்கு அமாவாசைனு வெச்சுக்கோ.

அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை.  பிரதமம் அப்படின்னா முதல் அல்லது துவக்கம் அப்படின்னும் வெச்சுக்கலாம்.  அதாவது பிரதமை என்பது அமாவாசை கழிந்த முதல் திதி.'

'அடுத்து த்விதீயை.  சமஸ்கிருதத்தில 'த்வா' அப்படின்னா இரண்டு.  அதாவது இரண்டாவது திதி த்விதீயை.   'த்வி' அப்படிங்கறதுக்கு ரெண்டுன்னு புரியறதா இப்ப நோக்கு?

'இப்படியே மூணாவது திதி 'த்ரிதீயை'.  த்ரீ அப்படின்னா சமஸ்கிருதத்துலேயும் மூணு தான்.  இங்லீஷுல கூட த்ரீக்கு மூணுதான் இல்லையா?

இப்ப நாலாவது திதி சதுர்த்தி.  சதுர் அப்படின்னா நாலு.  சதுர்புஜம் அப்படின்னு சொல்றோமோன்னோ?  சதுரங்கம் அப்படின்னு நாலு மூலை உள்ள கட்டம் போடுறோமோன்னோ?'

அடுத்து பஞ்சமி.  பஞ்சம் அப்படின்னா ஐந்து.  பஞ்சபூதங்கள் அப்படின்னு கேள்விப்பட்டு இருக்குமோன்னோ?  அஞ்சு விதமான பொருள்கள சேர்த்து பஞ்சாமிர்தம், பஞ்சகவ்யம் ... இப்படி எல்லாம் கூட பன்றோமோன்னோ?

அடுத்து சஷ்டி.  சஷ்டி எப்ப வரும்?  அமாவாசை கழிந்த ஆறாவது நாள்.  சஷ்டிய ஆறுமுகம் கொண்ட முருகனை தொடர்புபடுத்தி ஞாபகம் வெச்சுக்கலாம்.

நெக்ஸ்ட் ஸப்தமி.  ஸப்தம் அப்படின்னா ஏழு.  ஸப்தஸ்வரங்கள் ஸப்தரிஷிகள் இப்படியெல்லாம் கூட சொல்வோமே.  ஆக அமாவாசை கழிந்த ஏழாவது நாள் ஸப்தமி.

'எட்டாவது நாள் அஷ்டமி.  அஷ்டம் அப்படின்னா எட்டு.  எட்டு விதமான லட்சுமிகளின் உருவங்களை ஞாபகப்படுத்திக் கொண்டு அஷ்டலக்ஷ்மி அப்படின்னு கூட சொல்வோமே?'

'அதே போல நவமி அப்படின்னா ஒம்பது.  நவகிரகம், நவரசம், நவராத்திரி...  இப்படி எல்லாம் ஒன்பதுக்குண்டானதா  சொல்றோமோன்னோ?'

இப்ப பத்தாவது நாள் தஸமி.  சமஸ்கிரதத்துல தஸம் அப்படின்னா பத்தைக் குறிக்கும்.  தசாவதாரம் அப்படின்னு விஷ்ணுவோட பத்து அவதாரங்களை மொத்தமா குறிப்பிடுவோமே?'

'அடுத்தது ஏகாதசி.  ஏகம் பிளஸ் தசம்.  சமஸ்கிருதத்துல ஏகம் அப்படின்னா ஒண்ணு. தசம் அப்படின்னா பத்து.  ஏகம் தஸத்தோட  சேரும்போது ஏகாதசி அப்படின்னு ஆகறது.  அப்ப பதினோராவது நாள் ஏகாதசி.  பிரதமத்தையும் ஏகத்தையும் போட்டு குழப்பிக்க கூடாது.  ஏகம்னா ஒண்ணு பிரதமம்னா முதல்.'

'இதே மாதிரி த்வாதஸி.  'த்வா' அப்படின்னா ரெண்டு.  தஸத்தோடு சேரும்போது த்வாதஸி ஆகறது.  பன்னிரண்டாவது நாள் த்வாதஸி.'

இப்படித்தான் த்ரையோதசி.  த்ரீ ப்ளஸ் தஸம் த்ரியோதஸம்.  பதிமூணாவது நாள் த்ரியோதஸி.

அடுத்தது என்ன?  சதுர்த்தஸி.  நாலு பத்தோட சேரும்போது பதினாலு அப்படின்னு சொல்றோமோன்னோ.  அதே மாதிரி சமஸ்கிருதத்தில் 'சதுர்' என்கிற நாலு 'தஸம்' ஆன பத்தோடு சேரும்போது சதுர் தசம் ஆகி அந்த திதி சதுர்தஸி அப்படின்னு சொல்லப்படறது.

சதுர்தசிக்கு அடுத்த நாள் பவுர்ணமி ஆகறது.  இப்படி அமாவாசையில் திதிகள் ஆரம்பித்து பௌர்ணமியில் முடிகிற வரைக்கும் அதை சுக்ல பக்ஷம் அப்படின்னு சொல்றோம்.  தமிழ்ல இதை சொல்லணும் அப்படின்னா வளர்பிறை.

இந்த வளர்பிறை அப்படிங்கிறது இருட்டான அமாவாசையில் துவங்கி படிப்படியாக சந்திரன் பிறைகளாக வளர்ந்து முழுநிலவாக பௌர்ணமி அன்று ஜொலிக்கிறது.  என்ன அற்புதமான வார்த்தை பார் ... வளர்பிறை.  சமஸ்கிருதத்தில் சுக்லம்னா வளர்வது அப்படிங்கற பொருளைத்தான் கொடுக்கும்.

சரி இப்ப பௌர்ணமிக்கு வந்துட்டோம்.  இப்போது சந்திரன் படிப்படியாக தேய்ந்து தேய்பிறையை நோக்கி நம்மள நகர வைக்கிறான்.  திதிகளையும் அப்படியேத்தான் ஆரம்பிக்கிறோம்.  அதாவது பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை அதுக்கு அடுத்த நாள் த்விதியை.... இப்படி சதுர்தசி வரைக்கும் போயிட்டு அமாவாசையை அடைகிறோம்.  தமிழ்ல தேய்பிறை அப்படின்னு சொல்லக்கூடிய இந்த காலகட்டத்தை சமஸ்கிருதத்தில கிருஷ்ண பக்ஷம் அப்படின்னு சொல்றோம்.  கிருஷ்ணம் அப்படின்னாலே இருளை நோக்கி அப்படி இன்னும் புரிஞ்சிக்கலாம்.'

நான் சொல்லிக் கொடுத்தத கவனமா புரிஞ்சிண்டியோன்னோ?  எங்க உன் வாயால சொல்லு பாப்போம் என்ன புரிஞ்சுண்டேன்னு.

சொல்கிறேன் சுக்ல பக்ஷம் கிருஷ்ண பக்ஷம் மற்றும் அவரது திருத்தல்களோடு திதிகளின் பெயர்களை ஒவ்வொன்றாக.

'இந்த திதிகளை பத்தி ஏன் ஒனக்கு விளக்கமா சொன்னேனா இந்த திதிகள் தான் மரணம் அடஞ்சவாளோட ஸ்ரார்த்தங்களுக்கு அடிப்படையாக இருக்கு.  புரியும்படியா சொல்லணும்னா  உங்க அப்பா ரங்கன் ஐப்பசி மாசத்துல வரும் கிருஷ்ண பக்ஷ அஷ்டமி திதியில் இறந்தார் அப்படின்னு குறிச்சுண்டு வருஷாவருஷம் அவருக்கு அந்த நாளில் அவரை மானசீகமாக அழைத்து ஸ்ரார்தம் நடக்கிறது.'

ஒருத்தரோட பொறந்தநாள மாதம் நட்சத்திரம் இதை கணக்குல வெச்சிண்டு கொண்டாடறோம்.  ஆனால் இறந்துபோன ஒருத்தரோட நினைவு நாள மாசம் பக்ஷம் மற்றும் திதி இந்த மூணையும் பார்த்து ஸ்ரார்த்தம் கொடுக்கிறோம்.

மனுஷா உசுரோட இருக்கும்போது அவர்களது சந்தோஷ கொண்டாட்டங்களுக்கு நக்ஷத்ரம் பிரதானமாக இருக்கு.  அதுவே இறந்து போயிட்டா அவாளோட நினைவுகளுக்கு திதிகள பிரதானமா எடுத்துக்கணும்.

'சுருக்கமா சொல்லணும்னா நிஜங்களுக்கு நட்சத்திரம்.  நினைவுகளுக்கு திதி.  சிந்தனைகளோட நாம பிரார்த்தனை பண்ற தெய்வங்களுக்கு கூட பல பூஜைகள் திதிகள் அடிப்படையில்தான்.  உதாரணமா விநாயக சதுர்த்தி, கோகுலாஷ்டமி, ராமநவமி, ரதசப்தமி, விஜயதசமி... இப்படி நிறைய சொல்லிண்டே போகலாம்.'

'சரிடா பாஸு.   அமாவாசை எப்ப வர்றது அப்படி என்கிற விஷயத்த கத்துண்ட இல்லையா?  சரி நீ போய் இப்ப தோட்டத்து பக்கம் ஜாக்கிரதையா போய் செடிகள் கிட்ட பேசிட்டு வா.  ரொம்ப நாள் ஆச்சோண்ணோ?  செடிகளைத் தொடும்போது ஜாக்ரதையா இருக்கணும் என்ன?  பூச்சி பட்டு ஏதாவது இருக்கபோறது.  நானும் அதுக்குள்ள பத்து நிமிஷம் தியானம் பண்ணிட்டு ரெடி ஆகறேன்.  அவசரமா எங்கேயும் போக வேண்டாமே நோக்கு?'

'இல்ல மாமா.  எங்கேயும் போகவேண்டாம்.'

தொடரும்.

No comments:

Post a Comment