#ரகோபதேஸம்
எழுத்து பாஸ்கர் சத்யா
ரகோபதேஸம்_1
என் ஜனனம் மன்னார்குடியில். 'இதை எப்ப பாத்தாலும் சொல்லிண்டே இருப்பியா? அலுக்கவே அலுக்காதா ஒனக்கு?'
அலுக்காது தான். அன்பு பரிமாற்றங்களை எங்கு அதிகம் பெற்றோமோ அங்கு தானே மனம் சுற்றிக்கொண்டே இருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா?
பிறந்த இரண்டு வருடங்களுக்குள்ளாகவே தந்தையை இழந்தாலும் சோகம் தெரியாமல் அக்கம் பக்கத்தில் இருந்த குடும்பங்கள் விபரம் அறியா அப்பருவத்தில் கொஞ்சி பேசி வாரியணைத்து முத்த மழைகள் பொழிந்து தலைவாரி மையிட்டுப் பொட்டிட்டு ஆட வைத்து தேட வைத்து ஊட்டி விட்டு .... இப்படி என்னிடம் பிரவாஹமாய் அன்பை செலுத்திக் கொண்டிருந்தவர்களை மறப்பது என்பது முடியுமா என்ன? கட்டை வேகும் வரை அந்த அன்பு கங்கை என் தாகம் தீர்க்குமே!
பிறப்பதற்கு ஒரு இடம் பிழைப்பதற்கு ஒரு இடம் இதை பெரும்பாலும் எல்லோரும் அனுபவிப்பது தான். ஆனாலும் பிறந்த மண்ணுக்கு ஒரு தனி வாசம் உண்டு. அந்த விதத்தில் ஒரு கால கட்டத்தில் சென்னைக்கு குடிபெயர்ந்தாலும் மன்னையே மனதில் நிற்கிறது என்ன செய்ய?
பணி ஓய்வு பெற்ற பின் அந்த மன்னார்குடி மண் வாசத்தை நேரிலே அனுபவித்து விட்டு வரலாமே என்று அங்கு சென்று ஒரு நாள் தங்கப்போய் மனம் பட்டபாடு இருக்கிறதே ..அது உண்மையிலேயே bபியாண்ட் டிஸ்க்ரிப்ஷன்.
மன்னார்குடியில் திருப்பாற்கடல் தெரு நுழையும்போதே என்னையும் அறியாமல் என் கால்களின் ஓரடி நடை கிட்டத்தட்ட அடிப்பிரதக்ஷண நடையாகிறது.
நான் பால்ய வயதில் அறிந்திருந்த எவருமே அங்கு இல்லை ஓரிருவரைத் தவிர. அவர்களிடத்தில் கூட என்னுடைய அறிமுகம் தேவைப்படுகிறது.
இடப்பெயர்ச்சி எனக்கு மட்டும் தானா? அவரவர் குடும்பத்தில் அவரவர் விருப்பத்தில் அவரவர் சூழலில் இடம்பெயர்தல் தவிர்க்க முடியாதது தானே?
திருப்பாற்கடல் தெருவின் ஆரம்பத்தில் இருக்கும் யானை வாகன மண்டபம். இங்குதானே மன்னை நாயகன் ஸ்ரீராஜகோபால ஸ்வாமி வருடத்திற்கு இரண்டு வாரங்கள் காலையில் வந்து அமர்ந்து தன்னை ஆஸ்வாசப் படுத்தி அலங்கரித்துக் கொண்டு மாலையில் தனக்கு விருப்பமான வாகனங்களில் பவனியை துவக்குவார்?
யானை வாகன மண்டபத்தை பார்த்தவுடனேயே வருடாவருடம் நடக்கும் அந்த பதினெட்டு நாட்கள் உற்சவத்தை என் மனம் படம்பிடித்து காட்டுகிறது.
'டொண்டொண் ... டொண்டொண் ... டொண்டொண் ... ட்டொண்.'
வாத்யங்களை கண்களில் பார்க்காமலேயே மனம் பெற்ற அந்த முரசு ... மேள ... நாதஸ்வர ... ஜால்ரா ஓசைகள்.
'இந்த இடத்தில்தான் கரகாட்டம்'
'அங்குதான் வான வேடிக்கைகளும் பூ மத்தாப்புக்களும்'
இப்படி என்னென்னவோ அந்த உற்சவத்தின் நினைவுகள் அந்நாளில் வாய் சிவக்க சிவக்க மென்ற கமர்கட்டுகளின் சுவையை சேர்த்துக் கொண்டு பலூன்களை பறக்க விடுகிறது.
மெல்ல மெல்ல நடக்கும் கால்கள் திருப்பாற்கடல் தெருவுக்குள் நுழைகிறது.
'இதுதான் பாலு மாமாவாம்'
'இந்த ஆத்துல தான் என்போன்ற அந்த நாளைய குழந்தைகளுக்கு டெர்ரராக இருந்த நடேச தாத்தா இருந்தார்'.
அந்த இல்லத்தை பார்க்கும் போதே அவர் தன் தடிக் கம்பை எடுத்துக் கொண்டு விரட்ட வருவது போன்ற உணர்வு மேலிட, உதடு சிரிக்கிறது.'
'இதுதான் கபிலா மாமி ஆம்.
எடுப்பான பற்களுடன் கபிலா மாமி உருவம் மனதிற்குள் வரும்போது அவள் குழந்தைகள் என் மனதில் வராமல் இருக்க முடியுமா? ஜமுனா, கீதா, சத்யா, மாது .... இவாளெல்லாம் இப்ப எங்க இருக்காளோ? எப்போதாவது அவ்வப்போது சந்திக்கும் திருப்பாற்கடல் தெருவாசிகள் மூலம் காதுகளில் விழுந்த அவர்களைப் பற்றிய விபரங்களையும் மனம் சற்று அசை போடுகிறது.
'ஆஹா .. இதோ வந்துவிட்டது லட்சுமி நாராயணன் கோவில். இங்குதான் சாயரட்சை ஆயிடுத்துன்னா ஸ்லோகங்கள் படிப்போம். பிரகாரத்தில் விளையாடுவோம். விகல்பம் சிறிதும் இல்லாமல் சக தோழிகளையும் சேர்த்துக் கொண்டு சீண்டல்கள்.
வெளிவாசல் மாத்திரம் திறந்திருந்து ஆள் நடமாட்டமே முற்றிலுமே இல்லாமல் இருக்கும் அந்த கோவிலுக்குள் சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் உள்ளே நுழைகிறேன்.
இருட்டு சன்னதி. மூடியிருந்த சன்னதி கதவுகள் காற்றோட்டத்திற்கான துவாரங்களுடன். விரைவில் அணையப் போகும் நிலையில் சந்நிதி விளக்கு துவாரங்களை கண்கள் ஊடுருவும் போது தெரிகிறது.
'எப்படா வந்த? சுத்தமா மன்னார்குடிய மறந்தாச்சாக்கும்.'
லக்ஷ்மிநாராயண ஸ்வாமிக்கு என்ன .. அவர் என்ன வேணா கேட்கலாம்?
'நீரே மெட்ராஸுக்கு என்னை அனுப்பி வைத்துவிட்டு என்ன கேள்வி இது? நான் இப்படி பதில் சொல்ல நினைத்தாலும் பட்டுனு கேட்டுட முடியுமா பகவானாச்சே அவர்?
அந்தக் கேள்வியை நாசுக்காக தவிர்த்துவிட்டு 'ஸாந்தாகாரம் புஜக சயனம் பத்மநாபம் ...' ரெண்டு வரி ஸ்லோகத்தை மனதோடு இசைக்கிறேன்.
கோவில் பிரகாரத்தை சுற்றுகிறேன். சுற்றி வரும்போது வடக்கு பிரகாரத்தில் இருக்கும் gக்ரில் கேட்டை ஒட்டிய படியில் உட்காருகிறேன். கிரில் கேட் வழியாக பரந்து விரிந்திருக்கும் திருப்பாற்கடல் குளத்தை என் கண்கள் அணு அணுவாக ரசிக்கிறது.
'எத்தனை டைவுகள்? எத்தனை நண்பர்கள்? எத்தனை நீச்சல்கள்? எத்தனை நீச்சல் போட்டிகள் எங்களுக்குள்? இழுத்து விட்ட பெருமூச்சில் மனம் அத்தனை நினைவுகளையும் குவித்து வெளியேற்றுகிறது.
என் கண்கள் இப்போது அதே க்ரில் கேட் வழியாக திருப்பாற்கடல் குளத்தின் அக்கரையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவிலை தேடுகிறது. சிவராத்திரிகளின் நினைவுகள் மனதிற்குள் வந்து ஈஸ்வரனுக்கு அடுக்கு தீபாராதனை காட்டுகிறது.
அப்படியே கண்கள் அக்கரையில் எதிர்ப்புறம் இருக்கும் பாண்டுரங்க மடத்தை பார்க்கிறது
'ஏய் பாஸூ வாடா. சீக்கிரம் வாடா. எத்தனை நாழி உனக்காக இங்கு காத்துக் கொண்டிருப்பேன்?'
பாண்டுரங்கன் கூப்பிட்டு விட்டான். அங்கு போகணும். உடனே போகணும்.
உடல் முழுவதும் புல்லரிக்கும் உணர்வு. கண்களில் கண்ணீர். உதடுகளில் வெளிப்படும் ஏக்கமும் ஆனந்தமும்.
லட்சுமி நாராயணன் சந்நிதிக்கு முன் நமஸ்காரம்.
கால்கள் இப்போது பாண்டுரங்க மடத்தை நோக்கி. ஐந்து நிமிட நடை தூரத்தை கடப்பதற்குள் மனம் கொடுத்த நினைவுச் சித்திரவதை இருக்கிறதே. அந்த உணர்வுகளுக்காகவே தனித் தொடர் எழுத வேண்டும்.
போய்ச் சேர்ந்து பல வருடங்கள் ஆனாலும் ரகுபதி சாஸ்திரிகள் அந்த பாண்டுரங்க மடத்தில் எனக்காக காத்து இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு வருகிறதே! சாத்தியம் இல்லாததையும் மனம் கொண்டு வரலாமே?
'அவர் கண்டிப்பாக எனக்காக காத்துக் கொண்டிருப்பார். போன மறு நிமிடம் அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணனும். எப்படி இருக்கேள்னு கேட்கணும்? கணேஸண்ணா சௌக்கியமா கேட்கணும்? நான் சொல்லிக் கொடுத்த சந்தியா வந்தன அர்த்தங்கள் எல்லாம் இன்னும் மறக்காம இருக்கியா ... இப்படி அவர் கேட்பார். சந்தியாவந்தனம் என்ன? நீங்க சொல்லிக்கொடுத்த பிதுர் தர்ப்பண மந்திர அர்த்தங்களையும் இன்னும் மறக்கல. என்னோட மனசுக்குள்ளேயே அவைகளின் அர்த்தங்களை வெச்சு தச்சிட்டேளே. மறக்க முடியுமா .. நான் இப்படி சொன்னால் உடனே என்னை அணைத்துக் கொள்வார். தலையை கோதி விடுவார். சாப்டியான்னு கேட்பார். அங்க பாண்டுரங்கன் பிரசாதம் இருக்கு எடுத்துக்கோ அப்படிம்பார். தோட்டத்தில் உள்ள செடியெல்லாம் உன்ன பத்தி கேட்டுண்டே இருக்கும்டா எப்பப்பாத்தாலும். தெரியாதுன்னு சொன்னா சண்டைக்கு வரும் அந்த செடிகள். வருஷா வருஷம் ஒரு தடவையாவது என்னை வந்து பார்த்துண்டு இருந்திருக்கலாமோன்னோ அப்படின்னு கேட்டா நம்ம முகத்தை எங்கே வெச்சுக்க முடியும்?'
திருப்பாற்கடல் தெருவிற்கு பெர்ப்பண்டிகுலராக இருக்கும் ஒரு சிறிய தெரு வழியாக பாண்டுரங்க மடத்தையும் அதை ஒட்டிய பாமணியாற்று படித்துறையையும் அடைந்துவிடலாம். குறுக்கே அமைந்திருக்கும் அந்த தெருவின் ஒரு பகுதி திருப்பாற்கடல் தெருவின் ஒரு எல்லை.
எனக்கு தெரிந்த பெரும்பாலான சமயங்களில் திருப்பாற்கடல் குளம் எப்போதும் பச்சை நிறத்தில் பாய் விரித்தது போல இருக்கும். பத்தடி ஆழத்தில் சேறும் சகதியும் மிகுந்து இருக்கும். நீச்சல் நன்கு தெரிந்தவர்கள் கூட அதி ஜாக்கிரதையாக குளத்தில் நீந்த வேண்டும்.
என் சகோதரிகள் நான் இந்த குளத்தில் இறங்கி நீச்சல் அடிக்கிறேனா என்பதை கண்காணிக்க நிறைய உளவாளிகளை வைத்திருப்பார்கள். ஆனாலும் அதையெல்லாம் நான் என்றுமே பொருட்படுத்தியது அல்ல.
'குளிச்சா அடிப்பா அவ்வளவுதானே. நாளைக்கும் சேர்த்து அடி வாங்கிண்டா போச்சு' இதுவே என் நிலைப்பாடாக இருக்கும்.
மடத்திற்கு ஒரு அட்டெண்டன்ஸ் கொடுத்துவிட்டு நைஸாக திருப்பாற்கடல் நீச்சல் சாகசங்களை கையில் எடுத்த நாட்களும் உண்டு.
அந்த குறுக்கு தெருவை கடக்கும் போதே நீச்சல் நினைவுகள். நினைவுகளை உள்வாங்கி பெருமூச்சு விட்டுவிட்டு மடத்திற்கு வருகிறேன்.
வாயில் கதவு பூட்டப் பட்டிருக்கிறது. அரைகுறையாக வெள்ளை அடிக்கப்பட்டிருப்பதையும் மர வேலைகள் அங்கு நடந்து கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிகிறது.
கதவுகளின் இடுக்குகள் வழியாக முடிந்தவரை மடத்திற்கு உள்ளே பார்வையை செலுத்துகிறேன்.
'இன்னிக்கு என்னமோ பாண்டுரங்கனுக்கு என் மேலே கோபம். கதவை சாத்திக் கொண்டு விட்டான்.'
இப்படியாக ஒரு எண்ணத்தை எனக்கு நானே செலுத்திக்கொண்டு ஆறுதல் அடைகிறேன்.
இப்போது பாமணி ஆற்றின் படித்துறைக்கு செல்கிறேன். நீரோட்டம் சிறிதளவும் இல்லை அந்த சமயத்தில். கண்ணுக்கு முன்னே தெரியும் மணல் பரப்பு எண்ணற்ற சிந்தனைகளுக்கு வழி வகுக்கிறது.
யாரும் அற்ற நேரத்திலே
வீற்றிருந்த மணல் பரப்பு
வேதனையை தூண்டுதடி...'
இந்தப் பாடல் ஏனோ என் மனதில் அப்போது உதித்து உதட்டால் ஒரு ஹம்மிங். காதலியின் பிரிவுக்கான வேதனைக்குத் தான் இந்தப் பாடல் பாடணுமா என்ன? பிரிந்த அன்பு சொந்தங்களும் மனதைப் பிசையாதா என்ன?
ஒரு படிக்கட்டில் அமர்ந்து கொள்கிறேன்.
'இப்படித்தானே ஒரு நாள் குருநாதரிடம் அமாவாசை தர்ப்பண மந்திரங்களின் அர்த்தங்களை கற்றுத் தரச்சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தேன்.'
'ஆஹா எப்பேர்ப்பட்ட மந்திர விளக்கங்கள்? எவ்வளவு அசட்டுத்தனமான கேள்விகள் என்னிடமிருந்து அப்போது? கிட்டத்தட்ட நாத்திக கணைகளாக கூட சில சமயங்களில். கோபமே படாமல் அவர் அன்று கற்றுக் கொடுத்த பாடங்கள்!'
ஆற்றங்கரை மேற்பரப்புகளை பார்த்துக்கொண்டே ரகு சாஸ்திரிகளிடம் ஐம்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற பல அப்யாசங்களை நினைவிற்கு கொண்டுவர முயற்சிக்கிறேன்.
அவரை நேரில் காண முடியாத இந்நாளைய வேதனை கலந்த உணர்வில் நானும் ... அவரும்.... மடத்தில் ... பாண்டுரங்கன் சன்னிதியில் ... தோட்டத்தில் .... பாமணி ஆற்று படித்துறையில் ... மணல் பரப்பில் ...
நிஜத்தில் நாங்கள் வாழ்ந்தது நினைவிற்குள் வராமல் எப்படி போகும்? பரிமாற்றங்கள் பரிசுத்தமாக இருந்ததால் பகவானின் வரமும் இதற்குள் சேர்ந்து கொள்ளுமே!!
ஸ்லோக விளக்கங்கள் ... ஆன்மீக கதைகள் .... சாஸ்திர சம்பிரதாயங்கள் .... முடிந்தவரை அவைகளோடு மனதில் பயணிக்கிறேன்.
கற்றவைகள் சிலவற்றை பகிரட்டுமா தங்களோடு? நுழைவோமா பாடங்களில், ரகுபதி சாஸ்திரிகளையும் பாஸுவையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, பாஸுவோடு ... பாண்டுரங்க மடத்தின் ரம்யத்தோடு ... மடத்தின் பூஞ்சோலையோடு ....
ரகுபதி சாஸ்திரிகளின் உபதேசங்கள் பாஸுவுக்கு கிடைத்த வரம். அந்த வரங்களை 'ரகோபதேசம்' என்ற தலைப்பிட்டு இனி வரும் அத்தியாயங்களில் பகிர்கிறேன்.
தொடரும்.
No comments:
Post a Comment