🤡🤠🤑🤡🤠🤑🤡🤠🤑🤡
ஏன்?எதற்கு? எப்படி? 21
வெங்கடேசன் வரதராஜன் - நன்றி இணையம்
கேள்வி:
பறக்கும் ஓணான் இருக்கிறதாமே? இறக்கை இல்லாமலேயே பறக்குமாமே? இது எங்கு காணப்படுகிறது?
பதில்:
கன்னியாகுமரி முதல் கோவா வரை உள்ள தென்மேற்குப் பகுதியில் நீங்கள் கேட்ட இந்த வகை வினோத ஓணான் இனம் வசித்து வருகிறது.
இந்த ஓணானின் முன்னங்கால்களில் விரிந்து சுருங்கும் இறக்கை போன்ற பாலித்தீன் ஜவ்வு அமைந்திருக்கிறது. இதை இறக்கையாகப் பயன்படுத்தி மரத்துக்கு மரம் அநாயாசமாகப் பறக்க இந்த ஓணானால் முடியும். இதன் மற்றொரு ஸ்பெஷாலிட்டி - எவ்வளவு உயரத்திலிருந்தும் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாமல் ஹாயாகக் குதிப்பதுதான். பார்க்கப் பரவசமாக இருக்கும்.
இது ஒரு "ஜம்ப்' செய்தால் 70 அடி தூரம் வரை கூடப் பறக்கும்.
சரி, பறக்கும் வேலை முடிந்துவிட்டது. இனி தரையில் பயணம் செய்யலாம் என்று ஓணான் சார் முடிவெடுத்து விட்டார் என்றால் அந்த ஜவ்வை சுருட்டி வைத்துக்கொண்டு, தரைவாழ் ஓணான்களைப்போல சுறுசுறுப்பாக ஓட்டம் பிடிக்க ஆரம்பிப்பார்.
🤡🤠🤑🤡🤠🤑🤡🤠🤑🤡
குற்ற உணர்ச்சி
🌺🌹🌺
இப்பொழுது இருக்கும் சிறுவர்களுக்கு ஓணான் கதை அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை. தெரியாமல் இருப்பதும் ஒருவிதத்தில் நல்லதுதான். இல்லை என்றால் இந்நேரம் எத்தனை ஓணான்கள் சிறுவர்களின் தொல்லைகளுக்கு ஆளாகி இறந்து போயிருக்குமோ!
நமக்கும் பால்யகாலத்தில் ஓணான் கதை தெரியாமல் இருந்திருந்தால் எத்தனையோ ஓணான்கள் இறக்காமல் போயிருக்கும். எவ்வளவு ஓணான்களை கஷ்டப்படுத்தி துன்பப்படுத்திவிட்டோம்.
ஆம் அப்பொழுதெல்லாம் சனி, ஞாயிறு விடுமுறை என்றால் எங்களை போன்ற சிறுவர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். காலை 8 மணிக்கெல்லாம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே விளையாட தயாராகிவிடுவோம். ஓணானை பிடிப்பதுதான் முதல் விளையாட்டு.
ஒவ்வொரு நண்பனின் வீட்டுக்கும் சென்று ஒவ்வொருவராய் பிக்கப்பண்ணி கொண்டு செட்டு சேருவோம். கையில் ஆயுதம் தயார்நிலையில் இருக்கும். ஆயுதம் என்றால் பச்சை ஓலைமட்டையின் விசுறு.
ஓணான்ஓணான்
பின் ஒவ்வொருவரும் மரம், செடி, கொடிகளை நோக்கி தனித்தனியாக ஓணானை நோக்கி படையெடுப்போம்.
ஓணானைப் பார்த்துவிட்டால் எல்லோருக்கும் ஒரே சந்தோசம்தான். இப்படி ஓணானைப் பிடித்து நாங்கள் சித்திரவதை செய்வதற்குக் காரணம் யாரோ எப்போதோ சொல்லி சென்ற ஓணான் கதைதான். 80ஸ் 90ஸ் கிட்ஸுக்கு இந்தக் கதை கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
"முருகர் சாமி ஒருமுறை வேட்டையாட போகும்போது ஒரே தண்ணிதாகமாம். மயக்கமாக இருந்ததாம். அப்போது வழியில் ஒரு ஓணான் வந்ததாம். அந்த ஓணானிடம் முருகர் சாமி தண்ணீர்கேட்டாராம். அந்த ஓணான் உதாசீனப்படுத்திவிட்டதாம். அதற்கு முருகர் சாமி ஓணானை திட்டி சாபம் விட்டு தண்டணை கொடுத்தாராம். அதனால்தான் ஓணான் உடம்பு பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பதாகச் சொல்வார்கள். பின்னர் முருகரின் தாகத்தை ஒரு அணில் தீர்த்ததாம். உடனே முருகர் சாமி அணிலுக்கு ஆசீர்வாதம் செய்தாராம். அதனால்தான் அணிலின் உடம்பு மீது மூன்று கோடு இருக்கிறதாம்’’
இப்படியான கற்பனை கதையைக் கேட்டு வளர்ந்த நாங்கள், ஓணானை கண்டாலே அடித்து விரட்ட வேண்டும் என்று நினைத்துவிட்டோம்.
"சாமிக்கு தண்ணி தரமாட்டேன்னு சொல்லிட்டல..?’’ என்று கண்ணுக்கு அகப்படும் ஓணான்களை கையில் வைத்துள்ள பச்சை ஓலமட்டை விசுரில் சுருக்கு போன்று கட்டி இழுப்போம். ஓணான் வசமாய் மாட்டி கொள்ளும். அவற்றால் தப்பிக்க முடியாது.
பின் அந்த ஓணானை அடித்து துரத்திவிடுவோம். சில சமயங்களில் ஓணான்கள் பரிதாபமாக இறந்துவிடும். இப்போது நினைத்தால் குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.
நாம் எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கிறோம் என்று மனசு கஷ்டபடும். அதற்கு காரணம் அன்று நமக்கு சொன்ன கதை. முட்டாள்தனமான இந்தக் கதை இப்போதுள்ள சிறுவர்களுக்கு தெரியாமல் இருப்பதே நல்லது.
- செந்தில் வேலாயுதம்
No comments:
Post a Comment