வைத்தீஸ்வரன் கோயில் ஒரு விசிட்.....
23.7.2021
கோவிலின் பெயரையே ஊராகக் கொண்ட திருத்தலங்களில் வைத்தீஸ்வரன் கோயிலும் ஒன்று நாங்கள் வழக்கமாக ஆடி மாதம் முதல் வெள்ளியிலேயே வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று விட்டு வருவது வழக்கம். சென்ற முறை கொரோனா தொற்று காரணமாக கோவிலுக்கு செல்ல முடியாதது வருத்தமாக இருந்தது.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் அதையும் மீறி நோய் வந்து விட்டால் அதிலிருந்து மீள்வதற்கு மருந்து மாத்திரைகள் மட்டும் இருந்தால் போதுமா?? இல்லை இல்லை ஆண்டவனின் அருளும் ஆசியும் கண்டிப்பாக தேவை அல்லவா? அப்படி நோய் தீர்க்கும் ஈசனைப் பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.. எம்பெருமான் ஈசனே ஸ்ரீ செவ்வாய் பகவான் என்கிற அங்காரகனுக்கு வைத்தியம் செய்து நோய் தீர்த்தார் அதனால் ஸ்ரீ வைத்தீஸ்வரன் என்று பெயர் பெற்று நோயினால் வாடும் பக்தர்களை தனது அருளாலும் ஆசியினாலும் குணமடையச் செய்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் .. நாங்கள் அனைவரும் உடலுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே வைத்தியநாதரிடம் முறையிட்டு அவரைக் கண்டு ஆசி பெற்று வருவது வழக்கம்..அப்படிப்பட்ட திருத்தலம் எங்கள் வீட்டிலிருந்து சரியாக 23 கிலோ மீட்டர் அதிகபட்சமாக காரில் 40 நிமிட பயணம் வெள்ளிக்கிழமை என்பதால் வீட்டிலும் கோலமிட்டு விளக்கேற்றி விசேஷ பூஜைகள் முடித்து நானும் எனது கணவரும் புறப்பட்டோம்.. ஏறத்தாழ 22 ஆண்டுகளுக்குப் பிறகு 26 .4. 2021 அன்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்து தற்போது புதுப்பொலிவுடன் திகழ்ந்து கொண்டிருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் கோபுரத்தை பார்த்ததுமே அதன் அழகில் சொக்கிப் போனேன். பொதுவாக எல்லா கோயில்களுக்கும் செல்வதுபோல் அர்ச்சனை தட்டு மட்டுமன்றி உப்பும் மிளகும் வெல்லமும் வாங்கி அதை காணிக்கையாக இங்கு செலுத்துவார்கள். அப்படி செலுத்திவிட்டு ஒரே ஒரு உப்பையும் மிளகையும் வாயில் போட்டு மென்று தின்றால் நம் உடலிலுள்ள நோய்கள் அனைத்தும் தீர்ந்து போய் ஆரோக்கியமான உடலை பெறுவதாக ஐதீகம். நாங்களும் அதுபோன்று உப்பு ,மிளகு, வெல்லம் வாங்கிக்கொண்டும் தொற்று ஏற்படும் சமயமாக இருப்பதால் அர்ச்சனை கிடையாது என்பதால் பூ மட்டும் வாங்கிக்கொண்டு கோவிலுக்குள் நுழைந்தோம்.. திரும்பிய இடமெங்கும் காதுகுத்து வைபவங்களும் தையல்நாயகி தாயாரின் எதிரி மாவிளக்கேற்றி பூஜை செய்து கொண்டும் இருந்தார்கள்.. தையல்நாயகி தாயாரை கண்குளிர தரிசனம் செய்துவிட்டு உப்பு மிளகு வெல்லத்தை காணிக்கையாக்கி விட்டு குளத்தை எட்டிப் பார்க்க சென்றோம் .குளம் தற்போது பூட்டப்பட்டு உள்ளது. பின்பு வைத்தியநாதர்ரை பார்க்கச் சென்ற பொழுது அங்கு பூஜையில் உள்ள ஒரு குருக்கள் அவராகவே எங்களை அழைத்து உள்ளே வருமாறு கூறி தீபாராதனை காட்டி அரளிப்பூ மாலையிட்டு தரிசனம் செய்து வைத்தார். அப்போது வைத்தியநாதரை பார்க்கும் பொழுதுஏனோ தெரியவில்லை கண்களில் இருந்து வரும் கண்ணீர் எதற்காக என்றும் புரியாமல் மனமுருகப் பிரார்த்தித்துக் கொண்டு, செல்வ முத்துக்குமரனை தரிசித்தோம் மேலும் உள்பிரகாரம் பூட்டப்பட்டு இருப்பதால் வெளிப்பிரகாரத்தில் அங்காரகன் எனும் செவ்வாயை தரிசித்துவிட்டு கையோடு கொண்டு சென்றிருந்த காலை உணவை முடித்தோம் . இந்தக் கோவிலைப் பற்றி குறிப்பிடும்பொழுது ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாயன்று மிகப்பெரிய அளவில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும் அதற்காக காரைக்குடி மற்றும் அனைத்து ஊர்களில் இருந்தும் நிறைய மக்கள் கால்நடையாகவே நடந்து வருவார்கள். அபிஷேகத்திற்கும் அன்னதானத்திற்கும் தேவையான அத்துணை பொருள்களையும் மாட்டுவண்டியில் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது மாட்டு வண்டிகளில் ஏன் அதற்கு மேல் கூட இருக்கலாம்.. பொருட்களை சீராக எடுத்துச் செல்வார்கள். அவர்கள் நடந்து வரும்போது சாலையின் இருமருங்கும் உள்ள பக்தர்கள் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அன்னதானம் உள்ளிட்டவைகளை அளித்து மகிழ்வார்கள்.. அந்த சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாயன்று வைத்தீஸ்வரன் கோயிலில் கிட்டதட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள்.. இதைப் பற்றி பேசிக் கொண்டே வந்து நினைவலைகளுக்காக சில போட்டோக்களையும் எடுத்து முடித்து கோவிலை விட்டு திரும்பும் பொழுது மனதில் இருந்த அத்தனை பாரமும் இறங்கிவிட்டார் போலவும் உடல் ஆரோக்கியத்துடன் திகழ்வதைப் போலவும் மனதில் நிறைவு ஏற்பட்டது.. என்னுடைய இந்த பயணத்தை எனக்காக மட்டும் முடிக்காமல் உங்களுக்காகவும் வேண்டி அங்கு எடுத்த சில போட்டோக்களின் மூலம் உங்கள் அனைவரையும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அழைத்துச் செல்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..
தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி..!!
நன்றி 🙏 வணக்கம்..
புவனேஸ்வரி கீர்த்திவாசன் அரையபுரம்.
No comments:
Post a Comment