Thursday, July 22, 2021

அக்கார அடிசில்

 🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑🤑அக்கார அடிசில்

==============

அது 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். திருவரங்கத்தில் ஜாகை.

மார்கழி பிறந்து விட்டது.  மகிழ்ச்சியும், இறை உணர்வும் மேலோங்கி நிற்கும் மாதம். 

மாதங்களில் நான் மார்கழி என்றார் ஸ்ரீ கிருஷ்ணர். ஆம். 

மார்கழி ஒரு ரம்யமான மாதம்.

காலை விடியலில் எழுந்து, குளித்து, வெளியே பனிக் காற்றை சுவாசித்துக் கொண்டு, தெருக்களில் இட்ட  அழகு கோலங்களையும், அதன் மேல்  வைத்திருக்கும் பரங்கிப் பூவையும் ரசித்துக் கொண்டே காலை 5 மணிக்கு ஆஜராகும் இடம் அம்மா மண்டப சாலையில், 700 ஆண்டுகள் பழமையான சீனுவாச பெருமாள் கோவில்.  30 பாசுரங்களையும், 30 நாட்களும் நாங்கள் கூறும் இடம்.

அடுத்து அரங்கனையும், ரங்கநாயகி தாயாரையும், ஆண்டாளையும் தரிசிக்க அரங்கனின் ஆலயம் செல்வேன்.

கோவிலில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் அன்றைய திருப்பாவை பாடலுக்கு ஏற்றார் போல பொம்மைகள் வைத்து அலங்கரித்து இருப்பார்கள்.

உதாரணமாக,  கற்றுக் கறவைக் கணங்கள் என வரும் 11 ஆம் பாசுரம் என்றால், கறவை மாடுகளும், அவற்றை மேய்ப்போரும், பல கோபிகைகள் சூழ ஆண்டாள் செல்லும் காட்சியும், செல்வம் கொழிக்கும் அந்த பெண் துயிலுறங்கும் காட்சி என எல்லாமே பொம்மைகளாக இருக்கும். அன்றைய பாசுரம் நினைவில் வரும்.

ஆண்டாளையும், இந்த அரிய காட்சிகளையும் 30 நாட்களும் பார்க்கலாம். அன்றும் சேவித்து விட்டு வீடு திரும்பினேன். 27 ஆம் நாள்.

சக்கரத்தாழ்வார் சன்னதி வந்து விட்டேன். பின்னணியில் திருமதி M L V அவர்களின் அன்றைய தின திருப்பாவை பாடல் ஒலித்துக் கொண்டு இருந்தது. பூர்வ கல்யாணி ராகத்தில் பாடிக் கொண்டு இருந்தார்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்றன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே

பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்....

அது என்ன..சக்கரத்தாழ்வார் சன்னதி வாசலிலே. . பிரசாத வாசனை வருகிறதே...

ஆஹா.. இன்று கூடார வல்லி ஆயிற்றே என நினைக்கும் போதே கையில் கிடைத்தது பிரசாதம்.

தொன்னையில் சூடான அக்கார அடிசில்.  அதை எடுத்து உண்பதற்குள், அந்த பச்சை கற்பூரத்தின் வாசனை என்னை மயக்கியது. நெய் சொட்ட சொட்ட.. முழங்கை வழிய எடுத்தேன்... சுவைக்கும் போது..மீதி வரிகள் காதில் விழுந்த போது இன்னும் இனிமையாக இருந்தது.

ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்...

கூடாரவல்லி திருவரங்கத்தில் மட்டுமல்லாது, ஸ்ரீ வில்லி புத்தூர்( கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழுமூர்), அழகர் கோவில் மற்றும் தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களிலும், பலரின் இல்லங்களிலும் கொண்டாடப்படும் அக்கார அடிசலுடன்.

நோன்பு நோற்கும் மாண்பை கூறித் தொடங்கும் திருப்பாவை, பின்னர் அறியாமை என்னும் உறக்கத்தில் இருக்கும் ஆயர்குல பெண்களை எழுப்பி, கண்ணன் வந்து விடுவான், தனது கைத்தலம் பற்றுவான் என எண்ணி மகிழ்ந்து, 27 ஆம் நாள் அன்று, பாடகத்தை (சிலம்பை) கால்களில், சூடகத்தை (வளையல்களை)  கைகளில் அணிந்து, தோடுகள், மாட்டல்களையும் அணிந்து, புத்தாடை உடுத்தி, மலர் சூடி, நெய் வழிய பாற் சோறு ( அக்கார அடிசில்) உண்போம் என்கிறது.


அக்காரம் என்றால் கரும்பு. அடிசில் என்றால் சாதம். கரும்பில் இருந்து எடுக்கப் பட்ட சர்க்கரையையும், சாதத்தையும் கலந்து செய்வது தான் அக்கார அடிசில்.


பச்சரியையும், தண்ணீரையும், பாலையும் கலந்து வெண்கல பானையில் அடி பிடிக்காமல் குழைய வேக வைக்கும் போது, வெல்லத்தை சேர்த்து கிளறி, சாதம் வேகும் போது, தாராளமாக நெய் ஊற்ற வேண்டும்.( வெங்கடேஷ் பட் சமைக்கும் போது சேர்க்கும் நெய் போல). மணக்க மணக்க தயாராகும்.  நெய்யில் வறுத்த ஜாதி பத்திரி, ஜாதிக்காய், குங்குமப்பூ, பச்சை கற்பூரம், ஏலக்காய் இவற்றை பொடி செய்து சேர்த்தால்....ஆஹா..

சங்கீத கச்சேரியில் மிருதங்கம், கடம், வயலின், கஞ்சிரா, மோர்சிங் போன்றது இந்த வாசனை பொருட்கள். எப்படி இந்த  இசைக் கருவிகளை சேர்த்து சங்கீதம் செய்தால் கச்சேரி  சோபிக்குமோ, அது போல இந்த வாசனைப் பொருட்களை சேர்த்தால் அக்கார அடிசில் சுவையாகும்.

ஆண்டாள் தாயார், பாவையாக இருந்த போது அழகர் பெருமானிடம் வேண்டிக் கொள்கிறார் மாலவனை கரம் பற்றினால், நூறு தடா ( தடா என்றால் அண்டா), வெண்ணெய்யும், அக்கார அடிசிலும் சமர்பிக்கிறேன் என்று.

அதற்குள் அரங்கன் ஆலயம் சென்று அவருடன் ஐக்கியமாகி விடுகிறார். வேண்டுதலை நிறை வேற்ற இயலவில்லை.

பல நூறு ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீ ராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் நூறு தடா அக்கார அடிசிலும், வெண்ணையும் சமர்பித்து வேண்டுதலை நிறை வேற்றுகிறார். 

பிரசாதத்தை திருவில்லிப்புத்தூர் எடுத்து செல்கிறார். வாருங்கள்

அண்ணா என்று குரல் கொடுக்கிறார் ஆண்டாள். பல நூறு ஆண்டுகள் ராமானுஜர் இளையவராக இருந்தாலும், தனது வேண்டுதலை, அண்ணன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றியவர் ஆயிற்றே. மனம் பூரிக்கிறார் ராமனுஜர்.

மார்கழி மாதத்திற்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கிறதே என எண்ண வேண்டாம். இன்னும் சில தினங்களில் ஆடி மாதம் பிறக்கப் போகிறது. அப்போது கூட செய்து நைவேத்தியம் செய்யலாம்.

அப்படி அக்கார அடிசல் செய்யும் போது மேலே கூறிய வாசனை பொருட்களையும் சேர்த்து செய்யுங்கள்.  அப்போது, மறக்காமல் வாசல் கதவை திறந்து வையுங்கள். வாசனையை நுகர்ந்ததும், கண்ணன் உங்களது இல்லம் வரக்கூடும்.

சங்கர்

சென்னை

No comments:

Post a Comment