முகநூலிலிருந்து பூபால்சிங்
மாப்பிள்ளை அழைப்பு
---------------------------------------
என் திருமணம் வேலூரில் நடந்தது. எங்கள் இனத்தில் மாப்பிள்ளை அழைப்பு குதிரையில் தான்.. அதற்கு மாப்பிள்ளை வீட்டில்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னையிலிருந்து வேலூருக்கு குதிரையில் போக நான் ஒன்றும் ஆற்காடு நவாப் பரம்பரையில் வரவில்லையாதலால் அப்போதைய வருங்கால மச்சானிடம் அவர் கேட்ட பணம் தந்து ஒரு குதிரையை ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டேன். நாட்டிய குதிரை கிடைத்ததாகவும் அது பேண்டு வாசிப்புக்கு நடனமாடுமென்றும் சொல்லி கூடுதல் பணம் கேட்டார். அதையும் கொடுத்த பிறகும் கொஞ்சம் இழுத்ததால் நான் புரிந்து கொண்டு பேண்டு க்கும் பணம் தந்து விட்டேன்.....
திருமணத்திற்கு முதல் நாள் மாலை..
மண்டப வாசலில் குதிரை வந்து நிறுத்தப்பட்டது.
நல்ல உயரமா அழகாயிருந்தது. காலில் சலங்கை கட்டியிருந்தது.. வண்ண வண்ண ஸாடின் துணியால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. ஆசை ஆசையாய் அருகே போனேன். ஒரு வித துர்நாற்றம் வீசியது. எங்கிருந்து வருகிறது என்று முதலில் கொஞ்சம் குழம்பிப் போனேன்.. அப்புறம் குதிரை அம்பாரி துணியிலிருந்துதான் அந்த நாற்றம் வருகிறது என்பதை கண்டு பிடித்து சேணத்தைத் தவிர மற்றவகைகளை எடுக்கச் சொல்லி விட்டேன்.....
அப்போது மாலை சிற்றுண்டி சாப்பிட அழைத்து போனார்கள். ரவை உப்புமா..
அதில் உப்பைத் தவிர மற்ற எல்லாம் இருந்தது. நல்ல காரம்.. ஒரு வாய் சாப்பிட்டு பார்த்து எல்லோரும் அப்படி அப்படியே ஒதுக்க மொத்தமும் வெளியேயிருந்து குப்பைகூடைக்கு அனுப்பப்பட்டது !
ஒரு ஸ்டூல் போட்டு என்னை குதிரையில் ஏற்றினார்கள்.குதிரையில் அமரும்போது இடுப்பில் கத்தியிருக்க வேண்டும். மச்சான் அவசர அவசரமாக கத்தி யோடு ஓடி வந்தார். கத்தியைப் பார்த்ததும் குதிரை பயத்தில் கத்தியது.... சாரி கனைத்தது.
அதற்கு குதிரை முதலாளி " குதிரை முடி மோதிரம் செய்ய , முடியை பிடுங்க கத்தியோட வருவதாக நினைத்து தன்னுடைய எதிர்ப்பைக் காட்ட அது கர்ஜித்தது.. என் குதிரை ' மயிர் நீங்கின் உயிர் வாழ கவரி மான் ' இனத்தைச் சேர்ந்தது ! " என்று ஏதோதோ சொல்லி சமாளித்தார்...
எனக்கு தெரிந்து யானை முடியில் தான் மோதிரம் செய்வார்கள்.. குதிரை முடியில் அல்ல !
குதிரை நடக்க... அல்ல , அல்ல நொண்ட ஆரம்பித்தது ! அது எம் ஜி ஆர் பட சூட்டிங்கில் கலந்து கொண்டு நேரே இங்கே வருவதாகவும் , ஒய்வில்லாத சோர்வினால் அது அப்படி நடப்பதாகவும் கூறினார் குதிரை காரர்.
கொஞ்ச நேரத்தில் குடலை பிடுங்கும் நாற்றத்துடன் லத்தி போட ஆரம்பித்தது. அசிஸ்டெண்ட் " குப்பைகூடையிலிருந்த மீந்து போன உப்பு மாவை குதிரைக்கு சாப்பிட கொடுத்ததால் வந்த வினை இது! " என்று ஓனரிடம் கிசு கிசுத்தது என் காதில் விழுந்தது !
பேண்ட்காரர்கள் ஆராதனா படத்து ' மேர சொப்பனாக்க ராணி ' பாடலை வாசிக்க ஆரம்பித்தார்கள் .
குதிரை நின்ற வாக்கில் முதலில் இட பக்க முன் காலை தூக்கி வைத்தது... பிறகு வலபக்க பின் காலை.... அப்புறம் இடப் பக்க பின் காலை... கடைசியாக வலப்பக்க முன்காலை தூக்கி வைத்தது !
அடுத்து சச்சா சூட்டா படத்து ' மேரி ப்யாரி பகன் ' பாடல்...
அதற்கும் அப்படியே செய்தது... அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அதுதான் நடனமா என்று கேட்டேன்.
அதற்கு குதிரைகாரர் அதற்கு ஹிந்தி பிடிக்காது என்றும் தமிழ் பாடல் வாசித்தால் அருமையாக நடனமாடும் என்றும் சொன்னார்.
அதனால் அடுத்ததாக சூரியகாந்தி படத்து ' ஓ மேரி தில் ரூபா ' பாடலை வாசிக்க அதற்கும் அப்படியே செய்ய , அதனை இந்தி பாடல் என்று குதிரை நினைத்து கொண்டதாக குதிரைகாரர் சொன்னார்
சரி பரவாயில்லையென்று அடுத்ததாக ' ஆகாய பந்தலிலே பொன்னூசல் ' பாடல் இசைக்கப்பட , குதிரை எதுவும் செய்யாமல் வாளாயிருந்தது.. கேட்டால் மொத்தம் மூன்று பாடல்களுக்கு மட்டுமே அது நடனமாடுமென்றும் , மூன்றும் முடிந்து விட்ட தென்றும் கூறினார் குதிரை முதலாளி !
வழிநெடுக சிறுநீர் கழித்து கொண்டே வந்தது. அதற்கு சக்கரை வியாதியிருக்கு என்பதை தெரிந்து கொண்டேன்..
. மாப்பிள்ளை ஊர்வலத்தில் எங்கள் இனத்தைச் சார்ந்த பிரபல வக்கில் ஒருவர் கலந்து கொண்டார்.
அதனால் எல்லோரும் அவரிடம் போய் ' வக்கில் சார்........ எப்படியிருக்கீங்க ? ' என்று கேட்ட வண்ணம் இருந்தார்கள்...
ஒவ்வொரு முறை அப்படி கேட்கும் போதெல்லாம் குதிரை வக்கிலை முகர ஆரம்பித்தது..
குதிரைக்கு சரியாக காது கேட்கவில்லை.... அதனால் ' வக்கில் ' அதன் காதில் ' வைக்கோல் ' என்று விழந்ததென்றும் , குதிரைகாரர் அந்த ஆகாரத்தை அதன் கண் முன் காட்டி பல நாட்கள் ஆகிறது என்பதையும் தெரிந்து கொண்டேன் !
வழியில் ஒருவன் வெடி வெடிக்க குதிரை பயத்தில் துள்ளி துள்ளி குதித்தது.... உண்மையில் அதுதான் குதிரை நாட்டியமாடுவதை போலிருந்ததால் அடிக்கடி வெடி வெடிக்கச் சொன்னேன்.
குதிரை உடம்பு முழுவதும் ஒரே ஈரம்... சேணத்தை தாண்டி ஈரம் என் பேண்டில் ஏறியது.. குதிரையின் வியர்வையோ ? அதற்கு பிரஷரும் இருக்கும் போல !
குதிரையை விட்டு மாப்பிள்ளை இறங்கியதும் அதனை வெறுமனே அனுப்பக்கூாது என்று ஒரு சிறுவனை அதில் ஏற்றி நூறு மீட்டர் தூரம் அனுப்புவார்கள்.. அப்படி சிறுவனை ஏற்றியது ம் அது முதலாளியை ஒரு மாதிரி பார்த்து நகர மறுத்தது.... அது சரியான...... நேரான பார்வை யில்லை.. கண்ணை சுருக்கி ஒண்ணரை கண்பார்வை !
காடராக்ட் இருக்குனு நினைச்சேன்.... அதற்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் !
அந்த பார்வைக்கு குதிரை ஓணர் வேறு மாதிரி அர்த்தம் சொன்னார்..அதாவது ஒரு ஆளை தான் அது ஏற்றிக் கொள்ளுமாம்... இரண்டாம் நபருக்கு கூடுதல் கட்டணம் தர வேண்டுமாம்....... மொய் எழுதி விட்டேன் !
ஒரு வழியாக திருமணம் நல்லபடியாக முடிந்தது.
முதலிரவு.....
காத்திருக்கும் நேரத்தில் அந்த குதிரை குறித்தே நினைத்துக் கொண்டிருந்ததால் என் மனைவி பால் சொம்புடன் உள்ளே நுழையும் போது என்னையறியாமல் குதிரை மாதிரியே கனைத்து விட்டேன்.
இதை எதிர்பார்க்காத என் மனைவி மிரண்டு போய் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
பயந்து போன நான் அவங்களை தூக்கி வந்து படுக்கையில் கிடத்தி தண்ணீர் தெளித்து ஒரு வழியாக சரி செய்தேன்.
அப்படியும் அவங்க மிரட்சி நீங்க ரொம்ப நேரமாச்சு....
பிறகு குதிரை செய்த அலப்பரையையும் அதனால் எனக்கு கிடைத்த அனுபவத்தையும் ஒண்ணு விடாமல் விவாவரியாகச் சொல்லி முடித்தேன் !
விடிந்தது.....
' என்னை பிடிக்குதா....... உன்னை பிடிக்குதா ' என்ற அபத்த கேள்வியில் ஆரம்பித்து , குடும்பம் ..... ஆசை.... எதிர்கால திட்டம் வரை பேசி முடித்து முதலிரவு கொண்டாடும் புது மண தம்பதிகள் போல இல்லாமல் குதிரை குறித்து பேசியே முதலிரவை முடித்த தம்பதிகள் நாங்களாக மட்டுமே இருப்போம் !
No comments:
Post a Comment