Saturday, July 10, 2021

ஆரன்முலா

நான் பார்த்த இடங்களைப் பற்றி பதிவிடுவதாகக் கூறியிருந்தேன்.

இதோ முதல் பதிவு. ஒரு ஆன்மீக தலத்துடன் ஆரம்பிக்கிறேன்.

சற்றே நீளமான பதிவு. அடுத்த பதிவுகளிலிருந்து நீளம் குறைக்கப்படும்.

ஆரன்முலா

By நந்து சுந்துவருடா வருடம் மாலை போட்டு சபரி மலைக்குப் போவது எங்கள் வழக்கம். 

எங்கள் ஐய்யப்ப கோஷ்டி ஒரு குடும்ப கோஷ்டி. எங்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் அடங்கிய  ஒரு closed group அது.

எருமேலிக்கு ஃபேமிலியாகத் தான் போய்ப் பழக்கம்.

எருமேலி என்று சொன்னதும் ஒன்று நினைவுக்கு வருகிறது. எருமேலியில் ஐய்யப்ப சாமிகள் பேட்டை துள்ள வேண்டும். நூறு ரூபாய் கொடுத்தால் முன்னால் மேளம் அடித்துக் கொண்டு போவார்கள். பின்னால் சாமிகள் நடனமாடிக் கொண்டு போக வேண்டும்.

எங்களுக்கு நடனம் வராது. எஸ்.வி.ரங்காராவ் எப்போதாவது நடனம் ஆடி பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் எஸ்.வி.ரங்காராவ் to the square.  பிறகு டான்ஸும் துள்ளலும்  எப்படி வரும்?

முன்னால் ஆக்ரோஷமாய் அவர் மேளம் அடிக்க நாங்கள் பின்னால் குடியரசு தின அணி வகுப்பு வீரர்கள் போல் நடந்து போவோம். பக்கத்தில் போடிநாயக்கனூர் ஐய்யப்ப கோஷ்டி பட்டையை கிளப்பிக் கொண்டு எங்களைக் கேவலமாகப் பார்த்துக் கொண்டு போகும்.

நாங்கள் அதற்கெல்லாம் வெட்கப்பட மாட்டோம். வேதனைப்பட மாட்டோம். நாங்கள் ஒரு சாத்வீக ஐய்யப்ப சாமிகள்.

சரணம் சொல்வது கூட மெதுவான குரலில் ஹோட்டல் சர்வரிடம் “கொஞ்சம் சட்னி கொடுப்பா” என்று கேட்பது போல் மெதுவாகத் தான் சொல்லுவோம்.

நாங்கள் ரயிலில் தான் எப்போதும் போவது வழக்கம். கோவையில் இருமுடி கட்டிய பிறகு நள்ளிரவில் ரயில் ஏறுவோம்.

அதிகாலை நாலரை மணிக்கு செங்கனூரில் இறங்குவோம். நானூறு ஐநூறு ஐய்யப்ப சாமிகள் இறங்குவார்கள். பத்து நிமிடத்தில் ஸ்டேஷனுக்கு வெளியே இருப்பார்கள். அடுத்த நாள் காலை அதில் ஒரு சாமி காணாமல் போய் “பெரம்பூர் பரமேசு சாமீ எங்கிருந்தாலும் இன்ப்ப்பர்மேசன் செண்டருக்கு வரவும்” என்று சன்னிதானம் மைக்கில் ஒருவர் அலறிக் கொண்டிருப்பார்.

எங்கள் கோஷ்டி ஸ்டேஷனிலேயே பல் தேய்த்துக் கொள்ளும். பிறகு “கக்கஸ்” என்று தூய தமிழில் எழுதிய இடத்தை பயன்படுத்திக் கொள்ளும்.

காபி குடித்து விட்டு வெளியே வந்தால் எங்களுக்கான வேன் தயாராக நிற்கும். 

புறப்படுவதற்கு முன்பே வேனுக்கு போன் செய்து சொல்லி விடுவோம்.

சோமன் என்று ஒரு டிரைவர். மலையாள ஓ.டி.டி  படங்களில் வரும் போலீஸ் மாதிரி இருப்பார். அவர் வேன் ஓட்டும் போது சக்கரம் தரையிலேயே படாது. சாலைக்கும் டயருக்கும் இரண்டங்குல சோமன டிஸ்டன்ஸ் இருக்கும். தவளைகள் டயரில் அடிபட்டு சாக வாய்ப்பே இல்லை.

“முதல்ல ஆரன்முலா தானே போகனும்” என்பார் சோமன்.

“அதே” என்போம்.  பல வருடங்களாக எங்களுடன் வருவதால் எங்கள் திட்டம் அவருக்கு அத்துப்படி.

ஆரன்முலா செங்கனூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

கேரளாவில் சாலைகள் நேராக இருக்காது. பரமபத விளையாட்டில் இருக்கும் பெரிய பாம்பு போல வளைந்து வளைந்து தான் இருக்கும். 

பதினைந்து நிமிட பயணத்தில் ஆரன்முலா வரும்.

பம்பா நதி இடது பக்கம் கண்ணுக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வேனை நிறுத்துவார் சோமன்.

அது குளிப்பதற்கு தோதான இடம். சித்திரை மாதமானாலும் பம்பையில் நீர் இருக்கும். குளிப்பதற்காக இறங்குவோம். கையில் முந்திரி கேக் சைஸுக்கு ஒரு சிறிய சேம்பிள் சோப்புக் கட்டி. பம்பாய் ஹோட்டலில் தங்கிய போது சுட்டது இப்போது பம்பா ஸ்னானத்துக்கு பயன்படுகிறது.

தண்ணீரில் இறங்கியதும் ஜில்லென்று முதுகுத் தண்டில் கரண்ட் பாயும். அணில் கடிக்காத கரெண்ட். குளிர்ந்த நீர் இடுப்பளவுக்கு இருக்கும். சுகமாகக் குளிப்போம். பம்பா ஓரளவுக்கு அகலமாகவே இருக்கும். 

இக்கரையிலிருந்து அக்கரை போக சிறிய தோணி இருக்கும்.

அதில் அதிகாலை அழகிகள் போய்க் கொண்டிருப்பார்கள். நாங்கள் மாலை போட்டிருந்ததால் அதிகாலையை மட்டும் ரசிப்போம். சிலர் சைக்கிளைக் கூட அதில் வைத்து கொண்டு போவார்கள்.

குளித்து முடித்து வந்தவுடன் கண்ணாடியில் தலையை பார்த்துக் கொள்வோம். “ஐயா..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்” என்று முதல் மரியாதையில் ஒரு மாகானுபாவன் வருவாரே..அவர் தலை போல் இருக்கும் எங்கள் தலைகள்.

ஈரமான துணிகளை காயப் போடுவோம்.

கரையோரமாக ஒரு P.W.D Guest House இருக்கும். முன்னால் கம்பங்கள் வைத்து அகலமான திண்ணை. அந்த திண்ணையில் அமர்ந்து இட்லி பாக்கெட்டைப் பிரிப்போம். ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் Tetra packet.

மிளகாய்ப் பொடியால் லேமினேட் செய்யப்பட்ட இட்லிகள் ஆக்ஸிடெண்ட் ஆன ரயில் பெட்டிகள் மாதிரி மாதிரி ஒன்று மேல் ஒன்று ஏறி நிற்கும்.

இட்லிகளை கபளீகரம் செய்ய ஆரம்பிப்போம். டிரைவர் சோமனுக்கும் ஒரு பாக்கெட் இட்லி உண்டு. கப்பக் கஞ்சிக்கு கேஷுவல் லீவ் கொடுத்து விடுவார் அவர்.

சாப்பிட்டு முடித்ததும் கை கழுவ வேண்டும். கெஸ்ட் ஹவுஸ் உள்ளே ஒரு வாஷ் பேசின் உண்டு. சேட்டப் பொறியாளர் மட்டுமே அங்கே தங்கவும் கை கழுவவும் அனுமதி உண்டு.

வாட்ச்மேனுக்கு ஒரு பாக்கெட் இட்லியை இனாமாகக் கொடுப்போம்.

“உள்ளே குழாய்லேந்து வெள்ளம் வரும்” என்று கை காட்டுவார்.

குழாயிலிருந்து வெல்லமா? கரும்பிலிருந்து தானே வரும்?

“உள்ளே போய்க்கோ. வாஷ் பேசின்ல வெள்ளம் உண்டு” என்பார்.

தினமும் இட்லி கொடுத்தால் இடுக்கி அணையிலிருந்தே தண்ணீர் திறந்து விடுவார் போல் இருந்தது. 

இந்த பம்பா நதியில் இதே இடத்தில் வருடா வருடம் ஓணம் பண்டிகையின் போது படகுப் போட்டி நடைபெறும். ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். வல்லசத்யா என்று ஒரு விருந்து நடக்கும். 64 வகையான உணவுப் பொருட்கள் பாரம்பரிய முறையில் சமைக்கப்பட்டு படகு ஓட்டும் போட்டியாளர்களுக்கு விருந்தாக படைக்கப்படும். அவர்களுக்கு வேறு சில பாரம்பரிய மரியாதைகளும் செலுத்தப்படும். பொது மக்களுக்கும் உணவு உண்டு.

கை கழுவி முடித்ததும் எதிரே இருந்த குட்டி டீக்கடைக்கு செல்லுவோம்.

பக்கத்தில் ஒரு அம்மே லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருப்பார்.

“ஒரு கோடி. நாளைக்கு ரிசல்டு” என்பார்.

என்னுடைய ராசி எனக்குத் தெரியும். Google pay ல் payment செய்தால் கூட better luck next time என்று தான் வரும். மாலை போட்டால் மட்டும் அதிர்ஷ்டம் வந்து விடுமா? நான் வேறு சரணத்தை சவுண்ட் கம்மியாக சொல்லியிருக்கிறேன்.

டீ வரும். ரோட்டோரக் கடை அது. உள்ளே உட்கார்ந்து குடிக்க இடம் இல்லை. ரோட்டில் நின்று கொண்டு குடித்தோம்.

சாலையில் விர் விர்ரென்று வண்டிகள் போயின. அதில் பாதி ஐய்யப்ப வண்டிகள். ஒரு வண்டி கூட ஆரன்முலாவில் நிற்கவில்லை. பலருக்கும் இப்படி ஒரு இடம் இருப்பது தெரிவதில்லை.

அதுவும் நல்லது தான். நிம்மதியாக கூட்டமில்லாமல் பம்பையில் குளிக்க முடிகிறது. இல்லாவிட்டால் காயப் போட்ட வேட்டிகள் மாறி என் வேட்டி வாராங்கல் போய் விட வாய்ப்புகள் ஏராளம்.

ஐந்து நிமிட பயணத்தில் ஆரன்முலா கோவில் வந்து விடும். பார்த்தசாரதி கோவில். 

புளியோதரை இல்லாத பார்த்த சாரதி கோவில்.

108 வைணவ திவ்ய தேசங்களில் இந்த புண்ணிய தலமும் ஒன்று.

தரை மட்டத்திலிருந்து சற்றே உயரமாக இருக்கும் கோவில். பதினெட்டு படிகள் ஏறிப் போக வேண்டும். கோவிலை வெளியிலிருந்து பார்ப்பதற்கே கம்பீரமாக இருக்கும்.

படியேறிப் போனால் பெரிய மணல் பரப்பில் நடுநாயகமாக கோவில். ஓடு வேய்ந்த கூரை. பெரிய கொடிக்கம்பம். சுற்றுச் சுவர்களில் வரிசையாக பித்தளை அகல் விளக்குகள். 

முன் வாசலிலிருந்து கோவிலுக்குப் போக கல்லினால் வேய்ந்த கார்ப்பெட். அதில் நடக்க சுகமாக இருக்கிறது.

கோவிலில் காலை நேர புத்துணர்ச்சி தெரிகிறது. தலைக்கு குளித்து விட்டு வந்திருக்கும் கேரள சகோதரிகள். சட்டை போடாமல் அல்லது சட்டையை கழட்டத் தயாராக இருக்கும் ஆண்கள்.  

யாருமே ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. மெளனம். நம்மூரில் இல்லாத மெளனம். 

கோவில் சுத்தமாக இருக்கிறது. வருகின்றவர்களும் சுத்தமாக இருக்கிறார்கள். சத்தமாக இல்லை. பக்தி தானாகவே ஊற்றெடுக்க வேறு என்ன வேண்டும்?

ஒரு மோன நிலை நம்மை ஆட்கொள்கிறது. ஆளுயர பித்தளை குத்து விளக்குகளைக் கடந்து உள் பிரகாரத்துக்குள் நுழைகிறோம்.

சன்னிதிக்கு முன்னால் தாழ்வான கூரை. நீ குனிந்து நில் என்று சொல்லியது. 

விளக்கு திரிகளின் ஜ்வாலையில் பார்த்தசாரதி தெரிகிறார்.  குருவாயூரப்பன் போல் தான் இருக்கிறார் பார்த்தசாரதி. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

இந்தக் கோவிலிலிருந்து மண்டல பூஜையின் போது சபரிமலை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி போகிறது.

சந்தன மணம், இயற்கையான தீப ஒளிகள், அமைதி. எல்லாமாக சேர்ந்து ஒரு தெய்வீக அலை வீசுவதை உணர முடிகிறது.

சன்னதிக்கு முன் பக்கம் தாழ்வாரத்துக்கு இரண்டு பக்கமும் திண்ணைகள் போல் உள்ளன. அதில் அமர்ந்து சிலர் மெளனமாக பூ கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தன்னார்வலர்கள் போல் தெரிந்தார்கள்.

மனம் குளிர பார்த்தசாரதியை தரிசித்து விட்டு உள் பிரகாரத்தை சுற்றி வரும் போது சந்தனத்தை சுண்டைக்காய் மாதிரி சுருட்டி நம் உள்ளங்கைக்கு வீசுகிறார் ஒருவர். அதை நெற்றியில் வைத்துக் கொண்டால் நடு நெற்றி ஜில்லென்றிருக்கிறது. முகத்தில் ஒரு தேஜஸ் வந்த மாதிரி இருக்கிறது.

கோவிலுக்கு இடது பக்கம் வெளிப் பிரகாரத்தில் சில படிக்கட்டுகள் இறங்கிப் போனால் இன்னொரு சன்னிதி. விநாயகர், பகவதி.

கோவிலின் வடக்குப் பக்கம் ஒரு வாசல். அதிலிருந்து 57 படிகள் இறங்கிப் போனால் பம்பா நதி இருக்கிறது. நாங்கள் குளித்த இடத்திற்கு மேல் பக்கம் இது. எனவே சுத்தமாக இருக்கிறது.

சில சமயம் கோவில் கொடிக்கம்பம் அருகே திருமணங்கள் நடைபெறுவதும் உண்டு. எளிய திருமணம். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் எதுவும் கிடையாது. 

விளம்பரப்படங்கள், ஸ்லைடுகள், நியூஸ் ரீல்கள் இல்லாமல் தியேட்டரில் லைட் அணைத்தவுடனேயே மெயின் பிக்சர் போட்டால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி நேராக மெயின் கல்யாணம். 

கோவிலில் அரை மணி நேரம் தான் இருந்திருப்போம். ஆனால் அந்த அனுபவம் மறக்க முடியாதது. அதனால் தான் இப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு எழுத முடிகிறது.

ஆரன்முலா கண்ணாடி இன்னொரு விசேஷம். 

இது உலோகத்தால் செய்யப்பட்ட கண்ணாடி. உலோகத்தை மிகவும் நைசாக தேய்த்து பளபளக்கும் கண்ணாடியாக செய்திருப்பார்கள். விலையைக் கேட்டால் மயங்கி விழுவீர்கள். 2000 ரூபாயிலிருந்து 15000 வரை இருக்கிறது.

அதிக விலை கொடுத்து கண்ணாடி வாங்கி விட்டால் மட்டும் முகம் மாறி விடப்போகிறதா என்ன? நமக்கெல்லாம் கெளரி பூஜையில் வைத்துக் கொடுக்கும் க்ரெடிட் கார்ட் சைஸ் கண்ணாடியே அதிகம்.

மறுபடியும் வேனுக்கு வருவோம்.

வெயில் வேலையைக் காட்டும். கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு வேனில் ஏறுவோம்.

குப்பை கூடை மூடியை திறக்க காலால் அழுத்துவது போல சோமன் ஆக்ஸிலேட்டரை அழுத்துவார்.

வேன் வானூர்தியாக பம்பா நோக்கி பறக்க ஆரம்பிக்கும்.




https://www.facebook.com/100013899674269/posts/1183957405410904/?extid=0&d=n

No comments:

Post a Comment