#சிறுகதை
அழுக்கு ஆறு
விடியற் காலை ஃபோனில் வந்த நண்பன் குமாரின் மெசேஜ் என்னை நிலைகுலைய வைத்தது. “ Nattu is no more. Committed suicide last night”
நட்டுவா? தற்கொலையா? இணைக்கவே முடியாத இரு துருவங்களாயிற்றே? ‘நட்டு தொட்ட எல்லாம் பொன்’ என்று நாங்கள் பேசிக்கொள்வோம். அவ்வளவு கெட்டிக்காரன் அதிர்ஷ்டசாலி, ஆப்டிமிஸ்ட். நான், நட்டு( நடராஜன்), குமார் மற்றும் ராஜூ நாங்கள் நால்வரும் இணைபிரியா நண்பர்கள். ஒரே தெரு, ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ் என்று ஒன்றாகவே வளர்ந்தவர்கள். அதிலும் ராஜூவும் நட்டுவும் படிப்பு, விளையாட்டு, எல்லாத்திலேயும் பயங்கரமாக போட்டிபோடுவார்கள். இதுல என்ன வேடிக்கை என்றால் ராஜூ ரொம்ப கடின உழைப்பாளி. நட்டு அதுக்கு நேர் எதிர். க்ளாஸ் டெஸ்ட் எல்லாவற்றிலும் ராஜூ ஃபர்ஸ்ட் வந்தாலும் முக்கியமான பரிட்சைகளில் நட்டு முந்திவிடுவான். விளையாட்டிலும் அப்படிதான். ரொம்ப க்ரிடிகலான சமயத்தில ராஜூ சொதப்ப நட்டு பிரகாசிக்க, ராஜூ புலம்ப ஆரம்பிச்சிடுவான்.
“ பாருடா அவன் லக்கை. நாள்பூர நான் படிக்கிறேன் விளையாடறேன் ஆனா லாஸ்ட் மினிட்ல இவன் கோல் போட்டு பேர தட்டிகிட்டு போயிடறான். பேர்ல கூட பாரு நான் வெறும் ராஜூ அவன் நடராஜூ ” என்று பொறுமிக்கொண்டே இருப்பான். நாங்கள்லாம் கூட அவனை கடிந்து கொள்ளுவோம். ஆனா நட்டு இதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம “ டேய் ராஜூ உனக்கென்னடா கொறச்சல். நீயும்தான் சூப்பரா எல்லாம் பண்ற” என்று சமாதானப்படுத்துவான். இருந்தாலும் அவன் சமாதானமாகாமல்
“ எனக்கு உன்னளவு பேரும் பெருமையும் இல்லையே” என்று மூக்கால் அழுவான்.
அதே மாதிரி ரெண்டு பேருமே பிரமாதமா ஐஐடில படிச்சு முடிச்சு நல்ல கம்ப்பெனிகளிலிருந்து ஆஃபர் வந்தபோது ராஜூ அதில் சேர்ந்தான். ஆனால் நட்டு இவைகளில் சேராமல் ஏதோ ஸ்டார்ட்டப் கம்ப்பெனியில் குறைவான சம்பளத்தில் சேர்ந்தது எல்லாருக்கும் ஆச்சர்யம். ராஜூவிற்கு இதில் கொஞ்சம் சந்தோஷம்தான். ஆனால் சில வருடங்களுக்குபின் அவன் சேர்ந்த ஸ்டார்ட்டப்பை கூகுள் பல மில்லியன் டாலர்களுக்கு வாங்கியதில் இவனுடைய ஸ்டாக் ஆப்ஷன் மூலம் இவன் ஒரு மல்ட்டி மில்லியனராகிவிட்டான். மீண்டும் ராஜூ புலம்ப ஆரம்பிச்சுட்டான்.
“ பாத்தியாடா அவன் மச்சத்தை. ஓவர் நைட்ல மல்ட்டி மில்லியனரா ஆகிட்டான். நான் பாரு அவன விட அதிக மார்க் வாங்கி பெரிய யுஎஸ் கம்ப்பெனில சேந்தேன். இப்ப பாரு அவன் எங்கயோ போயிட்டான்”
அதற்கு அப்புறம் அவன் பெரிய பிஸினஸ்மேனாகிவிட்டான். டிவியிலேயும் பேப்பர்லேயும் அடிக்கடி வர ஆரம்பித்தான். நாங்க மற்ற மூன்று பேர்களும் அப்பப்ப சந்தித்துகொண்டாலும் அவனுடன் தொடர்பு குறைந்துவிட்டது. வழக்கம்போலவே ராஜூ “ அவன் வேற லெவலுக்கு போயிட்டான்டா. அவனுக்கு ஒரு குருட்டதிர்ஷ்டம் எப்பவுமே உண்டு. என்னப்பாரு அவனவிட எல்லா விதத்திலும் பெட்டரா இருந்தாலும் அவன் அளவுக்கு முன்னேறவில்லையே” என்ற புலம்பலை நிறுத்தவே இல்லை.
அப்படி கொடிகட்டி பறந்தவன் எப்படி இந்த மாதிரி என்று எண்ணிக்கொண்டுருந்த போதே குமாரிடமிருந்து ஃபோன் வந்தது.
“ டேய் குமார் என்னடா இந்த மாதிரி..”
“ ஆமாண்டா என்னாலயும் நம்ப முடியல. ஏதோ பிஸினஸ் ப்ராப்ளம்னு டிவியில சொல்றாங்க”
“ எப்படிடா. அவன் மல்ட்டி மில்லியனராச்சே. பயங்கர ஆப்டிமிஸ்ட் வேற.."
“ தெரியலடா. சில சமயம் ஒத்தரோட உள் நிலமை நமக்கு புலப்படாது. காஃபிடே சித்தார்த் கதை நெனவிருக்கில்ல?”
“ ஆமாமா. நான் இன்னும் ஒரு மணி நேரத்தில நட்டு வீட்டுக்கு வரேன். நீயும் வா.. அது சரி ராஜுக்கு சொன்னியா? “
“ ராஜூக்கும் மெசேஜ் பண்ணியிருக்கேன். அவனும் அங்க வருவான்னு நெனக்கிறேன். நானும் ஒரு மணியில அங்கே வரேன்” என்று சொல்லி ஃபோனை வைத்தான்.
மள மள வென நான் கிளம்ப ஆயத்தமானேன். மனம் மிகவும் பாரமாக இருந்தது. சே! ஏன்டா இப்படி ஒரு முடிவை எடுத்தேன்னு நட்டுவை வைது கொண்டே அவனை கடைசி முறையாக காண புறப்பட்டேன்.
அவன் வீடு டிவியும் பிரஸ்ஸுமாக நிரம்பி வழிந்தது. முட்டி மோதி அவன் இருந்த ஃப்ரீஸர் பாக்ஸை அடைந்து அவன் முகத்தை பார்க்கும்போது துக்கம் பீறிட்டது. பக்கத்தில் வந்த குமார் என்னை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான்.
திடீரென ஒரு சலசலப்பு. நிமிர்ந்து பார்த்தபோது ராஜூ, ஃப்ரீஸர் மேல் தலையை மோதிக்கொண்டு
“ டேய் நட்டு.. எப்படிடா உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது? எனக்கேற்பட்ட தோல்விகள தாங்க முடியாம நானும் எவ்வளவோ தடவ ட்ரை பண்ணி தைரியமில்லாம விட்டுட்டேன். உன்னால எப்படிடா முடிஞ்சுது? நீ எல்லாத்லையும் என்ன ஜெயிக்கறயேடா?” அசந்தர்ப்பமாக வரும் அந்த விகார புலம்பலை கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்ப்பதை உணராமல் ராஜூ இன்னும் ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தான்.
பி்.கு: இந்த கதை நண்பர் Anantha Narayanan தன்னுடைய டைம்லைனில் போட்டிருந்த ஒரு உண்மை சம்பவத்தை (அவர் சம்மதத்துடன்) தழுவியது. கூடவே நண்பர் Jayaraman Raghunathan இதுல நிறைய சிறுகதைகள் இருக்குன்னு உசுப்பேத்திவிட்டதாலே
முதலிலும் கடைசியிலும் மட்டும் என் கற்பனை கலந்து இதை எழுதிவிட்டேன்.
No comments:
Post a Comment