Thursday, July 22, 2021

எங்க ஊரு சிதம்பரம்

 எங்க ஊரு சிதம்பரம்...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

மல்லாரி. கோவில்களில் சுவாமி புறப்பாடு சமயத்தில் நாதஸ்வரத்தில் இசைக்கப்படும் இசை. தாளக்கட்டுதான் மல்லாரிக்கு அடிப்படை. இதனை வாசிப்பதற்கு தனி இலக்கணமும் உண்டு. அதனால் தவில் வித்துவானின் பங்களிப்பு அதிகம். மல்லாரியில்  சுவாமியின் சேவைக்கு ஏற்ப பல வகை உண்டு. 

திருமஞ்சன நீர் எடுத்து வர, நைவேத்தியம் எடுத்து வர, சுவாமி புறப்பாடு, தேர்பவனி வர,பள்ளியறை செல்ல என வகைக்கு ஏற்ப தாளகட்டும், நடையும் மாறும். தமிழகத்தைப் பொருத்தவரையில் மல்லாரி வாசிப்பு மற்றும் பாரம்பரிய வளர்ச்சிக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. சிதம்பரத்தில் அநேக விதமான மல்லாரிகள் வாசித்தாலும் எட்டாம் நாள் 'பிக்ஷாண்டர்' அன்னிக்கு வாசிக்கும் மல்லாரி தான் ஒஸ்தி. 

அப்பெல்லாம் தேர் ப்ளஸ் தரிசனத்திற்காக இரண்டு நாளும் ஸ்கூல் லீவு. இப்ப ஐடி கம்பெனியில் சனி, ஞாயிறு லீவ் ன்னா வெள்ளிக்கிழமை அரை நாளுக்கு அப்புறம் வேலைல மனசு ஓடாத மாதிரி 'பிக்ஷாண்டர்' அன்னிக்கு (தேருக்கு முதல் நாள்) மதியத்துக்கு அப்புறம் ஸ்கூல் ல ரொம்ப கண்டுக்க மாட்டாங்க. அப்பா வீட்டுக்கு (ஸ்கூல் ஹேட்மாஸ்டர்) வந்த உடன் டிரஸ் மாத்திட்டு, கோயிலுக்கு போனால் 'பிக்ஷாண்டர்' நடவாண பந்தலுக்கு வந்திருக்கும். அப்பாவுக்கு மல்லாரி கேட்க ஆர்வம், நமக்கோ அந்தான்ட கீழவீதியில் உள்ள திருவிழா கடையில என்ன வந்திருக்கிறதோ என்று பார்க்க ஆர்வம். 

இருந்தாலும் அந்த தவில் வித்வான் தாளக்கட்டை வாயால் சொல்லிக்கொண்டே வாசிப்பதை பார்க்க பிடிக்கும். சிதம்பரம் 'பிக்ஷாண்டர்' (பிச்சை உகக்கும் பெருமான்)பற்றி ஒரு வார்த்தை. சிதம்பரம் நடராஜரை எப்படி பார்த்திட்டே இருக்கனூம்னு தோணுமோ, அது மாதிரி தான் பிக்ஷாண்டரையும் தோணும். அவ்வளவு அழகு. இருக்காதா பின்னே. உலகையே மயக்க கிளம்பினவர் ஆயிற்றே. அவருக்கு குமிண் சிரிப்பு, இவருக்கு குறுநகை. அவருக்கு தூக்கிய திருவடி, இவருக்கு துலங்கிய திருவோடு. உலகுக்கே அன்னம் பாலிப்பவன் 'தங்க திருவோடு' ஏந்தி பக்தரிடம் பிச்சை  கேட்டு வருகிறான் என்றால்... அடுத்த நாள் ராஜாவாக (நடராஜா) தேரில் ஊர்வலம் வர போகிறவன் முதல் நாள் பிச்சைக்காரனாக வீதியில் வருகிறான் என்றால்....What about our ego? 

மல்லாரியை சிதம்பரம் இராதாகிருஷ்ணன் பிள்ளை வாசிக்க கேட்கனும். 'அப்படியிருக்கும்'. நடவாண பந்தலில் ஆரம்பிக்கும் மல்லாரி சுமார் 1 1/2மணி நேரம் ஆகியும் மொட்டை கோபுரம் தான் வந்திருக்கும். அவ்வளவு விஸ்தாரமான வாசிப்பு. மல்லாரி தாளம் சூழ 'பிக்ஷாண்டர்'  தங்கமாய் மிளிரும் இளமாலை நேரத்தில் தங்க ரதத்தில், தங்க திருவோடு ஏந்தி  'பிக்ஷை'  கேட்டு வரும் அழகு இருக்கே பார்க்க கண் கோடி வேணும். 'பிக்ஷாண்டரை'   பாக்கலைனாலும் மல்லாரியாவது கேட்போம். சஞ்சய் சுப்பிரமணியம் (எனது அபிமான பாடகர்) மல்லாரியையும்,  இராதாகிருஷ்ணன் பிள்ளை மல்லாரியையும் கொஞ்சம் (முழு கச்சேரி 3மணி நேரம் வரும்) கேட்போம். 


(பி.கு: இன்று சிதம்பரம் கோவிலில் ஆனி திருமஞ்சனம் உற்சவத்தில் பிக்ஷாண்டர்).

No comments:

Post a Comment