(சென்னையிலிருந்து திருப்பதி மார்க்கம்..)
(பகுதி −2..)
திருப்பதியை நோக்கிய எங்களது பயணத்தில், முதல் திருத்தலமாக, தமிழக எல்லையோரத்தில், ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில், சென்னை − திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகலாபுரம் என்ற சிறு கிராமத்தில் எழுந்தருளியிருக்கின்ற வேதநாராயண ஸ்வாமி திருக்கோயிலை நாங்கள் முதலில் சென்றடைந்தோம்..
சுமார் அறுநூறு வருடங்களுக்கு மேற்பட்ட புராதனமான திருக்கோயில்..
விஜய நகர மன்னரான கிருஷ்ண தேவராயரால் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மன்னர், தனது தாயார் நாகலா தேவியின் நினைவாக இந்த ஊரை உருவாக்கி "நாகலாபுரம்" என்று பெயர் சூட்டியதாகத் தெரியவருகிறது.
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் உபயத்தினால், தற்பொழுது கோயில் பளிச்சென்று மின்னுகிறது!..
நான்கு ராஜ கோபுரங்களுடன் பிரம்மாண்டமாகக் காட்சி தருகின்ற இத்தலத்தில்...
....இருபுறமும் ஜெய விஜயர்கள் பெருமானை ரக்ஷணம் செய்து கொண்டிருக்க,
"வேத நாராயண" பெருமாள் மேற்கு நோக்கி "நின்ற" திருக்கோலத்தில் ஶ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார்...
கண்களில் நுழைந்து, மனதை ஆக்ரமிக்கின்ற பேரழகுப் பெருமான்!..
திருமாலின் பத்து அவதாரங்களில் முதலாவதான மச்ச ரூபமே எம்பெருமானின் திருவடியாகக் காட்சியளிக்கின்ற கவின்கோலம்...
மச்ச அவதாரமெடுத்து, நான்கு வேதங்களையும் மீட்டு பிரம்மனிடம் இத்தலத்தில் கொடுத்ததன் காரணமாக...
....இந்தப் பெருமான்
"வேத நாராயணப் பெருமாள்" என்ற பொருத்தமான திருநாமத்தோடு விளங்குகிறார்!..
தாயார் "வேதவல்லி" எனும் திருநாமத்துடன் கிழக்கு நோக்கி தனிச்சந்நிதியில் எழுந்தருளி, தனது அருளை வாரி வழங்குவதற்காக, நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறாள்..
இந்தத் திருக்கோயிலில் நம்மை எப்பொழுதும் ரக்ஷணம் செய்கின்ற லக்ஷ்மிநரசிம்மனின் சந்நிதியும்...
தனது வீரத்தை பறைசாற்றிக் கொண்டிருப்பது போல் விளங்குகின்ற வீர ஆஞ்சநேயர் சந்நிதியும்...
பக்திக்கு இலக்கணமான "பக்த" ஆஞ்சநேயன் சந்நிதியும்...
இலக்குவனோடும், ஜானகியோடும் சேவை சாதிக்கின்ற இராமபிரான் சந்நிதியும்....
தனித்தனியே அழகுற அமைந்திருக்கின்றன..
இந்தத் திருக்கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாயார் திருமஞ்சனம் கண்டு அருள்வதும்...
பெருமான் சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் கண்டு அருள்வதும் வழக்கமான நிகழ்வாகவே இருக்கிறது!..
இதைத் தவிர பிரதிவருடம் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் ப்ரம்மோற்சவமும்..
மார்கழியில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவும்...
தை மாதத்தில் மகர சங்கராந்தி மற்றும் ரதசப்தமி விழாக்களும்..
தெலுங்கு வருடப் பிறப்பான "யுகாதி"ப் பண்டிகையும் வெகு சிறப்பாக இங்கே கொண்டாடப்படுகிறது..
எங்கும் காணா அதிசயமாக, இத்திருத்தலத்தில் சூரியபகவான் எம்பெருமானை பங்குனி மாதம் 12, 13, 14 தேதிகளில் வழிபடுவதாகவும், அதைக்காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்றும் கூறுகின்றனர்..
அந்நாட்களில், தலைவாசல் படியிலிருந்து கர்ப்பகிரகம் வரையிலான சுமார் 360 அடியைக் கடந்து சூரிய ஒளி எம்பெருமான் மீது வந்து வீழ்கிறது என்று பட்டர் கூறிய செய்தி நம்மை வியக்க வைத்தது!..
முதல்நாளன்று சூரியஒளி எம்பெருமானின் பாதத்தை தீண்டுவதாகவும்,
இரண்டாவது நாளன்று எம்பெருமானின் நாபியைத் தீண்டுவதாகவும்,
மூன்றாம் நாளன்று எம்பெருமானின் சிரசில் ஒளிரும் க்ரீடத்தைத் தீண்டுவதாகவும் பட்டர் சொல்லிக் கேட்டபொழுது...
...மனம் அந்நாட்களில் அங்கு வந்து அந்த அத்புதத்தை தரிசிக்கின்ற பாக்கியத்தை எம்பெருமான் நமக்கும அனுக்ரஹிக்க வேணும் என ஏங்கியது...
கடைசியாக ஒரு செய்தி...
நாம் பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மத்ஸ்ய அவதாரத்தில் கண்டிருக்கும் எம்பெருமானை, மத்ஸ்ய ரூபத்தில் மூலவராக சேவிப்பது இந்த ஒரு திருத்தலத்தில் மட்டுமே!..
எனவே, அவசியம் வாழ்நாளில் ஒரு முறையேனும் இவனைத் தரிசிக்கின்ற பாக்கியத்தை, அந்த எம்பெருமானே நமக்கெல்லாம் அனுக்ரஹிக்க வேணுமென்று ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து கொள்வோம்!..
திருமதி பத்மா கோபால்
(வளரும்..)
No comments:
Post a Comment