Saturday, July 10, 2021

பஞ்ச் த்வாரகா பயணம் பகுதி 13

 பஞ்ச துவாரகா பயணம் பகுதி12

வெங்கடேசன்(6381369319)

சோம நாத புரம்….

இந்த பெயரை கேட்டதுமே நமக்கு ஞாபகத்துக்கு வருவது கஜினி முகமது.இந்தியா மீது 17 முறை படையெடுத்து வந்து தாக்கிய ஆப்கானிஸ்தான் மன்னன் கஜினி முகமது இந்த கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி இங்கிருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்து சென்றான். கஜினி முகமது மட்டும் அல்ல, மேலும் பல முஸ்லிம் மன்னர்களும் இந்த கோவிலை இடித்து தள்ளினார்கள். 

இவ்வாறு 6 முறை தரைமட்டமாக்கப்பட்ட கோவில் ஒவ்வொரு முறையும் மீண்டும் கட்டப்பட்டு இன்றும் நம் கண்முன் கம்பீரமாக நிற்கிறது. சோமநாதர் கோவில் குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள பிரபாஸ் பதான் என்ற இடத்தில் இருக்கிறது. இது, ஜோதிர் லிங்கம் ஆலயம் ஆகும். இந்தியாவில் ராமேஸ்வரம் உள்ளிட்ட 12 ஜோதிர்லிங்கம் ஆலயங்கள் உள்ளன. அதில், சோமநாதபுரம் கோவில் முதன்மையானதாகும். 

இந்த கோவில் முதன் முதலில் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி சரியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆதிகாலத்தில் இருந்தே இது குஜராத்தில் பிரதான கோவிலாக திகழ்ந்துள்ளது. நாட்டின் பல இடங்களில் இருந்தும் மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். அரபிக்கடல் ஓரமாக கபிலா, ஹிரன், சரஸ்வதி (மறைந்து போன ஆறு) ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கோவில் அமைந்துள்ளது. 

முதலில் இந்த இடத்தில் பழங்கால கோவில் இருந்துள்ளது. அதே இடத்தில் கி.பி. 649-ம் ஆண்டு அந்த பகுதியை ஆண்டு வந்த யாதவ குல மன்னர் வல்லபாய் பிரமாண்ட கோவிலை கட்டி இருக்கிறார். ஆனால், 725-ம் ஆண்டு சிந்து (பாகிஸ்தான்) பகுதியை ஆண்டு வந்த இஸ்லாமிய அரசின் கவர்னர் அல்ஜுனாபெத் படையெடுத்து வந்து சோமநாதர் கோவிலை முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கி விட்டார். 

அதன்பிறகு இந்த பகுதியை ஆண்ட மன்னர் 2-ம் நாகபத்ரா கி.பி. 815-ம் ஆண்டு மீண்டும் கோவிலை கட்டினார். 1025-ல் கஜினி முகமது படையெடுத்து வந்து ஆலயத்தை தாக்க வந்தார். அப்போது கோவிலில் தங்கம், முத்து, பவளம், ரத்தினம், வெள்ளி என ஏராளமான செல்வங்கள் குவிந்து கிடந்தன. இதை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தான் கஜினி முகமது தாக்க வந் தான். அவனது படையை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்காக ஏராளமான மக்கள் அணி, அணியாக திரண்டு வந்து எதிர்த்தனர். 

அத்தனை பேரையும் வெட்டி வீழ்த்தி விட்டு கஜினி முகமது படை கோவிலுக்குள் புகுந்தது. சுமார் 50 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். 20 ஆயிரம் பேர் அடிமையாக சிறை பிடிக்கப்பட்டனர். அதன் பிறகுதான் படை உள்ளே நுழைய முடிந்தது. கோவிலுக்குள் புகுந்த கஜினி முகமது அத்தனை செல்வங்களையும் கொள்ளையடித்தான். கோவில் கர்ப்பகிரகத்தில் இருந்த சிவலிங்கத்தின் சிலையையும் உடைத்து எடுத்து சென்றான். கோவிலில் இருந்த வெள்ளி கதவுகள், சந்தன மரத்தால் ஆன கதவுகளையும் முற்றிலும் பெயர்த்து எடுத்து சென்றான். 

அன்றைய பண மதிப்புபடி அவன் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு 2 கோடி தினார் ஆகும். இப்போதைய கணக்குப்படி பார்த்தால் எத்தனையோ ஆயிரம் கோடி இருக்கும் என்கிறார்கள். கோவிலில் இருந்து அவன் 7 வண்டிகள் நிறைய தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எடுத்து சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. 

அவன் ஊருக்கு திரும்புவதற்கு முன்பு கோவிலை முற்றிலும் தரைமட்டமாக்கி விட்டுதான் சென்றான். பின்னர் இப்பகுதியில் ஆட்சிக்கு வந்த 2-ம் குமார பாலா கோவிலை மீண்டும் கட்டினார். கற்களால் கட்டப்பட்ட கோவிலை அவர், தங்கம், வெள்ளியால் பிரமாண்டமாக அலங்கரித்தார். ஆனாலும், கோவில் மீண்டும் தாக்குதலுக்கு ஆளானது. 1299-ல் டெல்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜி தனது தளபதி உலுக்கான் தலைமையில் படையை அனுப்பி கோவிலை தகர்க்க செய்தான். 

பின்னர் ஆட்சிக்கு வந்த மகிபாலா தேவா 1308-ல் மீண்டும் கோவிலை கட்டினார். 1395-ம் ஆண்டு மீண்டும் கோவில் இடிக்கப்பட்டது. டெல்லி சுல்தானின் குஜராத் பகுதி கவர்னராக இருந்த ஷாபர்கான் கோவிலை இடித்தான். ஆனாலும், மீண்டும் கட்டப்பட்ட கோவிலை 1451-ல் குஜராத் சுல்தான் முகமது பேகடா இடித்து தள்ளினான். அடுத்து மீண்டும் கோவிலை கட்டினார்கள். 1546-ல் இந்த பகுதியை கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் பங்குக்கு கோவிலை இடித்து விட்டு சென்றனர். இஃதென்ன கொடுமை சர்வேசா!  இதற்கு விடிவே கிடையாதா?


ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம் |
ஜந்மஜ துக்க விநாசக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் ||
ஜெய் சோம்நாத்!

பிரபாச பட்டினம் என்று பெயரைப் பெற்றுள்ள இந்தத் தலம் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஒன்று.  இது அகமதாபத்திலிருந்து 415 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தலம் பற்றிய வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று! தக்ஷ பிரஜாபதிக்கு இருபத்தேழு பெண்கள் பிறந்தனர். அவர்களை அவன் சந்திரனுக்கு மண முடித்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் மேல் மட்டும் அளவற்ற ஆசை வைத்து இதர  அனைவரையும் கவனிக்கவில்லை. இதனால் மனம் வருந்திய அவர்கள் அனைவரும், தன் தந்தையிடம் முறையிடவே அவர் கோபம் கொண்டு, சந்திரனை நோக்கி, “நீ உருக்குலைந்து அழியக் கடவது” என சாபம் இட்டார். மனம் வருந்திய சந்திரன், சாப விமோசனம் கேட்கவே, தக்ஷன் ‘சிவனை நோக்கித் துதி செய்’ என்றான். பிரபாச பட்டினத்தின் கடற்கரையில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்த சந்திரன் பூஜை செய்து சிவனை வழிபட்டு வந்தான். மனம் மகிழ்ந்த சிவ பிரான் அவன் முன் தோன்றி அவன் குறையைக் கேட்டு, “பதினைந்து நாட்கள் நீ தேய்ந்து அடுத்த 15 நாட்களில் முற்றிலுமாக நீ வளர்வாயாக” என வரம் தந்தார். சந்திரனுடைய இன்னொரு பெயர் சோமன். அவன் வழி பட்ட தலம் என்பதால் சோமநாத் அல்லது சோமநாத புரம் என்று இத்தலம் பெயரைக் கொண்டது.

அரபிக் கடலின் கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய பாறையில் அழகுற அமைந்துள்ள இந்த சோமநாதர் ஆலயம் பூர்வத்தில் தங்கத்தால் ஆன கோவிலாகும். ஸ்கந்த புராணத்தில் சோமநாதர் கோவிலில் உள்ள ஜோதிர்லிங்கம் சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கு அடியில் இருப்பதாகக் கூறுகிறது. ரிக் வேதம், சிவ புராணம், பாகவதம் உள்ளிட்ட நூல்களிலும் இது குறிப்பிடப்படுவதால் இது பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் என்பது பெறப்படுகிறது.

“ஸோம லிங்கம் நரோ த்ருஷ்ட்வா ஸர்வ பாபாத் ப்ரமுச்யதே” என்ற அருள் வாக்கியம் சோம லிங்கத்தை தரிசிக்கும் ஒருவர் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுவார் எனக் கூறி அருள்கிறது.

இந்த ஆலய மணியின் சங்கிலி மட்டும் இருநூறு மடங்கு எடை கொண்ட தங்கத்தால் ஆனது. கோவிலின் கூரையை 56 சட்டங்களைக் கொண்ட தூண்கள் தாங்கி இருந்தன. ஏராளமான தங்க வெள்ளி ஆபரணங்களும் நவரத்தின மணிகளையும் கொண்ட இதன் செல்வச் செழிப்பு சொல்வதற்கு இயலாத ஒன்று. இதைக் கேள்விப்பட்ட கொள்ளைக்காரன் கஜினி முகம்மது 17  முறை படையெடுத்து வந்தான். இறுதியில் கோவிலை அழித்தான். கோவில் மீண்டும் அழகுறக் கட்டப்பட்டது. இப்படியாக இந்த ஆலயம் அலாவுதீன் கில்ஜி, ஜாபர்கான் உள்ளிட்ட முரட்டு வெறியர்களால் ஆறு முறை அழிக்கப்பட்ட போதும் பல்வேறு அரசர்களால் இது மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது.



No comments:

Post a Comment