Saturday, July 10, 2021

சுலோ’சனாவும் அவள் ஓட்டமும்

 ‘சுலோ’சனாவும் அவள்  ஓட்டமும்

MAYDAY SPECIAL 

அடடா மணி ஆறா! இப்பப் போனாத்தானே சரியாயிருக்கும்.  இல்லன்னா அந்த அக்கா திட்டுமே. மனம் பதைக்க குளித்துவிட்டு வந்தாள் சுலோசனா

அரக்கப்பரக்க இட்லியை வேக விட்டு ,தூங்கும் தன் எட்டு வயது பையனை உலுக்கி எழுப்பி “ டேய் குண்டால வெந்நீர் இருக்குது. குளி. டப்பால இட்லி வச்சிருக்கேன். ‘அம்மா’கடைல சாம்பார் வாங்கிக்க. வெளிய எங்கியும் போவாத. கொரானா வந்துரும். அம்மா இதோ ரெண்டவர்ல ஓடியாந்துடுவேன். என்னா புரியுதா”. தூங்கி வழியும் மகனை உச்சி முகர்ந்து தடவி விட்டு பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ஃபோட்டோவில் சிரித்த கணவனைப் பார்த்து செல்லமாக தோள்பட்டையில் இடித்துக் கொண்டு “ போய்ட்டு வரேன்யா. புள்ளய பாத்துக்க என்னா”? என்றபடியே அவள் வேலை செய்யும் வீட்டை நோக்கி விரைந்தாள். 

மணி ஆறே முக்கால். “என்ன சுலோசனா? இன்னிக்கும் ‘சுலோ’சனாவா? “

 “ஆமாங்க்கா. சாரிக்கா. நீங்க போங்கக்கா. நான் வேலையெல்லாம் பாத்துக்கறேன்.”

கடகடவென அந்தப் பெரிய வீட்டின் வாசலைப் பெருக்கி,தண்ணி தெளித்து, கோலம் போட்டு,தோட்டத்தையும் பெருக்கி, செடிகளுக்கு தண்ணீர் விட்டு,உள்ளே வந்து பத்து பாத்திரங்களை அள்ளி வெளியே போட்டுவிட்டு, மளமளவென மாடியும் கீழுமாக இருந்த வீட்டை கூட்டி, மெழுகி ,பாத்திரம் தேய்த்து, நிமிர்ந்தபோது மணி ஒன்பதரை ஆகிவிட்டது. 

வாஷிங் மிஷினில் துணியைப்போட்டு விட்டு இண்டக்‌ஷன் ஸ்டவில் தனக்கு என இருந்த டிகாக்‌ஷனில் காபியை கலந்து வைத்து விட்டு காய் நறுக்க அமர்ந்தாள் ‘சுலோ’சனா. பீன்ஸ் காரட் கீரை வெண்டக்கா என நீண்டது காய் வேலை. 

அக்கா வந்தா சாலட் கேப்பாங்களே என்றபடியே ப்ரிட்ஜிலிருந்து முளைகட்டிய பயறை எடுத்து காரட்துருவி வெங்காயம் சேர்த்து தாளித்து மூடி வைத்து மணி பார்த்தால் பத்தே முக்கால் என்றது கடிகாரம். 

மெஷின் துணியை காயவைத்து ஆறிப்போன காபியைக் குடித்து நிமிர்ந்தபோது... ஸ்கூட்டர் ஹார்ன் அடித்தது. ஓடிப்போய் கேட்டைத்திறந்ததும் 

‘ அக்கா ‘ வியர்த்து விறுவிறுக்க வந்தாள். 

“ சுலோசனா கொஞ்சம் லெமன் ஜூஸ் உப்பு போட்டு குடு. இன்னிக்கு ஜிம்ல போட்டு பிழிஞ்சு எடுத்துட்டாங்க. ரொம்ப டயர்டா இருக்கு. “

இதோக்கா. ரெடியா வச்சிருக்கேன். குளிச்சிட்டு சாலட் சாப்பிடுங்கக்கா. 

வேலையெல்லாம் ஆச்சுக்கா. நான் வரட்டாக்கா. ரெஸ்ட் எடுங்கக்கா. 

ஆமா. போயிட்டுவா. உனக்கென்ன ஜாலியா வீட்டுக்குள்ள உல்லாசமா வேலை செய்யலாம். ஏன்னு கேக்க ஆளில்ல. ஜிம்ல என்னை ஒரு நிமிஷம்கூட உட்கார விடமாட்டார் மாஸ்டர். 

“ஆமாங்க்கா”என்று சிரித்தபடியே சைக்கிளில் சிட்டாகப் பறந்தாள் சுலோ சனா

சிக்கென்று இருக்கும் சுலோசனாவைப் பார்க்கும்போதெல்லாம் வரும் அதே பொறாமை உணர்ச்சி இன்றும் வந்தது ப்ரியா ‘அக்கா’விற்கு. 

“எந்த ஜிம்முக்கும் போறதுல்ல. ஆனா எப்பிடி இப்படி ஸ்லிம்மா” ஒரு ஊளைச்சதை இல்லாம இருக்கா? எல்லாம் உடம்பு வாகு.  நாம ஐயாயிரம் பத்தாயிரம் ஜிம்முக்கு அழுதாலும் ஒரு இன்ச் கூட குறையமாட்டேங்கறது என்று அலுத்தபடியே குளிக்கப்போனாள் ப்ரியா.

No comments:

Post a Comment