Saturday, July 10, 2021

பஞ்ச் த்வாரகா பயணம் பகுதி 10

 பஞ்ச துவாரகா பயணம் பகுதி10. 

வெங்கடேசன்(6381369319)

பேட் த்வாரகா…

கிருஷ்ண தரிசனம் முடிந்தபின் 

அனுமன் தனது மகனுடன் அருள் பாலிக்கும் ஒரு  தண்டி ஹனுமன் ஆலயம்  உள்ளது வேண்டுமென்றால் ஆட்டோவில் சென்று வாருங்கள் என்று கூறினார்கள். எனவே ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு புறப்பட்டோம். ஒற்றையடி தார்ப்பாதை குண்டும் குழியுமாக இருந்தது.  துவாரகாதீசர் கோவிலைத் தாண்டி அதிக குடியிருப்புகளும் இருக்கவில்லை காடாகத்தான் இருந்தது. வழியில் நரி, குயில்கள் மற்றும் பல வித பறவைகள் கண்ணில் பட்டன. 

சுமார் ஐந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்து  தண்டி ஹனுமன் ஆலயத்தை அடைந்தோம்.  அது ஒரு ஆசிரமம், ஒரு சுவாமிஜி அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தார். ஆசிரமம் முழுமையும் விமானம் உட்பட  “ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்“ என்று எழுதியிருக்கின்றனர். பலர் அங்கு  அமர்ந்து இம்மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருக்கின்றனர்.  ஆசிரமத்தில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் உள்ளன.  ஒரு சன்னதியில் அனுமனுடன் அவருடைய மகன் மகரத்வஜன் தரிசனம் தருகின்றார். அனுமன் பிரம்மசாரியாயிற்றே அவருக்கு மகன் எப்படி வந்தான் என்று யோசிக்கிறீர்களா?  அதற்காகவும் ஒரு கதை உள்ளது.(அது தனியே)

சன்னதியில் நின்ற கோலத்தில் அபய ஹஸ்தம் மற்றும் இதயத்தில் மற்றொரு கரத்தை வைத்த கோலத்தில், காலடியில் ஒரு அசுரனை அழிக்கும் கோலத்தில் மகரத்வஜனும், இடுப்பு மேல் மட்டும் உள்ளவாறு அனுமனும் அருள் பாலிக்கின்றனர். இருவர் கரத்திலும் எந்த வித ஆயுதமும் இல்லாமல் அனுக்கிரக மூர்த்திகளாக அருள் பாலிக்கின்றனர். இருவருக்கும் இடையில் கதை உள்ளது.

  ஆரத்தி காட்டி பிரசாதம் அளித்தனர். தசராவின் போது துவாரகாதீசர் பல்லக்கில் இராமர் கோலத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாராம்.

அங்கிருந்து ஒரு கார் ஏற்பாடு செய்து கொண்டு நாகேஸவரரை தரிசிக்க கிளம்புகிறோம். வழியில் ஒரு அழகிய குளம். ….

கோபி தலாவ்: வண்டி நின்ற குளத்தின் பெயர் கோபி தலாவ் அதாவது கோபியர்களின் குளம். கரியபிரானாம் கண்ணனுடம் கன்னியர்களான கோபியர்கள் பிருந்தாவனத்தில் இராசலீலை செய்து களித்திருந்தனர். பின்னர் கோகுலம் விடுத்து வடமதுரைக்கு அரசனாகி பின்னர் துவாரகைக்கு ஓடி வந்து விட்டதால்,  கண்ணனின் பிரிவைத் தாங்க முடியாமல் விரஜ பூமியிலிருந்து துவாரகைக்கு வந்த கோபியர்கள் சரத் பூர்ணிமையன்றைக்கு இராச லீலைகளுக்குப்பின் இவ்விடத்தில் தங்களை அர்பணித்துக் கொண்டு கண்ணனுடன் ஒன்றாகக் கலந்தனர். அதனால் இக்குளம் கோபியர்களின் குளம் என்றழைக்கப்படுகின்றது. 

அவர்கள் அனைவரும் வழுவழுப்பான  மஞ்சள் மண்ணாக மாறி விட்டனர். எனவே  இக்குளத்தின் மண்  இன்றும் மஞ்சள் நிறத்தில் வழுவழுப்பாக உள்ளதாம். இதையே வடநாட்டினர் நெற்றிக்கு  கோபி சந்தனமாக இட்டுக்கொள்கின்றனர். அருகில் கோபி சந்தனம் விற்கும் கடைகள் உள்ளன. குளத்தைச்சுற்றி பல சன்னதிகள் உள்ளன.  குளம் முழுவதும் நீர்க்காக்கைகள் நிறைந்திருந்தன. நாகேஸ்வரர் ஆலயம்  இக்குளத்திலிருந்து   ஐந்து கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

ஒரு சிவஸ்தலம் ..அதுவும் ஜோதிர்லிங்கஸ்தலம்.

பிரம்மாண்ட சிவபெருமான் சிலை 

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியான சிவப்பரம்பொருள் இப்பாரத தேசமெங்கும் எண்ணற்ற ஆலயங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். திருமாலும் பிரம்மனும் அடி முடி தேடியும் காண முடியா ஜோதி ஸ்வரூபமாக சிவபெருமான் நின்ற ஜோதிர்லிங்கங்கமாக பன்னிரு ஆலயங்களில் அருள் பாலிக்கின்றார். இத்தலங்கள் ஜோதிர்லிங்கத்தலங்கள் என்று சிறப்பாக போற்றப்படுகின்றன.  சிவபுராணத்தில் சிவபெருமானே நான் எவ்விடத்தும் நீக்கமற நிறைந்திருந்தாலும் பன்னிரு தலங்களில் ஜோதிர்லிங்கமாக சிறப்பாக அருள் பாலிக்கின்றேன் என்று அருளியுள்ளார்.

அவற்றுள் இரண்டு ஜோதிர்லிங்க தலங்கள் இக்குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளன. முதலாவது சோமநாதம் இரண்டாவது இந்நாகேஸ்வரம். துவாரகையிலிருந்து பேட் துவாரகை செல்லும் வழியில் துவாரகையிலிருந்து சுமார் 12 கி.மீ  தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.

பார்த்தால் ஒரு நவீன கோவில் போல தெரிகிறது. இந்த கோவில் குறித்து ஒரு சர்ச்சையும் உள்ளது. உண்மையான நாகேஸ்வர் கோவில் என்ப்து உத்தராகண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற ஊரில் உள்ளது தான் 12 ஜ்யோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஸ்வர் ஆலயம் என்றும் சிலர் சொல்கிறார்கள்.  புராணாத்தில் தூராகவன என்று குறிப்பிட்டதை வைத்து இந்த கோவிலை தவறாக நாகேஸ்வர் கோவில் என சொல்கிறார்கள் என்பது சிலரது வாதம். ஆனால் இந்த இடத்தில் எந்த வனமும் இருந்ததாக தெரியவில்லை. 

                 அடுத்து போர் பந்தர்்சோமநாதர்...

-----------------------------------------------------------------------------------------------------------------------------


த்வாரகா பூஜைகள் மற்றும் பிரசாதம்

இங்கு பூசைகள் மஹாபிரபுஜீ என்று அழைக்கப்படுகின்ற வல்லபாச்சாரியாரின் புஷ்டி மார்க்கம் பிரகாரம் பூசைகள் நடைபெறுகின்றன. தினமும் துவாரகாதீசருக்கு  காலை 7.00 மணிக்கு மங்கள ஆரத்தியும்; 10.00 மணிக்கு திருமஞ்சனமும்; மாலை 6.00 மணிக்கு அலங்கார ஆரத்தியும்; இரவு 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தியும்; இரவு 9.30 மணிக்கு சயன ஆரத்தியும் நடக்கிறது. டகோர் துவாரகையில் எவ்வாறு பிரசாதம் அமுது செய்யப்படுகின்றதோ அது போலவே துவாரகையிலும் நடைபெறுகின்றது. அதன் விவரங்கள் என்னவென்று காணலாமா அன்பர்களே.

பொதுவாகவே குஜராத்திகள் இனிப்புப் பிரியர்கள், இவர்கள் சமைக்கும் அனைத்திலும் சாம்பார் உட்பட சர்க்கரை சேர்ப்பார்கள். இறைவனுக்கு படைக்கும் உணவிலும் இனிப்புகளே அதிகம். போக் என்றால் இறைவனுக்கு படைக்கும் நைவேத்யம். துவாரகாதீசனுக்கு என்னென்ன பிரசாதங்கள் அமுது செய்யப்படுகின்றன என்று காணலாம் அன்பர்களே.

பண்டா போக்:  அதிகாலையில் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பொருட்களை துவாரகாநாதனுக்கு நைவேத்யம் செய்கின்றனர்.  வெண்ணெய் என்றால் ஸ்ரீகிருஷ்ணருக்கு கொள்ளை பிரியமல்லாவா? “வேயினன்ன தோள் மடவார் வெண்ணையுண்டான் இவனென்று ஏச நின்ற எம்பெருமானுக்கு இச்சமயம்   வெண்ணையும் அமுது செய்விக்கப்படுகின்றது.  அதன் பிறகு துவாரகநாதனின் முகத்தினை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்கின்றனர்.  ஒரு குழந்தைக்குப் பல் தேய்த்து விடுவது போல துவாரகாநாதனுக்கும் தங்கத்தால் ஆன குச்சி கொண்டு பல் தேய்க்கும் படலம் நடக்கின்றது! அதன் பிறகு மங்கள ஆரத்தி.  இதற்குப்பின்னர்  பக்தர்கள் துவாரகாதீசனை சேவிக்க அனுமதிக்கின்றனர்.

ஸ்நான் போக்: அதன் பிறகு குளிப்பாட்டும் படலம்! அதாவது திருமஞ்சனம். நமது ஊரில் நடப்பது போலவே இங்கேயும் விதம் விதமாக அபிஷேகம் கண்டருகிறான் குன்றால் குளிர் மாரி தடுத்துகந்தான், கானார் கரி கொம்பொசித்த களிறு, கோலால் நிரை மேய்த்த எங்கோவலர் கோ, ஸ்ரீகிருஷ்ணர்.  பிறகு சிறிது  அமுது படையல்.

ஷ்ருங்கார் போக்: திருமஞ்சனம் முடிந்த பிறகு அலங்காரம். பட்டு பீதாம்பரங்கள், நவரத்தினங்கள் பதித்த ஆபரணங்கள்,  தலைக்கு குவே என்றழைக்கப்படும் மகுடம், கொண்டு அலங்காரம் செய்கின்றனர். துளசி மாலை, பாக்கு மாலை, மலர் மாலைகள் சூட்டுகின்றனர். பின்னர் துளசியினால் அர்ச்சனை. இதற்குப் பிறகு  ஷ்ருங்கார் போக் கண்டருளுகிறார். இச்சமயம் இனிப்புகள் அதிகமாக அமுது செய்யப்படுகின்றன.  சுவாமிக்கு மட்டுமல்ல, பொன் வெள்ளி, நவரத்தினங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வண்ண வண்ண துணிகள் கொண்டு கருவறை முழுவதும் அலங்காரம் செய்கின்றனர்.

ராஜ் போக்: காய்த்த நீள் விளங்கனியுதிர்த்து எதிர்த்த பூங்குருந்து

சாய்த்து மாபிளந்த கைத்தலத்த கண்ணன் என்பரால்

ஆய்ச்சி பாலையுண்டு மண்ணையுண்டு பின்

பேய்ச்சி பாலையுண்டு பண்டொரேன மாய வாமனான   துவாரகாதீசனுக்கு மதிய வேளையில் படைக்கப்படும் பிரசாதம். ஒரு அரசனுக்கு எப்படி உணவு சமைப்பார்களே அது போல 56 விதமான உணவு வகைகள் கொண்டு மிகவும் சிறப்பாக  நைவேத்யம் செய்கின்றனர்.   ஆண்டாள் நாச்சியார் சோலை மலைப் பெருமானுக்கு

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்லொலோ? (நா தி : 9-6) என்று பாடியபடி ஒரு சக்கரவர்திக்கு எவ்வாறு விருந்து படைப்பார்களோ அது போல ஸ்ரீகிருஷ்ணருக்கு ராஜ விருந்து அமுது செய்விக்கப்படுகின்றது.

உத்தப்பன் போக்:  மதிய இராஜ உணவிற்குப்பின் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர் எனவே சன்னதி அடைக்கப்படுகின்றது. சுவாமி உறங்குவதற்காக மெத்தை, தலையணை ஆகியவற்றை இவருக்கு முன்னர் சமர்ப்பிகின்றனர். மாலை எம்பெருமானை மணி அடித்து எழுப்புகின்றனர். பின்னர் அவருக்கு சந்தனம் ஜவ்வாது முதலிய  வாசனை திரவியங்கள் பூசுகின்றனர். பின்னர் தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. அவ்வேளையில் அச்சமயம் கிட்டுகின்ற கனி வகைகள் மற்றும் உலர் பழங்கள் நைவேத்யம் செய்கின்றனர்.  

ஷயன் போக்: இரவு கோவில் நடையடைக்கும் போது துவாரகாதீசனுக்கு பூசைகள் முடித்து அன்றைய தினத்திற்கான நிறைவு நைவேத்யமாக பாலும் பழமும் படைக்கின்றனர்.

பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது. அடியோங்கள் அதிகாலையில் சென்றதால், வெண்ணை பிரசாதம் கிட்டியது”.

ஜென்மாஷ்டமி, இராமநவமி, தீபாவளி, தசரா, அக்ஷய திருதியை, ரத யாத்திரை, வாமன ஜெயந்தி, தீபாவளி (குஜராத்தியரின் புது வருடப் பிறப்பு), தீபாவளிக்கு மறு நாள் அன்னகூட உற்சவம், துளசி திருக்கல்யாணம், மகர சங்கராந்தி ஆகிய திருவிழாக்கள் இத்தலத்தில்  மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. கோகுலத்தில்

குடங்களை ஏடுத்தேறவிட்டு கூத்தாடவல்ல என் கோவே

மட ங்கொள் மாதரை மால்  செய் என்  மைந்தா -  என்று பெரியாழ்வார் பாடியபடி  ஸ்ரீகிருஷ்ணர் அன்று குரவை கூத்தாடியதை நினைவு படுத்தும் வகையில்  கோகுலாஷ்டமியன்று 52 பானைகளை தலையில் சுமந்து கொண்டு பெண்கள் பாவன் பேடா என்ற குரவைக் கூத்து ஆடுவர்.

No comments:

Post a Comment