Thursday, July 22, 2021

பஞ்ச துவாரகா பயணம் பகுதி 22

 பஞ்ச துவாரகா பயணம் பகுதி 22

வெங்கடேசன்…

🌺நாத் த்வாரகா🌹

அதிகாலையின் முதல் தரிசனம் மங்களா என்றழைக்கப்படுகின்றது. அதிகாலை 5:45   மணி முதல் 6:30 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. காலை எழுந்தவுடன் ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்வதே மங்களம் என்பதால் இப்பெயர். இப்பூசையின் போது உறங்கிக்கொண்டிருக்கும் கண்ணனை திருப்பள்ளி எழுப்பி காலைக் கடன்களை முடித்து காலைச் சிற்றுண்டி படைப்பதாக ஐதீகம்.  இப்பூசை குளிர்காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னரும், கோடை காலத்தில் சூரிய உதயத்திற்கு பின்னரும் நடைபெறுகின்றது. 

இச்சமயத்தில் முதலில் திருக்கதவங்கள்  திறக்கப்படுவதில்லை. உள்ளே சிரமப்பரிகாரம் செய்து வைத்தப் பின்னரே திருக்கதவங்கள் திறக்கப்படுகின்றன. கோபச்சிறுவர்கள் கண்ணனுக்காக வெளியே காத்துக் கொண்டிருப்பதால் எழுந்தவுடன் அவர் விளையாட ஓடி விடுவார் என்று அன்னை யசோதா கதவை மூடி வைத்திருப்பதாக ஐதீகம். கோடை காலத்தில் ஒற்றை அரையாடையுடன் தரிசனம் தருவார் கோவர்த்தன கிரிதாரி. 

எனவே அப்போது முழு திருமேனியையும் அலங்காரம் இல்லாமல் அருமையாக தரிசனம் செய்யலாம். குளிர்காலத்தில் கம்பளி ஆடைகளுடன் சேவை சாதிக்கின்றார். இப்பூசையின் போது புல்லாங்குழல் கண்ணனின் திருக்கரங்களில் தருவதில்லை, ஏனென்றால் அவன் அக்குழலை ஊதி அனைவரையும் மயக்கி காலைக் கடமைகளை செய்யவிடமாட்டான் என்பதாக ஐதீகம். கண்ணனுக்கு கண்ணேறு படாமல் இருக்க இப்பூசையின் போது ஆரத்தி எடுக்கப்படுகின்றது. காலை சிற்றுண்டி நைவேத்யம் செய்யப்படுகின்றது.  இப்பூசையின் போது காலை நேரத்திற்கு உரிய இராகங்களில் பாடல்கள் இசைக்கின்றனர். அடியோங்களுக்கு முக தரிசனம் மட்டுமே கிட்டியது.

இரண்டாவது பூசை சிருங்கார் என்றழைக்கப்படுகின்றது. காலை 7:15 மணி முதல் 7:45 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. தன் நீலமேக சியாமளனை யசோதை “இன்று நீ பிறந்த திருவோணம் அழகனே நீராட வாராய்“ என்றும்

எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பி

கண்ணைப்புரட்டிவிழித்துக் கழகண்டுசெய்யு பிரானே!

உண்ணக்கனிகள்தருவன் ஒலிகடலோதநீர்போலே

வண்ணமழகிய நம்பீ! மஞ்சனமாடநீவாராய். (பெரி,தி 2-4-6)

இவ்வாறு பலவாறெல்லாம் சொல்லி அழைத்து நீராட்டி,  பின்னர்  தலை முதல் கால் வரை சிறப்பாக மயிற்பீலி, ஆபரணங்கள், மாலைகள் ஆகியவற்றால்  அலங்காரம் செய்து பார்க்கும் பூசை இது. 


கண்ணன் அலங்காரத்தை கண்டு களிப்பதற்காக கண்ணாடி சேவை சிறப்பாக நடைபெறுகின்றது..  இதற்குப் பின்னரே கண்ணனைக் காண்பதற்காக வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் கோபியர்களை தன் மகனைக் காண அனுமதிக்கின்றாள் யசோதை. கண்ணன் காலை சிற்றுண்டி உண்டு விட்டதால், இப்பூசையின் போது கோபியர்கள் கண்ணனுக்காக கொண்டு வந்த உலர் பழங்கள், இனிப்புகள் ஆகியவை மட்டுமே பெருமாளுக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. இதற்குப்பிறகு இவர் திருக்கரத்தில் வேய்ங்குழல் தரப்படுகின்றது.

சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்செய்யவாய் கொப்பளிப்ப

குறுவெயர்ப்புருவம்கூடலிப்பக் கோவிந்தன்குழல்கொடூதினபோது

பறவையின்கணங்கள்கூடுதிறந்து வந்துசூழ்ந்துபடுகாடுகிடப்ப

கறவையின்கணங்கள்கால்பரப்பிட்டுக் கவிழ்ந்திறங்கிக்செவியாட்டகில்லாவே.

(பெரி.தி 3-6-8) என்று பெரியாழ்வார் பாடியபடி தனது குழலின் இனிமையான கானத்தை  இராதைக்காக வாசிக்கின்றார் என்பது ஐதீகம்.


மூன்றாவது பூசை க்வால். காலை 9:15 மணி முதல் 9:30 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. காலைச்சிற்றுண்டியை முடித்த கோபகுமார்களுடன் கிருஷ்ணர் மாடு கன்றுகளை  ஓட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு செல்லும் கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கின்றார். இப்பூசையின் போது  இலகுவாக இவருக்கு பால் இனிப்பு நைவேத்யம் செய்யப்படுகின்றது. கோ சாலை கண்காணிப்பாளர் பெருமான் முன்னர் கோ சாலையில் உள்ள பசுக்களின் நலம் பற்றி விண்ணப்பிக்கின்றார் அதைக் கேட்டு மகிழ்கின்றார் பெருமாள். இப்பூசையின் போது துளசி கொண்டு சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகின்றது. 

மதிய நேரத்தில் ஸ்ரீநாத்ஜீக்கு நடைபெறும் பூசை ராஜ் போக் ஆகும். காலை 11:15 மணி முதல் 12:05 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. மதிய உணவு ஒரு அரசனுக்கு எவ்வாறு படைப்பார்களோ அது போல 56 வகையான பதார்த்தங்களுடன் உணவுண்டு மகிழ்கிறார் பெருமாள். வெற்றிலை தரித்துக் கொள்கின்றார். இப்பூசையின் போது கோவர்த்தன கிரிதாரி மிகவும்  சிறப்பான அலங்காரத்தில் சேவை சாதிக்கின்றார்.

குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லவெங்கோவே!
மடங்கொளதிமுகத்தாரை மால்செய்யவல்லவென்மைந்தா!
இடந்திரட்டிரணியன்நெஞ்சை இருபிளவாகமுன்கீண்டாய்!
குடந்தைகிடந்தகோவே! குருக்கத்திப்பூசூட்டவாராய்.   (பெரி.தி 2-7-7)

என்று யசோதை கண்ணனை பலவித  மலர்கள் கொண்டு அலங்கரித்த வண்ணம்,  மலர் மாலைகள்,  நவரத்தின ஆபரணங்களுடன் திருக்கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியவாறு அருமையாக அலங்காரம் செய்கின்றனர். அவ்வழகைக் காணக் கண்கோடி வேண்டும்.  இப்பூசையின் போது இனிமையான நறுமணப்புகை ஊட்டப்படுகின்றது.  மதிய உணவிற்குப் பின்னர் சிறிது நேரம் தனது தோழர்களுடன் சதுரங்க ஆட்டம் ஆடிய பின் உறங்க செல்கின்றார். எனவே இப்பூசைக்குப் பிறகு மூன்று மணி நேரம் நடை அடைக்கப்படுகின்றது.

மதிய நேர சிறு உறக்கத்திற்குப் பிறகு மாலை உன்னி கிருஷ்ணரை சங்கொலியினால் எழுப்பும் பூசை உத்தப்பன் என்றழைக்கப்படுகின்றது. மாலை 3:45 மணி முதல் 4:00 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது.  மாடுகளை மேய்த்தபின் ஸ்ரீகிருஷ்ணர் ஆயர்பாடிக்கு திரும்பி வருவதாக ஐதீகம். இப்பூசையின் போது வீணை இசையை செவி மடுத்து மகிழ்கின்றார் பெருமாள். அந்தகக் கவியான சுர்தாசரின் பாடல்கள் இசைக்கப்படுகின்றன.

அடுத்த பூசை போக் என்றழைக்கப்படுகின்றது. மாலை 4:45 மணி முதல் 5:00 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது.

பட்டிமேய்த்தோர்காரேறு பலதேவற்கோர்கீழ்க்கன்றாய்
இட்டீறிட்டுவிளையாடி இங்கேபோதக்கண்டீரே?
இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீருட்டி

விட்டுக்கொண்டுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. (நா.தி  14-1) என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் பாடியபடி,   மாடுகளை மேய்த்தபின் திரும்பி வந்த கண்ணனின் வரவை யசோதைக்கு அறிவிக்கின்றனர். பசுக்களை கறவைக்காக அழைத்து செல்ல இவ்வறிவிப்பு செய்யப்படுவதாக ஐதீகம்.  இப்பூசையின் போது லகுவான ஆகாரமே ஸ்ரீகிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. கண்ணன் வெளியே சுற்றி விட்டு வந்ததால் ஏற்பட்ட கண்ணேறு விலகுவதற்காக ஆரத்தி எடுக்கப்படுகின்றது. கானகமெல்லாம் சுற்றி விட்டு வந்த  களைப்பு தீர பெருமாளுக்கு சாமரம் வீசுகின்றனர். இதற்குப்பின் அவர் கோபகுமாரர்களுடன் விளையாட செல்வதாக ஐதீகம். 

மாலை பூசை (சந்தியா) ஆரத்தி என்று அழைக்கப்படுகின்றது. மாலை 6:00 மணி முதல் 6:45 மணிக்குள் இப்பூசை நடைபெறுகின்றது. அந்தி சாயும் நேரம் என்பதால் அசுரர்கள் கண்ணனுக்கு தீங்கு விளைவிக்க காத்துக்கொண்டு இருப்பர்,  எனவே    யசோதை கண்ணனுக்கு அந்தி காப்பிடுகின்றாள். பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்து  அழகனை அந்திக் காப்பிட அழைக்கும் பாசுரத்தின் ஒரு பாடல்  இதோ

கன்றுகளில்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்
நின்றொழிந்துன்னைக்கூவி நேசமொன்றுமிலாதாய்!
மன்றில்நில்லேல் அந்திப்போது மதிள்வெள்ளறை (நாத்துவாரா) நின்றாய்
நன்றுகண்டாயென்தன்சொல்லு நானுன்னைக் காப்பிடவாராய். (பெரி.தி  2-8-2)

ஆகவே இப்பூசை மாத்ரு பாவத்தில் நடைபெறுகின்றது. கண்ணனுக்கு எளிமையான அலங்காரமே செய்யப்படுகின்றது. கண்ணனின் திருக்கரங்களில் புல்லாங்குழல் இருக்கின்றது அதன் கானத்தினால் அனைத்து கோகுல வாசிகளையும் மாயக் கண்ணன்  மயக்குகின்றான் என்பது ஐதீகம்.  இரவு ஆரம்பித்து விட்டதால் விமானத்தில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு நைவேத்யம் செய்யப்படுகின்றது. மாளிகையின் கொடிகள் சுருட்டப்படுகின்றன.

நாளின் நிறைவு பூசை  சயன் என்றழைக்கப்படுகின்றது. பக்தர்களுக்கு ஸ்ரீநாத்ஜீ வழங்கும் நிறைவு சேவை. சமையல்காரரை விளித்து மறு நாள் காலை சீக்கிரம் வருமாறு கூறுவதுடன் பூசை ஆரம்பமாகின்றது. மேள தாளங்கள் முழங்குகின்றன.   இரவு உணவு நைவேத்யம் செய்தபின்  வெற்றிலை(பீடா) தரிக்கின்றார் பெருமாள். கிருஷ்ணதாசரின் பாடல்கள் இசைக்கப்படுகின்றது. அவர் பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. கர்ப்பகிரகத்தில் இருந்து பள்ளியறை வரை சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகின்றது. அலங்கரிக்கப்பட்ட பள்ளியறையில் பால், பழம் வைக்கப்படுகின்றது. மற்றும் இராதா இராணியின் ஆடை ஆபரணங்கள் வைக்கப்படுகின்றது. கோயிலில் பக்தர்களை முறைப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட தடுப்புகள்,  மற்றும் முற்றத்தில் கட்டிய விதானம் முதலியவை பெருமாள் தங்கு தடை இன்று சென்று வருவதற்காக   நீக்கப்படுகின்றன. சயன ஆரத்திக்குப்பிறகு திரையிடப்படுகின்றது. பெருமாள்  பள்ளி எழுந்தருளுகின்றார்.



No comments:

Post a Comment