பஞ்ச துவாரகா பயணம் பகுதி12
வெங்கடேசன்(6381369319)
மூல துவாரகையை தரிசித்து பிறகு வண்டி ஓட்டுநர் அடுத்து போர்பந்தரில் சுதாமா துவாரகையை தரிசிக்கலாம் என்று கூறினார். யார் அந்த சுதாமா என்று யோசிக்கின்றீர்களா? தூய நட்பிற்கு சிறந்த உதாரணம் கிருஷ்ணன் -சுதாமா. நாம் இவரை குசேலர் என்று அழைக்கின்றோம், வடநாட்டில் இவரை சுதாமா என்றழைக்கின்றனர். குசேலர் என்பது காரணப்பெயர் வறுமை காரணமாக் கந்தல் துணிமணிகளை அணிந்திருந்ததினால் இவர் குசேலர் என்றழைக்கப்பட்டார்.(கதை தனியே)
துவாரகையிலிருந்து சோமநாத் செல்லும் வழியில் துவாரகையிலிருந்து சுமார் 105 கி.மீ தூரத்தில் போர்பந்தர் அமைந்துள்ளது. ஊரின் மையமாக சுதாமா துவாரகை சற்று வித்தியாசமாக ஒரு பெரிய சோலையின் நடுவே ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னர் சுதாமாபுரி என்று ஒரு அலங்கார வளைவு எல்லாரையும் வரவேற்கின்றது. அடியோங்கள் அங்கு சென்ற போது மாலை நேரம் என்பதால் பறவைகள் எல்லாம் இவ்வாலயத்தில் உள்ள மரங்களில் உள்ள தம் கூடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தன. அவைகள் எழுப்பிய ஓசை அருமையான பிண்ணனியாக விளங்க காயா மலர் வண்ணனை, குன்றமேந்தி குளிர் மழை காத்தவனை, காரொத்த மேனி என்பெருமானின் தரிசனம் பெற்றோம்.
கர்ப்பகிரகம் நாகாரா விமானத்துடன் உள்ளது. ஒரே ஒரு மண்டபம், அழகிய தூண்களுடன் பிரம்மாண்டமாக இம்மண்டபம் எழிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கருவறையில் சுதாமா மற்றும் அவரது மனைவி சுசீலையுடன் துவாரகாதீசன் சேவை சாதிக்கின்றார். இவ்வாறு நண்பனுக்கு ஏற்றம் தருகின்றார் “கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை காமருசீர் முகில் வண்ணன், காலிகள் முன் காப்பான், குன்றதனால் மழை காத்து
பிரகாரத்தை வலம் வரும் போது துவாரகையில் குசேலருக்கு ஸ்ரீகிருஷ்ணர் பாத பூஜை செய்யும் ஒரு சித்திரத்தையும், பத்ரி நாராயணர் யோக கோலத்தில் அமர்ந்திருக்கும் சித்திரத்தையையும் தரிசனம் செய்தோம். ஆலய வளாகத்தில் ஞான வாவி என்றழைக்கப்படும் ஒரு கிணறும் அமைந்துள்ளது. அன்றைய தினம் இவ்வாறு ஐந்து துவாரகைகளை சேவிக்கும் பாக்கியம் கிட்டியது.
குஜராத் காந்தியடிகள் பிறந்த மண். போர்பந்தர் நமது தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த புண்ணிய ஊர் அல்லவா? எனவே அவரது பிறந்த இடமான கீர்த்தி மந்திர் சென்றோம். கீர்த்தி என்றால் புகழ், மந்திர் என்றால் ஆலயம். ஆகவே அண்ணல் பிறந்த இல்லம் புகழ் பெற்ற ஆலயம் தானே. மந்திரமான இராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு, சத்திய வழியில் நடந்து, அகிம்சையையே ஆயுதமாகக் கொண்டு அன்னிய தளையிலிருந்து நமக்கு விடுதலை வாங்கித் தந்த அண்ணலின் இல்லம் சென்றோம்.
1777ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் முப்பாட்டன் ஹரிவன்ஜி ராஹ்தாஸ்ஜி காந்தி அவர்கள் இந்த இல்லத்தை வாங்கியுள்ளார். 1869ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவ்வில்லத்தில் பிறந்தார். அவர் பிறந்த புண்ணிய இடத்தை சுவஸ்திக் சின்னம் இட்டு சுட்டிக்காட்டியுள்ளனர். அவரின் வாழ்க்கை வரலாறு பல் வேறு சித்திரங்கள் மற்றும் புகைப்படங்களின் மூலம் முழுவதுமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் சந்தித்த முக்கிய தலைவர்கள், அவரை கௌரவப்படுத்தி மற்ற அரசுகள் வெளியிட்ட தபால் தலைகள் ஆகியவற்றை கண்டு களித்தோம்.
போர்பந்தரிலிருந்து சோமநாத் சுமார் 127 கி.மீ தூரம், சுமார் 3 மணி நேரத்தில் சென்று விடலாம் எனவே இன்றிரவே சோமநாத் அடைந்து விடலாம், ஆலயத்தின் விடுதிகள் உள்ளன, அதிக கட்டணம் வசூலிப்பதில்லை, எல்லா வசதிகளும் உள்ளன எனவே அன்றிரவு அங்கு தங்கிக் கொள்ளலாம் என்று வண்டி ஓட்டுனர் கூறினார். சோமநாதரின் தரிசனம் கிடைக்குமா?
No comments:
Post a Comment