Thursday, July 22, 2021

பஞ்ச துவாரகா பயணம் பகுதி 15

 பஞ்ச துவாரகா பயணம் 

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻பகுதி15

வெங்கடேசன்(6381369319)

சோமநாதபுரம்...

மன்னர்கள் காலத்தில் கோவிலை சுற்றியுள்ள 12 ஆயிரம் ஊர்களின் வருமானத்தை கோவிலுக்கு பயன்படுத்தி உள்ளனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களும் இருந் திருக்கின்றன. கஜினி முகமது கோவி லில் கொள்ளையடித்து சென்ற சந்தன கதவுகள் ஆப்கானிஸ்தானில் இருந்தன. 1842-ம் ஆண்டு இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து கவர்னர் ஜெனரல் எட்வர்டு லா இந்த கதவுகளை இந்தியா கொண்டு வர உத்தரவிட்டார். அதன்படி அவை கொண்டு வரப்பட்டன. ஆனால், இதற்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இதனால் கதவுகள் ஆக்ரா கோட்டையில் வைக்கப்பட்டன. இப்போதும் அந்த கதவுகள் அங்குதான் உள்ளன.


அப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம். ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது. 

பக்தனுக்காகப் புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட எம்மான், இங்கே கல்லாலும், வில்லாலும், சொல்லாலும், கத்தியாலும், எத்தனை முறைகள் அடித்து நொறுக்கப் பட்டிருக்கும் என்பதை நினைத்தால் கண்ணீர் ஆறாய்ப் பெருகுகின்றது.எல்லா வடநாட்டுச் சிவன் கோயில்களையும் போலப் பார்வதி தேவி, சிவலிங்கத்திற்குப் பின்னால் நின்ற வண்ணம் அருளாட்சி செய்கின்றாள். கூடவே விநாயகர், பிரம்மா, விஷ்ணு, துர்கை ஆகியோருக்கும் சந்நதிகள் இருக்கின்றன. அதிகம் கார்த்திகேயன் என அழைக்கப் படும் சுப்ரமணியர் சந்நதி காணப் படுவதில்லை. 

பிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது. 

அதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூண் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்பக்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர். 

கர்ப்பகிரகம் மற்றும் முன் மண்டபம். தங்க கவசம் மற்றும்    நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  முன் காலத்தில் எவ்வளவு செல்வச்சிறப்புடன் விளங்கியது அது போல இப்பொழுதும் விளங்க வேண்டும் என்ற முயற்சியில் நன்கொடைகள் பெற்று இத்திருப்பணிகளை செய்து வருகின்றனர்.  பிரம்மாண்ட ரூபத்தில் ஜோதிர் லிங்கமாக எம்பெருமான் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். எந்நேரமும் அருமையான அலங்காரத்தில் ஐயனை தரிசிக்கலாம். ஐயனுக்கு மேலே தங்கக் குடை மற்றும் தாரா பாத்திரம் தொங்குகின்றது.   விலாசமான கருவறையில் கோட்டத்தில்  நின்ற கோலத்தில் அம்பாள், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் உடன்  அருள் பாலிக்கின்றனர்.

சர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும் காண முடிகின்றது. புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாய் கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது. 

எண்ணற்ற முறை சிதைக்கப்பட்டிருந்தாலும் சாநித்தியத்துடன் இன்றும் விளங்குகிறது ஆலயம். புறத்தில் தரிச்னம் தரும் ஐயனை அகத்தில் இருத்தி கண்களை மூடி தியானித்தால் மனதும் உடலும் லேசாகின்றது. அப்படியே அந்தரத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு.  ஐயனுக்கு எதிரே பிரம்மாண்ட நந்தி, ஆமை, அகண்ட தீபத்தையும் தரிசிக்கின்றோம்.

காலை 7 மணி, மதியம் 12 மணி, இரவு 9 மணி என்று ஒரு நாளில் மூன்று முறை  ஆரத்தி சிறப்பாக நடைபெறுகின்றது. ஆரத்தி சமயத்தில் சங்கம் முழங்குகின்றது. ஜல் ஜல் என ஜால்ரா ஒலிக்கின்றது. டம் டம் என டமாரம் அதிர்கின்றது. சோமநாதத்தின் வரலாற்றை சொல்லும் ஒலி, ஓளிக் காட்சி இரவு 8 மணிக்கு நடைபெறுகின்றது. அடியோங்கள் தாமதமாக சோமநாதத்தை அடைந்ததால்  அக்காட்சியை காண இயலவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலே ஸ்ரீகிருஷ்ணர் தன் உயிரைப் போக்கிக் கொண்ட இடம் சோம்நாத்தில் தான். சோம்நாத்திற்கு அருகே உள்ள வெராவல்லில் தான் பாலிகா தீர்த்தம் என்னும் தீர்த்தக் கரையில் அரச மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீகிருஷ்ணரின் பாதத்தில் ஜரா என்னும் வேடன் அம்பு எய்து விடுகின்றான்.இந்த அரசமரத்தைச் சுற்றியும் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வெராவலில் இருந்து ஒன்றரை மைல் நடந்தே, ஸ்ரீகிருஷ்ணரை பலராமர் மெல்ல மெல்ல இங்கே கொண்டு வந்து சேர்க்கின்றார்.

 இங்கே வந்ததும் ஓர் ஆலமரத்தடியில் படுக்க, பலராமரோ தங்கள் இருவருக்கும் முடிவு வந்துவிட்டதை உணர்ந்து, அங்கே உள்ள ஒரு குகைக்குள் சென்று பாதாளத்தில் மறைகின்றார். அந்தக் குகை தாவுஜியின் குகை என்ற பெயரில் ஒரு கோயிலாக அமைந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணரும் அங்கேயே தன் உயிரைப் போக்கிக் கொண்டு வைகுந்தம் சென்று விடுகின்றார். பாம்பாக உருமாறிச் சென்ற தன் அண்ணனையும், தன்னைத் தானே தன் சுய உருவிலும், பிரம்மா, சிவன் போன்ற மற்றத் தெய்வங்களையும் கண்ட ஸ்ரீகிருஷ்ணன் தாமரை போன்ற தன் நயனங்களை அழுந்த மூடிக் கொண்டார்.

ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்கள் ஒரு சிற்ப உருவில் பதிந்துள்ளது. பின்னர் மெல்ல மெல்ல தன் மானுட உடலை விடுத்துத் தன் சுய உருவோடு யோக முறைப்படி கலந்தார் என பாகவதம் சொல்லுகின்றது. பதினைந்து வருடங்கள் முன்பு இங்கே எல்லாம் நடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் கல்லும், காடுமாய் இருந்தது. இப்போது செப்பனிட்டு, கட்டிடங்கள் எழுப்பி, மண்டபம் போல் அமைப்புகளுடன், ஒரு கீதா மந்திரும் அமைத்திருக்கின்றனர். பலராமர் குகை முன்னே கொஞ்சம் பயமாகவே இருக்கும் உள்ளே செல்ல. இம்முறை அப்படி இல்லை. அருகேயே ஹிரன்யா நதிக்கரையில் இன்னொரு சிவன் கோயிலும் உள்ளது.

மேலும் துவாரகைகளுள் முக்தி துவாரகை எனும் இத்தலம் பால்கா தீர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. மேலும் திரிவேணி சங்கமம்,  கோலோக் தாம் மற்றும் சற்று தூரத்தில் உள்ள பிராச்சி  ஆகிய இடங்களையும் சோம்நாதத்தில் தரிசிக்கலாம்.  தினமும் காலை 8 மணிக்கும்,  மதியம் 2 மணிக்கும்  சோமநாத் அருகில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லும் பேருந்து வசதி உள்ளது.அடுத்து பிராச்சி….

படம் பாதங்களை காட்டும் கிருஷ்ணர்

வேடன் ஜரா

No comments:

Post a Comment