Friday, July 30, 2021

அகோபிலம் பயணக்குறிப்பு - பகுதி 7

நல்லமலா காட்டின் நடுவில் ஒரு சிங்கம் அகோபிலம் பயணம் (V.V) பகுதி 7

இது வரை பார்த்த நரசிம்மர்கள் வயதானவர்கள் கூட சிரமப்பட்டு தரிசிக்கும்படி காட்சி தருகிறார்கள்.ஆனால் ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கும்  நம் பக்தியைப் பார்த்து எதிர்ப்படும் செடி, கொடிகள்நம்மை வாழ்த்தி வழியனுப்பி வைத்தன. பாறைகள் நம் பாதங்களைத் தாங்கத் தயாராக இருக்கின்றன.நீர் இருக்கக்கூடிய சுனைகள் நம் தாகத்தைத் தீர்க்கக் காத்திருக்கின்றன. சற்றே நின்றுநம்மைச் சுற்றிலும் பார்த்தால் அந்த மலையே ஹிரண்யனின் கோட்டையோ (அரண்மனையோ)என்று நம்மைத் திகைக்க வைக்கும்!

மேல்அஹோபிலத்திலிருந்து 3½ கி.மீ. தொலைவு. கருடாசலம், வேதாசலம் எனும் இரு மலைச் சிகரங்களுக்குஇடையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. அண்ணாந்துபார்த்தால் வெகு தொலைவில், மலை உச்சியில் ‘உக்ர ஸ்தம்பம்’ தெரிகிறது. அந்த ஸ்தம்பத்தி(தூணி)லிருந்துதான்நரசிம்மர் வெளிப்பட்டு ஹிரண்யனை வதைத்ததாகச் சொல்லப்படுகிறது. 

இந்த ஸ்தம்பத்தை அடையஜ்வாலா நரசிம்மர் கோயிலிலிருந்து மேலும் 4 கி.மீ. உயரே செல்ல வேண்டும். ‘அதற்கானதெம்பைக் கொடு நரசிம்மா’ என்று இந்த ஜ்வாலா நரசிம்மரை நாம் வேண்டிக்கொள்ளலாம்!ஜ்வாலாநரசிம்மர் அக்னிபோல் சுட்டெரிக்கும் ஆக்ரோஷத்துடன் அவதரித்த உக்ரம் நிறைந்த நரசிம்மர்.ஹிரண்யன் மீது கோபம் கொண்டிருந்தபோதும், மக்கள் மீது இரக்கம் கொண்டவர். 

இவர் தரிசனம்தருவது ‘அசலாசல மேரு’ என்னும் மலைப் பகுதியில்.  ஜ்வாலா நரசிம்மரை தரிசிக்கச் செல்லும் வழி மிகவும்சிரமமானது. வயதானவர்கள் மற்றும் நடக்க இயலாதவர்கள் டோலியில் செல்லலாம். வழியில் பவநாசினிஓடை தண்ணீர் சில இடங்களில் முழங்கால் அளவில் ஓடிக்கொண்டிருக்கும். பெரும் பாறைகளுக்கு இடையில் சரியான பாதை ஏதும் இல்லை.

மலையேறி செல்லும்போது, நம்மைப்போலபயணிப்பவர்கள் ‘ஸ்ரீநாராயணா’, ‘ஸ்ரீநரசிம்மா’ என்று ஊக்கக் குரல் கொடுத்துக் கொண்டே செல்கிறார்கள். உடனேயே அந்த மலைப் பிராந்தியமும் ‘ நாராயணா,’ ‘நரசிம்மா’ என்றுஎதிரொலிக்கிறது. அதாவது பகவான், ‘நான் உங்களுடன்தான் இருக்கிறேன். பயப்படாமல், கவலைப்படாமல் வாருங்கள். நான் உங்கள் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன், பாதுகாப்பளிக்கிறேன்’என்று சொல்வது போல இருக்கிறது.ஒவ்வொருவர்கையிலும் ஊன்றுகோல். அதனை பூமியில் பதித்துப் பதித்து, சற்றேமுன் வளைந்து அந்தக் கோல்பலத்தால் அடுத்த அடி எடுத்து வைத்து மீண்டும் கோலைச் சற்று முன்னால்வைத்து... 


இப்படியாகப் பயணம் தொடர்கிறது. அருகிலேயே 20 மீட்டர் உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சிகொட்டுகிறது. இங்கு 65 மீட்டர் நீளத்துக்கு மலைச்சாரலில் பாதை அமைத்திருக்கிறார்கள்.இதற்குத் தடுப்புக் கம்பிகள் போட்டிருக்கிறார்கள். நீர்வீழ்ச்சி நீரைத் தெளித்து பக்தர்களைவரவேற்பதால் பாதை நெடுக நீர் படர்ந்து வழுக்குகிறது.ஒருவர் பின் ஒருவராக, தடுப்புக் கம்பியைப் பிடித்துக்கொண்டு, மெல்ல, ஜ்வாலாநரசிம்மன் இருக்கும் இடத்தை அடையலாம். ஆனால், அடைமழை காலங்களில் ஜ்வாலா நரசிம்மனைசேவிப்பது என்பது பிரம்ம பிரயத்தனம்தான்.  இங்குஜ்வாலா நரசிம்மர் ஒரு சிறிய, திறந்த, இயற்கையாக அமைந்துள்ள குகையின் கீழ் காட்சி யளிக்கிறார். 

இந்தக் குகைக்குள் மூன்று சிலைகள் உள்ளன. மத்தியில் உக்கிர ரூபமாய் நரசிம்மர் எட்டுத்திருக்கரங்களுடன் இடது காலை மடக்கி வலது காலைத் தொங்கவிட்டு வீற்றிருக்கும் திருக்கோலம்.மடியில் ஹிரண்யனை வைத்துக்கொண்டு இடது கரத்தால் அவன் தலையை அசையவிடாமல் பிடித்துக்கொண்டுவலது கரத்தால் அவன் கால்களையும் அசையாமல் பற்றிக்கொண்டு, இரண்டு கரங்களின் நகங்களால்அவன் வயிற்றைக் கிழித்து குடலை வெளியே எடுப்பதுபோலக் காட்சி. 

மற்ற கரங்களில் சங்கு,சக்கரம் உள்ளன. மீதி இரண்டு கரங்கள் குடலை மாலையாக அணிந்துகொள்கின்றன.மேலும் வலது பக்கம் அவதார சமயத்தில் நரசிம்மர் தோற்றம் காட்டும் சிலை. இடது பக்கம்ஹிரண்யனுடன் போர் புரிவது போல சிலை. இதற்கு அருகில் ஒரு சிறிய நீர்த் தேக்கம்(குண்டம்)இருக்கிறது. ஹிரண்ய வதம் முடிந்ததும் நரசிம்ம பகவான் இதில் கையைக் கழுவியதாகச் சொல்கிறார்கள்.இதிலுள்ள நீர் சிறிது சிவப்பு நிறமாக உள்ளது. இதனை ரத்த குண்டம் என்கிறார்கள். இந்த சந்நதிக்குக் கீழே பள்ளத்தாக்கில் காணப்படும் பசுமை மிகுந்த வாழைத் தோப்பு கண்களுக்கும்,மனதுக்கும் தெம்பைத் தருகிறது. 

கொடூரன் ஹிரண்யனை பெருமாள் வதம் செய்யும் கோலத்தையும், வதைத்தபின்தன் ரத்தக் கரங்களைக் கழுவிக்கொண்ட ரத்த குண்டத்தை யும் அந்த சம்பவத்தின் சாட்சியங்களாகக்கண்டோம்...(தொடரும்)







No comments:

Post a Comment