ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 16
(By Venkatesan Varadharajan)
தல வரலாறு
இந்தச் சடங்கு மூன்று நாட்கள் நடக்கிறது. அப்போது ஜகன்நாதருக்கு பூஜைகளோ, நைவேத்யமோ நடைபெறுவதில்லை. தைத்தாபதி வம்சத்தைச் சேர்ந்த அம்மூவரும் அந்த மூன்று நாட்களும் முகச்சவரம் செய்யாமல் தீட்டு காப்பர்.
பிரம்மம் எனும் ஆத்மாவை வைத்த புது ஜகன்நாதர் முன் அன்று முழுவதும் ஜபம் செய்வர். பிரதிஷ்டையின்போது இருபது பேர்கள் சுமந்து, ஐம்பது அடியார்கள் மூலம் எழுந்தருளப்பட்ட பழைய ஜகன்நாத மூர்த்தி, அன்று நள்ளிரவு மூன்று பேர்கள் தூக்கும் அளவிற்கு லேசாகி விடுவாராம். அந்த மூன்று பேர்கள் மட்டும் ஜகன்நாதர், பலபத்ரா, சுபத்ரா போன்ற மூவரையும் தன் தோளில் சுமந்து சென்று கோயிலில் வைகுண்டா எனும் இடத்தில் முந்தைய ஜகன்நாதர் மற்றும் மற்ற இருவரையும் புதைத்த இடத்தைத் தோண்டி சூரிய உதயத்திற்குள் அங்கே புதைத்து விடுகின்றனர்.
இம் மூவருக்கும் அங்கு தனித்தனி சமாதிகள் உள்ளன. இந்நிகழ்வை தைத்தாபதி வம்சத்தைச் சேர்ந்த அந்த மூவரைத் தவிர யார் பார்த்தாலும் அவர்கள் இறந்து விடுவார்களாம். எனவே அன்று இரவு ஒடிஷா மாநில அரசாங்கமே பூரி முழுவதும் மின் தடையை ஏற்படுத்தி விடுகிறது.
பிறகு அம்மூவரும் துக்கம் அனுஷ்டித்து, தத்தமது உறவினர் வீடுகள் முழுவதையும் சுண்ணாம்பு அடித்து, வீட்டைப் புதுப்பித்து, புதுத் துணிகள் வாங்கி, இறந்தவர்களுக்கு செய்யும் கர்ம காரியங்களை செய்து, பழைய ஜகன்நாதருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
அந்த மூன்று நாட்களும் பூரி நகரமே சோகத்தில் ஆழ்ந்திருக்கும். நவகலிபார் யாத்திரை என்று இந்நிகழ்வு அழைக்கப்படுகிறது. மரம் இருக்கும் இடத்தை விமலா தேவி கனவில் வந்து சொல்வதிலிருந்து இந்த அனைத்து நிகழ்வுகளும் கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் நடைபெறுகிறது. கும்பமேளாவிற்குப் பிறகு ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வு இது.
அடுத்த புது ஜகன்நாதர் இந்த ஆடி மாதம் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். புதிய ஜகன்நாதர் பிரதிஷ்டை செய்த மூன்றாம் நாள்தான் உலகப் புகழ்பெற்ற ரத யாத்திரை உற்சவம் நடைபெறுகிறது.
ஆஷாடா, ஆஷாதௌ என உச்சரிக்கப்படும் ஆடி மாதத்தில், ஜூன், ஜூலையில் இந்த ரதயாத்திரை கொண்டாடப்படுகிறது. இந்த
ரத யாத்திரை கோகுலத்தை விட்டு மதுராவிற்குச் செல்வதை நினைவூட்டுகிறது என்கிறார்கள் சான்றோர். இந்த ரத யாத்திரை இந்திரத்யும்ன மன்னனின் மனைவியான குண்டிச்சா தேவி ஆலயத்திற்குச் செல்லும். சிற்பி வடிவில் வந்த திருமால், வருடத்தில் ஒன்பது நாட்கள் தன் பிறந்த வீட்டிற்குச் செல்ல இந்திரத்யும்னனிடம் விருப்பம் தெரிவித்ததாக ஐதீகம். ரத யாத்திரை துவங்கும்
அன்று காலை, மூல விக்ரகங்கள் ஊர்வலமாக, பூரி கோயிலின் சிம்மத்வாரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள குண்டிச்சா தேவி கோயிலுக்கு எழுந்தருளச் செய்யப்படுகின்றனர். ஜகன்நாதர் ‘அன்ன பிரம்மா’ என்று வணங்கப்படுகிறார். ஆலயத்தின் பிரசாதம் தயாரிக்கும் சமையலறை, ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கும் வசதிகள் கொண்டது. தினமும் நானூறு மூட்டை அரிசியை, பாதாளத் தில் இருந்து பெருகும் வற்றாத கிணற்றில் இருந்து தண்ணீரை வாளி மூலம் இழுத்து, மண் பானைகளில் விறகு அடுப்பு கொண்டு சமைக்கிறார்கள்.
ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பானைகளை வைத்து ஒரே நேரத்தில் சமைக்கும்போது மேலே உள்ள ஏழாவது பானை அரிசி முதலில் சாதமாகும் அற்புதம் இத்தலத்தில் நிகழ்கிறது.
சமைத்த அத்தனை விதமான பிரசாதங்களையும் வாயை மூடிக்கொண்டு, தோளில் காவடி போன்று சுமந்து, ஜகன்நாதர் அருளும் ரத்தின சிம்மாசனக் கருவறை வரை எடுத்துச் சென்று, அவருக்கும் விமலா தேவிக்கும் நிவேதித்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. உலகிலேயே பெரிய பிரசாத சாலை இத்தலத்து ஆனந்த் பஜார் தான். இங்கு ஜகன்நாதருக்கு படைக்கப்பட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. காஜா எனும் மைதா, நெய், சர்க்கரை சேர்க்கப்பட்ட பிரசாதம், பக்தர்களால் பெரிதும் விரும்பி சுவைக்கப்படும் பிரசாதமாகும்.
விமலா தேவி இங்கே சந்நதி கொண்டிருக் கிறாள். 51 சக்தி பீட நாயகிகளுள் ஒருவளான இந்த தேவியே, புது ஜகன்நாதர் செய்ய வேண்டிய வேப்ப மரத்தை குறிப்பாக உணர்த்துபவள். ஜகன்நாதரின் பிரசாதங்கள் இந்த அம்பிகைக்குப் படைக்கப்பட்ட பிறகே, மகாபிரசாதமாக மாறுகிறது. அவ்வளவு மகிமை வாய்ந்த வரப்பிரசாதி இவள்.
இக்கோயிலில் பூஜை சேவைகளை செய்யும் மக்கள் ‘சர்விடர்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர். முதல் சர்விடர், பூரி அரசர் கஜபதி. இவரே ரதயாத்திரையின்போது தங்கத் துடைப்பத்தால் ஜகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா போன்றோரின் ரதங்களைப் பெருக்கும் கடமையைக் கொண்டவர்.
சவாரா வம்சத்தில் வந்த தைத்தாபதிகள் மட்டும் காவலர்களாக இருக்க, ஆயிரக் கணக்கான பக்தர்களால் ரதங்கள் இழுக்கப் படுகின்றன. மூல மூர்த்திகளுக்கும் பக்தர்களுக்கும் இடையே எந்த பண்டாக்களும் குருக்களும் இருப்பதில்லை. அனை வரும் அருகில் சென்று அவரை ஒரு நண்பர் போன்று தழுவிக் கொள்ளலாம்.
தற்போதும் பூரியில் ரதயாத்திரை நிகழ்வுகள் நடைபெறுகிறது. ரத யாத்திரை வாழ்வின் உயரிய உண்மையை விளக்குகிறது. மனித உடல் ஒரு தேர். அந்தத் தேரில் ஏறி ஆன்மா பயணம் செய்கிறது. ‘ஆன்மாவுக்கு எப்போதும் அழிவில்லை; இந்த உடல்தான் அழியக் கூடியது. தான் உடல் அல்ல; ஆன்மாதான்’ என்பதை ஒரு மனிதன் எப்போது உணர்கிறானோ, அப்போதே தன்னில் கடவுளைக் காண்பான். பிறப்பு- இறப்பு என்ற மாய வட்டத்திலிருந்து விடுபட்டு முக்தி பெறுவான். இதைத்தான் இறைவனே உடலெடுத்து இங்கு உணர்த்துகிறார். ‘இன்னொரு உடலில் புகுந்தும் நான் அழிவதில்லை; ஆனால், எனது உடலாக வழிபடப்பட்ட இந்த மூர்த்தங்கள் அழிகின்றன’ என்பதை அவர் காட்டுவதாகவும் தோன்றுகிறது.
நாத ஹரே! ஜகன்நாத ஹரே!
கோயில் வரலாறு
இந்த இடத்தில் இந்திரத்துய்மன் மன்னனால் கட்டப்பட்ட கோவிலானது காலப்போக்கில் பாழடைந்து விட்டது. அதற்கு பின் அந்த இடத்தில் பல கோயில்கள் பலரால் கட்டப்பட்டது. ஆனாலும் அந்த கோவில்கள் எல்லாம் கடலில் மூழ்கிக் கொண்டே தான் இருந்தது. இப்போது இருக்கும் பூரி ஜெகநாதர் ஆலயமானது 1135ல் அனந்தவர்மனால் கட்ட தொடங்கப்பட்டு, 1200 ஆம் ஆண்டில் அவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் கட்டி முடிக்கப்பட்டது.
இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.[
பலன்கள்
எந்த வகையான கிரக தோஷத்தை உடையவர்களாக இருந்தாலும் இந்த கோவிலில் உள்ள ஜெகநாதரை தரிசித்தால் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பூர்வஜென்ம காலத்தில் செய்த பாவங்களும் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையினை வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்துவருகிறது.
செல்லும் வழி
புவனேஸ்வரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூரி என்ற இடத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது.
தரிசன நேரம்:
காலை 05.30AM – 12.00PM
மாலை 05.30PM – 08.00PM
No comments:
Post a Comment