ஆந்திரா,ஒரிஸ்ஸா ஆன்மீகப்பயணம் 15
(By Venkatesan Varadharajan 6381369319)
தல வரலாறு
இறைவன் திருவுளம் அதுதான் என நினைத்த விசுவாவசு, அந்த மூன்று முற்றுப் பெறாத சிலைகளையே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். அப்போது அசரீரியாக நாராயணன் குரல் ஒலித்தது. ‘‘என் வடிவத்தை யாரும் சிலையாக வடிக்க முடியாது. தேவசிற்பி விஸ்வகர்மா வடித்த இதே வடிவங்களிலேயே இக்கருவறையில் அருள்வேன். வைகுண்டத்தின் பரிபூரண சாந்நித்யம் இத்தலத்திலும் இருக்கும்’’ என்று கூறினார் திருமால். இப்பொழுதும் அங்கு கண்ணன், பலராமர், சுபத்ரா மூவருமே கை, கால் அவயங்களுடன் இருக்க மாட்டார்கள்.
மூன்று தனித்தனி தாரு(கட்டைகளாக), அதிலே கண், காது, மூக்கு வடிவமைக்கப்பட்டு அதைத்தான் ஜகன்நாதராக வழிபடுகிறார்கள்.
கறுப்பு நிறத்தில் வட்ட வடிவமான பெரிய கண்களுடன் ஜகன்நாதர் காட்சி தருகிறார். அந்த கண்கள் ச(க்)கதோலா, ச(க்)கனன்யனா என அழைக்கப்படுகின்றன. பலராமர் வெள்ளை நிறத்தில் தாமரைக் கண்களுடன், மஞ்சள் நிறத்திலுள்ள சுபத்ராவிற்கு அருகில் உள்ளார். ஜகன்நாதரது நீட்டிய கைகள் அவர் பக்தர்களை அரவணைத்துக் காப்பதைக் குறிக்கும். பெரிய கண்கள் எல்லாவற்றையும் காண வல்ல பரமாத்ம தன்மையைக் குறிக்கிறது.
இவர்களைத் தவிர சுதர்சனர், ஸ்ரீதேவி, பூதேவி, நீலமாதவர் போன்றோரும் இங்கு அருளாட்சி செய்கின்றனர். ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பஞ்சலோகத்தாலும், சுதர்சனர் வெறும் கட்டை வடிவிலும் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களை வலம் வரும் குறுகலான பாதை சஹனமேலா எனப்படுகிறது. மேலா என்றால் திறப்பு என்று பொருள்.
ஜகன்நாதரை அனைவரும் அருகில் சென்று தரிசிக்கலாம். பூரியில் அருளும் இந்த ஜகன்நாதருக்கு 9 முதல் 12 வருடங்கள்தான் ஆயுட்காலம்.
அது என்ன கணக்கு? ஒன்பதிலிருந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும். அப்படிப்பட்ட வருடத்தின் ஆடி மாதத்தில் பூரி ஜகன்நாதர் ஆலய கருவறையில் அருளும் ஜகன்நாத மூர்த்தியின் உயிரான பிரம்மாவை எடுத்து, புதிய ஜகன்நாத திருவுருவ மூர்த்திக்குள் செலுத்துகிறார். பழைய ஜகன்நாதரை கோயிலில் ‘வைகுண்ட்’ எனும் இடத்தில் புதைத்து விடும் சடங்கு நடைபெறுகிறது. புது ஜகன்நாதரை உருவாக்கும் சடங்கும், சிலிர்க்க வைக்கும் பாரம்பரியம் கொண்டது.
சிலை செய்யப்படும் தாரு எனும் வேப்ப மரம் இருக்கும் இடத்தை இத்தலத்தில் அருளும் ஐம்பத்தோரு சக்தி பீடங்களுள் ஒன்றான விமலை பீட நாயகி, ஆலயத்தின் தலைமை பூசாரியின் கனவிலும் வேப்ப மரத்தின் உரிமையாளர் கனவிலும் வந்து கூறுவதும், நாகம் வந்து மரத்தை அடையாளம் காட்டுவதும் அற்புதங்களாக நிகழ்கின்றன.
குறிப்பிட்ட நல்ல நாளில் அந்த வேப்ப மரத்தருகே யாகங்கள் செய்து, பூரி மன்னர் முதலில் தங்கக் கோடரியாலும், பின்னர் வெள்ளிக் கோடரியாலும், இரும்புக் கோடரியாலும் வெட்டி மரத்தை ஆலயத்துக்கு எடுத்து வந்து ஜகன்நாதரின் உருவச் சிலையை செதுக்கு கின்றனர்.
அப்போது பாதாள நரசிம்ம அஷ்டோத்திர அர்ச்சனையை அந்தணர்கள் ஓதுகின்றனர். இப்படி முதன்முதலாக வடித்த ஜகன்நாதரின் தோற்றம் உக்ர பார்வையாக இருந்ததால், நரசிம்ம க்ஷேத்ரம் எனவும் இத்தலம் வழங்கப்படுகிறது. எனவேதான் புது ஜகன் நாதரின் திருவுருவத்தை வடிக்கும்போது பாதாள நரசிங்க அஷ்டோத்திரம் ஓதப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக அந்த திருவுருவச் சிலைகளை செய்யும் தைத்தாபதி வம்சா வழியினர் 21 நாட்கள் விரதமிருந்து, நான்கு புறங்களிலும் மூடிய சுவர்களுக்கு இடையே, மேற்கூரையே இல்லாத ‘கோயிலி வைகுண்டா’ எனும் யானை நுழைவு வாயில் அருகிலுள்ள இடத்தில் திருவுருவங்களை செதுக்குகின்றனர்.
மகாபாரதத்தின் இறுதியில் வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின் திருவுடல் இந்தக் ‘கோயிலி வைகுண்டா’வில்தான் எரிக்கப்பட்டது என்பது கூடுதல் ஆச்சரியம். எனவேதான் புது ஜகன்நாதரையும் மற்ற தெய்வங்களின் திருவுருவங்களையும் இங்கேயே வடிக்கின்றனர். சிலையைச் செதுக்கும் மூவரைத் தவிர தலைமைப் பூசாரிக்கே கூட அனுமதி இல்லை. அந்த மூன்று தைத்தாபதி வம்சாவளியினரும் ஆலயத்திலேயே 21 நாட்கள் தங்கி சிலையை வடிக்கின்றனர். ஐந்து அடி ஏழு அங்குல உயரத்தில் ஜகன்நாதர், பன்னிரெண்டு அடி அகலத்தில் உள்ள கையுடன் செதுக்கப்படுகிறார்.
அவரை இருபது அடியார்கள் எழுந்தருளச் செய்கின்றனர். ஐம்பது அடியார்கள் கயிறு கட்டி இழுத்து வந்து, கருவறைக்குள் பழைய ஜகன்நாத மூர்த்திக்கு நேரே நிறுத்துகின்றனர். பலராமர் ஐந்தடி ஐந்து அங்குல உயரத்திலும், சுபத்ரா ஐந்தடி பன்னிரெண்டு அங்குல உயரத்திலும், சுதர்சனர் ஐந்தடியிலும் செதுக்கப்படுகின்றனர்.
பழைய நான்கு மூர்த்திகளுக்கு முன்னே புதிய மூர்த்திகள் வைக்கப்பட்டபின், சிலை வடித்த மூன்று சிற்பிகள் மட்டும் கருவறையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஜகன்நாதர் அணிந்த துணிகளால் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும், கைகளில் ஜகன்நாதர் அணிந்த துணிகளை உறை போலவும் சுற்றிக் கொண்டு, பழைய ஜகன்நாதரின் உள்ளே உள்ள பிரம்மம் எனும் ஆத்மாவை புது ஜகன்நாதரின் உள்ளே வைக்கின்றனர். அப்போதும் ஆலய பிரதான பூசாரிக்கு கருவறையில் அனுமதி இல்லை. பிரம்மத்தைத் தொடும்போது முயல்குட்டி ஒன்று துள்ளி ஓடுவதைப் போன்ற எண்ணம் அவர்களுக்குத் தோன்றுமாம். அந்த பிரம்மம் என்ன உலோகம்? எதனால் ஆக்கப்பட்டது? என்பதெல்லாம் அந்த ஜகன்நாதருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
தொடரும்
No comments:
Post a Comment