அன்னியோன்யம் (மனதை தொட்டுவிடும் கதை – 27) #ganeshamarkalam
எங்க அப்பா அம்மா சண்டை போட்டு நான் பாத்ததேயில்லை. அவா ஆசையா ஒருத்தருக்கொருத்தர் பேஸிண்டும் கண்டதில்லை. ஆனா அவாளுக்கு மூணு குழந்தைகள் - முதல் பையன் (நான்) அப்புரம் ரெண்டு பெண்கள். அச்சு அசலா. ஐடென்டிகல் ட்வின்ஸ்.
ஒரு பையன் ஒரு பொண் வேணும்னுதான் எல்லாரையும் போல ஆசைப்பட்டாளாம். நான் பிறந்து 2வ கழிச்சு இன்னொண்ணும் பெத்துக்கலாம்னு இருக்கச்சே டபுள் டமாக்கா மாதிரி புவி, பூமா பிறந்ததும் கொஞ்சம் ஆடித்தான் போயிட்டார் அப்பா. அவர் வருமானத்துலே 3 குழந்தைகளை வளர்ப்பதான்னு. அம்மா தான் பாத்துக்கலாம் கவலைப்படாதீங்கோ, சிக்கனமா குடும்பத்தை நடத்திக்காட்டரேன்னு ஆஸ்பத்ரீலேந்து திரும்பரச்சே சொன்னாளாம்.
அப்போ விவரம் தெரியலை. ஆத்துக்கு ரெண்டு தங்கச்சி பாப்பாவை கூட்டிண்டு வரான்னு மட்டும் தெரியும். கொஞ்சநாள் ஆச்சுன்னா எங்கூட விளையாடுவான்னு தெரியும்.
வருஷங்கள் ஓடிப்போச்சு. நான் படிச்சுட்டு வேலைக்கு சேர்ந்தப்பரம் இதுகளுக்கு கல்யாணத்துக்கு பாக்க ஆரம்பிச்சா. ரெண்டு பேரும் 20 வயசில் அவ்வளவு அழகு. “The Mistress of Spices”னு ஒரு சினிமா, ஐஸ்வர்யா ராய் நடிச்சது. அதில் அவள் எப்படி இருப்பாளோ அதுமாதிரி ஆத்தில் ரெண்டு பேர் இருந்தா எப்படி இருக்கும்? அம்மா வேர பொத்தி பொத்தி வளர்த்தா. ரெண்டும் அண்ணான்னு வாஞ்சையா இருக்கும். எனக்கே சில தடவை யார் வந்துட்டு போனா, இப்போ ரூமுக்குள்ள வரது யாருன்னு குழப்பமா இருக்கும். வேணும்னு ரெண்டும் ஒரே ட்ரெஸ் போட்டுண்டு, ஒரே மாதிரி ஜடை பின்னிக்கிரதுன்னு. அப்பாவும் தடுமாறுவார்.
அம்மா மட்டும்தான் சரியா பிடிப்பா. எப்படின்னு சொல்லிகொடுக்க மாட்டா. கண் பட்டுடுமாம். இங்கே பைத்தியமே பிடிக்கரது.
இவாளுக்கு கல்யாணம் செஞ்சு வச்சா மாப்பிள்ளைகள் இன்னார்தான் தன் பொண்டாட்டின்னு எப்படி சொல்லுவான்னு குழம்புவேன். ஒரே ஊரில் வாசம் செய்யப்பிடாதோ? அப்பா இவா ரெண்டுபேருக்கும் ஒரே முஹூர்தத்தில் சேத்து பண்ணிடணும்னு முனைப்பா இருந்தா. ரெண்டு மாப்பிள்ளை திகையணுமே? திகைஞ்சது. எல்லாம் நல்ல வரன்கள், இதுகளும் அது இதுன்னு சொல்லி தட்டிக்கழிச்சுடாம பிடிச்சு பண்ணிண்டுதுகள். அப்பாவை சும்மா சொல்லப்பிடாது, கல்யாணம் அமோகமா செஞ்சுவச்சார். அம்மாவும் முன்னாடி சொன்னாப்புலெ சிக்கனமா இருந்து வேணும்கிர நகை நட்டெல்லாம் சேர்த்துவச்சு சந்தோஷமா புக்காத்துக்கு அனுப்பினாள். ஒத்தி நாக்பூரில் இன்னொருத்தி கொல்கத்தாவில். நான் பயந்த குழப்பம் ஏர்பட சான்ஸே இல்லை.
ரெண்டு குடும்பமும் லீவுக்குன்னு சேர்ந்து வந்தா? நல்ல வேளையா ஒரு மாப்பிள்ளைக்கு தலதீபாவளிக்கு லீவு கிடைக்கலை.
என் மரமண்டைக்கு, அன்னியோன்யம்னு ஒண்ணு இருக்கு, அது இருக்கரவரைக்கும் பொண்டாட்டி மாதிரியே இன்னொருத்தி இருந்தாலும் தவறு நடக்காதுன்னு தெரியலை.
அன்னைக்கு டிவிலே ஒரு கேம் ஷோ. ஒரு நிறுவனத்தில் வேலை செய்யரவா குடும்பத்தோட பிக்னிக் போன இடத்தில் ஆண்களையெல்லாம் கண்ணை கட்டிவிட்டுட்டு ஒரு பெண் அவர்கள் கையை வருடுவாள் அது யார்னு கண்டுபிடிக்கணும். பினாத்தலா இருந்தது. என்ன நடக்குமோன்னு பார்த்தா ஒரு குழந்தையை கூப்பிட்டு சத்தம் போடாம கையை தடவச்சொன்னார்கள். நான் கூட யாராவது ஹவுஸ்வைஃபை தடவச்சொல்லி எல்லோரும் என் பெண்டாட்டிதான்னு அடையாளம் காட்டிடப்போராளோன்னு யோசிச்சேன். அப்படி நடக்கலை. இந்த மாதிரி பிக்னிக்கில் விபரீதமான விளையாட்டுகள் ஏர்பாடுபண்ரத்துக்குன்னே ஒரு படிப்பும் அதைப்படிச்சுட்டு ஒரு கும்பல் அலையரதுன்னும் கேள்விப்பட்டேன்.
இதையெல்லாம் பாக்கிரச்சே அந்த அன்னியோன்யம் மாட்டரில் அதிக ஆர்வம் வந்தது.
எங்காத்தில் எனக்கு கல்யாணப்பேச்சையே எடுக்கமாட்டேங்கிரா. அதனால் கல்யாணமான என் நண்பர்களையும், என் பெற்றோர்களையும் கவனிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் தெரிஞ்சது அவா சண்டை போட்டோ, ஆசையா பேஸிண்டோ கண்டதில்லைன்னு. ஆத்தில் அவா இடையே நடக்கரது சாதாரணமா இருக்கும். வந்தியா போனியா, காரியம் ஆச்சா, உப்பு புளி வேணுமா, சாபிட்டேளா, உடம்புக்கு ஏதாவதா, வென்னீர் எடுத்து வைக்கட்டுமான்னு போகும். நீ இந்த புடவையில் அழகா இருக்காய், ஐ லவ் யூ எதுவும் கிடையாது, எப்போவாவது சமைச்சதுக்கு பாராட்டு. சில நாள், “ஹை, ஆபீஸ்லேந்து சீக்கிரமே வந்துட்டேள்”னு கொஞ்சமா மூஞ்சியில் மகிழ்ச்சி வந்து சட்டுன்னு போயிடும்.
என் ரூம்லேந்து புஸ்தகம் படிச்சுண்டே இவா பேசரதை கேட்டா, சில சமயம் என் மானேஜர் எங்களை கூப்பிட்டு அடுத்த பிராஜெக்ட் என்னன்னு சொல்லிகொடுக்கிரா மாதிரி இருக்கும். இல்லைன்னா, ஹோட்டலில் சிப்பந்தி கிட்டே சாப்பிட வந்த ரெண்டுபேர் பேசிக்கரா மாதிரி. இவாளுக்கு நடுவுலே ரொமான்ஸ் உண்டா? இருந்தால் எப்படி இருக்கும்? இவா ஹனி மூன் போயிருந்தா எங்கே போயிருப்பா? போனாளா? கல்யாணம் எப்படி நடந்ததுன்னு பல கேள்விகள். நினெச்சு பாத்தா பல குழந்தைகளுக்கு அவா அப்பா அம்மாவைப்பத்தி ஒண்ணுமே தெரிஞ்சிருக்காது. அப்படியே தெரிஞ்சாலும் அது இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம்னு அம்மாக்காரி தன் பொண்ணுகிட்டெ சொன்னதாயிருக்கும், அப்பா தன் பிள்ளைகிட்டே இதெல்லாம் சொல்வாரான்னு சந்தேகம்தான்.
ஒருநாள் அப்பா இன்னும் ஆபீஸ்லேந்து வரலை. லேட் ஆகுமாம். என்னை சாபிடவான்னு கூப்டா. வெத்தக்குழம்பும் உருளை பொடிமாஸும். “அம்மா, இன்னைக்கு சாதம் பிசெஞ்சு கையில் வைக்கிரயா”ன்னு கேக்கிரேன். தங்கைகள் இருந்தப்போ கடைசீயா வச்சது, ரெண்டு மூணு வருஷம் இருக்கும். இன்னைக்கு ஆம்மா கையில் சாப்பிடணும்னு தோணித்து. “அதுகென்னடா”ன்னு தட்டை நகத்திட்டு கிண்ணத்தில் போட்டு பிசைய அரம்பிச்சா,
திடீர்னு அடக்க முடியாம, “அம்மா, அப்பா உங்கிட்டே ஆசையா இருக்காரா?”ன்னு கேட்டுடரேன். கேட்டு முடிக்கலை ஏன் கேட்டோம்னு தோணியது. என்ன சொல்வாளோன்னு வேர பயம் தொத்திண்டது. திட்டுவாளோ?
ஆனா அம்மா சிரிச்சுண்டே, “அமாண்டா, ரொம்பவே”ன்னு சொன்னா, வெக்கப்படரா மாதிரி தோணித்து. “அப்படியா? நீங்க சண்டை போட்டு நான் பாத்ததில்லை. எனக்குத் தெரிஞ்சவா எலாராத்துலேயும் சண்டை வரும்னு சொன்னா. சண்டை வந்தால் அப்புரம் சமாதானம் ஆகி ஆசையா இருப்பாளாம், நீங்க சண்டையே போடரதில்லையே அதான் கேட்டேன்”கிரேன். அம்மா சொல்ரா, “வாழ்க்கையில் புளிப்பு, இனிப்பு காரம் எல்லாம் கலந்து வரும், எல்லாத்தையும் சுவைக்க, அனுபவிக்க கத்துக்கணும், எது இல்லையோ அதை தேடி சேத்துக்கணும் அப்போதான் வாழ்க்கை இனிக்கும். இதை எனக்கு கத்துக்கொடுத்ததே உன் அப்பாதான்டா”ன்னு. “இதைத்தான் உன் தங்கைகளுக்கும் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.”
பிசெஞ்ச குழம்பு சாதத்தை பெரிசா உறுட்டி என் கையில் வச்சுட்டு, அதில் ஒரு உருளை தானையும் சொறுகிட்டு இன்னும் சொல்ரா.
“உங்களுக்கெல்லாம் தெரியாது, நீ பிறக்கரத்துக்கு முன்னாடி, உங்க பாட்டி ரொம்பவே படுத்துவா. உன் அப்பாதான் தன் அம்மாவையும் எதுத்துக்காம என் பக்கம் இருந்துண்டு எனக்கு சப்போர்டா பேசுவார். கல்யாணம் முடிஞ்சு 3மாசம்தான் ஆனது, வயித்தில் ஒரு கட்டிமாதிரி வந்து கஷ்டப்பட்டேன். அவர் அம்மா அவாத்துக்கு அனுப்பிச்சு பாத்துக்க சொல்லலாம்னு சொன்னா. அவரோ முடியாது, எங்கூடத்தான் இருப்பான்னு சம்பளம் போனாலும் பரவாயில்லைன்னு லீவு போட்டு என் கூட ஆஸ்பத்திரியில் நான் குணமாகி ஆத்துக்கு வர வரைக்கும் கண்ணும் கருத்துமா பார்த்துண்டார். அப்புரம் 3 மாசம் கழிச்சுதான் நீ உண்டானாய். என்னைவிட அவர்தான் அதிகம் பத்தியம் இருந்தார்னு சொல்லணும். நான் வாந்தி எடுத்தா அவர் பதபதைப்பர். நான் இருந்த பத்தியத்தையே அவரும் தின்பார். அவர் அம்மா இப்படி பெண்டாட்டி கோண்டுவா இருக்கியேன்னு ஏசுவார். காதுலேயே போட்டுக்கமாட்டார்”.
“ஒருநாள் உடம்பு சரியில்லைன்னு படுத்துண்டது கிடையாது. அவருக்கு எங்கூடவே இருக்கணும். எது செஞ்சாலும் என்னை கலந்துண்டு முடிவெடுக்கணும். பூமா, புவி பிறந்ததும் அவரும் என்னொட செர்ந்துண்டு அந்த ரெட்டைவாலை சமாளிக்க உதவினார். எது கேட்டாலும் வாங்கிக்கொடுத்துடுவார்னு நான் எதுவும் கேப்பதில்லை, எனக்கு அவர் அக்கௌன்டில் எவ்வளவு பணம் இருக்குன்னு தெரியும், ஆத்துசிலவுக்கும் இதுகள் கல்யாணத்துக்கும் உன் படிப்புக்கும் எவ்வளவு வேணும்னு தெரியும். ஆனால் எனக்கு என்ன தனிப்பட்ட தேவைன்னு பாத்து பாத்து செய்வார். என் அப்பா கடையா கிடந்தப்போ எல்லா சிலவையும் இவர்தான் பாத்துண்டர். நான் நினைப்பதை அவர் செஞ்சு முடிப்பார், அவருக்கு எதுவேணுமோ அதை நான் அள்ளிக்கொடுத்துடுவேன்”.
“அம்மா, இதுதான் அன்னியோன்யமா இருப்பதா”ன்னு கடைசீயா கேக்கிரேன். “ஆமாண்டா. இது உடம்பு, மனசு ரெண்டையும் தாண்டின விஷயம், ரெண்டுபேருக்குள்ளேயும் இருக்கும், வெளீல ரெண்டுபேருக்கும் நடுவுலே கண்ணுக்கு தெரியாம பரவிக்கிடெக்கும். அது சரி, உனக்கு கல்யாணம் செய்யணும்னு 3 மாசமா பேசிண்டிருக்கோம், நீ என்ன சொல்ராய்”னு கேக்கரா. “இப்போ எதுக்கும்மா அவசரம்”னு சொல்ரேன்.
அதுக்கு அம்மா, “அப்பாதான் உங்கிட்டே பேச்செடுக்க சொன்னார் – சும்மா வாய் வார்த்தைக்கு சொல்லாதே, எனக்கு தெரியும் நீ பூமா ஆத்துக்காரரின் அத்தை பொண்ணை கல்யாணத்தில் பாத்து அவளை உனக்கு பிடிச்சிருக்குன்னு. பாத்துடலாமா? சீக்கிரம் கல்யாணம் பண்ணினா இந்த ராத்திரி பூரா தூக்கத்தை கெடுத்துண்டு வாட்ஸப் செய்யரது நிக்கும்”.
எனக்கு திகீர்னு பட்டது, அம்மா இத்தனை தெரிஞ்சா வச்சிருக்கா? என் மனசில் நினைப்பதை தெரிஞ்சுண்டு “இதுவும் அன்னியோன்யம் தாண்டா, அம்மா பிள்ளைக்கு இடையிலே இருக்கிர அன்னியோன்யம். உன் தங்கை ஏர்கனவே ஜாதகம் கொடுத்து வாங்கி பொருத்தம் பாத்து எல்லாம் பேசி முடிச்சுட்டா. அது தங்கை தமையன் இடைலெ இருக்கிர அன்னியோன்யம்”.
எனக்கு தலை ஆட்டரது தவிர எதுவும் தோணலை. அதுக்குள்ள கிண்ணம் காலி. அன்னைக்கு என்னமோ வெறும் வெத்தக்குழம்பு சாதமே தேவலோகத்து அமிர்தம் மாதிரி பட்டது.
No comments:
Post a Comment