Friday, May 22, 2020

குசேலன்

1. குசேலன் (சிறுகதை சீசன் – 3)
#ganeshamarkalam

மாமாவுக்கு தோதா மாமி நடந்து போராளா இல்லை மாமியாலே நடக்க முடியலேன்னு மாமா மொள்ள போராரான்னு தெரியலை. ரெண்டு பேரும் சித்தே கஷ்டப்பட்டுத்தான் போவா. சரி, யார் எப்படி நடந்து போனா என்னன்னு கேக்கலாம். எங்களுக்கு தெருமுனையில் டீக்கடையில் உக்காந்துண்டு போரவா வராவாளை பாத்து கமென்ட் அடிப்பதுதான் பொழுதுபோக்கு.

நான் சற்குணம். ரேஷன் கடையில் சாமான் நிறுவை போடர வேலை. அரசாங்க உத்யோகம்னு நினெச்சுடப் பிடாது. அங்கே கந்தசாமிக்கு எடுபிடி. வயசு 43, படிப்பில்லை, எது கிடெச்சாலும் செய்வேன். டீக்கடை வச்சிருக்கறது நாயர். என்கூட டீக்குடிக்க எல்லா சனிக்கிழமையும் இதே டயத்தில் வரவா ராதா எங்கிர ராதாகிருஷ்ணன், இன்ஃபோசிஸ்சில் வேலை, புல்லட் வச்சிருக்கான் அப்புரம் சந்தானம் மாமான்னு காலனி அசோசியேஷன் ட்ரெஷரர். அவர்கிட்டே ஒரே ஒரு வேஷ்டிதான் இருக்காப்புலே உக்காரர இடத்தை தட்டோ தட்டுன்னு தட்டிட்டுத்தான் உக்காருவர். நாங்க யாரையும் விடமாட்டோம், கமென்ட் அடிப்போம்.

நடந்து போன மாமா மாமி முட்டுத்தெரு நாராயணன் ஆத்துக்கு குடிவந்திருக்கா. ஆத்து மாப்பிள்ளை பொண்ணு குழந்தைகளோட வந்தா தங்கிக்க சௌக்கர்யமா இருக்கும்னுட்டு மாடிப் போர்ஷணை இத்தனை வருஷமா குடி விடாம வைராக்கியமா இருந்தவர் இவாளுக்கு விட்டிருக்கார். குடிவந்த சங்கமேஸ்வரனுக்கு சிதம்பரமாம். ஆத்துக்காரி கமலத்துக்கு கடலூர். 9 குழந்தைகள். கடைக்குட்டிக்கு 2 வயசு. மத்ததெல்லாம் ஸ்கூலுக்கு போரதுகள். 4 போண், 5 பசங்க. இவ்ளோ பெரீய குடும்பத்துக்கு எப்படி வாடகைக்கு விட்டார்னு ஆச்சர்யம். 

கடைத்தெருவில் பாத்தப்போ நாயர் கேட்டானாம்.
“பாவமா இருந்துதுடா! எங்கேயும் வாடகைக்கு தர மாட்டேன்கிரா, எங்களை மாதிரி இருக்கரவா எங்கே போவதுன்னு கெஞ்சினது மனசை என்னவோ செஞ்சது, இருந்துட்டுப் போகட்டும்னு சரீன்னேன். ஆனா கண்டிஷனெல்லாம் தளர்த்திக்கலை. தண்ணி பாத்து யூஸ் செஞ்சுக்கணும். லாரீலே வாங்க வேண்டியிருந்துதுன்னா தனியா காசு தந்துடணும். ராத்திரி லேட்டா கதவைத் தட்டி மாடிப் போர்ஷணுக்கு போக தொறந்து விடுங்கோன்னு சொல்லப்பிடாது. குழந்தைகள் விளையாடரேன் சாக்குன்னு சத்தம் போடப் பிடாது. எல்லாத்துக்கும் தலையாட்டினா, கொஞ்ச நாள் பாக்கலாம் எப்படிப் போரதுன்னு எங்காத்து மாமியும் ஒத்துண்டுட்டா!”

“சுளையா 11 மாசத்துக்கு அட்வான்ஸ் கிடெச்சிருக்கும், அதான் கொடுத்துட்டர்.” ராதா கமென்ட். அதுவும் சரிதான். அன்னைக்கு இவா ரெண்டு பேரையும் பாக்கரச்சே எங்களுக்கு பரிதாபமா இருந்துதே! “இத்தனை குழந்தைகளை பெத்தப்புரம் அவாத்து மாமி நடந்து போராதே ஆச்சர்யம்”. நான் சொன்னதை கேட்டு எல்லாரும் கொல்லுன்னு சிரிச்சா.

ஒருவாரம் கழிச்சு ஆஞ்சநேய ஜயந்தி. கோவிலுக்கு போயிருக்கச்சே நானும் சந்தானமும் சங்கமேஸ்வரனையும் அவர் 9 வாரிசுகளையும் பார்த்தோம். ஸ்கூல் டீச்சர் குழந்தைகளை பிக்னிக் அழைச்சிண்டு வந்தாப்போல, அவாளை அரவணைச்சு ரோட்டை கிராஸ் செய்ய வச்சு கோவிலுக்குள் வரா. பிரஸாத க்யூவில் அவா எல்லாரையும், மாமி இடுப்பில் கடைக்குட்டியோட வரிசையா பாக்க திவ்யமா இருந்தது. ஒரே ஆத்துலேந்து இத்தனை பேர் வடை பிரஸாதம் வாங்கிக்க வந்திருக்கான்னு கோவில் நடத்தரவாளுக்கு தெரியுமா என்ன? எல்லாருக்கும் பாதிப்பாதி வடை கையில் வச்சர். ஒரே ஆத்துக்கு அஞ்சரை வடை போச்சேன்னு தெரிஞ்சா ஆத்துக்கு ஒருத்தர்தான் வரிசையில் நிக்கணும்னு ரூல்ஸ் போடுவாளோ?

வரீசை கடைசீலே நின்ன எனக்கும் சந்தானம் மாமாவுக்கும் படபடன்னு இருந்தது அந்தக் கோவிலில் சின்ன ஆஞ்சநேயர் மூர்த்தி. வடைமாலை சின்னது. நாம போய் கை நீட்டரவரைக்கும் பிரசாதம் காணுமான்னு கவலை. இதே நாமக்கல் ஆஞ்சநேயர்னா கமலா மாமி இன்னும் அஞ்சு பெத்துண்டிருந்தாலும் படபடப்பு வந்திருக்காது.

திரும்பி வரச்சே சந்தானம் என்னைப் பாத்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சர். “என்ன மாமா, என் மனசில் தோணறதுதான் உங்க மனசிலுமா?” கேட்டேன். “முதல்ல நீ சொல்லு”. சரின்னு நானே வெக்கத்தை விட்டு கேட்டேன். “சங்கமேஸ்வரனுக்கு பொழுது சாஞ்சா உடனே இது ஒண்ணுதான் வேலையா?” “ஆமாம் போலேருக்கு, அதுவும் கர்ம சிரத்தையோட பண்ணுவர்னு நினைக்கரேன். ரெண்டு வருஷம், இல்லை 18 மாசத்துக்கு ஒண்ணுன்னு பெத்து போட்டிருக்கா. இது எப்படி சாத்தியம்?” இந்த வாரம் டீக்கடையில் பேச டாபிக் கிடைச்சுடுத்தே!

சந்தானம் மாமாவுக்கு 3 பொண்கள். அவரே சொல்லியிருக்கர் “பிள்ளை பொறக்கும்னு நம்பி மூணாவது ட்ரை செஞ்சோம், நடக்கலை. இனிமேல் விஷப் பரீக்ஷை வேண்டாம்னு என்ன செய்யணுமோ அதை செஞ்சுட்டொம்”. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, நல்ல உத்யோகம் கிடையாது, யாரும் பொண் தர ஒத்துக்கலை. அதான் இந்த குழந்தை பெத்துக்கரத்துக்காக மெனக்கிடர மேட்டர் அத்தனை சுளுவா பிடிபடலை. நாயருக்கு கோழிக்கோட்டில் ஃபேமிலி. ஒரே பையன். அப்பப்போ போயிட்டு வருவர். அவர் மனைவிக்கு சொந்த ரப்பர் தோட்டம் இருக்கு. இவர் மட்டும் வீம்பா தன் கையால் சம்பாதிக்கணும்னு இங்கே இருக்கராம். ஒரே பையனோட குடும்பம் வளராம நின்னுடுத்து. ஆனால் ராதா என்கிட்டே தனியா ஒண்ணு சொன்னான். நாயருக்கும் அவர் ஆத்துக்காரிக்கும் தோதுப் படாமா பிரிஞ்சுட்டான்னு, இதைப் பத்தி நாயர் கிட்டே கேட்டுடாதேன்னு சத்தியம் வாங்கியிருக்கான். ராதாகிருஷ்ணனுக்கோ அவன் கூட வேலை பாக்கிர சார்மீயோட கசமுசா ஆகி அவளையே போன வருஷம் கல்யாணம் செஞ்சுண்டுட்டான்.

இருந்தாலும் சங்கமேஸ்வரனுக்கும் கமலாவுக்கும் இந்தக் காலத்தில் இத்தனை குழந்தைகள் பெத்துக்கணும்னு ஆர்வம் வந்து, அதை எப்படி இவ்வளவு வெற்றிகரமா நிறைவேத்தினான்னு பட்டது.

நாயர் அற்புதமா இஞ்சி சாயா போடுவான். உடனே காசு வேண்டாம். கணக்கு வச்சுக்கலாம். சனிக்கிழமை ஃபுல் கோரம். நாயரை 3 டீ போடுன்னுட்டு உக்காரலை முட்டுச்சந்து நாணாவும் வந்தர். ராதா 3 பய் 4ன்னு கண் அடிக்க, சந்தானம் பெச்சை ஆரம்பிச்சர். “என்ன நாராயணா! மாடிப் போர்ஷன் டேமேஜ் ஆகாமா இருக்கா?” 

ஹாஹான்னு சிரிச்ச நாராயணன். “எல்லாம் பேஷா இருக்கு, ஆனா அவாத்து பசங்களுக்கு ஸ்கூல் லீவுன்னா தாம் தூம்னு அவா போடர இரைச்சல் மாளலை. குழந்தைகள் இருக்கர வீட்டில் இதெல்லாம் சகஜம், நீங்க ஒவ்வொண்ணுக்கும் மேலே போய் கம்ப்ளைன் செய்யப் பிடாதுன்னு ஆத்தில் சொல்லிட்டா. சித்தே பழகிட்டா மாதிரி இருக்கு. 4 மாசம் ஆச்சோன்னோ”

“உங்காத்துலே குடிவந்த மாமாவுக்கு என்ன வயசு?” அடுத்த கேள்வி, இது ராதா கிட்டேந்து. “என்ன ஒரு 55 இருக்கும், ஏன் கேக்கரேள்?” “2 வயசில் ஒரு குழந்தையை இடுப்பில் வச்சிண்டு வந்தா. பத்தாவது குழந்தை சாத்தியமான்னு தெரிஞ்சுக்கலாம்னு.” இது நாயர். எல்லாரும் சிரிச்சுட்டோம். நாராயணன் சித்தே உர்ருன்னு “மத்தவா பெர்சொனல் மேட்டரை நாம அலசப்பிடாது, நாகரீகம் இல்லை”ன்னு சொல்ல. “என்ன இருந்தாலும் உங்காத்தில் குடி இருக்கா, நீங்க விட்டுக் கொடுப்பீரா”ன்னு நான் கேக்க, டீயும் நாலு கிளாசில் வந்தது.

நாங்க கிளாசை வாங்கி குடிக்க ஆரம்பிக்கலை, தூரக்கே சங்கமேஸ்வரன் வரது தெரிஞ்சது. ராதாதான் நாராயணனை பாத்து “உங்காத்துலே குடிவச்சிருக்கேளே குசேலர் அவரே வரார் பாருங்கோ”ன்னு அனவுன்ஸ் செஞ்சுட்டான். அத்தோட “எங்கே வேலை பாக்கரார்”னு கேட்டுவச்சான். 

“தெரியலை, தினம் 730க்கு குழந்தைகள் ஸ்கூலுக்குப் போனதும் இவரும் எங்கேயோ போயிட்டு சாயங்காலமா வரர். வாடகைக்கு விடப்போ கேட்டதுக்கு மழுப்பினர், ஆனா சுளையா அட்வான்ஸ் தந்துட்டர். ஊரில் நிலபுலங்கள் இருக்கு, அதுலேந்து வரும்படி வரதாயும், இப்போதைக்கு தி நகரில் ஏதோ கடையில் கணக்கு பாத்துக்கரதாயும் மாமி சொன்னதா எங்காத்தில் தகவல். இதுவரைக்கும் வாடகை டாண்ணு தந்துட்டர், அதனால் நான் அலட்டிக்கலை.”

இத்தனை குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ், புஸ்தகம், பஸ் போக்குவரத்து, துணிமணி, சாப்பாடு எல்லாம் நிறைய ஆகுமேன்னு ராதா கவலைப் பட்டான். இவன் ITயில் இருந்தாலும் கல்யாணத்தை பண்ணிண்டு இன்னும் குழந்தை ஏன் பெத்துக்கலை? சிலவுக்கு இன்னும் ஒரு நல்ல பொசிஷணுக்கு வந்துட்டு பாத்துக்கலாம்னு சார்மீ சொல்லிட்டாளாம். 

சந்தானம் மொள்ள “நாராயணா! நீயாவது குசேலரைப் பாக்கிரச்சே இந்த குடும்பக் கட்டுப்பாடு பத்தின விஷயம் அவர் காதுக்கு எட்டரா மாதிரி சொல்லி வை, இல்லைன்னா உனக்குத்தான் பிர்ச்சனை.” ஜோக் அடிக்க, நாயர் லேசா குபுக்குன்னு சிரிக்க, எனக்கே என்னவோ போல ஆகித்து.
நாயர் சும்மா விடாம: “நாணா மாமா கொவிச்சுக்கப் பிடாது, குசேலரும் மாமியும் போன வாரம் இந்த வழியா போரச்சே நடக்கவே முடியலை சொச்ச காலத்தை சௌக்கர்யமா தள்ளணுமா வேண்டாமா? குழந்தைகள் இத்தனை இருகச்சே அதுக்கேத்தாப்புலே கடமையும் ஜாஸ்தியா இல்லையா, அதான் சொல்ரோம்.” விளக்கம் கொடுத்தர்.

நாராயணனுக்கு என்ன தோணித்தோ தெரியலை – சொல்ரேன்னுட்டு கிளம்பிட்டர். அவர் அந்தண்டை போனதும் நான் எனக்குத் தெரிஞ்ச ஞானத்தை வச்சிண்டு “குசேலருக்கு 55ன்னா இந்த வயசில் எப்படி இன்னொரு குழந்தை சாத்தியம்?” சந்தேகத்தை கிளப்பினேன். அதுக்கு நாயர் “இப்போ ரெண்டு வயசில் குழந்தை இருக்கே கவனிச்சேளா, அப்படீன்னா இன்னும் ஒண்ணாவது சாத்தியம்தான்.” கன்ஃபெர்ம் செஞ்சான். இப்படிப் பேசிண்டே அமோகமா பொழுது போச்சு. இன்னொருத்தரை பத்தி பெசறதுன்னா ஆவக்கா தொக்கு மாதிரி.

அடுத்த வாரம் நாயர் கடையில் கூடினபோது எங்களுக்கு அதிர்ச்சி தரா மாதிரி ஒரு செய்தி. நாராயணன் வந்துட்டுப் போனாராம். குசேலருக்கு பஸ்ஸில் ஏறரச்சே கால் வழுக்கி விழுந்ததில் கனுக்காலில் ஃப்ரேக்சராம், கட்டுப் போட்டுண்டு படுத்துண்டிருந்துட்டு இன்னைக்குத்தான் ஆத்துக்கு வந்திருக்கர்னு. எங்களுக்கெல்லாம் என்னமோ மாதிரி ஆகித்து. டீ குடிச்சுட்டு எல்லாருமா போய் அவரைப் பாத்து ஏதாவது உதவி வேணும்னா செஞ்சுட்டு வரணும்னு கிளம்பினோம்.

நாராயணன் வாசலில் “என்ன எல்லாரும் இந்தப் பக்கம்”னு கேக்க, “குசேலரை பாக்க”ன்னு ராதா சொல்ல, “சத்தமா அப்படி சொல்லாதே சங்கமேஸ்வரன்னு கூப்பிடு.” மேலே அழைச்சிண்டு போனர்.

பாவம் கட்டோட ஈஸிசேரில் இருந்தவர் எங்களைப் பார்த்ததும் வாய் நிறைய “வாங்கோ”ன்னு எங்களை கூப்பிட்டது அத்தனை நன்னா இருந்தது. நாங்க அவரையும் அவர் மனைவி குழந்தைகளைப்பத்தி கேலி பேசுவதை, தெரிஞ்சுண்டா எத்தனை வருத்தப்படுவர்! அறிமுகப் படுத்தின நாராயணன், “உங்களைப் பாத்துட்டு போணம்னு வந்திருக்கா”. “ரொம்ப சந்தோஷம் இப்படி படுக்கையில் விழுந்தா புது நண்பர்கள் கிடைக்கரா”ன்னு அவரும் மகிழ்ந்து போனர்.

“உங்க பசங்கள்லாம் எங்கே”ன்னு ராதா கேக்க பார்க்குலே விளையாடரான்னர். மாமி “காபி சாப்பிடரேளா”ன்னு கேக்க, இல்லை வேண்டாம்னு நாங்க சொல்ல, சரின்னுட்டு உள்ளே போனா. சித்தே பெசிண்டிருந்துட்டு உதவி என்ன வேணும்னாலும் செய்யரோம்னு சொல்லிட்டு கீழே இறங்கி வர சந்தானம் கிண்டலா “நாராயணா, குசேலரை ஜாக்கிரதையா பாத்துக்கோ”ன்னு சொல்ல, அதைக் கேட்ட நாராயணனின் ஆத்துக்காரி “சித்தே இங்கே வாங்கோன்னு எங்களை அந்தண்டை அழைச்சிண்டு போனா. 

“யார் குசேலர்? அவாளைப் பத்தி உங்களுக்கு தெரியுமா? என்ன தெரிஞ்சிண்டு நீங்க அவாளை கேலியாப் பேசரேள்?” விடு விடுன்னு விட ஆரம்பிச்சா. நடு நடுங்கிப்போன சந்தானத்தை பாத்து “ஓரு ரகசியம் சொல்ரேன், உங்களுக்குள் வச்சுக்கோங்கோ!”

“கமலா மாமிக்கு குழந்தைகளே இல்லை, எல்லாம் தத்தெடுத்துண்ட குழந்தைகள். கிராமத்தில் இருந்த நிலபுலனை வித்து வந்த பணம் நல்ல காரியத்துக்கு பயன்படட்டும்னு வருஷம் ஒரு குழந்தைன்னு தத்தெடுத்து கூடவே வச்சு காப்பாத்திண்டு படிக்க வச்சு பாத்துக்கரான்னு மாமிகிட்டேந்து தெரிஞ்சிண்டேன். தெரிஞ்சதுலேந்து மனசுக்கு அத்தனை நல்ல மனுஷாளான்னு தோணித்து, நீங்கெல்லாம் சித்தே அடக்கி வாசியுங்கோ”ன்னுட்டு உள்ளே போனா.

No comments:

Post a Comment