Saturday, May 30, 2020

கடன்

சிதம்பரம் கதை

கடன் (மனதை தொட்டு விடும் கதைகள் – 51)
#ganeshamarkalam

முழுசா 14 வருஷத்துக்கு அப்புரம் என் சொந்த ஊர் சிதம்பரத்துக்கு போரேன். ஆனா இதே ஊரிலேந்து எல்லாரையும் ஒதுக்கி தள்ளிட்டு யார்கிட்டேயும் சொல்லாம ஓடிப்போனேன்னா நம்புவேளா? என்ன ஆச்சு? அது பெரீய கதை. இருந்தாலும் என் ஆதங்கமும் வேதனையும் உங்களுக்கும் தெரியட்டும். சொல்ரேன்.

நான் சொல்லப்போரதை கேட்டுட்டு சினிமாவுலேயோ அல்லது டிவி சீரியல்லையோதான் இப்படி நடக்கும்னு நீங்க நினைச்சேள்னா அது உங்களுக்கு உலக அறிவு பத்தாதுன்னு அர்த்தம். நிஜவாழ்க்கையில் நடப்பதை பாத்துதான் அவா கதை எழுதரான்னு நான் சொல்லுவேன். இப்போ அந்த தர்க்கம் வேண்டாம். நிஜமோ, பொய்யோ, எனக்கு நடந்துடுத்து.

அப்போல்லாம் இப்போ மாதிரி கிடையாது. ரொம்ப எளிமையான வாழ்க்கை. அதுவும் சிதம்பரம் மாதிரி ஊரில், கோவிலை விட்டா வேர எதுவும் கிடையாதுன்னு இருக்கச்சே சாயங்காலம் 6 ஆச்சுன்னா ஊரும், மனசும் அடங்கிடும்.

நான், என் அம்மா, அப்பா அப்புரம் என் தாத்தா. இவ்வளவுதான் எங்க குடும்பம். எங்க தாத்தா குஞ்சிதபாதம் ஐயர் ரொம்ப பரோபகாரி. என் அம்மா அவருக்கு ஒரே பொண்ணு. எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கரச்சே ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டாளாம், “என் அப்பாவும் நம்மளொட சேர்ந்து இருப்பா”ன்னு. பாட்டி போய் ரொம்ப வருஷம் ஆச்சு. அப்பா “அதுக்கென்ன பேஷா”ன்னு ஒத்துண்டுட்டர். அவருக்கு தந்தி ஆபீஸில் வேலை. அவ அப்பா விட்டுட்டு போன சொந்த வீடு ஆணிக்காரன் தெருவில், கோவில் கிட்டக்கயே ஜாகை. 

நான் அப்போதான் அண்ணாமலை யுனிவெர்ஸிடியில் BSc இறுதி ஆண்டு பிஸிக்ஸ் பண்ணிண்டிருந்தென். அப்போல்லாம் அதுக்கு நல்ல பேர். நன்னா படிப்பேன். படிப்பை முடிக்கலாம், நல்ல வேலையில் அமரலாம், நன்னா சம்பாதிக்கணும், அப்பா அம்மாவை அவர்கள் கடைசீ காலங்களில் வச்சுப்பாத்துக்கணும், அப்படின்னு யோசனைகள் வரும். சிதம்பரத்துலேயே நல்ல வேலை கிடைக்கணும், இவாளை விட்டு பிரிஞ்சுடக்கூடாதுன்னு கவலைப்படுவேன்.

தினம் சாயங்காலம் ஒருதடவை நடராஜரை தரிசனம் பண்ணிடணும். அந்த ஊரில் நிறைய பேருக்கு அப்படித்தான். சில சோம்பேறிகள் சாயங்கால பூஜைக்கு மணி அடிக்கர சத்தத்தை கேட்டுட்டு ஆத்திலேந்தே கன்னத்தில் போட்டுக்குங்கள். ஆனா நான் அப்படியில்லை, காலேஜ்லேந்து ஆத்துக்கு வந்து குளிச்சுட்டு நெத்திக்கு இட்டுண்டு நேர கோவிலுக்கு போயிட்டுதான் மத்த வேலை. அந்தக்கோவிலைபத்தி எங்கிட்டே கேளுங்கோ, ஒரு ப்ரொஃபெஷனல் கயிட் மாதிரி விளக்கம் சொல்லி உங்களை சுத்திக்காண்பிப்பேன். 

எங்க தாத்தா ஆனந்த விகடன் ஏஜென்ஸி வச்சிருந்தா. வாசல்லெ நீல கலரில் ஒரு ஷீட் அடிச்சிருப்பா, அதில் “இந்த வாரம் ஆனந்த விகடன் வாசித்துவிட்டீர்களா” அப்படின்னு போட்டிருக்கும். அதனால் குஞ்சு மாமாங்கரதைவிட “விகடன் மாமா”ன்னும் அவரை சொல்லுவா. எங்கிட்டே மிகவும் பாசமா இருப்பர். அப்பாவைவிட என் குஞ்சு தாத்தாகிட்டேதான் எப்போவும் நான் இருப்பேன்.

ஆனா இப்படி ஜனரஞ்சகமா போயிண்டிருந்த என் வாழ்க்கையில் ஒரு பேரிடி விழுந்தது. 

அன்னைக்கு “வாடா அனந்து தில்லை காளி அம்மன் கோவில் வரைக்கும் போயிட்டு வரலாம்”னு தாத்தா கூப்பிட்டா. சரின்னு அவரோட கிளம்பரேன். ஏனொ அவர் இன்னைக்கு சீரியஸா இருக்கா மாதிரி பட்டது. வழக்கமா என்னைவிட எதிர்லே வர பெண்களை நன்னாவே உத்துப்பாப்பர். இன்னைக்கு ரோட்டை பாத்துண்டெ சம்பந்தமே இல்லாம ஏதேதொ பேசிண்டு. “எனக்கு அப்புரம் அந்த ஆனந்த விகடன் ஏஜென்சியை நீ நடத்ராயா, உங்க அப்பன் தந்தி ஆபீஸே கதின்னு கிடக்கான்”னர். அப்புரம், “நீ நன்னா படிச்சு வெளிநாடு போயிடணும், நாஸாவில் பெரீய ஆளா வரணும்”னார். “சரி, நாஸாவில் விகடன் படிக்கரவா எத்தனை பேர் இருப்பா”ன்னு கேட்டேன். அதுக்கு லேசா சிரிச்சர். 

கொவில்ல சாமி தரிசனம் முடிச்சுட்டு “வாசல்லே இருக்கிர புளிய மரத்தின் நிழலில் உக்காந்துக்கலாம்”னு சொன்னார். 

“அனந்து உங்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு சில நாட்களாவே யோசிஞ்சிண்டிருக்கோம். இன்னைக்குத்தான் வேளை வந்ததுன்னு தோண்ரது. நீயும் படிப்பு முடிச்சிட்டாய். இப்போ உனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு உன் அப்பா சொல்ரான். இப்போகூட அந்த விஷயத்தை சொல்லலைன்னா நன்னா இருக்காது”ன்னு பீடிகை போட்டார்.

“குஞ்சு தாத்தா, சுத்தி வளைக்காம நேர விஷயத்துக்கு வாங்கோ. நீங்க இப்படி குழம்பரது எனக்கு கஷ்டமா இருக்கு”ன்னேன்.அப்போதான் அவர் அந்த குண்டை தூக்கிப்போட்டு உடைத்தார். நான் என் அப்பா அம்மாவுக்கு பிறந்த குழந்தை இல்லையாம். அம்மாவுக்கு குழந்தையே பிறக்காதுன்னு தெரிஞ்சப்புரம் என்னை கும்பகோணம் அநாதை ஆஸ்ரமத்துலேந்து எடுத்துண்டு வந்து வளர்த்தாளாம். இந்த விஷயத்தை பொண்ணாத்துக்காராளுக்கு சொல்லணும், சொல்லித்தான் கல்யாணம் பண்ணி வைக்கணும், அப்போதான் அவன் சீரும் சிறப்புமா இருப்பான்னு அம்மா நினைக்கராளாம். அனா அவாகிட்டே சொல்ரத்துக்கு முன்னாடி எனக்கு இந்த உண்மை தெரியணும்னு பல நாளாய் பேசிண்டிருக்காளாம். “அம்மாவுக்கோ அப்பாவுக்கோ இதை உங்கிட்டே பெசரத்துக்கு தைரியம் வரலை, அதான் நீ எங்கிட்டே பிரியமா இருக்காய், நான் சொல்ரதுதான் சரின்னு பட்டதுடா”.

“அனந்து, செல்லம், இதனால் ஒண்ணும் மாறிடலை, நீயும் மேஜர், இதை உங்கிட்டே சொல்லிடரது எல்லாருக்கும் நல்லதுன்னு இந்த அம்மன் சன்னிதியில் வேண்டிண்டு சொல்ரேன்” அப்படின்னார்.

எனக்கு பேச்சே வரலை. பொல பொலன்னு கண்ணில் நீர் வந்தது. குஞ்சு தாத்தா என் கையை வாஞ்சையா பிடிச்சுக்கரார். 

மெல்ல ஆத்துக்கு வரோம், வாசத்திண்ணையிலேயே அவா ரெண்டு பேரும் உக்காந்திருக்கா. ஓடி வந்து அம்மா என்னை கட்டிக்கரா. அப்பாவுக்கு எமோஷன் காமிக்க வராது, எப்பவும்போல வெறிச்சுப்பாக்கிரார். ஆனா நான் அவர் கையை ஒருதடவை பிடிச்சுட்டு உள்ளெ போரேன். “அம்மா, பசிக்கரது, சீக்கிரம் சாப்பாடு போடு”ன்னு சொல்லிட்டு நானே தட்டை அலம்பி எடுத்துண்டு வந்து உக்காந்துக்கரேன். அன்னைக்கு ராத்திரி தூக்கமே வரலை. அதிகாலை ஒரு 3 மணி இருக்கும். ஒரு மஞ்சப்பையில் ரெண்டு செட் சட்டை வேஷ்டி எடுத்து வச்சுண்டு, அப்பா பர்ஸ்லேந்து 200₹ எடுத்துண்டு கிளம்பிட்டேன். அவ்வளவுதான். நடந்தே கடலூர் வந்தேன். அங்கேந்து பஸ் பிடிச்சு சென்னை. அப்புரம் ரயில்லே ஏறி விசாகப்பட்டினம்.

இங்கே அதையும் இதையும் பண்ணி வயித்தை கழுவிண்டாச்சு. யாருக்கும் நான் இங்கே இருப்பது தெரியாது. ஓரளவுக்கு என் நிலைமை மாறினப்புரம் சில மனிதர்கள் அவாளாவே நண்பர்கள் ஆனா. சிலர் நீ யாரு, சொந்த ஊர் எதுன்னதுக்கு உண்மையை பேசினேன். அநாதைன்னு. யாரும் கிடையாதுன்னு. அனா அதை சொல்ரச்சே கண் கலங்கும். குஞ்சு தாத்தா, அம்மா அப்பா கண் முன்னாடி வருவா. வந்தா என்ன? நான் அநாதை ஆஸ்ரமத்துலேந்து வந்தேன்னுதானே காளிகோவில்லே வச்சு சொன்னார்? அதுவே நிலச்சுடுத்து, மனசுலே.

கூடிய சீக்கிரம் ஹார்பரில் நல்ல உத்யோகம் கிடெச்சது. நம்மளாலேயும் முன்னேர முடியும்னு நம்பிக்கை பலபேர் கொடுத்தா. சின்ன வீடு லோன் வாங்கி கட்டியாச்சு. அதில் குடி போன அன்னைக்கு, சிதம்பரம் போய் அவாளை கூட்டிண்டு வரணும்னு ஒரு நிமிஷம் தோணித்து. ஆனா இன்னொரு பக்கம், “வேண்டாம், நாம் இப்படியே இருந்துடலாம்”னு வைராக்கியம் வந்து தடுக்கும். ஆனால் மாசம் தவறாம அருகில் உள்ள அநாதாஸ்ரமத்துக்கு போய் கொஞ்சம் காசு கொடுத்துட்டு வந்துடுவேன். அப்படிப்போரச்சே அங்கேதான் மாலதியை பாத்தேன். 

தெலுங்குதான், தமிழ் பேசுவா. நல்ல குணம். 8ஆம் கிளாஸ், சேவை மனப்பான்மை நிறையவே. அங்கேதான் இருக்கா, நினைவு தெரிஞ்சதுலேந்து. அவளையே கல்யாணம் செஞ்சுக்கலாம்னு தோணித்து. ஒரு தடவை துர்கா பீச்சுக்கு வரியா போலாம்னு கேட்டேன், வந்தா. அங்கே வச்சு நானும் அநாதை, ஆனா உனக்கு சரின்னா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னேன். ரொம்ப நாழி யோசிக்கலை, சரின்னுட்டா. அனா ஒண்ணு மட்டும் சொன்னா கடலை பாத்துண்டு.

“நானும் உங்களைப்போலத்தான். எனக்கும் யாரும் கிடையாது. நான் கல்யாணம் பன்ணிண்டா அதுமூலம் ஒரு முழு குடும்பமே கிடெச்சுடும்னு கனவு கண்டேன். யாரும் அப்படி சொல்லிண்டு வரலை. எனக்கும் 28 வயசாச்சு. நீங்கதான் முதல்தடவையா ஒருத்தர் இப்படி பிரியமா எங்கூட பேசினது. வேண்டாம்னு சொன்னா இன்னும் இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு இன்னொருத்தர் வருவாளோ? அதுக்குள்ள தலை நரைச்சுடும். அதான் ஒத்துண்டேன். போகப்போக உங்களுக்கு என்னையும் எனக்கு உங்களையும் பிடிக்கும்”ன்னா. 

அப்போதான் நான் சிதம்பரத்தில் இருந்ததையும் எனக்கு நடந்ததையும் அங்கேந்து ஓடிவந்ததையும் சொன்னேன்.

அவள் அதை கேட்டுட்டு என்னை பாத்த பார்வை இருக்கே! “முட்டாள்” அப்படின்னா. பல்லை கடிச்சுண்டு. எனக்கு ஒரு மாதிரி ஆச்சு. எந்த ஆணுக்காவது ப்ரொபோஸ் பண்ணின உடனே பொண் அவனை முட்டாள்னு சொன்ன அனுபவம் உண்டா?

மாலதியோ என்னை அவ கண்ணாலயே சுட்டு எரிச்சுடப்போராப்புலே பாத்தா. “நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னா உடனே கிளம்பு, ரெண்டு பேரும் சிதம்பரம் போரோம். உங்க அம்மா, அப்பாவை குஞ்சு தாத்தாவை பாத்து நீ அவா காலில் விழுந்து மன்னிப்பு கேக்கராய், அவா உன்னை மன்னித்தால் உன்னை அங்கேயே கல்யாணம் பண்ணிக்கரேன்”கிரா. எனக்கு அப்போதான் சுரேல்னு உறைச்சது. இத்தனை நாளாய் நான் செஞ்ச தப்பு என்னன்னு விளங்காமலேயே இருந்திருக்கோமேன்னு!

சென்னை வந்துட்டு இங்கேந்து சிதம்பரத்துக்கு ரயில் ஏறியாச்சு. மனசு படபடன்னு அடிச்சுக்கரது. குஞ்சுத்தாத்தாவுக்கு அப்பவே 65 வயசு. “உங்க பேரன் வரேன், கடவுளே அப்படியாவது அவரை உயிரோட என் கண்ணில் காட்டு”ன்னு நடராஜரை வேண்டிக்கரேன். எல்லோரும் என்னை மன்னிக்கணும்னு தில்லை காளியை பிரார்த்திக்கரேன்.

நான் அநாதைன்னு தாத்தா சொல்லலை, நானா நினைச்சுண்டேன். அநாதை இல்லைன்னு இப்போ மாலதி புரிய வச்சுட்டா. 14 வருஷமா நான் திருப்பிக்கொடுக்க வேண்டிய கடன் நிறைய பாக்கி இருக்கு. 

இதுக்கு EMI இன்னும் பல ஜன்மத்துக்கு கட்டியாகணும். கட்டுவேன்.

No comments:

Post a Comment