பூரணி (மனதை தொட்டுவிடும் கதை – 83)
#ganeshamarkalam
பூரணி பிறந்தப்போ எனக்கு 34 வயசு. கற்பகத்துக்கு 29. கல்யாணம் நடந்து 5 வருஷம் கழிச்சுத்தான் பொறந்தா. மாமியார்தான் போன் போட்டு சொன்னா. “ஆத்துக்கு லக்ஷ்மி வந்துட்டா மாப்பிள்ளை! என்ன பேர் வைக்கப்போரேள்? ரெண்டு பேரும் பேசிவச்சிண்டிருக்கேளா? அப்புரம் புண்யாஜனத்துக்கு முன்னாடியே கிளம்பி வந்துடுங்கோ. இங்கே ஒருவாரம் எங்களோட இருக்கிரா மாதிரி”ன்னா. ஒருவாரம்தான் இருக்க விடுவா போலேருக்கு! அப்புரம் கிளம்பிடணுமோ!
நான் வேலை பாக்கரது அஸ்ஸாமில். குடுத்தனம் வச்சதும் நாங்க செஞ்ச முடிவு குழந்தையை கொஞ்சம் தல்ளிப்போடலாமேன்னு. 3 வருஷம் கழிச்சு தோண்ரச்சே நினெச்சாமாதிரி உண்டாகலை. எங்கள் கவலையைவிட அவாத்தில் எல்லோருக்கும் பதட்டம். போன் பேசரச்சேயும், லெட்டர்லேயும் பிரதிபலிச்சது. நான் “ஓண்ணும் செய்யாம” இருக்கிராப்போலேயும் எனக்கு ஏதோ மாளாத குறையிருக்காப்புலேயும் உடனே ஸ்வஸ்தம் செஞ்சுக்கணும்ணும் சிக்னல் விட்டா. நான் பட்ட வேதனையை பாத்துட்டு ஒரு தடவை இவளே “ஆத்துலேந்து போன் வந்தா இனிமேல் எடுக்கப்போரது இல்லை”ன்னுட்டா.
எப்படியோ இவள் வயித்தில் ஒரு கரு உண்டாகித்து.
டிக்கெட் ரிசெர்வ் செஞ்சுட்டு போன் போட்டேன். எடுத்தது மாமியார்தான். “இதோ சித்த இருங்கோ பூரணம் அடுப்பில் இருக்கு ஸ்டவ்வை ஆஃப் செஞ்சுட்டு வரேன்”னா. “மாமீ, பூரணின்னு பேர் வச்சுடலாம், அவ கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்கோ, நாளைக்கு கார்த்தாலே கிளம்பி ரெண்டாம் நாள் ராத்திரி வருவேன்.” அப்படித்தான் பேர் அமைஞ்சது. மனசுக்கு நிறைவா. எங்கள் வாழ்க்கையை பூரணமாக்கிய குழந்தை.
நான் போய்ச்சேர்றத்துக்குள் ஆத்துக்கு வந்தாச்சு. “உள்ளே ரூமில் இருக்கா, முதல்ல குளிச்சுட்டு அப்புரமா போய் கையிலே எடுத்துக்கோங்கோ”ன்னு மாமனார் எச்சரிக்கை. அதுவும் சரிதான்னுட்டு நேரே பாத்ரூம்.
என் மடியிலே அவளை தவழவிட்டதும் ஏதோ உலக அதிசயம் ஒண்ணை என் கையில் கொடுத்துட்டாமாதிரி இருந்தது. துணியில் ஐக்கியப்படுத்தி, முகம் மட்டுமே தெரியராமாதிரி, என் பூரணி கண்ணை மூடிண்டு, தன் கனவுலகில் வந்துட்டு போன உம்மாச்சியை காணோம்னு தேட்ராப்புலே கழுத்தை நெளித்தாள். என் கண்ணில் நீர் கோத்துண்டது. தலையை தூக்கி கற்பகத்தோட சொல்லொண்ணா மயக்கத்தில் விளையாட்டா நான் செஞ்ச சில காரியத்துக்கு இவ்வளவு தெய்வீகமான உயிர்பரிசை எனக்குக்கொடுத்த அவள் உக்காந்துண்டு குழந்தையை பாத்ததும் நான் என்ன செய்வேன்னு கவனிக்கரா. நான் கலங்கினதைப் பாத்துட்டு அவளும் பளபளத்த கண்களாலேயே என்மீது இருந்த காதல் பன்மடங்கானதை சொன்னா.
கிளம்ப 1 நாளே இருக்கச்சே டாக்டரை பாத்துட்டு தடுப்பூசி பத்தி விசாரிச்சுட்டு வரலாம்ன்னு குழந்தையோட போனோம். கிளம்பரச்சே டாக்டர் என்னை தனியா கூப்பிட்டு குழந்தை தவழ ஆரம்பிச்சதும் ஒருதடவை வந்து காண்பிச்சுட்டு போங்கோன்னர். என் நம்பரையும் வாங்கி வச்சிண்டர்.
ஊர்போய் செர்ந்ததும் ஏன் அப்படி செஞ்சர்னு தெரிஞ்சது. 10நாள் கழிச்சு அவரே கூப்பிட்டு தன்னை திரும்பவும் அறிமுகப்படுத்திண்டு, “சார், உங்க குழந்தைக்கு பார்வை குறைபாடு இருக்குமோன்னு சந்தேகப்பட்ரேன், இது நிச்சயமா குழந்தை தவழரச்சே புரியும், தேவையான சிகிச்சை செய்யணும், உங்களை தையார் படுத்திக்கோங்கோ, மெதுவா இதை உங்கள் மனைவிக்கும் தெரியப்படுத்தி ஆகவேண்டியதை பண்ணுங்கோ”ன்னர். வானமே இடிந்து தலையில் விழுந்தது. இதை எப்படி அவளிடம் சொல்லுவேன்? நகர்ந்த நாட்கள் நரகமா போச்சு. ஒரு முடிவெடுத்து அதை செயல் படுத்தினேன்.
வேலையை மாத்திண்டு கோயமுத்தூருக்கே வந்துடலாம்னு, 6 மாசத்தில். “நானே காலி செஞ்சுண்டு வரப்போரேன், அங்கேயே இரு, அப்பாகிட்டே நல்ல வீடா பாத்துக் கொடுக்கச் சொல்லு”. அந்த மகிழ்சியில் அவள் இருந்தா.
நினெச்சாப்போல குழந்தை தவழரச்சே நாற்காலியில், தண்ணீர் குடத்தில், ரெஃப்ரிஜரேடரில் முட்டிண்டது. நான் வந்து குடிவைக்கரத்துக்குள் பூரணிக்கு 1 வயசாச்சு. அவள் நிலைமை எல்லோருக்கும் புரிஞ்சது. கற்பகம் ஒரு கேள்வி கேட்டா. “ஏன்ணா, பூரணிக்கு குணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாள்னா அவளை எப்படி ஆயுஸு பூரா வச்சுப் பாத்துக்கரது?” நான் சொன்னேன், “இப்போ அவளுக்கு நீ ஒரு கண், நான் ஒரு கண், பெரியவளாகி அவளே நம்மளையும் பாத்துப்பா”ன்னேன். எனக்குத் தெரியலை, இவளை அழவைக்கக்கூடாதுன்னு அப்படி சொன்னேனா? 1 மாசம் நிறைய ஸ்பேஷலிஸ்டும் டெஸ்ட்களும் முடிஞ்சு ஒண்ணும் செய்யமுடியாதுன்னு சொன்னப்புரம் என் மனதில் ஒரு வைராக்கியம் ஏற்பட்டு இரும்புமாதிரி உள்ளே புகுந்திண்டது. பூரணிக்காக என் வாழ்க்கையை அற்பணிச்சுடரதுன்னு.
காலம் எல்லா ரணங்களையும் ஆத்திடும்னு சொல்லுவா. உண்மைதான். ஆனா அந்த செல்லக்குழந்தை, என் பூரணி அநுதினம் கண் முன்னாலேயே பார்வை இல்லாம வளைய வரச்சே ஒவ்வொரு க்ஷணமும் மனசில் ரணம் ஏற்படரச்சே அந்த காலமும் காயத்தை ஆற்றி ஆற்றி களைச்சுத்தான் போச்சுதோ? எங்களுக்கு தைரியத்தையும் சகிப்புத்தன்மையும் கொடுன்னு பகவானை வேண்டிக்கரதைத்தவிர எதுவும் தோணலை. ஒரு சமையம் கோவிலுக்குப்போரதில் ஏதும் நன்மை இருப்பதாக எனக்கு விளங்க மறுத்தது. கற்பகம் மட்டும் எனக்கு இல்லாம போன, எங்கள் அழுகை சத்தம் கேக்காத செவுட்டுச்சாமியை சந்திச்சு பிரார்த்தனை பண்ண கோவில் கோவிலா போயிண்டிருந்தா.
பூரணி எல்லாக் குழந்தை போல வளர்ந்தான்னு தான் சொல்லணும். அப்போ தனக்கு ஒரு குறைங்கரதே அவளுக்கு தெரியாதே! தெரிந்ததும் அவள் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள் அபரிதமானது.
5வயசு வரைக்கும் நல்ல குழந்தையையே நாம் சீராட்டி, கவனிச்சு வளர்ப்போம். இவளுக்கும் ஸ்பெஷலா செய்யவேண்டியிருக்கலை. பார்வையை பறிச்சிண்ட கடவுள், மத்த புலன்களை டபுள் ஸ்பெஷலா வச்சு அனுப்பியிருந்தான். நான் வரச்சேகூட கற்பகம் “யார் வாசல்லே”னு கேட்டுண்டே வருவா. ஆனால் என் ஸ்கூட்டர் சத்தத்தையும், மாடிப்படிகளில் என் காலடி சத்தத்தையும் என்னுடையதுதான்னு இந்த பிஞ்சு கண்டுபிடிச்சு அப்பான்னு சொல்லிண்டு தத்தக்கா புத்தக்கான்னு வாசக்கதவை நோக்கி வேகமாக வருவதைப்பாத்து பெரியவாளும் தெரிஞ்சுப்பா.
அவள் காதில் கேக்கும் என் குரல், அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சும் தறுணத்தில் சுவாசிக்கும் என் வாசனை அவளுக்கு கண்ணால் பார்ப்பதுபோல் நினைவில் ஒட்டிண்டது. நாங்கதான் அவள் எங்கே இருக்கான்னு தேடுவோம், அவள் எங்களையும் எங்கள் இடத்தையும் தானே தெரிஞ்சு வந்து சேர்வாள்.
பூரணியை ஏமாத்தவே முடியாது. கொஞ்சம் வளர்ந்ததும் இலையில் போட்டது என்னன்னு சாப்பிட்டுப்பாக்காமலே சொல்லுவா. வாங்கின துணி புதுசா, இல்லை முன்னாடியே உடுத்திண்டதான்னு அவளுக்கு தெரியும். கிளம்பரச்சே “ஏம்பா இந்த பழைய சட்டையை போட்டுக்கராய், தீபாவளீக்கு வாங்கின குர்தா எங்கே”ன்னு கேட்டு ஆச்சர்யப்படுத்துவா. இவளை எந்த ஸ்கூலில் படிக்க அனுப்பரது? எந்த ஸ்கூல் இவள் அறிவுப்பசிக்கு தீனி போடும்? யார் இவளை புது இடத்தில் இவளுக்கு ஒன்ணும் ஆகிடாம பாத்துப்பா? பாத்துண்டாலும் இவளை விட்டுப்பிரிஞ்சு நான் எப்படி இருப்பேன்?
ஆத்துலேயே ஆசிரியர் வந்து பாடம் எடுத்தார். எழுத்தர் உதவியோடு பரீக்ஷை எழுதினா. டிஸ்டிங்க்ஷனோட பாஸ் செஞ்சா. சாதிச்சது அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்ததான்னு தெரியலை, எனக்கு கொடுத்தது. என் பூரணி தெருவில் எந்த குழந்தைக்கும் கம்மியில்லைன்னு எல்லோரிடமும் அடிச்சு சொன்னேன்.
அவளுக்கு ஊனம்னு தெரிஞ்சதுமே ஒவ்வொரு காசையும் சேர்க்க ஆரம்பிச்சேன். நாக்கையும் மனசையும் கட்டுப்படித்தின உடனே சொற்ப சம்பளமும் நிரம்பி வழிஞ்சது. வெறி பிடிச்சாப்புலே சேமிச்சேன். பிற்காலத்தில் இவளோடயே இருக்கணும்னு ஆச்சுன்னா? முன்னெச்சரிக்கை. இவள் வயசுக்கு வந்து சில மாதங்களிலேயே இவள் அம்மா படுத்த படுக்கையா ஆகி உயிர் நீத்தா. அம்மா இனிமேல் இல்லைன்னு இவள் அழுதபோது என் மனம் சிதைந்து போச்சு. என் கற்பகம் இல்லைன்னு அழுவேனா, பார்வை இல்லாத இந்த பூரணிக்கு ஒரு கண் போயிடுத்தேன்னு பதறுவேனா? இவளுக்கு வேணும்கிரதை பாத்துச்செய்ய அவள்தானே சரி?
முன்னாடி ஏற்பட்ட வைராக்கியத்தில் இன்னொண்ணும் சேர்ந்துண்டது, பூரணிக்கு இனிமேல் தாயுமாகணும். முடியுமா?
பூரணி சமத்து, அடுப்படி காரியங்களை ஆரம்பிச்சா. அவளுக்கு ஏதுவா எல்லாம் ஏற்படுத்திகொடுத்தப்புரம் சமையலில் கற்பகத்துக்கு தப்பாம பூரணி நான் இருக்கேன்னு நிரூபிச்சா. நான் வேலையை விட்டுட்டு ஆத்தோட, இவள் உலகமே என்னோடதும்னு வந்தாச்சு. இப்போ இவளுக்கு ஏதாவது நிறந்தர ஏர்பாடு செய்யணுமே? இவள் தாத்தா பாட்டி பொனப்புரம் என் பெற்றோர்களும் இப்போ இல்லை. எனக்கப்புரம் யார் இவளை பாத்துப்பா? இவளை யார் கல்யாணம் செஞ்சுப்பா? அப்படியே செஞ்சு வச்சாலும் கடைசீவரைக்கும் வச்சுக் காப்பாத்துவானா? யார் காரென்டீ கொடுக்கமுடியும்? மனசு தத்தளிக்கும் தினம் தினம். தூக்கமே வராது.
ஒரு நாள் என் நண்பன் சம்பத் எங்கூட அஸ்ஸாமில் இருந்தவன், இப்போ மும்பையில் போன் செஞ்சு என் பிள்ளைக்கு உன் பொண்ணைத்தரியான்னு கேட்டான். அவனுக்கு பூரணியை நன்னாவே தெரியும். “என் பிள்ளைக்கு இதில் பூரண சம்மதம்னும் நீ யோசிச்சு முடிவை சொல்லு.”
பூரணி இதைக்கேட்டுட்டு “முடியவே முடியாது”ன்னு அழக்கிளம்பிட்டா. எனக்குப் புரியலை. “ஏம்மா, தெரிஞ்ச வரன், பையன் நல்ல வேலையில், உனக்கு ஒரு துணை கிடைச்சு நீ சௌக்கியமா இருப்பதை பார்த்துட்டா எனக்கும் நிம்மதியா இருக்குமே, பொண்ணுக்கு இதுதானே நல்ல அர்ரேஞ்ச்மென்ட்?”. “முடியாதுன்னா முடியாதுதான்!”. “அப்படின்னா நீ கல்யாணமே செஞ்சுக்க போறதில்லையா?” “இல்லை, கண்ணில்லாத கல்யாணம் என்ன மகிழ்ச்சியை கொடுத்துடும்? உன்னோடயே இருந்துடரேன், உன்னை விட்டுட்டு எப்படி போரது? எனெக்கொண்ணும் யாராவது கூட வேணும்னு அவசியமில்லெம்மா, நான் ஆம்பிள்ளை, நீ அடிக்கடி வா, அதே மாதிரி நானும் மும்பை வருவேனே.”
சம்பத்துக்கு சொன்னேன், “உன் பிள்ளையை அழைச்சிண்டு இங்கே எங்களோடு சில நாட்கள் தங்கு, நீயும் உதவினால் இவளை கன்வின்ஸ் செய்யலாம்”னு. வந்திரங்கினா. பிள்ளை சுந்தரேசன் ராஜா மாதிரி, நல்ல சிவப்பு, அவ்வளவு தேஜஸ், கடவுள் பக்தி, திறமைசாலியுமா தெரிஞ்சது. ஆனா இவன் அழகில் அவள் மயங்கப் போரதில்லையே?
ஓருநாள் நானும் சம்பத்தும் வெளீலே கிளம்பினோம். “காந்திபுரம் மார்கெட்வரை போயிட்டுவரோம், நீங்க பேசிண்டிருங்கோ.? திரும்பி வரச்சே இவள் அவனுக்கு டின்னர் பரிமாறிண்டிருக்கா. அவனும் ஆசையா கேட்டுவாங்கி சாப்டுண்டிருக்கான். என்ன நடக்கரது? ஆனா என்னமோ நடந்துடுத்துன்னு புரிஞ்சது.
நாங்களும் சாப்பிட உக்காந்ததும் பூரணிதான் சொல்ரா “நாங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கரதா முடிவு பண்ணிட்டோம், கல்யாண காரியத்தை ஆரம்பிக்கலாம்”னு ரெண்டு பேரும் நமஸ்காரம் செஞ்சா. என்ன வினோதம்? என்னால் முடியாததை இவன் எப்படி சாதிச்சான்? சம்பத்துக்கும் குழப்பம்.
தனியா இருகச்சே பூரணிதான் சொன்னா. “நீ பாக்க முடியாதே, எப்படி ஆத்துக்காரியம் எல்லாத்தையும் பாத்துகராய்”னு கேட்டானாம். “உனக்கு என்ன சமையல் வேணூம்னு சொல்லு, பண்ணரேன்”னு கேட்டுட்டு அவன் கண் முன்னாடியே சமைச்சு போட்டேன். “என்னை கல்யாணம் பண்ணிப்பியா”ன்னு கேட்டான். நான் “நீ என் அப்பாவை உன் அப்பா மாதிரி பாத்துப்பாயா”ன்னு கேட்டேன். “சரி”ன்னான். “அதான்”கிரா.
ஏனக்கு சந்தோஷம். ஆனால் நான் அப்படி இவளோடே அவாத்துக்கு குடுத்தனம் போரது? சின்னப்பெண் அறியாம ஏதோ? எப்படியோ என் பூரணி கல்யாணம் ஜாம் ஜாம்னு நடந்தது. நான் கூடப்போகாம எப்படியோ சமாளிச்சுட்டேன். ஆனா இங்கே இருப்பு கொள்ளலைன்னா கிளம்பிப்போயிடுவேன். ஒரு மாசம் இருந்துட்டு வருவேன். அவளும் அப்படி செஞ்சா. ரெண்டு வருஷத்தில் என் மடியில் அவள் பொண்ணை போட்டு மகிழ்விச்சா. என்னடி பேர் வச்சிருக்கன்னு கேட்டதுக்கு “கற்பகம்” அப்படீன்னா. இதையும் அவனை மிரட்டி சம்மதிக்க வச்சிருப்பா.
இப்போ தள்ளாத வயசு. முதுமை யாரை விட்டது. இங்கே யாரொ கொலீக் கல்யாணம்னு மாப்பிள்ளை வர அவளும் தன் 17 வயசு கற்பகத்தோட கேம்ப். எதோ பேச்சு வர, “இந்த வயசில் இங்கே ஏன் தனியா இருக்கே, எங்ககூட வந்துடு”ன்னு வற்புருத்த ஆரம்பிச்சா. நான் “முடியவே முடியாது, உனக்கு அங்கே என்ன குறை, நான் தனியாவே இருந்துட்டு போரேனே”ன்னு சொன்னேன். “ஒரு பெரீய குறை வச்சுட்டேள் அப்பா”ன்னா. பகீர்னது. என் பூரணி மனசுலே என்மேல் குறையா? “என்னம்மா”ன்னுட்டு, என்ன சொல்லப்போராளோன்னு பயத்துடன், அவள் முகத்தை பாக்கரேன்.
“இந்த மாதிரி ஒரு அப்பாவை என் கண்ணால் பாக்கமுடியாதபடி குருடியா பெத்துப்போட்டுட்டையே”ன்னு அழ ஆரம்பிச்சா.
No comments:
Post a Comment