Wednesday, May 27, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 1

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜன்ம பூமி வரை (வட நாட்டுத் திருப்பதிகள்)  பகுதி 1
 ஆண்டு 2005 ...2003 ல் நண்பருடன் வெற்றிகரமாக பத்ரியை தரிசித்து திரும்பிய பின் அதே போல பத்ரி யாத்திரையை நாமே தனியாக குடும்பத்துடன் மேற்கொள்ள திட்டமிட்டேன்..ஆனால் ஆத்துக்காரி இதை விட்டால் தன்னை பல ஆயிரம் கட்டி டிராவல்ஸில் அழைத்து செல்ல மாட்டேன் என உணர்ந்து சம்மதிக்க  இந்த விஷப்பரிட்சைக்கு பசங்கள் (பெண் எம் ஐ டி முதல்வருடம்,பையன் 9th)ஒத்துக்கொள்ளாததால் அக்கா வந்து அவர்களை  வீட்டில் பார்த்துக்கொள்வதென முடிவாயிற்று.

இவள் நண்பனுடன் சென்றது போல கிடைத்த ஓட்டலில் சாப்பிட மாட்டாள் என்பதால் 1)சாப்பாட்டுக்கு பதில் சப்பாத்தி ,பழங்கள் பன் பட்டர் அல்லது பட்டினிக்கு தயாராயிருக்க வேண்டும்... 2) 1+3 செட் உடையுடன் 3)அ வரவர் லக்கேஜை  சுமந்து 4) எந்த ஊர்தியிலும் ஏறவும் 5) கிடைத்த விடுதியில் தங்கிக்கொள்ளவும் 6) போகும் ஊர் எனது mood க்கும் வசதிக்கும் ஏற்றார் போல மாறக்கூடும் என்பது போன்ற கன்டிஷன்களுக்கெல்லாம் தலையாட்டி வைத்தாள். 

நான் அரசு மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  மே மாதம் விடுமுறை கிடையாது. . பள்ளிப்  பொறுப்பை உதவி த. ஆ விடம் ஒப்படைத்து முறைப்படி விடுப்பிற்கு விண்ணப்பித்து பயணத்திற்கு மே 4 முதல் 15 வரை (+2 ரிசல்ட் போது பள்ளியில் இருக்க வேண்டும்)திட்டமிட்டேன். 4 ல் டில்லி செல்வது எனவும் 14 ல் ஆக்ராவில் ரயில் ஏறுவது என முடிவு. ஆனால் onward journey confirm...return waiting list..நண்பருடன் சென்று ரிடர்ன் டிக்கட் கூட இல்லாமல் வந்த தைரியத்தில் எப்படியும் இடம்  கிடைத்து விடும் என அசட்டு தைரியத்தில் கிளம்பினோம். 

 மொத்தம் மூன்று பேக்..(ஆளுக்கு ஒரு ட்ராவல் பேக் மற்றும் சாப்பாட்டுப் பை..).அந்தமான் எக்ஸ்பிரஸ் மாலை 4.30 க்கு கிளம்பியது. ஜன்னலோர சீட்டில் அலகாபாத் மாணவன். எதிரே ரிசர்வேஷன் இல்லா தமிழ்க்குடும்பம்.  டிடி ஆரிடம் 300/- கொடுத்து இடம் பெற்றார்கள்...

எடுத்துச்சென்ற புளியோதரை தயிர் சாதம் இட்டலி கூடுதலாக  நாக்பூரில் ஆரஞ்சு பழம் வாங்கி புளிப்பு தாங்காமல் விழுங்கி வைத்தோம். இரண்டு இரவு ஒரு பகலுக்குப்பின் டெல்லி அடைந்தோம். பத்ரி நாத் பயணத்திட்டம் என்றாலும் ஆறு மாத மூடலுக்குப்பின் கோயில் சரியாக மே மாதம் எந்த தேதி திறக்கும் என தெரியாது. அப்பல்லாம் (2005) கூகுள் இருந்தாலும் அடியேனிடம் ஸ்மார்ட் போன் (ஏன் நோகியா பட்டன் போன்கூட)இல்லை..துணிந்து ஹரித்வார் போய் பார்த்துக்கொள்ளலாம் என ஒரு ரிக்‌ஷாவில் ஏறி ISBT பஸ் ஸ்டாண்ட் செல்ல அரை குறை இந்தியில் 30/- ரூபாய் பேரம் பேசினேன்  முதன்முதல் ஆத்துக்காரிக்கு டில்லியை அறிமுகப்படுத்தினேன் அவள் கனவுலக டில்லி(சினிமாவில்) ,,ரிக்‌ஷாவாலா செல்லும் குறுக்குப்பாதையின் அழுக்குத் தோற்றத்தில் சின்னா பின்னமானது. பஸ் ஸ்டாண்டில் சென்னைக்கு STD போட பெல் மட்டுமே அடித்தது. (அது ஒரு சிக்கன தந்தி. தினம் நாங்கள் போகுமிட மெல்லாம் ஒரே ஒரு டெலிபோன் பெல் மட்டும் அடித்தால் அதை எடுக்காமல் அப்பா அம்மா சௌகரியம் என தெரிந்து கொள்ளனும். எதாவது பிரச்னைன்னா மட்டும் விடாமல் அடிப்போம்.)லைன் கிடைக்கவில்லை என சொல்லி வெளியே வந்து ஹரித்வார் பஸ் ஏறினோம். 

மாலை நான்கு மணிக்கு ஹரித்வார். ரிக்‌ஷாவாலா 5 ரூபாய்க்கு நல்ல லாட்ஜில் கொண்டு விடுவதாக சொல்ல (அவன் கமிஷனுக்காக பாடாவதி லாட்ஜின் விடுவான் எனக்கா தெரியாது) நாங்கள் ஸ்டேஷனில் இறங்கிக்கொண்டாம். 

ஆத்துக்காரி பயங்கர டயர்ட் மற்றும்  கோபத்தில்…. அவளை சமாதனப்படுத்தி 3 லக்கேஜையும் பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு கங்கைக்கரையோரம் 100/- க்கு ஒரு தர்மசாலாவை தேடி புக் செய்து லக்கேஜை வைத்து விட்டு அவள் கோபம் தணிய நடத்தி அழைத்து செல்லாமல் தாராள மனதுடன் ரூ  6/- க்கு ஒரு ரிக்‌ஷா பேசி கங்கைக்கரை அழைத்துச்சென்றேன். 
    
ஹரித்வாரில் விஜாரித்ததில் பத்ரி கோயில் இன்னும் திறக்கவில்லை எனவும் அது திறக்கும் வரை காத்திருந்தால் பிளான் படி 14 ஆக்ரா திரும்பாவிடில் வெயிட்டிங் லிஸ்ட் ட்ரெய்ன் கூட கிடைக்காது எனவும் +2 ரிசல்ட்க்குள் சென்னை திரும்ப இயலாது எனவும் தெரிந்து அதிர்ச்சியானோம்..

    அப்ப 14 ந்தேதி வரை எங்க சுத்தறது (இது நான்)எந்த ஷேத்திர பெருமாளை காட்டுவேள் (இது அவள்… ) 

                  தொடரும்…

இரவில் ஹரித்வார் கங்கை நதி மற்றும் மணிக்கூண்டு....

No comments:

Post a Comment