Friday, May 29, 2020

இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 3

 இராம ஜென்ம பூமி முதல் கிருஷ்ண ஜென்ம பூமி வரை பகுதி 3
——///———-//————///—
20 கிமீ தூரத்துலதான் டேராடூன். அங்க தங்கறதுன்னா நம்ம சொத்தை வித்துதான் ரூம் ரென்ட் கட்டணும்.(அவ்ளோ காஸ்ட்லின்னு அர்த்தத்துல ௳ஜோக் அடிக்றாராமாம்) அங்கேர்ந்து ரிஷி கேஷ் பக்கம். நாம ஹரித்வார் சத்திரத்தை காலி பண்ணாம இன்னிக்கு ஃபுல்லா ஊர சுத்திப்பாத்துட்டு ராத்திரி ஹரித்வார் வந்துட்டு நாளைக்கு போறதப்பத்தி பிளான் பண்ணலாம்கிறார். ஒரு லக்கேஜ்னாலும் தூக்கிண்டு சுத்தறது கழுத்த வெட்டறது..ஹாயா சுத்தலாம்னு சரிங்கறேன்.  

டேராடூன் வந்தடைந்தோம். . மலையின் அடிவாரமான அந்த ஊர் எங்கள்  மேல் குளிர் போர்வை போற்றியது. ரயில் நிலையத்தின் அருகிலேயே ரூம் இருக்கு.  இரவு உணவு நம் ஊர் போல கிடையாது. சப்பாத்தி ஒன்று 5 ரூபாய், குழம்பு ஒன்று 150 ரூபாய். இந்த விலை கட்டுப்படியாகவில்லை என்பதால் 15 ரூபாய்க்கு மூன்று சப்பாத்தி வாங்கிக்கொண்டு தொட்டுக்க இலவசமாக ஊறுகாய் வாங்கிக்கொண்டு பசியாறினோம். 

முசோரி மலையிலிருந்து எழும் சூரியனைக் காண காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து பார்க்கணும்.

சூரியனை ரசித்தபடி துர்கை அம்மனுக்காகக் காத்திருந்த சிவப்பு நிற ஆடைகளும், வழி நெடுக பெய்யக் காத்திருக்கும் மலர்களும் என அந்த இடமே திருவிழா உணர்வைத் தந்தது.

ஒரு பூக்கடையில் நின்று இவர் படமெடுக்கும்போது கடைக்காரர் ஹிந்தியில் ஏதோ கேட்க, `எனக்குப் புரியவில்லை' என, என் ஹிந்தியில் நான் சொன்னேன். உடனே பத்தாவது படிக்கும் அவரின் பொண்ணை அழைச்சு அதே கேள்வியை ஆங்கிலத்தில் கேட்கச் சொன்னார். அவளோ அதை ஆங்கிலத்தில் என்னிடம் கேட்க, அந்த அப்பன் முகத்தில் இருந்த புன்னகையும் பெருமையும் கடையில் வாடிய மலர்களையெல்லாம் உயிர்ப்பிச்சாப்ல இருந்தது.

டேராடூன்ல பார்க்கறதுக்கு ஒன்னும் இல்ல ஒனக்கு ஃபால்ஸ்னா பிடிக்குமே சஹஸ்ர தாரா போலாம்னு சொல்லி எங்கயோ விஜாரிச்சு ஒரு டவுன் பஸ்ல ஏத்தி விடறார்.
.
ஸஹஸ்ரம் என்றால் ஆயிரம். தாரா என்றால் நீர் கொட்டுதல். (தாரை தாரையாய் கண்ணீர் விட்டான் என்று சொல்வதில்லையா?)

பெயருக்கேற்ப பல கிளைகளாக நீர் பிரிந்து கொட்டுகிறது. குற்றாலம் ஹொகேனக்கல் ,ஜோக் என குளித்து இருந்தும் மனம் நிறைந்து இமயத்து நீர் வீழ்ச்சியிலும் நீராடிய பெருமிதம் தோன்றுகிறது

காலையிலேர்ந்து ஒன்னும் சாப்பிடலை. டேராடூன்ல இவர் காட்டின ஓட்டல் கண்றாவி... மாட்டேனுட்டன். ஒரு ஜூஸ்தான் ப்ரெக்பாஸ்ட். நல்ல வேளை வரும் போது எடுத்துண்டு வந்த டப்பர் வேர்ல கெட்டி மோர் வாங்கிண்டு வந்தேன் வேற வழி இல்லாம அருவிக்கரைல எதோ ஓட்டல்ல சாதம் மட்டும் வாங்கி மோர குத்திண்டு விழுங்கி வக்கறேன். காரம் ஜிவ்னு ஏறரது .வெறும் சப்பாத்திய மட்டும் பிச்சுப்போட்டுக்கறேன். இதுக்கு 32/- .கொடுத்து தாலி வாங்காம ரெண்டு சப்பாத்தி வாங்கிருப்பேனேன்னு முறைக்கறார்.  அங்கேந்து ரிஷிகேஷ் பஸ் ஏறரோம். 

ராவணனைக் கொன்ற தோஷம் நீங்கிய லட்சுமண் கோயில், லட்சுமணன் ஜுலா எனப்படும் பெரிய தொங்கு பாலம், பத்ரிநாத் கோயில், பெரிய லிங்க பானத்தைக் கொண்ட அகிலேஸ்வர் கோயில், துர்கா கோயில், திரயம்பகேஸ்வரர் கோயில்,   ராமன் ஜுலா எனப்படும் மற்றொரு பெரிய தொங்கு பாலம், பத்ரி நாராயணன் என்கிற சத்ருகனன் கோயில்னு எல்லாத்துக்கும் அழைச்சிண்டு போறார். அம்லாஜெல்லி,சுட்ட அப்பளம்,பாப் கார்ன் வாங்கித்தர்றார். 

இனி அவர் பார்வையில். ….

கங்கை நதி மிக அகலமாக இருந்தது, இரு கரைகளுக்கும் செல்ல படகு சவாரி இருக்கின்றது மற்றும் ராமன் ஜுலா, லக்ஷ்மன் ஜுலா என்று இரண்டு தொட்டில்கள்(பாலங்கள்), இருக்கின்றது.(லக்ஷ்மன் பாலம் எங்கிருக்கின்றது என்று ஒருவரை நான் கேட்க பாலம் அல்ல தொட்டில் என்று சொல்லவேண்டும் என்று முறைத்துக்கொண்டு சென்றார்), ஊரில் பாதிக்குமேல் வெளிநாட்டவர், அவர்களில் பெரும்பாலோனோர் காவி உடையில் அலைந்துகொண்டிருந்தனர். நிறைய சாமியார்கள் காவிவுடையில் இருந்தனர். மற்றும் திரும்பி இடம் எல்லாம் தியானபயிற்சி விளம்பரங்கள் இருந்தது.

ராமன் ஜுலா அருகில் இருந்த கோவிலுக்கு சென்றோம், பிறகு தேநீர் குடித்துவிட்டு கங்கையின் கரையில் மெதுவாக நடந்து சென்றோம். சிறு சிறு குழுக்களாக தியான பயிற்சி செய்துகொண்டிருந்தனர், ஒருசில வெளிநாட்டவர் அதிகமுடி வளர்த்துக்கொண்டு சாமியார் போல் காட்சியளித்தனர். சிறிது தூரத்திலேயே ஆற்று மணலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சுற்றிருந்த மலைகள் கங்கைக்கு மேலும் அழகு சேர்த்தது. இங்கிருந்து தான் இமயமலை ஆரம்பிக்கிறது என்று தெரிந்ததும் ஒருவித மகிழ்ச்சி என்னுள் பரவியது, நதியின் சத்தத்தை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை அவ்வளவு அமைதியாக இருந்தது.

சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லலாம் என்று முடிவெடுத்து ஆற்று மணலில் தனி தனியே அமர்ந்துகொண்டோம். எதிர் கரையில் முட்செடிகளுக்கு நடுவே யாரோ அமர்ந்திருப்பது போல் தோன்றியது ஆற்றின் அகலம் அதிகம் என்பதால் சரியாக தெரியவில்லை, உடனே புகைப்பட கருவியை கொண்டு ஜூம் செய்து பார்க்க ஒரு யோகி தியானம் செய்துகொண்டிருந்தது தெரிந்தது, அனால் முட்செடிகளுக்கு நடுவில் அந்த இக்கட்டான இடத்தில கடினப்பட்டு சென்று தியானம் செய்வதன் நோக்கம் எனக்கு புலப்படவில்லை,

கங்கை நதியில் குழந்தை போல் சிறுது நேரம் விளையாடிவிட்டு மணலில் வந்தமர்ந்தேன். சிறிது நேரத்திலேயே அமைதி என்னை கவ்விகொண்டது நன்றாக உணரமுடிந்தது ஒருமுறை அங்கு வந்தவர் மீண்டும் மீண்டும் வருவதன் காரணம் ஏதோ புரிந்தது போல தோன்றியது. ஆனால் அதிகமானோர் காவயுடையில் திரிவதன் காரணம் புலப்படவில்லை. ஆதவன் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருப்பதை உணர்ந்து லக்ஷ்மன் ஜூலாவை நோக்கி பயணித்தோம். சிறிது நேர நடைபயணத்திற்கு பின் லக்ஷ்மன் ஜூலாவை அடைந்தோம். அருகில் இருந்த கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் அனைத்து வகையான லிங்கங்களும் இருந்தது. கோவிலின் மேல் தளத்திலிருந்து பார்க்க கங்கையின் வளைவு, லக்ஷ்மன் ஜுலா மற்றும் கங்கையில் ராப்டிங் செய்து கொண்டிருப்பவர்களை பார்க்க அழகாக இருந்தது.

லக்ஷ்மன் ஜூலாவை கடந்து சாலை வழியாக (எதிர் கரை), ராமன் ஜூலாவை நோக்கி பயணித்தோம். வழியில் லக்ஷ்மன் சிலையை கடக்கும் பொழுது. சுயநலமில்லாத ஒரு நல்ல மனிதன் என தோன்றியது சிறிதுநேர நடைபயனத்திருக்கு பின் ராமன் ஜூலாவை அடைந்தோம் அறைக்கு செல்வதற்கு முன் ஒரு உணவகத்திற்கு சென்றோம். வெளிநாட்டவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போல் தோன்றியது ஆனால் அதிக தாடியுடன் எங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த வெளி நாட்டவருக்கும் எங்கள் கதி தான்.

எதிரில் இருந்தவர் தன்னை ஈரோப்பில் உள்ள ஒரு சிறிய நாட்டை சேர்ந்தவன் என்று அறிமுகபடுத்திக்கொண்டார். சில வருடங்களுக்கு முன் வந்தபொழுது இருந்த அமைதி இப்பொழுது இங்கு இல்லை மற்றும் மக்கள் தொகை அதிகரித்துவிட்டது அதனால் அமைதி போய்விட்டது என்று குறைபட்டுக்கொண்டார்.

ராமன் ஜுலா அருகில் இருக்கும் கடைகளில் ருத்ராட்சம், ஸ்படிக மாலை கிடைக்கின்றது ஆனால் அசலா என்று பார்த்து வாங்குவது உங்கள் சாமர்த்தியம்…  மீண்டும் பஸ் பிடித்து ஹரித்வார் வந்தோம் 

எப்படியோ பத்ரி நாத் போவதாக அழைத்து வந்து இரண்டு நாட்களை தள்ளியாயிற்று..இன்னும் எட்டு நாட்கள் எந்தெந்த ஊருக்கு எப்படி போவது என்பதைவிட ரெண்டு நாளா இவள் ஒன்னும் சரியா சாப்பிடல. இவளுக்கு சாப்பிட என்ன வாங்கித்தருவது என்ற கவலை என்னை ஆட் கொண்டது.  
                   தொடரும்…






1)லஷ்மண் ஜூலாவில் டயர்டாக2)ஸஹஸ்ரதாராவில் ..3)கங்கையில் ஆரத்தி4)ரிஷிகேக்ஷ்
வெங்கடேஸ்வரா கோயில்5)சந்த்ர மௌலீஸ்வர் கோயில்

No comments:

Post a Comment