டில்லி முதல் கஜுராஹோ வரை ஒரு சாகசப்பயணம்
மத்தியப்பிரதேசத்தின் சிறு நகரம் கஜுராஹோ, இந்தியர்களின் மிகச் சிறந்த கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புகழ்பெற்ற இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கஜுராஹோவில், மத்திய கால இந்து மற்றும் சமணக் கோயில்கள் அதிக அளவில் உள்ளன. கஜுராஹோ தொகுதி நினைவுச்சின்னங்கள், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தலங்களுள் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கஜுராஹோ என்ற பெயர், கர்ஜுராவாஹகா என்ற பெயரிலிருந்து மருவியாகும். இது சம்ஸ்கிருதச் சொல்லான கர்ஜூர் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதற்குப் பேரீச்சம்பழம் என்று பொருள்.
ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதிற் சுவரால் சூழப்பட்டது. ஒவ்வொரு வாயிலையும் இரு தங்க பேரீச்ச மரங்கள் அலங்கரிக்கின்றன. கஜுராஹோ கோயில்கள் 950-ம் ஆண்டு முதல் 1150-ம் ஆண்டு வரையிலான 200 ஆண்டு கால கட்டத்தில் கட்டப்பட்டவை சான்டெலா முடியரசர்கள் இவற்றைக் கட்டினார்கள். இங்கு முன்பு 80 இந்துக் கோயில்களுக்கு மேல் இருந்தன. இப்போது 25 கோயில்கள் மட்டுமே ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை சுமார் 20 சதுர கி.மீ. பரப்பளவில் பரவியுள்ளன. இக்கோயில்கள் மணற்பாறைகளால் ஆனவை. கலையம்சம் நிரம்பிய நுணுக்கமான சிருங்கார சிற்பங்கள் இந்தக் கோயில்களில் காணப்படுகின்றன. மனிதர்களால் இத்தனை நுணுக்கமாக வடிக்கமுடியுமா என்கிற பிரமிப்பை இந்தச் சிற்பங்கள் ஏற்படுத்துகின்றன.
இந்த ஸ்தலத்திலுள்ள கோயில்கள் மேற்கு கிழக்கு மற்றும் தெற்குப்பகுதி கோயில்கள் என மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மேற்குத் தொகுதியில் முழுக்க முழுக்க இந்து தெய்வங்களுக்கான கோயில்கள் உள்ளன. இவற்றில், கண்டரிய மஹாதேவா கோயில் மிகப் பெரிய கம்பீரமான கோயிலாகும். கஜுராஹோ கிழக்குத்தொகுதி கோயில்களில் இந்துக் கோயில்களும் ஜைனக்கோயில்களும் அடங்கியுள்ளன.
அங்கே 85 கோயில்கள் இருந்த நிலையில், இப்போது 20 ஆலயங்கள் மட்டுமே உள்ளன.சிவன் சார்ந்த 6 ஆலயங்களும், 8 விஷ்ணு ஆலயங்களும், விநாயகர் கோயில் ஒன்றும், ஒரு சூரிய கோயிலும், 3 சமணர் கோயில்களும் இருக்கின்றன.
13 ம் நூற்றாண்டின் துவக்கத்தில், டெல்லி சுல்தான் அங்குபடையெடுத்துச் சென்று சண்டேல மன்னர்களை வீழ்த்தும் வரை இக்கோயில்கள் கோலாகலமாக இருந்தன
1830 ல் பிரிட்டிஷ் காரர்கள் அப்பகுதிக்கு சென்று, ஆலயத்தையும் சிற்பங்களையும் பார்த்து பரவசமடைந்தனர்... அதன் பின்னர் கஜுராஹோ சிற்பங்கள் உலகப்பிரபலமாகத் துவங்கின.கேதார்நாத், கயா, காசி வரிசையில் சிவபெருமானுக்கு உகந்த இடமாக கஜுராஹோ ர்க்கப்பட்டுள்ளது.சிவபெருமானுக்கு திருமணம் நடந்த இடமே இது தான் எனவும் கூறப்படுகிறது.
பாலியல் ரீதியான சிற்பங்களுக்கு இக்கோயில் பெயர் பெற்றிருந்தாலும், அங்கே 10 சதவிகித சிற்பங்கள் மட்டுமே காமம் சார்ந்த சிற்பங்களாக உள்ளன.. பாலியல் சார்ந்த பாடல்களும் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன. ஐந்து கோயில்களில் மட்டுமே பாலியல் சம்பந்தமான சிற்பங்களைக் காண முடியும்.
சரி ஆன்மிகத் தலத்தில் எதற்காக இத்தகைய பாலியல் சிற்பங்கள்?
தொடரும்
No comments:
Post a Comment