Monday, May 11, 2020

பார்க்

பார்க் (season 2?) #ganeshamarkalam

செத்துப்போனவாளை ஈஸியா திருப்திப்படுத்திடலாம். கொஞ்சம் எள்ளும் தண்ணீரும் இருந்தால் போதும். ஆனால் உயிரோட இருக்கரவாளைத்தான் சந்தோஷப்படுத்தறது கஷ்டம். ஆதுவும் ஆத்துக்காரியை? ரொம்பவே! முடியலை. அதான் பார்க் பென்சில் உக்காந்திருக்கேன்.

நேத்து சாயங்காலம் மொலு மொலுன்னு ஒரு பிடி பிடிச்சாளே பார்க்கணும். அவளை நான் கவனிச்சுக்கிறதில்லையாம். என்னமோன்னு நினெச்சு ஏமாந்து அவளை எனக்கு பண்ணி வச்சுட்டாளாம். களையா கட்டிக்க நாலு புடவையில்லை. நகை நட்டுன்னு அவள் போட்டுண்டு வந்ததைத் தவிர ஒரு குந்துமணிகூட சேரலை. 3 வருஷம் ஆச்சு, குழந்தையும் உண்டாகலை. கோவில் குளம் அரசமரம்னு சுத்த வச்சுட்டேனாம்.

இத்தோட நிருத்திடாம அக்கம் பக்கத்தில் தலைகாட்ட முடியலை, ஒரு சினிமா ட்ராமான்னு அழைச்சிண்டு போனதில்லைன்னு எல்லாராத்துலேயும் கேக்கர புலம்பலையும் சேர்த்துண்டா. ஸ்டோர் மாதிரி ஒண்டுக்குடுத்தன ஜாகை. காத்தோட்டம் இல்லை. கரெண்ட் சிலவுன்னு ஃபேனைக்கூட சுத்தவிட மாட்டேள். சித்தே உரக்க பேசினா பக்கத்தாத்தில் கேக்கும். மானம் போகுமாம். இவ போட்ட சத்தத்துக்கு கப்பலேறிய மானம் ஏழு தலைமுறைக்கு திரும்பாது.

பதிலே பேசாம தூங்கிட்டேன். கார்த்தாலே எழுந்ததும் இன்னொரு பிடி பிடிக்கலாம்னு “இன்னைக்கும் உங்களை எங்கேயும் கூப்பிட்டனுப்பலையா”ன்னு ஆரம்பிச்சா. “இதோ கிளம்பிண்டே இருக்கேன்”னு பொய் சொல்லிட்டு நங்குன்னு வச்ச காபியில் தொண்டையை நனச்சிண்டு பார்க்குக்கு வந்துட்டேன். 7 தான் ஆரது. இன்னும் சிலர் வாக்கிங்க் செஞ்சுண்டிருக்கா. என்னைக்குமில்லாம ஒரு பிராம்ணன் பஞ்சகச்சத்தொட, கையில் பை, உள்ளே தர்பைக்கட்டு சகிதம் பட்டை பட்டையா விபூதி இட்டுண்டு பார்க் பென்சில் உக்காந்திருப்பதை ஒவ்வொரு சுத்திலும் கூர்ந்து பாத்துண்டு. வாஸ்தவமா என்னை இன்னைக்கு யாரும் கூப்பிடலை. ஏதோ காசு பாக்கலாம்னா பிராப்தம் எப்படியோ?

நான் சேதுராமன். அதிகம் வித்வத் இல்லை. ஏதோ சில மந்திரங்கள் சொல்லுவேன். வேதம் படிச்சு என் தாத்தா மாதிரி பெரீய கனபாடிகளாய் வருவேன்னுட்டு என் அத்தை தன் பொண்ணை எனக்கு கொடுத்துட்டா. ஆரம்பத்தில் கமலம் ஆசையாத்தான் இருந்தா. அப்புரம் செய்வினை வச்சாப்புலே தினம் ஏதாவது வாக்குவாதம், ஒப்பாரி. சண்டை போட எப்படித்தான் பாயின்ட் பிடிப்பாளோ. பிடிச்சுட்டா கையில் வச்சிண்டு ஆடுவள். நானும் என்னால் முடிஞ்சதை சம்பாதிச்சு அவள் கையில் தரேன். அவள் அபிலாஷைகளுக்கு பத்தலை. பெரீய பிஸியா இருக்கிர சாஸ்த்ரிகள் என்னையும் அவா போர காரியங்களுக்கு கூட அழைச்சிண்டு போவா. நானா தனியா போரதில்லை. எல்லா மந்திரமும் தெரியாது. போர இடத்தில் எல்லா ஒத்தாசையும் செய்வேன், என்னை விஷ்ணுவா உக்காத்துவா, 400, 500 தேறிடும். கல்யாண விசேஷங்களுக்கு லம்பா. மார்வாடி கடை திறப்பு, தீபாவளி பூஜைன்னா நல்ல வருமானம்.

வாழக்காய், அரிசி பருப்பு, வெல்லம், வேஷ்டி துண்டுக்கு பஞ்சமில்லை. புதுசு புதுசா புடவைக்குத்தான் வழியில்லை. குழந்தை இல்லையேன்னு துக்கமா இருக்கும். இன்னொரு ஜீவன் வந்தால் என் நிலமையில் எப்படி பராமிப்பதுன்னு பயம் வரும். கமலத்துக்கு அதுவேற நான் கையாலாகாதவன்னு. கையால ஆகிர காரியமா அதுன்னு ஒருதடவை டபுள் மீனிங்க் ஜோக் அடிச்சுட்டு திட்டுவாங்கினேன்!

நாளையிலேந்து மாஹாளய பக்ஷம் ஆரம்பம். நிச்சயம் நிதி நிலமை உயரும். வரதைப்பொறுத்து கமலத்துக்கு ஏதாவது வாங்கித்தரணும். தீர்மானம் செஞ்சுண்டு என்னோட நோகியா போனில் சார்ஜ் இருக்கான்னு செக் பண்ரேன். யாராவது சாஸ்த்ரிகள் கூப்பிட்டா? நான் உக்காந்த பென்ச்சில் வெய்யல் விழ எழுந்து இன்னொரு பென்ச்சுக்கு போரேன்.

அங்கே ஏற்கனவே ஒரு மாமா உக்காந்திண்டிருக்கர். வயசு 85க்கு மேலே இருக்கும். “நான் சந்தானம், நீங்க?” சொல்ரேன்.
“நான் உங்களை இங்கே பார்த்ததில்லையே?” “இருக்காது, நான் வரதேயில்லை, இன்னைக்கு முதல் தடவை.” “என்ன பண்ரேள்?” “புரோகிதம். காரியங்களுக்கு போரேன். போன் வரும் அதான் இங்கே உக்காந்து அட்டெண்ட் பண்ணலாம்னு.” அவர் என்ன பாண்ரார்னு கேட்கத் தோணித்து. கேக்கலை. இந்த வயசில் என்ன பண்ணப் போரார்!

பாக்கிரத்துக்கு நல்ல பழுத்த பழம் மாதிரி. கம்பீரமான முகம். அட்லீஸ்ட் ஒரு காலத்தில் அப்படி இருந்த அறிகுறிகள் தெரியறது. நல்ல சிவப்பு. வேஷ்டியும் நல்ல ஃபுல்ஹாண்ட் சட்டையும். “வாக்கிங்க் வந்தேளா?” “ஆமாம். அதோ பாருங்கோ என் கொள்ளுப்பேரன் ஓடரான். அவன் அழைச்சிண்டு வந்தான்.” 8 வயசு வாண்டு. தினம் வராராம். கூட யாராவது வரதுன்னாத்தான். பேத்தியாத்தில்தான் வாசம். ஆத்துக்காரி போய் 8 வருஷம். ஒரே பொண் அம்பாசமுத்திரத்தில். இவரை நான்தான் வச்சுப்பேன்னு பேத்தி கடலூருக்கு அழைச்சிண்டு வந்துட்டாளாம்.

மாமாவே எல்லாத்தையும் சொல்லி. நானும் என்னை பத்தி சொன்னேன். எனக்கு யார் யார்னு. என் கதை டக்குன்னு முடிஞ்சது. தாத்தா கனபாடிகள். அப்பா தந்தி ஆபீஸில் இருந்தர். அவருக்கு பிராம்ணனா இருப்பதே பிடிக்கலை. சந்தி, சிரார்த்தம் எல்லாம் செய்யமாட்டார். நம்பிக்கையில்லை. அவருக்கப்புரம் நான் இந்த லைனில். படிப்பு கம்மி. என்னமோ தெரியலை சந்தானம் மாமாவோட பேசிண்டிருக்கணும்னு மனதில் பட்டது. சித்தநாழியில் கிளம்பிப் போயிடப்போரார். “தினம் எத்தனை மணிக்கு இங்கே வருவேள்?” “சரியா 630க்கு வரதா இருந்தா வந்துடுவேன்

. இதே பென்சில் பாக்கலாம்” அப்போதான் போன் வந்தது.

“நாளைலேந்து வேலை சரியா இருக்கும், தினம் கரெக்டா 8 மணிக்கு திருப்பாதிரிபுலியூர் ராஜகோபுரம் முன்னாடி கானரா பாங்க் ATM முனையில் நின்னா பைக்குலே அழைச்சிண்டு போயிடுவேன்”. கணபதி சாஸ்த்ரிகள் சொன்னர். செய்யரேன்னு சொன்னேன். எங்காமும் இந்த பார்க்கும் கிட்டக்கேதான். இங்கே வந்துட்டு சித்தேநாழி கழிச்சு போனா கணபதி மாமாவைப் பிடிச்சுடலாம். சந்தானம் மாமாவோட பேசினா மனசுக்கு நிம்மதியா இருக்கும்னு தோணித்து. அவர் கிட்டேயும் சொன்னேன். “பேஷா வாங்கோ”ன்னுட்டு கிளம்பினர்.

தினம் நான் சீக்கிரம் குளிச்சுட்டு ரெடியாகி நானும் கச்சேரிக்குப் போரேன்னுட்டு பார்க்குக்கு வந்துடுவேன். சந்தானம் மாமா கொள்ளுப்பேரன் கையைப்பிடிச்சிண்டு வரத்துக்கு சரியா இருக்கும். பேசிண்டிருப்போம். சரியா 745க்கு நான் கிளம்பிடுவேன். என்ன பேசுவோம்? எதைபத்தி வேணும்னாலும். மனம் போன போக்கில். மாமா நன்னா படிச்சவர்னு ரெண்டாம் நாளே தெரிஞ்சுடுத்து. என்ன கேட்டாலும் அவருக்கு தெரியறது. ஆனா கம்மியாத்தான் பேசரார். குழந்தைமேலே ஒரு கண் வச்சிண்டு. குழந்தை பேர் பிரணவ். எங்கிட்டேயும் ஒட்டிண்டான். முதல் தடவை என் குடுமியை சித்தநாழி பார்த்தான். அப்புரம் அது அவனுக்கு பழகிடுத்து.

ஒருநாள் என்னை அறியாமல் என் கஷ்டங்களை மாமாகிட்டே கொட்டிட்டேன். என்னையே வச்சகண் வாங்காமல் பார்த்துண்டு நான் சொல்வதை கேட்டுண்டிருந்தர். “சேதுராமன், நீங்க அனுபவிக்கற கஷ்டம், பணப்பற்றாக்குறை, ஆத்துக்காரிகிட்டே திட்டு, ஏதாவது வரும்படி வராதான்னு ஏங்கிண்டு காலத்தை கழிக்கறது, சந்ததியில்லைன்னு மனசு தவிப்பது இதெல்லாம் பலபேருக்கும் வாய்ச்ச வாழ்க்கை மாதிரிதான் இருக்கு. ஒவ்வொருத்தர் ஒவ்வொருவிதமா இந்த கஷ்டத்தை அனுபவிக்கரா. தீர்வு கிடைக்கறதோ இல்லையோ, பழகிப்போயிடறதுன்னுதான் சொல்லணும்.”

“இதுக்கு எல்லாம் ஒரு விடிவுகாலம் உண்டான்னு தெரிஞ்சுக்கணும் மாமா. பழகிடும்னு எப்படி? நான் செய்யவேண்டியாதை செய்யலையோன்னு கவலையாயிருக்கு”
“நீதான் வேதம் படிச்சிருக்கே? உனக்குத் தெரியாதா? இதுக்கு காரணம், விமோசனம்னு அதில் சொல்லியிருக்கா?” எங்கிட்டேயே கேட்டுட்டர். “தெரியலையே! நான் அவ்வளவா படிக்கலை, ஆனா வேதமோ சாஸ்திரங்களோ தெரியாதவாளுக்கு எங்கேந்து பதில் கிடைக்கும்?” பதிலுக்கு அவரை மடக்கரேன்.

“சரி, வேதத்தை இழுக்க வேண்டாம். மாதா, பிதா, குரு, தெய்வம்னு சொல்ரோமா இல்லையா? அதுக்கென்ன அர்த்தம்?” “தாய் தகப்பனாரை முதலில் வச்சுட்டு அப்புரம் குருவையும் அதுக்கப்புரம் தெய்வத்தையும் சொல்ரா.” “அப்படி இல்லாம இதை ஏறுமுகமா சொல்லியிருந்தால்? கடவுள் எல்லாத்துக்கும் உசத்தின்னு?” குழப்பராரே! நாம படிச்சபடி. அம்மாதானே உசத்தி? புரியலையேங்கிரேன். “அதை விடுங்கோ சேதுராமன். ஏறுமுகமோ, இறங்குமுகமோ. எதோ ஒண்ணு. எப்படியிருந்தாலும் இந்த வரிசையில் நமக்கு சம்மதமே. நாம் பூஜிக்கப்பட வேண்டியவர்களில் நாம் கண்ணால் முதலில் பார்த்து புரிஞ்சுக்கறது அந்த வரிசையில்னு அர்த்தம் எடுத்துக்கலாம். நிறைய பேருக்கு கடைசீலே சொன்ன தெய்வம் பிடிபடாமலேயே உயிர் போயிடும். இன்னொன்ணும் சத்தியம். அம்மா சொல்லித்தான் அப்பாவை அறிவோம். அவா ரெண்டுபேரும் அமைச்சுக் கொடுப்பதுதான் குரு. அவரே நமக்கு கடவுளையும் புரிய வைப்பார்னு அர்த்தம் வச்சுண்டு, அதுக்குத்தான் அம்மா முக்கியம்னு வச்சுக்கலாம்.”

“மாமா நீங்க ஆச்சர்யமா ஒரு அர்த்தத்தை சொல்லியிருக்கேள். ஆனால் என் கஷ்டங்களுக்கு தீர்வு சொல்லுங்கொ. இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?” “இருக்கு பொறுமையா கேளுங்கோ. பூஜிக்கபட வேண்டியவான்னு நாம முதலா ஒத்துண்ட அம்மா அப்பாவை நாம எப்படி பார்த்துக்கரோம்? இந்தகாலத்தில் தனியா விட்டுட்டு பொருள் தேட தள்ளீ போயிடரோம். அவா வாழ்ந்திண்டிருந்த காலத்தில் பாத்துக்கலைன்னாலும் போனப்புரமாவது அவாளை திருப்திப்படுத்த, நாம அவாளுக்கு செய்யாம விட்டுப்போன கடமைகளை செய்யத்தான் மஹாளய பக்ஷம்னு வரது. அது பத்தி உன் நம்பிக்கை என்ன?”. “என்னை பெத்தவாளுக்கு நான் திதி அம்மாவாசை பாத்துச் செய்யரேன். ஆனால் ஈடுபாடு இல்லை மாமா. எங்கப்பா எனக்குச் சொல்லிக் கொடுக்கலை, அவரும் அவர் அப்பாவுக்கு செஞ்சு நான் பாக்கலை.” “அதுதான் பகவான் உன்னை பலபேருக்கு தர்பணம் செய்யரச்சே கிட்டக்க உக்காந்துண்டு பாருடான்னு வச்சுட்டானோ!” சந்தானம் பெரீசா சிரிக்கரார். பல் செட் வச்சுண்டிருக்காரோ? அத்தனை அழகா வாச்சி வாச்சியா பல் வரிசை!

“பித்ருக்களுக்காகவே ஏற்பட்ட இந்த நாட்களில் அவாளை நினெச்சுண்டு மந்திரத்தை சொல்லி செய்ய வேண்டியதை செஞ்சா அவா மனம் குளிர்ந்து உயிரோட இருந்தப்போ எப்படி உன்னை கண்ணும் கருத்துமா பாத்துண்டாளோ, அப்படியே ஆசீர்வாதம் செஞ்சுண்டு பாத்துப்பா. கஷ்டமே அண்டாது. அது உங்காத்தில் விட்டுப்போயிடுத்து, அதான் நீ கஷ்டப்படராய். இந்தாத்தில் யாருக்கும் விமோசனம் கிடைக்காது, அதான்னு யாரும் உங்காத்தில் வந்து பிறக்கலையாக்கும்.” முழிச்சுப் பாத்தர்.

“அப்படீன்னா மாமா உங்களுக்கு ஒரே பொண்ணுன்னேள், எனக்கும் குழந்தை இல்லை, நமக்கெல்லாம் யார் செய்வா?” “கவலைப்படாதே, உனக்கு, எனக்கு, அப்புரம் நம்பளைப்போல இருந்துட்டு போன மத்தவாளுக்கு, காணாமப்போய், இருக்காளா செத்துட்டாளான்னு தெரியாத மனுஷாளுக்கு, விட்டுப் போனவாளுக்கு எல்லோருக்கும் சேர்த்து மந்திரம் சொல்லணும்னு இருக்கு. யாராவது இந்த பாரத நாட்டில் உண்மையா மனப்பூர்வமா திதி கொடுத்தா நம்மையும் அது கரை சேர்த்துடும். யாருமேயில்லாத பித்ருக்களோட ஆசீர்வாதமும் திதி கொடுக்கரவாளை போய் சேர்ந்துடும்,”

“அப்போ நான் திதி கொடுக்க ஆரம்பிச்சா என் நிலமை மாறுமா”ங்கிரேன். “நிச்சயமா, மெல்ல மெல்ல. சந்தேகமேயில்லை. கர்மப்பயன்னு, பூர்வஜென்ம பலன்னு இருக்கு. அதெல்லாம் உன்னை அதிகமா பாதிக்காம உங்க அப்பா அம்மா பாத்துப்பா”ன்னுட்டு “ப்ரணவ், வாடா கையைப்பிடிச்சுக்கோ, கிளம்பலாம், வெய்யல் ஏற்ரது”ன்னு எழுந்துண்டர். ரெண்டு பேரும் மெல்ல பார்க்குக்கு வெளீலே வரோம். மாமா சட்டுன்னு நிக்கரர்.

“இன்னொன்ணு சொல்லணும் சேதுராமா. மாசம் ஒருதடவை, வருஷத்துக்கு ஒருக்கான்னு ஏதோ பண்ணிட்டு தப்பிச்சுக்கலாம்னும், உடனே உங்காத்துக்காரியை கூட்டிண்டு நகைக்கடைக்கு போலாம்னும் நினைக்கப்பிடாது. சதா சர்வ காலமும் நல்லதை யோசிச்சிண்டு, நல்லதையே பண்ணிண்டு, நமக்கு உயிர் கொடுத்த பெற்றோர், இன்னும் நல்லது செஞ்ச எத்தனையோ பேரை நினெச்சுப்பாத்து, எல்லாரும் நன்னா இருக்கணும்னு வேண்டிண்டு வாழரதுதான் உண்மையான வாழ்க்கை. உதாரணத்துக்கு இந்த பார்கை கட்டி செடி வச்சு தண்ணி ஊத்தினவனை, நாம உக்காந்து பேசிண்டிருந்த பென்ச்சை கட்டினவனை, பின்னாடி உக்காத்திவச்சு பைக் ஓட்டிண்டு உனக்கு சம்பாதிக்க வழி பண்ற கணபதி சாஸ்த்ரிகள், உன்னை ஏதாவதாவா ஆக்கிப் பாத்துடணும்னு புலம்பர உன் ஆத்துக்காரியையும் சேர்த்து” சிரிக்கரார்.

எனக்கு நாழி ஆகிடுத்து. “மாமா நாளைக்கு திரும்பவும் வருவேன் இன்னும் நீங்க சொல்ரதை கேக்கணும்”. நடையக்கட்டரேன். என்னமோ தெரியலை அன்னைக்கு பைக்கில் உக்காந்ததும் கணபதி சாஸ்த்ரிகளோட தோளை கெட்டியா பிடிச்சுக்கரேன்.

மத்தாநாள் எப்பவும்போல பார்க்குக்கு வந்தா, சந்தானம் மாமாவைக் காணோம். அவருக்கு வழக்கமா “குட் மார்னிங்” சொல்வா ஒரு மாமி. அவளை கேட்டேன். “உங்களுக்கு தெரியாதா, மாமா நேத்து ராத்திரி தூக்கத்துலேயே காலமாகிட்டர்!”

No comments:

Post a Comment