Monday, May 11, 2020

கட்டைப்பை இன் ஆஸ்த்ரேலியா

கட்டைப்பை இன் ஆஸ்த்ரேலியா 
(சிறுகதைகள் சீ2 – 11)   #ganeshamarkalam

சுபாவுக்கு கார்த்தாலே எழுந்துண்டதுலேந்து ஒரே பரபரப்பு. வழக்கமாவே கொஞ்சம் அப்படித்தான் இருப்பா, இன்னைக்கு வித்யாசமா. யாராவது பொறந்தாத்துலேந்து வராளா? உங்களுக்குத் தெரியாதான்னு கேக்கப்பிடாது. எனக்கு யாரும் எதையும் சொல்ரதில்லை.

சித்த ஷெல்ஃப் அலமாரி எல்லாத்தையும் நோண்டினப்புரம், “நீங்க எங்கேயாவது பாத்தேளா”னு கேட்டா.

என்னைத்தை நான் பாத்திருக்கணும்? இவள் எல்லாத்தையும் எப்போதும் தேடிண்டுதான் இருப்பா. செல்போனிலேந்து விளக்குமாரு, ஏலக்காய் டப்பாலேந்து கழட்டிவச்ச வைரமூக்குத்தி வரைக்கும். இப்போ? ஆத்தில் இருந்த கட்டைப்பையில் ஒண்ணைக் கூட காணோம்கிரா. கட்டைப்பைன்னா என்னன்னு தெரியலைன்னா இந்தக்கதையை படிக்கவேண்டாம். தெரிஞ்சுக்காம நீங்கள தமிழ் பிராம்ணாவா இருக்க முடியாது, ஏமாந்துபோய் உங்களை திண்ணையில் செத்துண்டுட்டா. கட்டைப்பைக்கு நான் விளக்கம் சொல்லணும்னா அதைவிட கேவலமான நிலமை எனக்கு வராது. சரி, இப்போ சுபாவுக்கு கட்டைப்பை வேணும், ஒண்ணுகூட கையில் ஆம்படலை.

எனக்குத் தெரியும் 8 கட்டைப்பை இருந்தது. அழகா அடுக்கி வச்சிருப்பா. எப்பவும் உபயோகப்படும்னு. யாராவது கேட்டா எடுத்துக்கொடுத்துடுவள். மயிலாப்பூரிலேந்து இவள் அண்ணா போண் வந்தான்னு கொடுத்தா, நானே பாத்தேன். அப்புரம் அயர்ங்காரன் வந்தான்னு துணியோட ஒண்ணு போச்சு. திரும்ப ந்யூஸ் பேப்பரில் வச்சுத்தான் துணி கொடுத்தான், பை கைமாறிப்போயிடுத்து. ஆத்துக்கு வந்த ஒரு மாமி ரவிக்கைத்துணி, ஒரு தேங்காய் (மட்டையோட) வெத்தலைபாக்கு எல்லாம் வாங்கிண்டு எடுத்துண்டுபோக பை வேணும்னு சுவாதீனமா கேட்டு இன்னொரு கட்டைப்பையை போச்சு. ஒண்ணும் திரும்பி வராது. எல்லாத்தையும் கொடுத்துத் தீத்துட்டு, “நீங்க பாத்தேளா”ன்னா? 

ஆனால் ஸ்டாக் தீந்த காரணத்துக்கு இதையெல்லாம் சொன்னா சண்டை வரும். நமக்கேன் வம்புன்னு “அங்கேதான் எங்கேயாவது இருக்கும் தேடிப்பாரு”ன்னுட்டு நான் பேசாம இருந்துட்டேன். “சரி எப்படியாவது மானேஜ் பண்ணிக்கரேன்”னு கிளம்பிப்போனா. எங்கே போனான்னு நீங்க கேக்கப்பிடாது. நானே கேக்கலை. தானே வந்துடுவா, சரியா 6 மணி “பகல் நிலவு” சீரியல் பாக்கணும்.

“சரி ஆத்துக்காரி பத்தி சொல்ரேளே உங்களை பத்தியும்னு” நீங்க கேக்கறது ஞாயம். நான் கல்யாணம். 62 ஆரது. சென்ட்ரல் டெலிகிராஃப்ஸில் இருந்துட்டு ரிடயர். பீச் ஸ்டேஷனுக்கு எதுத்தாப்புலே ஆபீஸ், இப்போவும் போனேள்னா பாக்கலாம். உள்ளே தபால் ஸ்டாம்ப் வாங்கரச்சே உங்கள் தலைமேல் எதாவது விழலாம். பழைய கட்டடம். வெளீலே மழை பெஞ்சா உள்ளெயே எல்லோரும் குடை பிடிச்சுப்பா. ஒரே பையன் பிரணவ் ஆஸ்த்ரேலியாவில. பேரக்குழந்தைகள் இல்லை. ஏன்னா அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. வயசு ஆயிண்டே போறது மசியலை. அங்கேயே யாரையாவது பிடிச்சிருந்தால் பண்ணிண்டுடுன்னும் சொல்லிப்பாத்தேன். வெள்ளைக்காரி பரவாயில்லைன்னுட்டேன்.

சுபாவுக்கு சொந்தத்தில் ஒரு பொண் இருக்கான்னும் அவளை இவனுக்கு வளைச்சுப் போட்டுடணும்னும் ஆசை. அதுக்கு முதல்ல இவனை வளைக்கணும். எனக்கு அதான் பெரீய கவலை. 

சுபா வந்துட்டா. கோவிலுக்கு போனாளாம். அபிஷேகம், நெய்வேத்தியத்துக்கு கொடுத்ததை வாங்கிண்டுவர, அதான் பை வேண்டியிருந்ததாம். “என்ன விசேஷம், அர்ச்சனை, நெய்வேத்தியம் தடபுடலாயிருக்கு”ன்னு கேட்டதுக்கு பிள்ளைக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு மண்டல பூஜை பண்ணி இன்னிக்கு நிறைவேறித்தாம். இவ்வளவு நடந்திருக்கு எனக்கு ஒன்ணுமே தெரியலை.

இவள் செஞ்ச பூஜை பலனா, அவனே பிரம்மச்சர்யத்தை விட்டுடலாம்னு முடிவுக்கு வந்தானான்னு புரியலை, அபிஷேகம் செஞ்ச 10 நாளில் “ஒருமாசம் லீவில் வரேன், பொண் பாத்து வைங்கோ”ன்னுட்டான். 

எங்க ரெண்டு பேருக்குமே கைகால் ஓடலை. கைவசம் 7 வரன் இருக்கு, அதில் 3 ரொம்பவே சூப்பர். அந்த என் ஆத்துக்காரி சொந்தத்தில் சொன்னேனே அவள் டாப்பில். சுபா விரும்பின மாட்டுப்பொண் ஒண்ணும் சோடையில்லை. அவளும் நன்னாத்தான் படிச்சிருக்கா, குடும்பப்பாங்கு, மனுஷாளும் எனக்கு நல்லவாளாப்பட்டது.

ரமேஷ் வந்ததும் ஒரு ஃபார்மாலிட்டிக்காக பரமேஸ்வரியை பாத்துட்டு வந்தோம். ரெண்டுபேரும் சரின்னுட்டா. பொண்ணோட அப்பா அடுத்த முஹூர்த்ததுலேயே வச்சிண்டுடலாமே, மாப்பிள்ளை திரும்பிப்போனா அப்புரம் எப்போ வருவாரோன்னு கவலைப்பட்டர். பரமேஸ்வரி இப்போ பாத்த வேலையை விட்டுட்டு வேர தேடிண்டிருக்கா, தேடரதை ஆஸ்த்ரேலியாவில் தேடட்டுமே.

ஏற்பாடு செய்யப்போரவா அவா. நமக்கென்ன, சொல்ப காலத்தில் எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட முடியும்னா பண்ணட்டுமே! சுபாவுக்கு தன் சொந்தக்காரா எல்லாரும் கல்யாணத்துக்கு வரணும்னு ஆசை. ஒரே தங்கை கலிஃபொர்னியாவில். சட்டுன்னு வரமுடியுமான்னு டவுட். அப்புரம் ஒரு சித்தப்பா, ஆத்தில் பெரியவர், அவர் வரணும், அவர் எலும்பு பிசினஸ் செய்யரவர். ஐயர் அப்படிப் பண்ணுவாளா? பண்ராரே! “போன் மன்யூர்”தான் இவர் வியாபாரம். பணம் கொழிக்கரது. இந்த 74 வயசிலும் ஆக்டிவ். “சுபா, ரமேஷ் மனசு மாறுவதுக்குள் கல்யாணம் செஞ்சுட்ணுமே தவிர, அவன் சித்தி வரணும், உன் சித்தப்பா வரணும்னு தேவையில்லை.” பயந்து “சரி”ன்னுட்டா. என் சைடில் உறவுன்னு என் தங்கை மட்டும்தான். மேற்கு மாம்பலத்தில் எப்போ கூப்பிட்டாலும் “இதோ வந்துட்டேன் அண்ணா”ன்னு ஓடிவந்துடுவா. சமத்து. கூடவே மாப்பிள்ளையும். நாமெல்லாம் போனை எடுத்தா “ஹலோ” சொல்லுவோம், அவர் “இதோ வரேன்”.

இப்போ கல்யாணப் பர்சேஸ் முடிக்கணும். காஞ்சீவரம் வரமஹாலக்ஷ்மிக்கு போயாச்சு. எப்பவும்போல காரில் சாமானையெல்லாம் வச்சுட்டு காமாக்ஷியையும் ஏகாம்பரேஸ்வரரையும் வரதராஜரையும் தரிசனம் செஞ்சுட்டு சரவண பவனில் ஸ்பெஷல் மீல்ஸ் சாப்டுட்டு வரோம். பின்னாடி சீட்டில் பிள்ளையும் அம்மாவும் வாங்கிண்டது எல்லாம் சரியாயிருக்கான்னு செக் பண்ரா. எல்லாம் சரியாயிருக்குன்னு இவள் சொல்ரா, அவன் அப்பாவுக்கு வாங்கின பட்டு வேஷ்டியும் அங்கவஸ்திரமும் எங்கேன்னு ஒரு டவுட்டை கிளப்பரான். கார் ஓட்டிண்டிருந்த எனக்கு பக்குன்னுது. நல்லவேளை ஒரு 10 கிமீ போரத்துக்குள்ள கிடைச்சுடுத்து. 

“ஷாப்பிங்க் முடிஞ்சதா இன்னும் பாக்கி இருக்கா”ன்னேன். “இன்னும் இருக்கு அதை லோக்கலா செஞ்சுக்கலாம், மாட்டுப்பொண்ணை வச்சிண்டு வாங்கறது இருக்கு”ன்னுட்டா.

அப்புரம் எல்லாத்தையும் மடீலே வச்சிண்டு 1, 2 3ன்னு எதையோ எண்ணிணா. “வாங்கினதை எண்ணப்பிடாது ஆகாது”ன்னு தெரிஞ்ச சாஸ்திரத்தை சொல்லிவச்சேன். “நான் எண்ணினது கட்டப்பையை, 12 கிடெச்சது”ன்னு சந்தோஷமாய் சொன்னாள். இந்த பொண்கள் புடவைக்காக இல்லாம இந்த கட்டைப்பைக்காகவே ஷாப்பிங்க் செய்யரான்னு நினெச்சுண்டேன்.

பிரணவ் அவன் பொண்ணாட்டியொட பிளேன் ஏறரப்போ ஆத்தில் 23 கட்டைப்பை. லக்கி சுபா. 

எப்படியோ பையனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டுட்ட பிரமிப்பில் 2 மாசம் ஓடினது தெரியலை. அப்போதான் அதைப்பார்த்தேன். 

தினமலர் பேப்பரில் 3ஆம் பக்கத்தில் போட்டிருந்தா, திநகருக்கு துணிக்கடைக்கு வரவா பழைய கட்டைப்பையை கொண்டுவந்தால் வாங்கர பில்லில் 5% தள்ளுபடின்னு. சுபாகிட்டே காண்பிச்சேன். அவளோ 20 எடுத்துண்டு போனா வாங்கினதை ஃப்ரீயா தருவானான்னு கேட்டுச் சொல்லுங்கோன்னா. ஆனா ஒரு கவலையும் வந்துடுத்து. பழைசையெல்லாம் வாங்கிக்கரான்னா, இனிமேல் புதுத்துணியை இப்படி வாங்கினதில் வச்சுக்கொடுப்பானா இல்லை கட்டைப்பையே இனிமேல் கிடையாதான்னும் கேக்கச்சொன்னா. இவகிட்டே இந்த ந்யூஸை ஏன் காண்பிச்சோம்னு ஆயிடுத்து.

ஆஸ்த்ரேலியாவில் என் பிள்ளைளையாண்டன் கொஞ்சம்கூட டயத்தை வேஸ்ட் செய்யாமல் ஆகவேண்டிய காரியத்தை செஞ்சு ஜமாய்க்க என் ஆத்துக்காரி சரியா 10 மாசத்தில் பாட்டியாகிட்டா. அது என்ன பாட்டி மட்டும் நீங்க தாத்தாவாகலையான்னு கெக்கலாம். நான் தாத்தாவானதைவிட அவளை பாட்டின்னு கூப்பிடறதுலே அத்தனை சந்தோஷம் கிடெச்சது. கூப்பிட்டா அவள் கோவிச்சுக்கறதும், “பேரன்தான் அப்படிக்கூப்பிடலாம், நீங்க கூடாது”ன்னுட்டு சித்தே நான் அந்தண்டை போயிருக்கச்சே கண்ணாடிகிட்டே போய் தலை நரைச்சிருக்கான்னு நோட்டம் விடறதை நான் பார்த்து கேலி செய்யறதுன்னு டயம் போச்சு. 

பேரனை ஒருநடை நேரில்போய் பாத்துட்டு வந்துடணும்னு ஆசை. 

கிளம்பிட்டோம். ஏர்பேக், ட்ரொலிபேக் ஸ்யூட்கேஸ் அப்படின்னு எடுத்துண்டது போக இதெல்லாம் பத்தாதுங்கிரா மாதிரி 4 கட்டைப்பைகளிலும் சுபா சாமான் ரொப்பிண்டா. தவிர புது கட்டப்பையா 2 துணிகளோட மாட்டுப்பொண்ணுக்கு எடுத்துவச்சுண்டா. வரச்சே அங்கேயே விட்டுட்டா பரமேஸ்வரிக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு. 

என் பிள்ளையாண்டன் இருப்பது ஹன்டர் வேலின்னு சிட்னிக்கு வடக்கே. ஏர்போர்டுக்கு வரமுடியாமல் “முக்கியமான மீட்டிங், கவலை வேண்டாம், என் ஃப்ரெண்ட் பாப் ஸ்டீஃபென்ஸ் காரோட வருவான், அவானோட வந்துடுங்கோ”ன்னுட்டான்.

ஏர்போர்ட் கஸ்டம்ஸில் இவளோட எல்லா கட்டப்பையையும் பிடிங்கி வச்சுண்டுட்டான். அதில் சாப்பிடர விஷயங்கள் இருந்ததால், இதெல்லாம் எங்க நாட்டுக்குள் அனுப்பமாட்டோம்னுட்டு, முதல் தடவைங்கறத்துனாலே வார்னிங்க் தந்து விட்டுடரோம்னும் இனிமேல் செஞ்சா ஹெவி ஃபைன், இல்லை ஜெயிலாம். பிள்ளை இதை சொல்லவேயில்லையே! ஆனமட்டும் இவள் “உள்ளே இருக்கரதை எடுத்துக்கோ பையைத் தந்துடுங்கோ”ன்னு கேட்டா. “உஹூம்”னுட்டான். அப்படியே இன்சினரேட் பண்ணுவாளாம்.

வெளீல வந்தால் யாரையும் காணோம். அரைமணியா வைட் செஞ்சு பாத்துட்டு புள்ளைக்கு போன் செய்யலாமான்னு யோசிக்கரச்சே, ஒருத்தன் வந்து ஆங்கிலத்தில் நீங்கதான் பிரணவ்வோட பேரன்ட்ஸான்னு கேக்கரான். “ஆமாம்.” அவன் நான் பாப்ன்னதும் தெம்பு வந்தது. “எங்கே உங்களை மிஸ் செஞ்சுட்டேனோ?” வேர் இஸ் யுவர் ஸ்டிக் பேக்”ன்னு கேக்கரான்! 

“பிரணவ் செட் “மை மொம் வில் பி காரியிங்க் அட்லீஸ்ட் 2 ஸ்டிக் பேக்ஸ், ஈஸி டு ஸ்பாட் தெம்” “உங்க பேர் சொல்லாம என்னை அனுப்பிச்சுட்டான் உங்க பையன்.”

அப்புரம் ஆத்துக்கு போய் பொட்டீல இருந்த மடிச்சு வச்சிருந்த புது கட்டப்பையை அவனுக்கு பிரிச்சு “திஸ் இஸ் ஸ்டிக் பேக்”ணு காமிச்சுட்டு நாங்க பேரனை கொஞ்சப்போனோம். 

அவன் “வாவ்”னு சொல்ரது காதில் கேட்டது.

No comments:

Post a Comment