வேட்டை (மனதை தொட்டுவிடும் கதை 14)
#ganeshamarkalam
சென்னைக்கு வந்து சின்னாபின்னமான பலரில் நானும் ஒருத்தன். பேர் ரமணன். படிச்சு முடிச்சு அம்பாசமுத்திரத்திலேயே இருந்திருக்கணும். தாத்தா வச்சுட்டு போன நிலம் கவனிச்சுண்டா நன்னா காப்பாத்தும்.
என்ன பண்ரது, ஸ்ரீவில்லிபுத்தூரில் காலேஜுலே படிக்கரச்சே கல்யாணியோட காதல். சித்தப்பாவாத்தில் இருந்துண்டு எங்கூட படிச்சா. இப்போ சென்னையில் இருக்கா, அனகாபுத்தூரில் எங்கேயோ வீடு. வந்து தன் பெற்றோர்கிட்டே பேசி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டா. நானும் தைரியத்தை வரவழைச்சுண்டு இங்கே வந்தாச்சு. எனக்கு ஏர்டெல்லில் வேலை. நுங்கம்பாக்கத்தில் மேன்ஷென் ரூம்.
போன வாரம் பீச்சுலெ மீட் பண்ணினோம். எப்படியாவது இதை செய்யரேன், அவசரப்படாதேன்னு கையை பிடிச்சுண்டு சொன்னேன். அவளும் சரி, 3 மாசம் டயம் இருக்கு, அதுக்கப்புரம் அப்பாவை கட்டுப்படுத்தமுடியாதுன்னு சொல்லிட்டா.
கல்யாணியை பாத்தா யாருக்கும் காதல் வந்துடும். அவள் என்னைத்தான் விரும்பரா. இருந்தாலும் சொன்னேன். நான் அவளை முதல்லே லைப்ரெரிலே பாத்தப்போ எதிரே யதேச்சையா உட்காந்துண்டு படிச்சிண்டிருந்தா, தலையை தூக்கி என்னை பாத்தா. அந்த மிகப்பெரிய முட்டை கண்களில் அன்னைக்கே விழுந்துட்டேன். அதுலேந்து வெளியே வந்து மிச்ச கல்யாணியை முழுசா பாக்கரத்துக்கே 3 மாசம் ஆச்சு. அவ சிரிச்சா கல கலன்னு இருக்கும். துணிக்கு தகுந்த கலர் பொட்டு. பாரம்பரிய, மாடெர்ன் டிரெஸ் எது போட்டாலும் பாக்கிரவா மனசு பள்ளத்துலெ சரிஞ்சுடும். வானத்துலேந்து வந்த தேவதையை என் இஷ்டத்துக்கு யாரோ செதுக்கி குடுத்தாப்புலெ.
அவளை 3 செகண்ட்க்கு மேலே பாத்தா உடம்பை என்னென்னவோ செய்யும். பலப்பல சந்திப்புகளுக்கு அப்புரம் 3ஆவது வருஷம் காதலை அவதான் முதல்லெ சொன்னா. சரின்னு சொல்லக்கூட தெரியாம மண்டு மாதிரி நின்னேன்
என்னை மறந்து அவளிடம் மயங்கி எப்படி பாஸ் பண்ணினேன்னு எனக்கே தெரியலை. அதைவிட பெரிய பரீக்ஷை அவ வச்சுட்டு போனா. சீக்கிரம் வந்து அவாத்து மனுஷாளை கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோன்னு. இதுலே வேடிக்கை என்னன்னா எங்காத்துலே யாரும் எதிர்ப்பு சொல்லலை. என் அக்கா நான் சென்னை கிளம்பரச்சே, தன் குழந்தையை இடுப்பிலேந்து இறக்கி வச்சுட்டு – அது விராட், விராட்டுன்னு கத்தரது – என் நெத்தியில் விபூதி இட்டுவிட்டு “ஆல் தி பெஸ்ட்” அப்படின்னானா பாருங்களேன். ரயிலடிலே அப்பாவும் அம்மாவும் நல்ல செய்தியோட வா இல்லைன்னா அங்கேயே இருந்துடுன்னு மிரட்டல் வேர. இப்போ இந்த 3 மாசம் கெடு வேர. செத்தேன்.
மனசுலே ஒரு பிளான். ஒரு ப்ரோக்கரை பிடுச்சு அனகாபுத்தூரில் ஒரு வீடு எடுத்து தங்கரது. அவள் அப்பாவை லைன் போட்டு நல்ல பேர் வாங்கரது. அப்புரம் டெரெக்ட்டா கேட்டுடர்ரது. வொர்கவுட் ஆகும்னு மனசு சொல்லித்து. ஆகணும். இல்லைன்னா கல்யாணி வேர ஒருத்தரை மண்ணிண்டுடுவா, நானும் ஊருக்கு திரும்ப முடியாது.
அனகாபுத்துருக்கு, பல்லாவரத்துக்கு ரயிலில் போனா அங்கேந்து 10 நிமிஷத்துக்கு ஒரு பஸ் விட்ருக்கான். முன்னாடியே நெட்லே பாத்து ஒரு ப்ரோக்கரை வரச்சொல்லியிருந்தேன். 5 வீடு ரெடியா இருக்காம். ஓகேன்னா இன்னைக்கே முடிச்சுடலாமாம். அவன் கொடுத்த கான்ஃபிடென்ஸ் வச்சுப்பாத்தா அடுத்த மாசமே எனக்கும் கல்யாணிக்கும் சாந்தி முஹூர்த்தம். ஆனா நடந்தது என்னவோ வேர.
ஒருத்தரும் பேச்சலருக்கு வீடு கொடுக்கமுடியாதாம். அப்பா அம்மாவாவது கூட இருக்கணுமாம். ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாமாம்னா இப்பவே பொய் சொல்லா ஆரம்பிச்சா என்னன்னு தோணித்து. ஒரு இடத்தில் கல்யாணம் நிச்சயமாகிடுத்து அதான் வீடு வேணும்னு அடிச்சு சொன்னேன். அவா காலியாவே வச்சிருக்கோம் தாலி கட்டிட்டு வந்து அட்வான்ஸ் கொடுங்கிரா. பாச்சிலர்னா என்ன பயம்? ஒரு ஆத்தில் வயசு பொண்ணு. அவா பயம் புரியறது. இன்னொரு ஆத்தில் தாட்டியா 40 வயசு மாமி அவர் ஆத்துக்காரரோட கீழ் போர்ஷன்லெ இருக்கா. நான் என்ன அந்த குண்டு மாமியைவா தூக்கிண்டு ஓடிடப்போரேன். அவாளை தூக்கவும் முடியாது, அவாளாலெ ஓடவும் முடியாது.
சாயங்காலம் ஆச்சு. ப்ரொக்கர் களைச்சு போய் முகம் என்னைவிட வாடிடுத்து. வா டீ குடிக்கலாம்னு ஒரு கடை வாசல்லெ உட்கார்ந்தோம். அப்போ ஒரு மீசையை முறுக்கிண்டு ஒரு பெரிய மனுஷர் அதே கடைக்கு வரார். ப்ரோக்கருக்கு அவரை தெரியரது. ஹலோ சொல்லிக்கிரா. அவன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்திட்டு என் வீட்டு விஷயத்தை சொல்ரான். அவர் யோசிச்சுட்டு அடுத்த வாரம் சனிக்கிழமை வாங்கோ எனக்கு சில இடங்கள் தெரியும், காமிக்கரேன்னு சொல்ரார். ப்ரோக்கர் தலையை சொரியரான், அவர் உன்னையும் கவனிச்சுக்கிரேன்னு சொல்ரார். எனக்கோ நிச்சயம் சாந்தி முஹூர்த்தம் நடக்கும் ஆனா முழுசா ஒரு வாரம் தள்ளிப்போன மாதிரி ஃபீலிங்க்.
திரும்பி வந்துட்டு கல்யாணிக்கு என்ன நடந்ததுன்னு போன்லெ சொல்ரேன். ஆனா அவ ஒண்ணும் கவலைப்பட்டோ இது சீக்கிரம் நடக்கணும்னு அவஸரப்பட்ர மாதிரி காட்டிக்கலை. ஏதாவது தன் பங்குக்கு உதவி செய்யரமாதிரி கூட தெரியலை. 3 மாசம்தான் இருக்குன்னு திரும்பவும் ஞாபகப்படுத்தினா.
அடுத்த வாரம் அதே டீக்கடையில் அந்த மீசைக்காரர் சொன்ன டயத்துக்கு போயாச்சு, 20 நிமி கழுச்சு ஆர அமர வர்ரார். கோவிலுக்கு போனாராம். வா வீடு பாக்கலாம்னு அழைச்சுண்டு போனார். அவர் முதலில் காட்டின ரெண்டு வீடும் சகிக்கலை. ஒரு ஓட்டு வீடு. ப்ளைனா இந்தமாதிரி இடத்தில் என் மனைவியோட வாழ்க்கையை ஆரம்பிக்கமுடியாதுன்னு சொல்லிட்டு உள்ளேயே போகலை. சொச்ச வீடு இப்படியே. மீஸையை நடுதெருவில் நிறுத்தி – எனக்கும் என் வரப்போர மனைவிக்கும் எப்படி பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுப்பேன்னும் அதுக்கு எப்படி இடம் வேணும்னும் சொல்லிட்டு அப்படி இருந்தா காமிங்கோன்னு இல்லென்னா போயிடரேன்னு சொல்ரேன்.
என்னமோ தெரியலை அவர் பாக்க நல்ல மனுஷர் மாதிரி தன் வேலையை விட்டுட்டு என்னோட வெய்யலில் சுத்தினதால் நான் எதுக்கு இங்கே வந்து அலையரேன்கிரதையும் சொல்ரேன். கொஞ்சமா சிரிச்சார். புரியரதுன்னார்.
அப்படின்னா வாங்கோ எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மாடிப்போர்ஷன் காலின்னு அழைச்சுண்டு போரார்.
அந்த வீடு அழகா, பெரிசா தோட்டத்தோட இருக்கு. இதுவே அமையணும்னு வேண்டிக்கரேன். அப்போதான் கல்யாணி அப்பாவை இம்ப்ரெஸ் பண்ணலாம். ஹால்லே உட்கார வச்சுட்டு இதோ வரேன்னுட்டு போரார். கொஞ்சா நாழிக்கு யாரும் வரலை. ரூமை நோட்டம் விடரச்சே இந்த மீசைக்காரரே அவர் மனைவியுடன் இருக்காப்புலே ஒரு ஃபோடொ. அப்படின்னா இவர் தன் வீட்டுக்குத்தான் என்னை கூட்டிண்டுவந்திருக்கார். கில்லாடி. நல்ல டெனென்ட் வேணூம்னு சாதூர்யமா என்னைப்பத்தி தெரிஞ்சுண்டு. வந்ததும் மடக்கி கேட்டுடணும்.
கொஞ்ச நேரத்தில் அவரும் அவர் வொய்ஃப் ஒரு தட்டில் ஸ்வீட்ஸ், காரம், காபியோட வரா. சார் இதெல்லாம் எதுக்கு வாங்கோ மாடி பார்க்கலாம், உங்க வீடுன்னு எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு சொல்ரேன். அவர் இல்லை மாப்பிள்ளை பொண்ணு பாக்க வந்தா முதல்ல உபஸரணை பண்ண வேண்டாமான்னு கேக்கிரார். மாமி முகத்திலே வழியரதவிட என் மூஞ்சிலே வியப்பும் அசடும் திறண்டு வரது.
அப்போதான் என் கல்யாணி எதுத்த கதவுக்கு பின்னால் நிப்பது தெரியரது. அவளுக்கு பின்னாடி என் அக்கா, அம்மா அப்பாவெல்லாம் ஒத்தொருத்தரா வரா.
எல்லாரும் என்னை வச்சு ஒரு பெரிய காமெடியே பண்ணியிருக்கான்னு தெரிஞ்சுது. இதுக்கு பேர்தான் வச்சு செய்யரது.
No comments:
Post a Comment