Wednesday, May 11, 2022

பழநி முருகன்

 திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும்.தவிர யானைப் பாதை எனும் படியல்லாத வழியும் உண்டு.மலையே மருந்தாக அமைந்த மலை.பழநிக்கு ஆவினன்குடி,தென்பொதிகை என்ற புராணப் பெயர்களும் உண்டு. பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள். இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதிகம்

பழநி மலை தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் :

*தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

*ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

*இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

* அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

*இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

*தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

*தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

* அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

* இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் ஒன்பது வருடம்.

* அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

* இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

* 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

* இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

* அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

* போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

* கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் ... சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

* தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

* பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.

பழநி பஞ்சாமிர்தம்

திருப்பதி லட்டு போல, பழநிமுருகன்கோயிலின் பிரசாதம் 'பஞ்சாமிர்தம்' உலக பிரசித்திபெற்றது. முந்தைய காலத்தில் ஐந்து வகையான பொருட்களை கொண்டு, அமிர்தத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டதால் பஞ்சாமிர்தம் என அழைக்கப்படுகிறது.

வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை, நெய், பேரீச்சம்பழம் போன்ற ஐந்து பொருட்களை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. பழநி முருகனின் ஆறுகால பூஜையின் போது பஞ்சாமிர்தம் அபிேஷகம் செய்கின்றனர். சாயரட்சை பூஜையின் போது 1000 பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழத்திற்காக கோவித்துக்கொண்டு முருகன் வந்த தலம் என்பதால் பழநியை தவிர முருகனின் ஆறுபடை வீடுகளில் வேறு எங்கும் பஞ்சாமிர்தம் பிரசாதம் சிறப்பு பெறவில்லை. அந்த அளவிற்கு பழநி பஞ்சாமிர்தம் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தைப்பூசம், பங்குனிஉத்திரம் போன்ற விழாக்காலங்களில் பாதயாத்திரை பக்தர்கள் இணைந்தும் பழநிமலைக்கோயில், தனியார் மண்டபங்களில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு அபிேஷகம் செய்து, பிரித்துக்கொள்கின்றனர்.

பழநி நகரவாசிகள் பஞ்சாமிர்த்தை தங்களின் அன்றாட சப்பாட்டில் இட்லி, தோசை, சப்பாத்தி, பிரட் ஆகியவற்றில் 'ஜாம்' போல தடவி உணவருந்துகின்றனர். பழநிகோயில் நிர்வாகம் மட்டுமின்றி, தனியார் பலரும் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்கின்றனர். 250 கிராம் முதல் 500 கிராம் வரை அடைத்து விற்கப்படுகிறது. பஞ்சாமிர்தத்தை முறைப்படி தயார் செய்தால் அதிபட்சம் ஒரு மாதங்களுக்கு மேல் வைத்து, பயன்படுத்தலாம். பழநி கோயில் தேவஸ்தானம் மூலம் அபிஷேக பஞ்சாமிர்தம், அரைக்கிலோ டப்பா ரூ. 35, டீன் ரூ.40க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு பலகோடி ரூபாய் வருமானமும் பழநிகோயிலுக்கு கிடைக்கிறது.

பஞ்சாமிர்தத்தில் உள்ள பேரீச்சம்பழம், தேன், வாழைப்பழம் ஆகியவை மருத்துவ குணம் மிக்கது. சிறப்புமிக்க, பழநி பஞ்சாமிர்த்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், புவிசார் குறியீடு பெற பழநிகோயில்நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.🌹🙏💐ஹனுமன் ஆர் கே சாமி🌹🙏💐

No comments:

Post a Comment