#ரகோபதேஸம்
எழுதியது பாஸ்கர் சத்யா
#ரகோபதேஸம்_8
அன்று ஹனுமத் ஜெயந்திக்கு முதல் நாள். மடத்திற்கு வருகிறேன்.
'நல்லவேளை டா பாஸு. நானே ஒன்ன கூப்பிட சொல்லணும்னு நெனைச்சேன்.'
'எதுக்கு மாமா?'
'ஒண்ணும் இல்லடா. நாளைக்கு ஹனுமத் ஜெயந்தியாச்சே. பத்து மணிக்கு பூஜை வெச்சுக்கலாம்னு பார்க்கிறேன். நீ சித்த முன்னாடி வந்தா எனக்கு கொஞ்சம் ஒத்தாசையா இருக்கும். தெருக்காரா அஞ்சாறு பேர வரச் சொல்லி இருக்கேன். கார்த்தால ஏழு மணிக்குள்ள நீ வந்துட்டா தோட்டத்திலிருந்து பூ பறிச்சுட்டு பூஜைக்கான ஏற்பாடுகளை எனக்கு கூடமாட கவனிச்சிண்டா நன்னா இருக்கும். வேணு மாமா மாலைகளையும் பழங்களையும் கார்த்தாலேயே பந்தலடிலேந்து வாங்கி வெச்சுடறதா சொல்லி இருக்கா. நீ மடத்துக்கு வரும்போது மறக்காம அவாத்துலேந்து எடுத்துண்டு வா. நடேச மாமாவாத்துல வடைமாலை சாத்த போறதா சொல்லி இருக்கா. அவாத்துலேயும் பத்து மணிக்கு பூஜை ஆரம்பிச்சுடுவேன் அப்படின்னு ஞாபகப்படுத்திட்டு வா. ஸ்நானத்தையும் முடிச்சிண்டு வேஷ்டி துண்டை கட்டிண்டு வா. நாளைக்கு ட்ராயர் வேண்டாம்.'
'நீங்க கவலைப்படாதீங்கோ மாமா. கண்டிப்பா வந்துடறேன்.'
'நாம இஷ்ட தெய்வங்கள பத்தி பேசிண்டிருந்தோமே. ஆஞ்சநேய ஸ்வாமியை பலபேர் தங்களோட இஷ்ட தெய்வமா வெச்சிண்டிருக்கா.'
'ஆஞ்சநேயர் கிட்ட அப்படி என்ன மாமா விசேஷம்?'
'என்ன அப்படி கேட்டுட்ட? ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷம் ரொம்ப அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தாக்க, அவருக்கு என்ன விசேஷம்னு தெரியும்.'
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||'
ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்றது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறவர் அவர்'
'சாதாரணமா இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமானா இருப்பான். ஆனால் ஆரோக்கியம் அவன்கிட்ட இல்லாமல் சோனியாக இருப்பான். அதே மாதிரி பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான்.'
'இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார் ஆஞ்சநேயர். இதற்கு காரணம் ... சாதாரணமா நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கு. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைகூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது.'
'ஆஞ்ஜநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கே கூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள்.'
'ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீ ராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று ‘வைதேஹீ ஸஹிதம்’ சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்று கூட சொல்வார்கள்.'
'ஒன்பது வியாகரணமும் தெரிந்த ‘நவ வ்யாகரண வேத்தா’ என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அநுபவிக்கிறார்.
பக்தியை மட்டுமே பிடிச்சிண்டு லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல அவர். மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம்.'
ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டுன்னா அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.'
'இதெல்லாஒத்துக்கும் மேலா அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்லணும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர்.'
'அவரை நம் தமிழ்நாட்டுல பொதுவா ‘ஹநுமார்’ என்போம். கன்னடச் சீமையில் அவரே ‘ஹநுமந்தையா’. சித்தூருக்கு வடக்கே போயிட்டா ஆந்திரா முழுவதும் ‘ஆஞ்சநேயலு’ என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க ‘மாருதி, மாருதி’ என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் ‘மஹாவீர்’ என்றே சொல்வார்கள்.'
'ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.'
‘ராம், ராம்’ என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு இருக்கார்.
இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்றோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆஞ்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேணும்.
அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.'
அவர் ஹனுமாரை பற்றி சொல்லச் சொல்ல எனக்கு என் கண்கள் முன்னாலேயே அவர் இருப்பதைப் போன்ற உணர்வு.
'நாளைக்கு ஹனுமத் ஜெயந்தி பூஜை நடக்கும் போது கண்ண மூடிண்டு நான் ஆரம்பத்தில சொன்னேன் இல்லையா அந்த ஸ்லோகத்தை மனசுக்குள்ளேயே சொல்லிண்டு அவர பிரார்த்தனை பண்ணிக்கோ. வேணா பாரு நீ எவ்வளவு பலசாலி தைரியசாலியா வாழ்க்கைல ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளை எல்லாம் சமாளிச்சு ஜெயிச்சு முன்னுக்கு வருவ.'
'மாமா நீங்க அனுமார பத்தி சொல்ல சொல்ல நேக்கு ஒண்ணு தோண்றது. பேசாம மகாலட்சுமிக்கு பதிலா ஆஞ்சநேயர இஷ்ட தெய்வமா ஏத்துக்கட்டுமா?'
இப்படி நான் சொன்னவுடன் பெரிதாக சிரிக்கிறார். என்னுடைய இந்தக் கேள்வியில் இருக்கும் குழந்தைத்தனம் அவருக்கு சிரிப்பை வரவழைத்து இருக்க வேண்டும்.
'இதைத்தான் ரெண்டு நாள் முன்னாடி சொன்னேன். லக்ஷ்மிய ஸ்லாகிச்சு சொல்லிண்டு இருந்தா லக்ஷ்மி பிடிக்க ஆரம்பிச்சிடும். ஆஞ்சநேயரை பத்தி சொன்னா ஆஞ்சநேயர இஷ்ட தெய்வமா ஆக்கிக்க தோணும். சுப்பிரமணியர் பத்தின புராணங்கள படிக்க ஆரம்பிச்சா அவர்தான் ஒசத்தின்னு தோண ஆரம்பிக்கும். இஷ்ட தெய்வங்கள் மனச பொறுத்தது. நம்மளோட சுபாவங்களை பொருத்தது. லௌகீக விஷயங்கள்ல நம்மளுடைய லக்ஷியங்களையும் எதிர்பார்ப்புகளையும் பொருத்தது.'
'ஆஞ்சநேயர் தரும் பலன்கள லக்ஷ்மியும் கொடுப்பாடா. எந்த ஸ்வாமி ஒசத்தி அப்படிங்கிற வியாக்கியானமோ தர்க்கமோ அர்த்தமில்லாத ஒண்ணு.'
அவர் சொன்ன விளக்கத்தை கேட்டு லக்ஷ்மிக்கு மாறுகிறேன் சிறிய புன்சிரிப்போடு.
'மாமா, நேக்கு 'புத்திர் பலம் யசோ தைர்யம்...' அப்படின்னு நீங்க ஆரம்பிச்ச ஸ்லோகத்தை சொல்லிக் கொடுக்கிறேளா அர்த்தத்தோட? இதையும் நான் தினமும் சொல்ற ஸ்லோக லிஸ்டுல சேர்த்துக்கலாம்னு நெனைக்கறேன். நான் ஒல்லியா இருக்கேனோன்னோ? இதயும் சேர்த்து சொல்லிண்டு வந்தா எனக்கு பலம் வருமோன்னோ?'
மீண்டும் அவரிடமிருந்து சிரிப்பொலிகள்.
'இந்த ஸ்லோகத்தையும் சொல்லிண்டு விடாம தியானம் உடற்பயிற்சிகள் எல்லாத்தையும் செஞ்சுண்டு நல்ல ஆரோக்கியமான உணவுகளையும் சேர்த்துண்டு வந்தா நீ கேட்கிற பலம் கண்டிப்பா வரும். ஆஞ்சநேயர் கொடுக்கிற பலம் அப்படிங்கறது தேகக்கட்டோட நிக்காது. அதையும் தாண்டி மனசு ஒடிஞ்சு போகாம இடர்பாடுகளையும் கஷ்டங்களையும் எதிர்கொள்ற சக்தியையும் சேர்த்துத்தான். மனோவலிமை அப்படின்னு கூட சொல்லுவாளே.'
இப்படி சொல்லிவிட்டு ஆஞ்சநேயரை பிரார்த்திக்கும் அந்த சிறிய ஸ்லோகத்தை அக்ஷரம் அக்ஷரமாக பதம் பிரித்து சொல்லிக் கொடுக்கிறார்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
புத்திர் பலம் - அறிவில் வலிமை
யசோ - புகழ்
தைர்யம் - துணிவு
நிர்பயத்வம் - பயமின்மை
அரோகதா - நோயின்மை
அஜாட்யம் - ஊக்கம்
வாக் படுத்வம் - பேச்சு வலிமை
ச - இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் - அனுமனை நினைப்பதால்
பவேத் - பிறக்கின்றன.
'அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன ... இதுதான்டா இந்த ஸ்லோகத்தோட சாராம்சம்.
'ரொம்ப நன்னா இருக்கு மாமா அர்த்தங்கள். அனுமாருக்கு வேறு ஏதாவது ஸ்லோகம் இருக்கா மாமா?'
'நிறைய இருக்குடா. குறிப்பா சொல்ல போனா ஹனுமான் ச்சாலிசா இருக்கு. நாப்பது ஸ்லோகங்கள கொண்டது. நீ தினமும் சொல்றதா இருந்தா இந்த 'புத்திர் பலம்...' ஸ்லோகத்தையே சொல்லு. சின்னதாகவும் இருக்கு. பிரார்த்தனை மந்திரமாவும் இருக்கு. பெரிய ஸ்லோகங்கள அக்ஷர சுத்தமா நன்னா கத்துண்டு அப்புறமா பிரயோக படுத்தலாம்.'
'ரொம்ப த்தேங்க்ஸ் மாமா'
குரு வந்தனத்தை முடித்துக்கொண்டு மடத்தை விட்டு கிளம்புகிறேன்.
தொடரும்
மேற்கண்ட பதிவில் 'புத்திர் பலம் யசோ தைர்யம்...' என்று துவங்கும் ஸ்லோகத்தின் அர்த்தம் சொல்லும் போது அஜாட்யம் என்ற வார்த்தைக்கு ஊக்கம் என்ற மேம்போக்கான பொருளை சொல்லிவிட்டேன்.
அஜாட்யம் என்ற சொல்லுக்கு ஜடமாய் இல்லாது இருத்தல் என்பது சரியான பொருள்.
ஜடமாய் இல்லாது இருத்தல் என்றால் புத்தி மந்தித்து சுறுசுறுப்பில்லாமல் உற்சாகம் இல்லாமல் சோம்பேறியாக மச மச மச என்று இருப்பது. இவர்கள் இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவ்வப்போது ஊக்கம் தேவையல்லவா? இந்த ஊக்கத்தை தருகிறவர் என்ற பொருளில் சொல்லி இருந்தாலும் அஜாட்யம் என்ற சொல்லுக்கு முழுப் பொருளையும் புரிந்து கொண்டு வாசகர்கள் படிக்க விரும்புகிறேன்.
கொஞ்சம் விளக்கமாக கூறியிருக்கலாம் என்று இப்போது தோன்றுவதால் இதை பதிவிடுகிறேன்.
No comments:
Post a Comment